குடியானவரின் பாகப் பிரிவினை பேசும் "நாகம்மாள்" - த. சத்தியப்பிரியா

 குடியானவரின் பாகப் பிரிவினை பேசும் "நாகம்மாள்" - த. சத்தியப்பிரியா

     1939ல் கு.ப.ரா.வின் ஊக்கத்தினால் ஆர். சண்முகசுந்தரம் இளைஞராக இருந்த காலத்தில் (1942) எழுதி வெளியான குறுநாவலே ‘நாகம்மாள்’. க.நா.சு, சுந்தர ராமசாமி போன்ற பலராலும் இந்நாவல் பாராட்டப் பெற்றுள்ளது. அன்றைய கால கோயம்புத்தூரில் (இன்றைய கரூர், நாமக்கல்) கதை நடக்கிறது. குடியானவர்களின் வாழ்க்கையில் நிகழும் சொத்து தகராறை கதை மையமாகக் கொண்டுள்ளது.‌

     கதை நாயகியான நாகம்மாள் தன் கணவன் இறந்த பிறகு கணவனின் தம்பியான சின்னப்பன் மற்றும் அவனது மனைவி ராமாயியுடன் வசித்து வருகிறாள். அவளை யாரைக் கண்டும் அஞ்சாத யார் என்ன பேசினாலும் கண்டு கொள்ளாத பெண்ணாக ஆசிரியர் காட்சிப்படுத்துகிறார். சிவியார்பாளையத்து பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் கூட நாகம்மாளிடம் பேச்சு கொடுக்க அச்சப்படுகிறார்கள். இதற்கு நேர் மாறாக ராமாயி மிகவும் சாதுவான வீண் பேச்சு பேசாத விதரணை உடைய பெண்ணாக இருக்கிறாள். அவ்வப்போது குடும்பத்தில் நாகம்மாள், ராமாயிக்கு சச்சரவு தோன்றிய போதும் குடும்பம் சீராகவே இயங்கி வருகிறது. இக்குடும்பத்தின் ஆதாரமாக விவசாயமும், மாடு கன்றுகளை வளர்ப்பதும் இருக்கிறது.              

      இந்நிலையில் பழைய அவமானத்தின் காரணமாக ஊர் மணியக்காரர் கெட்டியப்பன் என்னும் சண்டியனின் மூலம் நாகம்மாளின் மனதில் சொத்தினைப் பங்கு பிரிக்க தூபம் போடப்படுகிறது. இதன் மூலம் கெட்டியப்பனும் , நாகம்மாளும் அடிக்கடி சந்திக்க வேண்டியிருக்கிறது. இதனை பற்றி ஊரார் பேசுவதைக் கூட நாகம்மாள் பொருட்படுத்துபவளாக இல்லை. நாகம்மாளும் தன் கணவனால் சம்பாதிக்கப்பட்ட நில புலன்கள் தன்னுடையது என்ற எண்ணத்திற்கு வருகிறாள். இவ்வாறு சொத்துக்காக வீட்டில் முரண் ஏற்படும் நிலையில் நாகம்மாளின் நான்கு வயது மகளான முத்தாயி அவளுடன் வர மறுப்பது நாகம்மாளின் மனதில் இது அனைத்தும் எதற்காக? என்னும் கேள்வியை எழுப்புகிறது. இவ்வாறு அவளுக்கிடையில் ஏற்படும் மனப் போராட்டங்களையும் ஆசிரியர் ஆங்காங்கே பதிவு செய்துள்ளார்.              

      தன் பாகத்தைச் சின்னப்பனிடம் பிரித்துக் கேட்க நாகம்மாள் தயங்குவதும், தன் அண்ணியினைப் பற்றி ஊரார் பல விதமாக பேசுவதை எண்ணி சின்னப்பன் மருகுவதும் குடும்ப பந்த உறவை வெளிப்படுத்துவன. ராமாயி தன் மனக் குமுறல்களை வெளிப்படுத்தும் இடமாக அண்டை வீட்டு செல்லக்காள் இருக்கிறாள். மணியக்காரரின் வீட்டிலிருக்கும் பெரியவர் நாவலில் குறைந்த இடத்தில் வருபவராக இருப்பினும் வாசகனாக நம் மனதின் குரலை பிரதிபலிக்கிறார். இதற்கிடையில் சின்னப்பனை வீட்டோடு மாப்பிள்ளையாக வைத்துக் கொள்ள விரும்புகிறாள் ராமாயியின் தாய். சின்னப்பன் அதற்கு உடன்பட்டானா, இறுதியில் நிலம் யாருக்கு போகிறது. குடும்ப உறவுகளின் நிலை என்ன என்பதை நோக்கி கதை நகர்கிறது.

      சொத்துப் பிரச்சனைக்கு முடிவு கிடைக்கும் அல்லது குடும்பம் சேரும்/ பிரியும் என்று எண்ணிக்கொண்டு இருந்தபோது இக்கதை எதிர்பாராத திருப்பத்தைக் கொண்டு முடிவடைகிறது. கதையின் கடைசிப் பக்கத்தில் ஊகிக்க முடியாத முடிவு சட்டென்று ஏற்பட்டு விடுகிறது. அதன் பிறகு அக்குடும்பதிற்கு ஏற்பட்ட பாதிப்பை ஆசிரியர் கூடுதலாக எழுதியிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. கதையில், வட்டார நாவலுக்கான கூறுகளாக சரியான வட்டார சொற்பதங்கள் பயன்படுத்தபட்டுள்ளன. சான்றாக , ரவுசு ( தொந்தரவு) , என்னுங்க ( என்னங்க ) , ஊட்டிலே ( வீட்டிலே) , திருகுதண்டம் ( திருட்டுத்தனம்), விதரணை (பக்குவம்) போன்றவற்றைக் கூறலாம். இன்றைய தமிழ் சமூகத்தில் பல கிராமம் சார்ந்த வட்டார கதைகள் பல தோன்றியிருப்பினும் , நாகம்மாள் கதை குடியான மக்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட முதல் கதை ஆதலால் இது காலம் தாண்டி நிற்கும் என்பது திண்ணம்.

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு