காட்சிப் பொருளல்ல கருத்துப் பொருள் - அழகுராஜ் ராமமூர்த்தி

 காட்சிப் பொருளல்ல கருத்துப் பொருள் - அழகுராஜ் ராமமூர்த்தி 

   குருகு இணைய இதழில் எழுதப்பட்டுள்ள கிறிஸ்துவின் சித்திரங்கள் கட்டுரைத் தொடர் தெய்வீக அம்சம், துயரமும் மறைஞானமும், உடலும் ரத்தமும், உலகப்போர்கள் என்ற நான்கு தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. தாமரைக்கண்ணன் அவிநாசி எழுதிய இத்தொடர் முழுமையாக இணையத்தரவுகளை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டுள்ளதாகவே தெரிகிறது..

    கிறிஸ்துவின் ஓவியங்களைப் பற்றிய இத்தொடர் ஓவியங்களை கிறிஸ்தவர்கள் எப்படியாக பார்த்தார்கள் என்பதிலிருந்து தொடங்குகிறது. மோசேயின் காலத்தில் சிற்பங்களையும் சிலைகளையும் எகிப்தியர் முதலான பிற இனத்தவர்கள் வணங்கியபோதும் கூட உருவமற்ற வழிபாட்டையே ஆபிரகாமின் வழியில் அவரது வம்சாவழியினர் கைக்கொண்டனர். இவையெல்லாம் பிற்கால கிறிஸ்தவத்திற்குரிய தோற்றுவாய் என்பதால் அவற்றையும் கணக்கில் கொண்டே ஓவியம் முதலான கலைகள் கிறிஸ்தவ பின்புலத்தில் செயல்படுவதைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அதேபோல குறியீடுகள் தான் ஓவியத்திற்கும் எழுத்திற்கும் அடிப்படை. உருவ வழிபாடற்ற பின்னணியைக் கிறிஸ்தவம் கைக்கொண்டதால் கிறிஸ்துவின் ஓவியங்கள் குறியீடுகளிலிருந்து எப்படி ஓவியமாக மாற்றம் கொண்டுள்ளன என்பதை “கிறிஸ்துவின் சித்திரங்கள்” தொடர் தொட்டுக்காட்டும் இடம் முக்கியமானது. இதன்வழியே ஒரு நேர்க்கோட்டில் தகவல்களை அறிந்துகொள்ளும் சாத்தியம் உருவாகிறது. 

     குறியீடுகள் எப்படி ஓவியங்களாக காலப்போக்கில் மாறி வந்துள்ளன என்பதற்குரிய தொல்லியல் சான்றுகளைக் குறிப்பிட்டு எழுதப்பட்ட பகுதி கவனத்திற்குரியதாகும்.‌ எழுத்துக் குறிகளை அடிப்படையாகக் கொண்டு அவை எடுத்துரைக்கப்பட்டுள்ளன. சவப்பெட்டி பொறிப்புகளில் இருக்கும் ஓவியங்கள் தொல்லியல் சான்றுகளாக குறிப்பிடப்பட்டு ஓவியம் மற்றும் பண்பாட்டு வெளியில் அவை எந்த அளவுக்கு முக்கியத்துவம் உடையனவாக இருந்த‌ன என்பது குறித்த செய்திகள் சான்றுகளோடு பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல சவத்துணி உட்பட பல்வேறு நிலைகளிலான துணி ஓவியங்கள் பற்றிய செய்திகளும் இடம்பெறுகின்றன. இதனடிப்படையில் மரணம் தொடர்பானவற்றில் கிறிஸ்துவின் ஓவியங்கள் தொடக்க காலத்தில் அதிகப்படியாக இடம்பெற்றிருந்தது தெரிய வருகிறது. மனிதர்களுடைய மரணம் மட்டுமன்றி சிலுவையில் கிறிஸ்து அடைந்த துயரம், வேதனையுற்றவர் ஓவியங்கள், சிலுவையேற்ற சித்தரிப்புகள், சிலுவையிலிருந்து உடலை இறக்கும் சித்திரங்கள், போன்றவையும் பாடுகளையும் மரணம் , வலி, வேதனை, துன்பம் ஆகியவற்றையும் தொடர்புநிலையாக வைத்தே எழுதப்பட்டுள்ளன. துணி ஓவியம் பற்றி விளக்கும் கூறுமிடத்தில் கிறிஸ்துவின் துணி பற்றிய தொன்மக்கதை ஒன்றும் இடையில் கூறப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக உயிர்த்தெழுகை சித்திரங்களைக் கருதலாம். மரணம் மற்றும் உயிர்த்தெழுதலோடு உயிர்த்தெழுதல் மீதான நம்பிக்கையைப் பற்றிய தோமாவின் ஓவியம் குறித்த செய்தியையும் இதனோடு இணைத்துப் பார்க்கலாம்.

     வசனத்தின் விளக்கமாக ஓவியங்கள் தீட்டப்பட்ட விதம் மற்றும் அது தீட்டப்படும் இடத்தையொட்டி உணர்த்தும் பொருள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட விளக்கங்களும் இத்தொடரில் இடம்பெறுகின்றன. ஓவியத்தின் பின்புலக் கதை அல்லது ஓவியக்கலையின் மூலம் வரை கலைஞர் சொல்ல வரும் நுணுக்கமான செய்தி முதலானவற்றை இதன்வழியே சமய நோக்கில் நெருங்கிச் செல்ல முடியும். கிறிஸ்தவத்தில் வார்த்தை மிகமுக்கியமான அம்சம் ஆகும். “ஆதியிலே வார்த்தை இருந்தது.” என்பது தொடங்கி ஆதாம், ஆபிரகாம், மோசே, சாமுவேல் என்ற வம்சாவழி வரிசை முழுவதிலும் உருவமற்ற பேச்சின் மூலமான தொடர்பையே கடவுளிடம் கொண்டிருந்தனர். கிறிஸ்தவ வழிபாட்டிலும் வசனங்கள் முக்கியமானவையாக இன்றளவிலும் இருக்கின்றன. வசனங்களை தியானித்து விளக்கி போதனையைக் கேட்கும் முறை கிறிஸ்தவ வழிபாட்டில் துதிப்பாடல்கள், நன்றியறிவித்தல், வேண்டுதல் முதலானவற்றோடு ஒன்றாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அத்தகைய வசனங்களைத் தத்துவார்த்தமான போக்கிலும் நிகழ்வுப் பின்னணியிலும் விளக்கக்கூடிய ஓவியங்களைத் தேர்வு செய்து இத்தொடரிலுள்ள கட்டுரைகள் விளக்குகின்றன. இதனை கிறிஸ்தவக் கோட்பாடுகள் வழிப்பட்ட ஓவிய உருவாக்க முறை மற்றும் விளக்கமென குறிப்பிடுவது பொருத்தமுடையதென்றே கருதுகிறேன். 

     நிகழ்வுப் பின்னணியுடனான தொடர்பு என்பது மக்களிடம் ஓவியம் எவ்வாறு சென்றடைகிறது என்பதை உள்ளடக்கியதாக அமைகிறது. மாமங்கம் என்ற மலையாள திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில் “நிகழ்வின் விளக்கமாக” ஓவியம் தீட்டப்படும் காட்சியொன்று இடம்பெற்றிருக்கும். தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் இடம்பெற்றிருக்கும் சுந்தரரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் குறித்த ஓவியங்களும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டவையே. இருமை நிலை ஓவியங்கள், Condemplation தன்மைக்கான ஓவியங்கள், ஓவியங்கள் உணர்த்தும் தத்துவங்கள், கனவு ஓவியங்கள் எப்ஸ்டீன், ஷெகால் மற்றும் ஸ்பென்சரின் படைப்புகள் என பல்வேறு நிலைகளில் கிறிஸ்துவின் சித்திரங்களை ஒவ்வொன்றுக்கும் உரிய காரணங்களைக் குறிப்பிட்டு இத்தொடர் விளக்கமளிக்கிறது. சித்தன்னவாசல் குகை ஓவியம் அதன் பின்னுள்ள தத்துவத்தையும் உள்ளடக்கியே சிறப்புக்குரியதாகிறது. அதேபோல கிறிஸ்தவ ஓவியங்களிலும் தத்துவம் மற்றும் புதிய முயற்சிகள் நடந்திருப்பதை சுட்டிக்காட்டும் தன்மை இத்தொடரில் வெளிப்படுகிறது. பல்வகை சுவர் ஓவியங்கள் (தாடியுள்ள தோற்றம், தாடியற்ற தோற்றம், முகத்திற்குப் பின் ஒளிவட்டம்) குறித்த செய்திகள் இடம்பெறும் பகுதியை இதற்கு எளிமையான எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.

    ஓவியங்கள் மட்டுமன்றி அது எவ்வாறு மக்கள் மத்தியில் பரவலாக்கம் அடைந்து சென்றது என்பதற்குரிய ஆதாரமாக துணிகளைப் பிரதியெடுக்கும் ஓவிய மரபு குறித்த செய்திகள் சொல்லப்பட்டுள்ளன. கடல்வழி பயணங்களில் செல்லும் இடங்களை அறிய துணியில் தீட்டப்பட்ட வரைபடத்தை பயன்படுத்துவதை மேலை நாட்டு திரைப்படங்களில் அதிகம் காணலாம். அதுபோன்றே கிறிஸ்துவின் ஓவியங்களும் துணியில் வரையப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் வரைதல் கலையினோடு தொடர்புடையது. கிறிஸ்தவத்தைப் பொருத்தவரை அதன் தோற்றம் மற்றும் பரவலை ரோம ஆட்சியின் பின்னணியுடன் தொடர்புபடுத்தி சில இடங்களில் பார்க்க வேண்டியுள்ளது. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட பழைய சிறுவர் படங்களில் இடிக்குரிய‌ தெய்வம், நெருப்பிற்குரிய தெய்வம் என கிரேக்க தெய்வங்களை காட்டியிருப்பர். இயற்கைக்கு கடவுள் வடிவம் கொடுத்து தோற்றச் சித்தரிப்பு செய்யும் வழக்கம் கிரேக்கரிடையே இருந்ததை இதன் வழி அறிய முடியும். இத்தொடரில் கிரேக்க, ரோம கடவுளர்களுடனான ஒப்புமைக்கு இடம் தரக்கூடியதாக கிறித்துவின் ஓவியங்கள் இருக்கும் தன்மை பேசப்பட்டுள்ளது. இவை ஓவிய வழிபாட்டையும் உள்ளடக்கியதாகும். மரியாள் ஓவியங்களில் முதன்மைபடுத்தப்பட்டதை காலத்தின் அடிப்படையில் பகுத்துக் கூறும் பகுதியை சான்றாகக் கொள்ளலாம். மரியாளை வழிபடுதல், இயேசுவை மட்டுமே வழிபடுதல் ஆகிய இருநிலை கிறித்துவ வழிபாட்டுக் கொள்கையின் செயல்பாட்டு நிலையை காலத்தின் அடிப்படையில் தெரிந்து கொள்ள ஏதுவாக அச்செய்தி அமைகிறது. ஒப்பீட்டு முறையும் தொன்ம உணர்வுகளை தன்வயப்படுத்துதலும் சமயங்களின் கலை வழிப் பயணத்தில் இயல்பான ஒன்று. இவ்விரண்டிலும் கிறுத்துவின் ஓவியங்கள் பொருந்திய செய்திகள் இத்தொடரில் தொகுக்கப்பட்டுள்ளன. 

   ஓவியத்துடன் பிற கலை வடிவத்தை இணைத்துப் பேசும் முறைமையும் இத்தொடரில் கையாண்டுள்ளார். சிற்பங்கள், கிரேக்க ரோம சிற்ப அழகியல் முறைமை போன்றவற்றை அடிப்படையாக வைத்து அச்செய்திகள் பேசு பொருளாகியுள்ளன. மயிலை சீனி. வேங்கடசாமியின் “தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்” என்ற நூல் ஓவியம் மற்றும் சிற்பம் குறித்த அடிப்படைத் தகவல்களை அறிவதற்கு ஏதுவான நூலாகும். அந்நூலில் தொடர்ச்சியும் எளிமையுமாக ஒவ்வொரு கலையையும் பற்றிய அறிமுகத்தை பெற முடியும். தொடரில் சிற்பம் மற்றும் ஓவியம் குறித்த பகுதி அந்நூலையே நினைவுபடுத்தியது. நிர்வாண சித்திரங்களை தமிழ்நாட்டின் சிற்பங்களோடு நாம் தொடர்புபடுத்தி பார்க்கலாம். ஆரம்ப காலத்தில் உலகம் முழுவதும் கலைகள் போல செய்தலின் அடிப்படையாக விளங்குகியதற்கு இவையெல்லாம் தக்க உதாரணங்களாகும். தமிழ்நாட்டில் எப்படி கோயில்களோடும் அரசரோடும் கலைகள் நெருங்கிய தொடர்பிலிருந்து வளர்நிலையை அடைந்ததோ அதேபோன்று கிறிஸ்தவத்தில் கிறிஸ்துவின் ஓவியம் வளர்ந்ததற்குப் பின்னுள்ள செய்திகள் இதுவரை தமிழில் போதிய அளவு பேசப்படவில்லை. அதனைத் தீர்க்கும் முகமாக இத்தொடரை நாம் குறிப்பிடலாம். அதேசமயம் அப்பம் உண்டு திராட்சை ரசம் பருகும் செய்தி தொடர்பான பகுதியில் குறையைக் காண்கிறேன். அது தொடர்பான மேலதிக செய்திகளை விரிவாகத் திரட்டிப் பார்ப்பது இக்கட்டுரைக்கு வேறொரு முடிவைத் தரலாம்.


தொடரை வாசிக்க👇🏽

கிறிஸ்துவின் சித்திரங்கள் 

https://www.kurugu.in/2023/11/christ.html?m=1

https://www.kurugu.in/2023/12/images-of-christ.html?m=1

https://www.kurugu.in/2024/01/christ.html?m=1

https://www.kurugu.in/2024/03/christ-on-world-war.html?m=1


Comments

  1. வணக்கம், நான் தாமரைக்கண்ணன் அவிநாசி. உங்கள் வாசிப்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றி. இந்த கட்டுரைகளுக்கு அடிப்படையாக இருந்து ’The Image of Christ: The Catalogue of the Exhibition Seeing Salvation by Neil MacGregor, Gabriele Finaldi’ என்ற நூல் மற்றும் Richard Harries அவர்களின் நூலும் உரைகளும் (காணொலியில் அவை கிடைக்கின்றன). மேலதிகமாக இணையத்திலுள்ள தகவல்களும் எடுத்தாளப்பட்டுள்ளன (அவை நம்பகமான தரவாக இருக்கும் பட்சத்தில் மட்டும்).

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு