எதார்த்த வாழ்வியலிலிருந்து முகிழ்க்கும் புனைவு : ‘குதிப்பி’ புதினத்தை முன்வைத்து - இரா. வீரமணி
எதார்த்த வாழ்வியலிலிருந்து முகிழ்க்கும் புனைவு :
‘குதிப்பி’ புதினத்தை முன்வைத்து
- இரா. வீரமணி
சமையல் ஒரு கலையாகுமா? சமையல் கலை குறித்த இலக்கியங்கள் தமிழில் பெரிய அளவில் வெளிவந்திருக்கின்றனவா? (‘மடைநூல்’ எனும் சமையல் கலை நூல் இருந்ததாகச் சீவக சிந்தாமணி உரையின் வழி எடுத்துக் காட்டுவார் கே.கே.பிள்ளை. ஏலாதி, சிறுபஞ்சமூலம் போன்றவை பெயரளவில் மூலிகைப் பொருட்களால் சுட்டப்படும் அறநூல்களே தவிர, உணவுப் பண்பாட்டை விரிவாகப் பேசுவன அல்ல.) பாணர், விறலியர் போன்று சமையல் கலைஞர்களின் வாழ்வியல் எங்கேனும் பழந்தமிழ் இலக்கியங்களில் பதிவாகியிருக்கிறதா? இப்படியான கேள்விகள் நம்முள் எழுந்திருக்கக்கூடுமா என்பது சந்தேகம்தான். இக்கேள்விகளுக்குத் தமிழ்ச் சூழலில் நெடிய வரலாற்றுப் பின்புலம் இருக்கிறது. அவ்வரலாற்றைப் பேசும் முன், இவ்வரலாறு பேசப்படும் தருவாயை ஏற்படுத்தியை நூலினைக் குறித்து அறியவேண்டும். ‘குதிப்பி’ எனும் சமையல் சாதனத்தின் பெயரால் எழுதப்பட்டிருக்கும் ம.காமுத்துரையின் புதினத்தை நவம்பர்-2019இல் டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டிற்கான “பிரபஞ்சன் நினைவுப் பரிசு” பெற்றது இப்புதினத்தின் கூடுதல் சிறப்பு. 351 பக்கங்களுடைய புதினத்தில், எளிய வாசகரும் வாசித்து அனுபவிக்கக்கூடிய உரையாடல் மொழியே பரந்துகிடக்கிறது.
எழுத்தாளராகத் தன்னை விந்தையான ஆற்றலுடையவராகக் கற்பனையுலகிற்குள் செருகிக் கொள்ளாமல், எதார்த்த வெளியில் தானறிந்த மனிதர்களின் வாழ்வியலின் ஊடே ஒவ்வொரு வாசகரையும் பயணிக்கச் செய்கிறார். எடுத்துரைப்பில் எளிமை இருப்பினும், எடுத்துரைக்கும் உட்பொருள் கனதியானது. சமையல்காரர்களின் வாழ்வியலை 3600 கோணத்தில் சுழற்றிக் காட்டியிருக்கிறார் நூலாசிரியர். இவரின் பிற ஆக்கங்களும் இம்மாதிரியான களங்களைக் கொண்டமைந்துள்ளது என்பதை அணுக்கமான வாசகர்கள் அறியலாம். இதற்கு, அவர் மேற்கொண்டுள்ள பாத்திரக் கடை உரிமையாளர் என்கிற தொழிலும் ஒரு காரணம் எனலாம். ‘சொல்லப்படாத கதை’ என்ற தலைப்பிலான நூல் அணிந்துரையில் தி.ஜா.வுக்குப் பிறகு இப்படியொரு படைப்பு வந்திருப்பதை ஆதர்சமாக ஏற்று மெச்சுகிறார் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன். இந்நூலினை மையமிட்டுத் தொழில்முறைக் கலைஞர்களாக இருக்கும் சமையல் கலைஞர்களின் வாழ்வியலை உரையாடலுக்குட்படுத்த விழைகிறது இக்கட்டுரை.
புதினத்தில் இடம்பெற்றுள்ள மாந்தர்கள்
புதினத்தில் சாரதி, மனைவி வளர்மதி, மகன் சரவணன், மகள் ஜீவா என்று ஒரு குடும்பத்தின் பிரதான வாழ்வியல் சிக்கல்களும், வளர்மதி எதிர்கொள்ளும் சவால்களும், நிம்மதியாகப் படிக்க முடியாமல் தவிக்கும் மகனின் குமைச்சலும் நிரம்பியிருக்கின்றன. சாரதியின் பிரதான தேவைகளை அறிந்து வேலை கொடுக்கும் ஊராரின் மதிப்புப் பெற்ற மாஸ்டர் சேது, சாரதி, சேது, முஜிபுர், துரைப்பாண்டி, இரமேஷ், கோவிந்து உள்ளிட்ட சமையல்காரர்களின் குசும்புத்தனத்தில் அனுதினமும் சிக்கித் தவிக்கும் பாத்திரக் கடைக்காரர், சமையல்காரர்களுக்குக் கஷ்ட, நஷ்டங்களுக்கெல்லாம் வட்டிக்குப் பணம் விடும் பாயம்மா, சாரதிக்குக் குடியால் ஏற்படும் திக்குமுக்கைச் சரிசெய்ய வீட்டாரின் வருந்துதலால் இரவுகளில் வீட்டிற்கு வந்து ஊசி போடும் டாக்டர் மாரிநாயுடு, வளர்மதிக்கு அவ்வப்போது வீட்டிற்கு வந்து புத்திமதி சொல்லி, சரவணனுக்கு நல்லதொரு எதிர்காலம் அமைப்பதில் முனைப்புக் காட்டும் அக்காண்டிப்பெரியம்மா, அவளின் மகள் ஆண்டாளக்கா, சரவணனைச் சமையற்கலை (கேட்டரிங்) படிக்க ஆற்றுப்படித்திய ஆண்டளக்காவின் கணவர் வாசு என்று வாசிக்கும் திசையெங்கும் பாத்திரங்களின் பட்டியலை நீட்டிக்கலாம்.
சமைப்பதில், வீட்டுக்கு உள்ளே பெண்ணுக்கு, வீட்டுக்கு வெளியே ஆணுக்கு என்று கோடு போட்டுத் தந்தது யார்? அப்படிக் கோடு போட்ட பிழைப்பில், ஆண்கள் அனுபவிக்கும் சொகுசும், பெண்கள் படும் துயரும் ஒருசேர பார்க்க வேண்டியிருக்கிறது. இதற்கிடையில் சம்பாத்தியம் எனும் முக்கியக் காரணி மறைந்திருக்கிறது. இதையொட்டிய அம்பையின் ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ என்னும் சிறுகதையின் உட்பொருண்மையை எண்ணிப் பார்க்கவேண்டும்.
புதினத்திற்குள் வரும் பாக்கியம் எனும் பெண்பாத்திரம் ஆண் வேலைக்காரருக்கு நிகராகக் குதிப்பியேந்துவதைச் சுட்டுகிறார் காமுத்துரை. எனினும், ஆண் மாஸ்டருக்குச் சரிக்குச் சமமாக உடற்பளுவுடைய, தொழில்நுணுக்கமும் அறிந்த பாக்கியம் மாஸ்டராக மிளிரவில்லை. சமூகத்தின் கட்டுமானம் பெண்களுக்கு அத்தகைய அங்கீகாரத்தை அவ்வளவு எளிதில் கொடுப்பதில்லை. சமூகத்தில் இன்னும் பெண்களை உதவியாட்களாகவே சமையல் தொழிலில் இருத்தி வைத்திருக்கிறது. பாக்கியத்திற்குத் துணைவர் இல்லாத சூழலில் படிப்பில் தாட்டியமாய் இருக்கும் ஒரே மகள் வசந்தி, ஆனந்தி நீட் தேர்வில் தோற்கடிக்கப்பட்டது போல தோற்கிறாள். ஆனந்தியின் இறப்பை எதிர்த்துப் போராடும் காட்சிகளும் புதினத்தில் வருகின்றன. ஆனந்தி (தற்)கொலையுண்டதுபோல தன் மகளும் செய்துகொள்வாளோ எனும் பதைப்பில், தானறிந்தவரை வீட்டிற்கு அழைத்து உபதேசம் செய்விக்கிறாள். இக்காட்சியின்வழி, நடைமுறை யதார்த்தத்தை அரசியல் காரணிகளோடு போகிற போக்கில் தொடர்புபடுத்திவிடுகிறார் நூலாசிரியர்.
வாஞ்சையான பாத்திரங்கள்
பொதுவாகத் துணைமைப் பாத்திரங்கள் முதன்மைப்பாத்திரங்களுக்கு உறுதுணையாக நிற்கும். ஆனால், இப்புதினத்தில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் தன்னளவில் முக்கியத்துவம் வாய்ந்த பின்புலத்திற்காக வந்து சேர்கின்றன. தனக்கும் பாத்திரக்கடைக்காரருக்கும் இடையிலான அணுக்கத்தின் மீதிருந்த நம்பிக்கையில் நாடுச்சாமம் கடந்தும் தயக்கப்படாமல் பொண்டாட்டி இறப்புக்கு நெடுந்தொலைவு நடந்தே வந்து சேர் (நாற்காலி) கேட்கும் சின்னக்காளை (ப.127), கடைத்தெருவில் சால்வை விற்கும்போது விலையேற்ற உத்தாசை செய்ததற்கு மறக்காமல் பதிமூன்று ரூபாய் கமிஷன் காசை அளிக்கும் கூடலூர் ராவுத்தர் (ப.58), சாரதியின் மூகவாட்டத்தை வைத்தே சாப்பிடவில்லையென்று கண்டறிந்து பதறிக்கொண்டு டீயும் சிகரெட்டும் வாங்கிக் கொடுக்கும் வயல்பட்டி பெருசு (ப.148), கண்பார்வை மசங்கி நடுங்கும் வயதில் வீடு தேடி வந்து சாரதியின் உடல்நிலையைக் கேட்டறிந்து, “நீ என்ன சாப்பிடுவேன்னு தெரியாது சாரதி. பன்ரொட்டியும் ஆப்பிளியும் வாங்கலாம்னு நெனச்சே… ஆப்பிள் இனிப்பு, ரொட்டி செமிக்கிமானு தெரியல… அதனால வெறுங் கைல வர மெத்த சங்கட்டமாப் போச்சு” என்று வெள்ளந்தியாயப் பேசி இருநூறு ரூபாயைக் கைக்குள் திணிக்கும் கவுண்டரம்மா (ப.269) என்று பல அற்புதமான மனிதர்களின் சித்திரங்களை மனதிற்குள் நிழலாட வைத்துவிடுகிறார் காமுத்துரை.
சொற்களின் வலிமை
சமையல் தொழிலாளிகளைக் குறிக்கும் ஆங்கிலச் சொற்களான ‘Cook’, ‘Chief’ என்பனவற்றைக் காட்டிலும், தமிழ்ச்சூலலில் ‘Master’ எனும் சொல்லே பெரும்பான்மையோர் புழங்கும் வார்த்தையாக இருக்கிறது. எந்தவொரு துறையிலும் நிபுணத்துவம் மிக்கவராக இருப்பவரை இச்சொல்லால் குறிப்பது மரபு. இத்தகைய ஒரு பொதுச்சொல் சமையற்கலைஞர்களுக்குப் புனை பெயராகவோ, பின்னொட்டுப் பெயராகவோ (உ-ம். புரோட்டா மாஸ்டர், வடை மாஸ்டர், டீ மாஸ்டர்) என்று ஒட்டிக் கொண்டதைக் குறித்துச் சிந்திக்கவேண்டியுள்ளது. புதினத்தில் கடைக்காரரிடம் சேது இப்படிப் பேசுகிறார்:
“எதுக்குணே இப்படி களவாங்கணும், அன்னிக்கு பெத்துலு செஞ்சார்னா… சம்பளங் கெடையாது… கொறச்ச கூலி. அத சரிகட்ட செஞ்சார்னு சொல்லலாம்… இப்பதே பொறுக்க பொறுக்க பேசறம்ல… ஓராள் பண்றது… எல்லாரையும் அப்படியே பாக்க வக்கிதுல்ல…” (ப.307)
பெத்தலுசாமி எனும் சமையல் மாஸ்டர் நல்லெண்ணைய் திருடி, நல்லையா என்னும் தன்னுடைய உதவியாளின் வெகுளித்தனத்தால் மாட்டிக் கொண்ட கதையைச் சொல்லி, முனியாண்டிக்கு வேலை கிடைக்காமல் போனதற்குக் காரணம் சொல்கிறார் சேது. ஒருவரின் செயலால் மற்றவருக்கும் பேரு கெட்டுப்போய்விடும் என்று சொல்லும்போது மாஸ்டர் எனும் ஒற்றைச் சொல்லிற்குப் பின்னிருக்கும் இலட்சணைகள் குத்திட்டு நிற்கின்றன. ‘தொழில் தர்மம்’ மீறப்படும்போது அத்தொழிலுக்கான இலட்சணையிலும் களங்கம் நேர்ந்துவிடுகிறது. தமிழ்ச் சூழலில், ‘ஒரு சொல் கொல்லும், ஒரு சொல் வெல்லும்’ என்கிற நம்பிக்கை நிலவிவருவதற்குச் சான்றாக, சில காட்சிகள் புதினத்தில் இடம்பெற்றிருக்கின்றன.
கோவிந்து, முஜிபுர், துரைப்பாண்டி, சேது என்று தன் சகாக்கள் தான் படுக்கையில் கிடக்கும் சமயத்தில் வந்திருந்து நலம் விசாரிக்கும் சூழலில், முஜிபுர் விளையாட்டாகப் போடும் ஒரு சொல்:
“ஏண்டா தொரைப்பாண்டி… நீய்யெல்லா… செத்தா… வார பணத்த அனுபவிக்க ஆளிருக்காடா..?” என்ற முஜிபுரின் கேள்வி எல்லோரையும் சங்கடத்துக்குள்ளாக்கியது. (ப.265)
என்று பதிவு செய்கிறார் ம.காமுத்துரை.
“சண்டையும் சத்தமும் போட்டு எந்தக் கோட்டைய, ஆளப்போறம் வளரு… ஒருத்தன… ஈசியா ஒரு வார்த்தையில போட்டு அமுக்கிறக்கூடாதுல்ல… அதே வார்த்தய அவெ திரும்பக் கேட்டான்னா… நீ நாண்டுக் கிடணும்ல.” (ப.268)
என்று அப்போது எழுந்த பிரச்சனையைத் தீர்க்கும் அக்காண்டியம்மாவின் தேற்றலும் ஒற்றை வார்த்தையினை மையமிட்டே நிற்கிறது. முஜிபுர் வேடிக்கையாகச் சொன்னது போலவே, துரைப்பாண்டியும் விபத்தில் சிக்கி, குடல் பிதுங்கி இறந்தும் போகிறான்.
முனியாண்டி இரமேசுடன் சேர்ந்து சாரதியின் உடல்நிலையை நன்கு அறிந்தும் வேண்டுமென்றே சாரதியை வம்புக்கு இழுத்து, தரையில் புரண்டு சண்டையிடும் சூழல் ஏற்படுகிறது. இத்தனைக்கும் காரணம் சாரதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட பிறகு, அக்காண்டிப் பெரியம்மாவின் ஆலோசனைப்படி, தான் முன்னர் செய்து கொண்டிருந்த முறுக்குப் போடும் கம்பெனி வேலையிலிருந்து விலகிய வளர்மதி, சாரதியின் இடத்தில் நின்று புதிதாக வரும் சமையல் வேலைகளை எடுத்துச் செய்ய ஆரம்பித்ததுதான். இந்தச் சூழலில்தான்,
“முன்போலிருந்தால் இந்நேரம் டீ கடை ரணகளம் ஆகி இருக்கும். அனுதினமும் மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருப்பதாலும், அலுக்க வேலைசெய்ய வேண்டாம். அதிகமாக உணர்ச்சிவசப்பட வேண்டாம் என டாக்டர்கள் கேட்டுக் கொண்டதாலும்… வருகிற கோபத்தையெல்லாம் தலகாணிக்குள் பழைய துணியை திணிப்பதைப் போல திணித்துக் கொண்டே இருந்தான். எவ்வளவுதான் தாங்கும்..? அந்த விபரம் தெரிந்துதான் இந்த ராஸ்கல் மோதுகிறான்.” (ப.323)
என்று சாரதி மீதிருந்த கரிசணத்தால் தன்னிலை மறந்த காமுத்துரை, முனியாண்டியை ராஸ்கல் என்று கடிந்து பேசவைக்கிறது. ஆனால், முன்னரே சொன்னது போல் காட்சிகளின் கோர்வையில் சாரதி இறக்கப்போவதை இந்தச் சண்டையின்வழி கண்ணியைப் போல பொருத்திவிட்டுக் கடக்கிறார். சாரதியின் இறப்பு, முனியாண்டியின் ஒற்றை ஏசலில் இருப்பதைச் சொல்லாமல் சொல்லிக் கடக்கிறார். காமுத்துரையின் மனப்பதைப்பு, டாக்டர் மாரிநாயுடுவிடம் சரவணின் குரலாக, மறுபடியும் ஒரு ஊசி போட்டு அப்பாவ எழுப்பிவிட முடியாதா’ என்று தொண்டைக்குழியில் துக்கத்தை அடக்கிக் கேட்கிறது போல தொனிக்கிறது.
ஆதியை அந்தமாக மாற்றும் படைப்பாளரின் புனைவு நுட்பம்
நூல் சமர்ப்பணத்தைப் படித்தபோது வாசகர்கள் திடுக்கிடக்கூடும். இப்படிச் சமர்ப்பணம் செய்துள்ளார், நூலாசிரியர்:
“குடிகார
அப்பாக்களின் மகன்களுக்கும்
மகன்களின் அம்மாக்களுக்கும்”
இதைப் படித்த மாத்திரத்தில் எல்லோருடைய நினைவலைகளும் தங்களுடைய அப்பாவின் நிலையைப் பற்றி யோசித்திருக்கக் கூடும். உண்மையில் அங்கேயே ம.காமுத்துரை இப்புதினத்திற்கான வெகுமதியைப் பெற்றுவிடுகிறார்.
“குவாட்டர் பாட்டிலின் மூடி சாரதியின் பிடிக்குச் சிக்காமல் வழுக்கியது” (ப.7)
என்று முதல்வரியைப் போடுகிற காமுத்துரையே,
“போதையெல்லா தெரியாது. எரிச்சல் மாறிடும்… சரவணா
பாட்டிலைக் கையில் வாங்கியவன், பாக்கியத்தையும் கோவிந்தனையும் பார்த்தான். சடாரென பாட்டிலை வெளியில் தூக்கி எறிந்தான். பாக்கியத்திடமிருந்து விலகி, தானாக இருக்கையில் உட்கார்ந்து, கண்களை மூடி சாய்ந்து கொண்டான்.
“ம்மா…!”
வளர்மதி அவன் கண்ணுக்குள் வந்து நின்றாள்” (ப.351)
என்று முடிக்கிறார். சாரதியின் கையில் ஏந்திய குவாட்டர் பாட்டில் அவனின் மகன் கையிலிருந்து தூக்கிய எறியும் வைக்கும் வேடிக்கையை நம் கண்முன் வருவித்துக் காட்டுகிறார் காமுத்துரை.
புனைவிலிருந்து முகிழ்க்கும் நம்பிக்கைக் கீற்று
மகாபாரதப் போரில் வீரர்களுக்குச் சேரமன்னன் உணவளித்தமையால், ‘பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்’ என்று சேர மன்னன் புகழாரம் சூட்டப்படுகிறான். தொல்காப்பியத்திலும் வஞ்சித்திணையின்கண் “பிண்டம் மேய பெருஞ்சோற்றுநிலை” எனும் துறை இருப்பதைக் காண்கிறோம். ஆக, பெருந்திரளுக்கு உணவளிப்பது அந்தக்காலம் முதலே இருந்து வந்துள்ளது. மணிமேகலை காப்பியம் (பௌத்த நெறியைப் பிரசங்கப்படுத்துவதில் முனைப்புக் காட்டியிருந்தாலும்) மக்களின் பசிப் பிணியை அறுப்பதில் காட்டிய முனைப்பே அதிகம். பக்தி இலக்கியக் காலத்தில் ‘அன்னதானம்’ எனும் சொல் ஆக்கம் பெற்று இருப்பதையும் காணமுடிகிறது. 19ஆம் நூற்றாண்டில் வள்ளலார் தொடங்கிய வடலூர் “சத்திய தருமசாலை”யும்கூட பசியறுப்பை மையமிட்டு எழுந்ததே. “அன்ன சத்திரங்கள் ஆயிரம் வைத்து” எனும் பாரதியின் வரியும் பசியின் தீர்வை நோக்கியதே. இவையெல்லாமே பெருந்திரளானோர்க்குச் சமைக்க, பசியாற்ற பெருக்கெடுத்த வடிகால்கள்.
எவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்திற்கும் சொல்லிய நேரத்தில் அத்தனை உணவு வகைகளையும் அவித்தும், காய்ச்சியும், பொரித்தும், சுட்டும், வேக வைத்தும் கொடுக்கிற ஆளுமையைக் கற்றுத் தேர்ந்தார்கள் சமையல் கலைஞர்கள். சமைத்தலுக்காகவே சபிக்கப்பட்ட புண்ணியர்கள் இக்கலைஞர்கள்.
பாணர், கூத்தர், விறலியர் என்று தொழிற்கலைஞர்களைப் புரக்க ஆள் இருந்தது. வாழ்வியலைப் பதிவுசெய்ய இலக்கியப் பட்டாளம் இருந்தது. ஆனால், சமையல் தொழிலாளிக்கு அப்படியொன்றில்லை. அவர்களின் வாழ்வியல் திருவிழாக்களையும் நல் / அல் நிகழ்வுகளையும் எதிர்பார்த்து இருந்தன. அவர்களுக்கென்று தனித்த நிலையான பொருளாதார வரவு இன்றளவும் இல்லை. இந்தச் சமயத்தில், புதினத்தில் வரும் சண்முகம் தோழர் பாத்திரத்தைப் பற்றிக் குறிப்பிட்டாகவேண்டும். இத்தகைய கதாபாத்திரங்கள், அன்றாட வாழ்வில் இடதுசாரிச் செயல்பாட்டாளர்களின் அங்கம் எங்ஙனம் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை வலியுறுத்துவதாய் அமைகிறது.
துரைப்பாண்டியை முதன்முதலில் அந்தச் சமையல்காரக் கூட்டத்திலிருந்து தொழிலாளர் சேவை நலச் சங்க உறுப்பினராக்கியதிலிருந்து சண்முகம் தோழரின் பங்கு ஆரம்பிக்கிறது. கண்ணெதிரே துரைப்பாண்டி இறந்தபிறகு, உடன் இருக்கும் சமையல்காரர்களுக்குள் குமைச்சலை ஏற்படுத்துகிறது. துரைப்பாண்டி, கஞ்சா போதையால் நிலை தடுமாறி சாலை நெரிசலில் வண்டிச்சக்கரத்திற்கு மாட்டிக்கொண்டது தனிப்பட்ட விபத்துதான். ஆனால், அவன் சுமந்து வந்த சிலிண்டரும், அவன் எதன் பொருட்டுச் சுமந்து வந்தான் என்று வினவும்போதுதான் அவனுடைய வாழ்வியலைப் புரிந்துகொள்ள முடிகிறது. சாரதி நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும்போதும் அதே சண்முகம் தோழர் வீட்டிற்கு வந்து விசாரிக்கிறார். துரைப்பாண்டியின் இறப்பிற்குப் பின் அவரின் தாயாருக்கு அந்நலத்திட்ட உதவித்தொகை சேர்ப்பிக்கப்படுகிறது. இச்சம்பவம் புதினத்தில் வரும் கதாபாத்திரங்களைக் கடந்து, படிக்கும் வாசகரிடையேயும் நம்பிக்கைக் கீற்றை ஏற்படுத்துகிறது.
கடைக்காரர், சேது ஆகியோருடன் அடிக்கடி பேசி சமையல் தொழிலாளிகளை ஒருங்கிணைத்து இந்நலத்திட்டத்திற்கு இணைக்க ஊக்கக் காரணியாகத் தோழர் இருக்கிறார். ஒரு கட்டத்தில், பேச்சு வார்த்தையின் பலனால் ஒரு தோப்பில் அசைவப் பந்தி, சோமபானத்துடன் நிறைவேறுகிறது. தோழரின் அறிவுறுத்தலின்படி சமையல் தொழிலாளிகள் சங்கத்தில் சேர்க்கப்படுகின்றனர். அதிலும் நிர்வாகப் பொறுப்புகளைப் பிரிப்பதில் அதிகாரச் சிக்கல் ஏற்படுவதையும் காமுத்துரை சொல்லாமல் விட்டுவைக்கவில்லை.
எதார்த்த வாழ்வியலில் தோயும் புனைவு நுட்பம்
நாகரீகத்தின் யதார்த்தமான முகத்திரையைக் கிழித்தெறியும் காட்சியாகக் காமுத்துரை அல்லிநகரத்துத் திருவிழாக் காட்சியைச் சுட்டுகிறார். அப்பகுதியில்:
“முன்னெல்லாம் பூமராக் பீடி, மலபார்பீடி, சொக்கலால் ராம்செட் பீடிக் கம்பெனிக்காரர்கள் தனிமேடைகள் அமைத்து விளம்பரத்திற்காக எட்டு நாளும் ஆட்டக்காரர்களை ஒப்பந்தம் செய்திருப்பார்கள். பின்னாளில் செலவு கருதி பதினாறு எம்.எம்.புரோஜெக்டர் வாடகைக்கு எடுத்து தினசரி இரவு இரண்டு அல்லது மூன்று சினிமாப் படங்கள் வரை ஒட்டி இடை இடையே தங்களது கம்பெனி விளம்பரத்தையும் இணைத்து ஒளிபரப்பினர். அதன் காரணமாகவே ஒருநாள் கலைநிகழ்ச்சியை விருப்பத்தோடு கண்டுகளிக்க மக்கள் வரலாயினர்.” (ப.105)
என்று ஒரு பகுதி வருகிறது. எப்படி மெல்ல மெல்ல திருவிழாக்கள் தொடங்கி தற்போது வீடு முற்றத்தை அடைந்து ஓயாமல் விளம்பரங்கள் உச்சாடனம் செய்துகொண்டிருக்கின்றன தொலைக்காட்சிகள். தொலைக்காட்சியின் வரவு எப்படி நிகழ்த்துக் கலைஞர்களின் வாழ்க்கையை மக்களிடமிருந்து அன்னியப்படுத்தியது என்பதற்கு மேற்கண்ட பகுதியே மிகச் சிறந்த சான்று. இப்படி திறனடிப்படையிலான நிகழ்த்துக் கலைகளை, தொழில்களை மறந்து அவற்றை வெறுமனே காட்சியூடகத்தின் வழி காணும் பொய்யான பிம்பத்தை நிஜமென நம்பும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைவூட்டுகிறார் காமுத்துரை.
‘என்ன தொழில் பாக்குறீங்க‘ என்ற கேள்விக்குச் சொல்லும் பதிலைக் கேட்டு, சமையல்காரனா என்று சுளிக்கும் முகங்கள், நவீனப் பூச்சுக் கொண்ட கேட்டரிங் தொழில் என்று மிடுக்காகச் சொல்லும்போது வேறு பாவனையைக் காட்டுகிறது. சமையல் தொழில் செய்பவர்களுக்குப் பெண் கிடைக்கும் அரிய வாய்ப்பினைச் சாரதி-வளர்மதி இணையரின் திருமணத்திலிருந்து சொல்லிவிடுகிறார். சமையல் தொழிலைப் பிரதானமாக நம்பியிருக்கும் தொழிலாளர்களுக்கு இதுபோன்ற தடைகள் எல்லாவற்றையும் கடந்து அவர்களின் சாதியும் ஒரு முட்டுக்கட்டை இடுவதை ஆங்காங்கு புதினத்தில் கோடிட்டுக் காட்டுகிறார் நூலாசிரியர்.
கற்பனை வளமிக்க இலட்சியவாதம் வேறு. நடைமுறையில் இருக்கும் யதார்த்தவாதம் என்பது வேறு. சாரதிக்கும் வளர்மதிக்கும் இடையிலான தாம்பத்திய காட்சியில் இப்படியொரு உரையாடல் வருகிறது:
“நல்லாருந்துச்சா…” தலையை மட்டும் அவள் புறம் திருப்பிக் கேட்டான். அவன் உச்சரிச்ச அதே தொனியில் கொஞ்சம் மாறாமல் “ம்..” என கிசுகிசுத்தாள். குரலில் மாத்திரையின் ஒலியளவு இன்னும் குறைந்தது போல அவனுக்குக் கேட்டது.
“ம்… னா?”
“ச்… நல்லாருக்கு…” சொல்லிவிட்டு வெட்கத்துடன் அவனது காதைக் கடித்தாள். அப்போதுதான் நம்புவான்.”
கடைசியாகச் சொன்ன ‘அப்போதுதான் நம்புவான்’ எனும் சொற்கள் காமுத்துரையினுடையது. அவ்வாக்கியம் பேசுவது சாரதியின் பலம்- பலகீனத்தையா, வளர்மதியின் தேவை-தேவையின்மையையா எனும் வாதத்தைக் கிளப்பி, அதற்கான தீர்வு வளர்மதியின் பதிலில் ஒளித்து வைக்கப்பட்டுவிடுகிறது. வாசகர்களே இதற்குப் பதில் தேடிக்கொள்ள விட்டு விடுகிறார். இப்படி வாக்கியத்திற்கு இடையே தொக்கியிருக்கும் பயன்பாட்டு அழுத்தத்தை வாசகர்கள் உய்த்துணரலாம்.
சமையல் கலையின் வரலாறும் தற்கால நிலையும்
உணவைச் சமைத்து உண்ணும் வழக்கம் எப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் என்ற கேள்வியைப் போட்டால், அதற்கு விடையாக மனிதன் தீ உருவாக்க கற்றுக் கொண்ட காலகட்டத்தைச் சொல்லலாம். அதற்கு முன்னர் சமையல் உணவு இருந்திருக்காதா என்றால், இயற்கையாகத் திடீர் காட்டுத் தீயால் விலங்கினங்கள், தாவரங்கள் கருகி அவற்றின் சிதலமடைந்த பகுதிகள் மனிதனின் நாச்சுவைக்கு எட்டியதால் நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டு. ஆகவே, சமைத்தலின் தொடக்கம் தீ கண்டறியப்பட்ட பிறகு, வேட்டையாடி கொண்டுவரப்பட்டவைகளைத் தீயிலிட்டு அவற்றைப் பக்குவப்படுத்திப் புதுப்புது முறையில் நாச்சுவையைக் கூட்டத் தொடங்கியதிலிருந்து பார்க்க வேண்டியிருக்கிறது. இந்நிலையில், தமிழ் மக்களின் உணவுப் பாரம்பரியத்தையும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. தமிழரிடையே இருந்த திணைசார் உணவுமுறைகளும் அருகி வருவதை பேரா. பக்தவச்சலபாரதி இனங்கண்டு குறிப்பிட்டுள்ளார்.
தான் சிறுவனாக இருந்தபோது நாற்றங்காலில் தொடங்கி, களையெடுப்பு, பால் கட்டி, கதிர் முற்றி, நெல்குலை சாய்ந்து, அறுவடையாகி, மெருக்கடிப்பு முடிந்து, ஆவியில் வேகவைத்துப் புழுங்கலரிசியாகி, உரலில் குத்து வாங்கி, மேலாடையை (தவிடு) கழற்றி, கல், உமி புடைத்து, உலையில் கொதித்துச் சோறாவதுவரைக்கும் அனுபவபூர்வமாகவே அறிந்து சாப்பிட்டதற்கும் தற்போதுள்ள சூழலுக்கும் இடையிலான வேறுபாட்டை ‘ஒரு சாப்பாட்டு ராமனின் நினைவலைகள்’ எனும் தன் நூலில் எடுத்துக்காட்டியுள்ளார் ச.தமிழ்ச்செல்வன்.
நாகரீகப் பண்பாட்டின் வளர்ச்சியில் உணவுக்கே முதலிடம். சொல்லப்போனால், மனிதனுக்குள் பசியின் வேட்கை துவங்கிய நாளிலிருந்து முறையாக உபயோகப்படுத்த முடியாமல் ஆங்காங்கு மழையிலும் கடலிலும் வீணடித்துக் கொண்டிருக்கும் இன்றைய நாள் வரை உணவின் பங்கு அளப்பரியது. உணவு, உடை, உறையுள் - எனும் அடிப்படைத் தேவைகளின் வரிசையில் முதலில் நிற்பது உணவே. உண்டிக் கொடுத்தோரை உயிர் கொடுத்தோராக கனம்பண்ணும் தமிழ்ச் சமூகத்தில் சமைத்தல் எனும் தொழில் யாரை மையமிட்டதாக இருக்கிறது என்று கேட்போமானால், முந்நீரைக் கடவாமல் அடுப்படியில் இருத்தி வைக்கப்பட்டிருப்போரின் கைகளால் சோறுண்டவர் அறிவோம். பழந்தமிழ் இலக்கியத்தில் சமைத்தல் ‘அடுதல்’ என்று குறிப்பிடப்படுகிறது. கலிங்கத்துப்பரணியின் நிறைவில் பேய்கள் காளிக்கு இறந்த உடல்களிலிருந்து கூழ் சமைத்துப் படைப்பதைக் ‘கூழ் அடுதல்’ என்று குறிப்பிடப்படுவதைக் காணலாம். அடுப்படியில் செய்த தொழில் ‘அடுதல்’ என்பது செய்தி. ஆனால், புறப்பொருளில் இதே சொல்லுக்கு வேறு வகையிலான பொருள் காணப்படுகிறது.
“ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவதன்று இவ்வுலகத்து இயற்கை” (புறம்-70)
என்று வரும் இடத்தில் அதே சொல், போர் புரிந்து கொல்வதைக் குறிக்கிறது என்பது கூடுதல் செய்தி. ஆனால், இரண்டு செய்திகளின்றும் மையப்பொருளாக இருப்பது, ஒரு தன்மையிலிருந்து மற்றொரு தன்மைக்கு மாற வினையாற்றுவது.
“வெவ்வேறு வகைகளில் விலங்குகளிலிருந்து பிரிந்து உயர்வடைந்தது போலவே மனிதன் உணவு உண்பதிலும் விலங்குகளிலிருந்து பிரிந்து உயர்வடைந்துவிட்டான். மனிதன் நல்ல முறையில் பகுத்தறிவுள்ள விஞ்ஞான முறையில் உணவு உண்ணக் கற்றுக்கொண்டபோதிலும், பெரும்பான்மையோர் உடம்புக்கேற்ற தகுந்த உணவை உண்பதில்லை.” (உணவு நூல், பக்.5-6) என்கிறார் மயிலை சீனி. வேங்கடசாமி.
இன்றைக்கு ஹோட்டல்களின் வருகை, மக்களிடையே உணவுக் கலாச்சாரத்தில் மாற்றம் நிகழ்த்தியிருப்தையும் கணக்கில் கொள்ளவேண்டும். புதுப்புது முறைகளில் உணவு வகைகளைத் தயாரித்து, உலகின் வெவ்வேறு பகுதிகளின் உணவுமுறையைக் கொணர்ந்து அறிமுகப்படுத்தி வளரும் தலைமுறையை அசலான உணவுப் பயன்பாட்டிலிருந்து தூர விலக்கிச் செல்லும் அபாயத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.
“நகர்ப்புறமயமாதல், தொடர்புச் சாதனங்களின் விளம்பரத் தன்மை, பொருளியல் வளர்ச்சி பயண அனுபவங்கள் ஆகியவை காரணமாகக் கடந்த ஒரு நூற்றாண்டுக் காலத்திற்குள் தமிழர்களின் உணவு முறை மிகப்பெரிய அளவில மாறுதல் அடைந்திருக்கிறது. நிகழ்கால உணவுப் பழக்கவழக்கங்களில் உடல் நலம் குறித்த அக்கறையைவிடச் சுவை குறித்த பார்வையே ஆளுமை செலுத்துகிறது.” (அறியப்படாத தமிழகம், ப. 23) என்னும் தொ.பரமசிவன் கூற்று எண்ணிப் பார்க்கவேண்டும்.
எந்தவொரு பண்பாட்டுப் பொருத்தமும் இல்லாமல், தங்களுக்கென்ற தனித்த அடையாளங்களுடன் உலகெங்கிலும் கிளைகள் பரப்பி விதவிதமான உணவுப் பண்டங்களை மூளைக்குள் திணித்திருப்பதோடு, பொட்டலங்களில் அடைக்கப்பட்ட தயார்நிலையிலான தின்பண்டங்களைப் பட்டியலிட்டு விற்கும் பெருந்தொழில் நிறுவனங்கள் ஒருபுறம் போட்டியில் இருக்க, இருக்கின்ற இடத்திற்கே தெரிவு செய்த உணவுகளைக் கொண்டு வந்து கொடுப்பதற்கு இன்றைக்கு ‘Zomato’, ‘Swiggy’ போன்ற முதலாளித்துவ உணவு விற்பனை நிறுவனங்கள் மறுபுறம் வரிசை கட்டி நிற்கின்றன. உணவு சமைக்கக்கூட திறனற்றவர்களாக மாற்றி சோம்பேறிக் கம்பளத்தை விரித்து உபச்சாரம் செய்கின்றன செல்போன் செயலிகளில் செயல்படும் இந்நிறுவனங்கள். அதையும் மீறி, வீட்டில் சமைக்கும் இன்றைய இளம் தலைமுறையினர்கூட “Recipe” வகைகளைக் கொண்டு தம் கைப்பக்குவத்தைக் காட்ட, Youtube காணொளிகளைப் பார்த்துப் பார்த்துச் செய்யவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். கிட்டதட்ட, துரிதவகை உணவுக் கலாச்சாரத்தின் வருகையினால் தமிழரின் பாரம்பரிய உணவுசார் அறிவு மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது என்பதே கசப்பான உண்மை. உணவைப் பொருளாதாரக் கண்கொண்டு விலை பொருளாகப் பார்க்க நேரிட்டது இச்சிக்கலுக்கு அடிகோலியது எனலாம். அதேபோல், உலக நாடுகளின் ஆதிக்க வெறியில் நிகழும் போர்களிலும்கூட, உணவுத் தட்டுப்பாடு அல்லது உணவு பொருட்கள் வழங்கத் தடை விதிப்பது போன்ற பல்வேறு குரூரச் செயல்கள் நடந்தேறி வருவதையும் கருத்திற்கொள்ளவேண்டும்.
குதிப்பிக்கு நூலணிந்துரை வழங்கிய ச.தமிழ்ச்செல்வனின் ‘ஒரு சாப்பாட்டு ராமனின் நினைவலைகள்’ நூலின் சிறுபகுதியைச் சுட்டுவது இங்குப் பொருத்தமாக இருக்கும் : “ராமனை முன்வைத்து அரசியல் நடந்து கொண்டிருக்கும் சூழலில் வெட்டியாகத் தின்றுகொண்டு திரிகிறவனுக்கும் நம் மக்கள் ‘சரியான சாப்பாட்டு ராமன் அவன்’ என்று ராமனின் பெயரைத்தான் சூட்டியிருக்கிறார்கள் என்பதை உரக்கச் சொல்ல வேண்டுமல்லவா? கல்யாண ராமன், ஜானகி ராமன், சீதாராமன், அயோத்திராமன் பூட்டிய வில்லோடு திரிகிற ஆர்.எஸ்.எஸ்.ராமன் எனப் பல ராமன்கள் அலைகிற இப்பூமியில் நம்ம பங்குக்கு இந்தச் சாப்பாட்டு ராமனையும் இறக்கிவிடுவோம் என்கிற நல்லெண்ணத்தில் இப்புத்தகம் வருகிறது.” என்கிறார்.
உணவு அந்தந்தக் காலகட்டத்தின் உற்பத்தி வளமையைப் பண்பாட்டில் பிரதிபலிக்கும் காரணி. அதனைக் கலாச்சாரத்திற்குள் இணைத்துப் பேசும் இந்தியவெளியைத் தர்க்கத்திற்குட்படுத்துகிறது மேற்கண்ட பகுதி. சொல் உயிர்ப்புடன் இருக்கவேண்டுமானால் அது மக்களின் மொழியாகத் தகவமைப்புக் கொண்டிருக்கவேண்டும். அந்தச் சொல் மக்களோடு கலந்திருக்கவேண்டும். இக்கண்ணோட்டத்தில் ‘குதிப்பி’ எனும் சொல்லின் வழி சமையல் தொழிலின் மறுபக்கத்தைக் காட்டுகிறார் காமுத்துரை. ‘குதிப்பி’ எனும் சொல்லுக்குத் தொடக்கத்தில் எனக்குப் (கட்டுரையாளர்) பொருள் தெரியவில்லை. வடத் தமிழகப் பின்னணியிலிருந்து வரும் ஆரம்பநிலை வாசகனான எனக்குத் தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. புதினத்திற்குள் நுழைந்து செல்லும்போது குதிப்பி எனும் சமையல் சாதனத்தின் பயன்பாட்டை அறியமுடிந்தது. ஆனால் குதிப்பி என்று பெயர்சூட்டுமளவிற்கு அச்சொல்லில் என்ன மந்திரம் இருக்கிறது என்று கேட்கலாம். உண்மையில் அச்சொல்லிற்கு மந்திரத்தன்மை இருக்கிறது. சமைக்கும்போது எந்த உணவாக இருந்தாலும் உரிய கால இடைவேளையில் ஆவி பறக்கக் கிண்டிவிட்டால்தான் உணவு பக்குவப்படும். அந்தப் பக்குவத்தைக் கற்ற வித்தைக்காரனால்தான் உரிய திசையில் மேலாக்கவும், அடிவரையிலும் என்று விதவிதமாக உணவுக்குத் தகுந்தாற்போல் புரட்டிக் கிளறிவிட்டு உணவைப் பண்படுத்தமுடியும்.
இத்தகைய வித்தைக்காரர்களான சமையல் கலைஞர்களின் வாழ்வியலின் ஒரு பகுதியை வெளிப்படுத்தியிருக்கும் ‘குதிப்பி’ நூலின் வரவையும் இருப்பையும் தமிழ்ச் சூழலில் இயங்கும் ஒவ்வொரு வாசகரும் உணர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இப்புதினம் முன்னெடுத்த ஆக்கப் பூர்வமான வேலை என்பதை ஆராய முனைந்தால், சமையலுக்கு முன்னால் இருக்கும் வரலாற்றையும், சமையலுக்குப் பின்னால் இருக்கும் தொழில்முறைக் கலைஞர்களின் எதார்த்த வாழ்வியலையும் தொடர்புபடுத்திப் பார்த்தால் புரிய வரும்.
துணை செய்த நூல்கள் :
1) ம.காமுத்துரை, குதிப்பி, 2019, டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை.
2) மயிலை சீனி. வேங்கடசாமி, உணவு நூல், 1965, மணிவாசகர் பதிப்பகம்,சிதம்பரம்.
3) ச. தமிழ்ச்செல்வன், ஒரு சாப்பாட்டு ராமனின் நினைவலைகள், 2016, பாரதி புத்தகாலயம், சென்னை.
4) தொ. பரமசிவன், அறியப்படாத தமிழகம், 1997, காலச்சுவடு, நாகர்கோயில்.
5) கே.கே.பிள்ளை, தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், 2015, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
6) பக்தவச்சலபாரதி, சங்ககாலத் தமிழர் உணவு – பண்டைய அடிசில் முறைகள், 2022, காலச்சுவடு, நாகர்கோயில்.
Comments
Post a Comment