துவக்குகளின் மினுப்பான "இன்னும் வராத சேதி” -அழகுராஜ் ராமமூர்த்தி
துவக்குகளின் மினுப்பான "இன்னும் வராத சேதி”
-அழகுராஜ் ராமமூர்த்தி
1980களில் தமிழ் இலக்கியத்தின் போக்கில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. புதுப்புது கொள்கைகள் மற்றும் எழுத்து முறைகளை தங்கள் எழுத்தில் மேற்கொள்ள ஆரம்பித்தனர். திறனாய்வும் பெருகியது. இது தமிழகத்தில் மட்டுமல்ல இலங்கையிலும் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களால் உலகளவிலும் நடந்திருக்கிறது. இதன் சாட்சியாகவே கா. சிவத்தம்பி, எம். ஏ. நுஃமான் போன்ற அறிஞர்களின் கட்டுரைகள் இருக்கின்றன. அவர்களது கட்டுரைகளில் இடம்பெறும் சுட்டுதல்கள் வாயிலாக இலக்கியத்தில் நிகழ்ந்த மாற்றம் தொடர்பான செய்திகளை அறிந்திட முடியும். இலங்கையில் கவிதை எழுதத் தொடங்கிய பெண்கள் இயக்கம் குறித்த செய்தியை “இன்னும் வராத சேதி” என்ற ஊர்வசியின் கவிதை நூலில் இடம் பெற்ற பின்னட்டை குறிப்பின் வாயிலாக எம். ஏ. நுஃமான் அறிய தருகிறார். அதில் “1980களில் யாழ்ப்பாணத்தில் இளம் பெண் கவிஞர்களின் இயக்கம் ஒன்று பெயர் அலையாக எழுச்சி பெற்றது” என குறிப்பிட்டுள்ளார். இச்செய்தி ஒரு வரலாற்றுத் தகவல். அந்த இயக்கத்தில் ஒருவராக இருந்த ஊர்வசியின் முதல் கவிதை நூலான “இன்னும் வராத சேதி” கவிதைத் தொகுப்பை இக்கட்டுரையின் வாயிலாக அறிமுகம் செய்ய விளைகிறேன்.
யுவனேஸ்வரி என்ற இயற்பெயர் கொண்ட ஊர்வசியின் படைப்புச் செயல்பாடு தொடங்கிய இடமாக் அவர் படித்த மஹாஜனாக் கல்லூரி இருந்துள்ளது. இன்றைய கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் அதில் பணிபுரியும் பேராசிரியர்களும் இதை ஆழ்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. சொற்பமான அளவிலேயே தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் பேராசிரியர்கள் புதிதாக எழுத வருபவர்களை ஊக்குவிப்பதும் அவர்களுக்கு உரிய களத்தை ஏற்படுத்திக் கொடுப்பதுமான நடைமுறை இருக்கிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது. மஹாஜன இலக்கியப் பாரம்பரியத்தினர் என்று நவீன இலக்கியத்தில் சிலர் குறிப்பிடப்படுமளவிற்கு மஹாஜனாக் கல்லூரி இருந்துள்ளது. அதில் பொ.இரகுபதி, .நாகேஸ்வரன், சி.சே.சண்முகநாதன், சு.சரவணபவன், ஸ்ரீகதிர்காமநாதன், சேரன், ஆதவன், நா.சபேசன், விஜயேந்திரன், அ.ரவி, பாலசூரியன்,யுவனேஸ்வரி (ஊர்வசி), திருமகள், சுதந்திரச் செல்வி போன்றோரைக் குறிப்பிடலாம். இது குறித்த விரிவான கட்டுரையொன்றை பின்னிணைப்பாக இணைத்துள்ளேன்.
சிறுகதை மற்றும் கவிதை எழுதிய ஊர்வசியின் ஆக்கங்களில் கவிதைகளை பிற்காலத்தில் “கல் குதிரை” இதழ் வெளியிட்டுள்ள செய்தி நூலின் முன்னுரை வாயிலாக கிடைக்கிறது. பன்னெடுங்காலமாக இடைவெளி எடுத்து கவிதைகளை இதழ்களில் எழுதி வந்த இவரது முதல் தொகுப்பு 2014ஆம் ஆண்டு வெளிவருகிறது. 1980க்கும் 2014 க்கும் இடையில் 33 வருட கால இடைவெளி இருக்கிறது. ஆங்காங்கே வெளியாகும் தொகுப்புகளில் ஒரு கதை, கவிதை என்று ஊர்வசியின் ஆக்கங்கள் இடம்பெற்று இருப்பினும் முதல் தனித்தொகுப்பாக “இன்னும் வராத சேதி” தொகுப்பே அமைகிறது. இதனைத் தொகுத்தளித்தவர் கீதா சுகுமாரன் என்பதும் குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.
“காதல் வரி” என்ற கவிதையில் ஒரு பெண்ணுக்கு புறத்தில் காதல் கொள்வதற்குரிய ஒளிமிகு சூழல் இருப்பினும் காதலனின் உடனிருப்பில் அவை சோபை இழந்ததாகக் குறிப்பிடுகிறார். அதற்கான காரணத்தை நாம் இந்த தொகுப்பில் இடம்பெற்ற பிற கவிதைகளின் வழி ஒரு அனுமானத்திற்கு வரலாம். 1980களில் இலங்கையின் சூழல் எப்படி இருந்தது என்பதன் வழி இக்கவிதையை வாசிக்க லாம். 1977லேயே இலங்கை இனப் பிரச்சனை தீவிரப்பட ஆரம்பித்துவிட்டது. அது முதலே இளைஞர்களும் வெகு தீவிரமாக அதில் ஈடுபட தொடங்கிவிட்டனர். 1980ல் ஆயுதப்போராட்டமாக உருவெடுக்கிறது. அப்போதைய சூழலில் காதலிக்கும் ஒரு இளைஞனுக்கும் அவனது காதலிக்கும் இடையில் நடக்கும் சம்பவமாக நிறுத்தி இக்கவிதையை நான் வாசித்தேன். இதே தொகுப்பில் இடம்பெற்ற “காத்திருப்பு எதற்கு” என்ற கவிதைக்கும் “காதல் வரி” கவிதைக்கும் இடையிலான பாடுபொருள் ஒன்றுதான். ஆனால் மையமும் சொல்லப்படும் தொனியும் வேறு வேறானவை. இலங்கையில் காதலிக்கும் காதலர்களின் நிலையும் கூட. அதற்கு அவர்கள் எப்படித் தங்களைப் பொருத்திக்கொள்ள தொடங்குகிறார்கள் என்பது இவ்விரு கவிதைகளின் வழியே காணக் கிடைக்கின்றன.
“வேலி” என்ற தலைப்பிலான கவிதையில் வீட்டைப் பற்றிய வர்ணனைகளும் அதற்குரிய காட்சி மற்றும் அதனுள் இருக்கும் தன்னுடனான தொடர்பு வெளிகளையும் கவிஞர் பதிவு செய்கிறார். இக்கவிதையின் வழியாக வீடு எப்படியெல்லாம் அவரைத் தடுக்கும் வேலியாக இருந்தது என்பது உணர்த்தப்படுகிறது.
“எப்பொழுது தான் என்னால்
நீ வசிக்கின்ற அந்த
திறந்தவெளிக்கு வர முடியும்?” என்ற வரிக்குள் இருக்கும் தேடலோடு சிட்டுக்குருவி அல்லது வண்ணத்துப் பூச்சியை ஆறுதலாக அனுப்பக் கோர்தலுமான முடிவை கவிதை கொண்டுள்ளது. ஒரு கவிதை எப்படித் தொடங்கி எழுச்சி பெற்று உச்சமடைந்து முடிவை எளிமையுடன் வெளிப்படுத்த முடியும் என்பதற்கு “வேலி” கவிதையை உதாரணமாக கொள்ளலாம். “வேலி” கவிதையைப் போன்றே “எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு பெண்ணும்” கவிதை வீடடங்கி இருக்கும் பெண்ணின் நிலையைக் கூறுகிறது.
எமர்ஜென்சி காலத்தில் கலைஞர் கைது செய்யப்பட்ட வீடியோவை நாம் பார்த்திருக்கலாம். எத்தனையோ ஆவணப் படங்கள் மற்றும் திரைப்படங்களில் நடு இரவில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் ஒரு ஆணைக் கைது செய்து அவனது மனைவியையும் சிறு குழந்தையும் கண்டுகொள்ளாமல் உதறி தள்ளி நிர்க்கதியில் நிற்கவைத்து தன் வேலையில் மும்முறமாய் செயல்படுவதையும் பார்த்திருப்போம். அதனை ஊர்வசியின் எழுத்தில் வாசிக்கும் போது இக்காட்சிகள் எழுத்தின் வழி அதைவிட கூர்மையாக கண்முன் விரிகின்றன. இதற்கு சாட்சியாக “அவர்களுடைய இரவு” கவிதையை கூற முடியும்.
தலைமறைவிலோ அல்லது போரிலோ இருப்பவன் ஒவ்வொரு முறையும் சொந்த வீட்டிற்கு மாறுவேடம் புனைந்து வந்து என்றாவது ஒருநாள் தங்கிச் செல்லும் நிலையையும் அதன் மூலம் அடையும் திருப்தியும் சொல்லப்படும் இடத்தில் எதையும் முழுமையாக அனுபவிக்க விடாது கைது செய்ய வரும் போலீஸ் மற்றும் ராணுவத்தவர்கள் சூழ்ந்து நின்று எங்கே அவன் என விசாரிக்கும் விசாரிப்பு “இடையில் ஒருநாள்” கவிதையில் அமைகிறது. “கனவும் வெளியும்” கவிதையிலும் இதேபோன்று எளிய அன்பில் திருப்தி கொள்ளும் போக்கை ஊர்வசி பதிவு செய்கிறார்.
தலை மறைவிற்கோ பயிற்சிக்கோ போருக்கோ ஏதோ ஒரு காரணத்திற்காக தன் இனத்தின் விடுதலையை நோக்கமாகக் கொண்டு பிரிந்திருப்பவனுக்கு எழுதும் கடித அமைப்பில் எழுதப்பட்ட கவிதை “நான் எழுதுவது உங்களுக்கு புரிகிறதா?”. இக்கவிதையில் தான் சொல்ல விரும்புபவற்றை எல்லாம் அடுக்கி விட்டு தனிமையில் வீட்டிலேயே இருப்பவள் தானும் அவனோடு சென்று சேர வேண்டும் அல்லது அவனைப் போல் மாறவேண்டும் என்கிற உணர்வை
“ஏன் இன்னமும் நான் வீட்டுக்குள்
இங்கே இருக்க வேண்டும்?” என்பதாகக் கேட்கிறாள். இந்த மறைமொழி புரிகிறதா என்ற வினாவுடன் இக்கவிதை முடிகிறது. ஊர்வசியின் கவிதைகளில் அதன் முடிவு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்தும் கவிதைகளில் இக்கவிதை முக்கியமானது. “நான் எழுதுவது உங்களுக்குப் புரிகிறதா?” கவிதையில் எப்படி காத்திருப்பின் எல்லையை முடித்துக் கொள்ள ஒரு பெண் விரும்புகிறாரோ அதே நிலைதான் “மனசும் மதிலும்” கவிதையிலும் வருகிறது. இக்கவிதையில் மூன்று மதங்களைச் சார்ந்த பெண்கள் இடம் பெறுகின்றனர். இதன் வழி பெண்கள் என்கின்ற புள்ளியில் மதங்களைக் கடந்து அவர்கள் இணைவது வெளிப்படுகிறது. பெரிய ஆசை எல்லாம் இல்லை சின்னத் தேவை தான் என்பதை சொல்லும் விதமாக
“ஜடாயுவை வீழ்த்தும் வல்லமை கொண்ட
புஷ்பக விமானங்கள் வேண்டாம் எமக்கு
எனினும் திறந்து மூடும் சாளரம் கொண்ட
ஒரு பேருந்தாவது?” என்ற முடிவு இக்கவிதை இடம்பெறுகிறது. இக்கவிதைகள் பெண்ணின் நிலை எவ்வாறு ஒவ்வொரு நேரத்திலும் மாறுபட்ட சிந்தனைகளை போர்க்காலங்களில் தன் இணையரின் பிரிவில் எதிர்கொள்கிறது என்பதை உணர்த்தும் விதமாக அமைகின்றன.
“சிறையதிகாரிக்கு ஒரு விண்ணப்பம்” கவிதையில் கொண்ட பாதையில் அடையும் வேதனை ஒருபுறம் இருந்தாலும் தன்னம்பிக்கை கொண்டு எழும்புவதற்கான வழிகளை எப்படி ஒருவன் முன்னெடுக்கிறான் என்பதும் சித்தரிக்கப்படுகிறது. நோவாவின் பேழையிலிருந்து புறாவை அனுப்பி வெளியில் நடப்பதை அறிந்து கொண்டது போல உள்ளே இருப்பவன் தன்னம்பிக்கைச் செய்தி ஒன்றை அனுப்ப குருவி ஒன்றுனை தன் சிறை அறைக்குள் அழைக்கிறான். இது தொடர்பாக சிறையதிகாரிக்கு அவன் விண்ணப்பம் விடுவதாக கவிதை அமைகிறது. இக்கவிதையின் வழி பயங்கரவாதி என முத்திரை குத்தப்பட்டாலும் கூட தன்னம்பிக்கை சிதையாத போராளிகளின் உள்ளுணர்வுகள் வெளிப்படுகின்றன. “எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு பெண்ணும்” கவிதையிலும் இக்கவிதையில் உள்ளது போல சாளரங்கள் இடம்பெறுகின்றன. சாளரங்களுள் அதன் வழி கிடைக்கும் ஒலிக்காக ஏங்குவதில் ஆண்களும் பெண்களும் எவ்வாறு ஒன்றுபடுகின்றனர் என்பதை இவ்விரு கவிதைகளையும் ஒன்றிணைத்து அறியலாம். “சிறையதிகாரிக்கு ஒரு விண்ணப்பம்” கவிதையில் சேதி அனுப்ப தோதான ஒரு சிறிய சாளரத்தை உயரத்தில் வைக்க உள்ளிருப்பவன் விடுக்கும் கோரிக்கைகளின் தொடர்ச்சியாக வருகின்றன. “இன்னும் வராத சேதி -1,2” என்ற இரண்டு கவிதைகளும் சேதி அனுப்பக் கூறுவதையும் இன்னும் செய்தி வரவில்லை என்பதையும் லாவகமாக உணர்த்துகின்றன. சாளரங்களை தனது கவிதைகளில் ஒரு திறப்பு வெளியாக திட்டிவாசலாக ஊர்வசி கொண்டுள்ளார். அதேபோல நிலத்திற்காக அதன் மேல் தங்கியுள்ள மக்களின் மொழி மற்றும் பண்பாட்டிற்கான மரணத்தையும் துயரத்தையும் அடைந்ததை தாய் நிலை நோக்கிலிருந்து ஒரு நம்பிக்கைப் பொறியாக “கலைந்த பொழுதுகளும் கலையாத துயிலும்” கவிதை எழுதப்பட்டிருக்கிறது.
ஒருவரின் தனிமையை பிறிதொருவர் அணுக்கமாகப் புரிந்து கொள்ளுதலைக் “காத்திருப்பின் பின் பாதி” கவிதை கூறுகிறது. இந்த புரிதல் தான் அவசியமானதும் கூட. பெரும்பான்மை உறவுச் சிக்கல்கள் மற்றும் பிளவுகளுக்கு நடுவில் இப் புரிதலின்மை முக்கியக் காரணமாகின்றன. ஒருவர் தன் காதல் கொள்ளும் நபரிடம் பேசாமல் இருக்கிறார் என்பதால் அவர் பற்றிய நினைவு இல்லாமல் போகாது. அவரது பேச முடியாத சூழ்நிலையை தவறாக எண்ணிக் கொண்டு சச்சரவுகள் புரியும் காதலர்களுக்கு நடுவில் இப்படியான ஒரு கவிதை நிச்சயம் நல் புரிதலுக்கான வாய்ப்பாக அமையும் என எண்ணலாம். இப்படியான புரிதலுடன் கூடிய பயணமே போர் நடக்கும் நாட்களிலுள்ள குடும்ப உறவுகளின் நிலையாக இருந்துள்ளது.
காத்திருக்கும் பெண் ஒருபுறமும் போருக்குச் செல்லும் ஆண் மறுபுறமாக இருக்க போருக்குச் சென்றவன் மரிப்பதற்குப் பதிலாக வீட்டில் தனிமையின் இருளில் சாளர வெளிச்சத்தை மட்டும் நம்பி வாழ்ந்த பெண்ணானவள் மரித்து விட்டாள். என்றோ ஒருநாளில் திரும்பி வரும் அந்த ஆணின் உணர்நிலை எப்படியிருக்கும் என்பதை “சூரியன் மறைந்த பிறகு” கவிதை தனது பேசுபொருளாக கொண்டுள்ளது.
காதல் பிரிந்த பின்னும் கூட மறக்க முடியாமல் உள்ளுக்குள் தங்கி வெளிவந்து கொண்டே இருக்கும் நினைவுகளுக்கு காரணமாக பொருட்களும் இணைந்து பயணித்த காலத்தில் பேசிய பேச்சின் உள்ளடக்கங்களும் இருக்கும். அதனைப் பற்றிய பேச்சு வேறொரு சமயம் வேறொருவரால் எழும் போதும் முந்தைய நினைவு வருவது இயல்பாகும். இங்கு “இன்னொருவனுக்கு” கவிதையில் அந்த இடத்தில் அவளுக்கு இன்னொருவன் இருக்கிறான். இக்கவிதை நினைவாட்டத்தைப் பதிவு செய்யும் கவிதையாக ஏற்ற மொழியில் பொருந்தி வெளிப்படுகிறது.
சொல்வதற்கான துயரக் கதைகள் எவ்வளவோ இருக்கின்றன என்பதை
“பின்னாளில்
இது போல் இன்னோர் பொழுதில்
பேசப்படாத துயரங்களை
உன்னுடன் நான் பகிர்ந்து கொள்வேன்” என்ற வரிகள் சூசகமாக உணர்த்துகின்றன. ஒவ்வொரு முறையும் துயரக் கதையைச் சொல்வதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக மரத்து நீர்த்துப்போகும் வலிக்கு அழுகையைப் பதிலாகத் தராமல் புரிந்துகொள்ளக் கோரும் வகையில் இந்தக் கவிதை நிறைவு பெறுகிறது. “நுட்பங்களில் பெருகும் இரவு” கவிதையும் கூட தனிமையின் வேதனையை இரவு நேரங்களில் அடையும் தனிமையின் ஓலத்தை பேசக் கூடியதாக அமைகிறது.
“மழையின் மீதி” கவிதை எஞ்சிய மழைத்துளியைச் சொல்வது போல ஆங்காங்கே சிதறி கிடக்கும் போராளிகளை பற்றிய விசாரிப்பினைப் பேசுகிறது. இதனைக் கடைசி பத்தியின் வழியே அறிந்து கொள்ள முடியும்.
“ தேடுங்கள் நன்றாக எங்கும்
உங்களிடம் கிடைக்கவே மாட்டார்கள்
ஏனெனில் இப்போது
அவர்களுக்கு தலைப்பொன்றும் இல்லை”
இக்கவிதையையும் அது எழுதப்பட்ட ஆண்டின் பின்னணியில் இருந்து வாசிக்க வேண்டியுள்ளது. 2014ஆம் ஆண்டில் ஈழ விடுதலை அமைப்புகளின் நிலை என்னவாக இருந்தது என்கிற புரிதலோடு இக்கவிதையை வாசித்தால் துலக்கமாக நெருங்க முடியுமென நினைக்கிறேன்.
“பாதைகள் பிரிவதில்லை” கவிதை இளம் பருவச் செயல்பாடுகள் மற்றும் சம்பவங்களை அசைபோடும் பதிவாக இருக்கிறது. இதன் தொடர் நிலையாக “காலவெளிப் பயணம்” கவிதை இருக்கிறது. போகின்ற போக்கில் போகும் வாழ்வின் தருணங்கள் “காலவெளிப் பயணம்” கவிதையில் பதிவு செய்யப்படுகிறது. இதன் மத்தியில் குடும்பத்தின் காத்திருப்பு எப்படி இருக்கும் என்பதை “நேற்று நடந்தது” கவிதையில் பார்க்க முடிகிறது.
இக்கவிதைத் தொகுப்பின் ஆரம்பத்தில் இடம்பெற்ற கவிதைகள் போர்ச்சூழலை பழக்கமாவதை மையம் கொண்டிருந்தது போல கடைசி இரண்டு கவிதைகளும் புலம்பெயர்தலை ஏற்றுக் கொள்ளும் புலம்பெயர்வு வாழ்விற்கு பழகுதலை பதிவாக்கியுள்ளது. “கற்றுக்கொள் இதனையும்” கவிதையில் நேற்று, இன்று என பிரித்து எழுதப்பட்டதால் வெளிப்படையான தன்மை தெரிகிறது. “வெற்று நாட்கள்” கவிதை
“ஒரு மரக்கிளை போதும்
இடையிடையே ஓய்வெடுக்க” என்ற தனது கடைசி வரியில் மட்டுமே புலம்பெயர்வதற்கான கூற்றினை நுட்பமாக உள்ளொழித்து வைத்துள்ளது.
இத்தொகுப்பைப் பொருத்தவரையில் பல்லிகள் மற்றும் சாளரங்களோடு வானம், பூக்கள், என்று இயற்கை சார்ந்த விவரங்கள் கவனிக்கத்தக்கதாக அமைகின்றன. அறைக்குள் அடங்கி கிடப்பவர்களுக்கு பல்லி எத்தகைய துணை என்பதை சி. மோகனின் “எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை” என்ற கவிதைத் தொகுப்பின் மூலம் மிக நெருக்கமாக அறிந்து கொள்ள முடியும். இத்தொகுப்பில் பல்லிகளும் சாளரங்களும் தனிமையின் போக்கைக் கூறும் வண்ணத்தில் கவிதைக்குள் இடம்பெறுகின்றன. ஊர்வசியின் 2014க்கு பின்னான கவிதைகளையும் 1980,90களில் எழுதப்பட்ட கவிதைகளையும் இரண்டு நிலைகளில் பாகுபடுத்தி வாசிக்கும் வகையில் மொழி மாற்றம் தெளிவாகத் தெரிகிறது. மொத்தம் 24 கவிதைகள் அடங்கிய இத்தொகுப்பில் 15 கவிதைகள் 1981க்கும் 1999க்கும் இடைப்பட்டவை. பிற கவிதைகள் 2008லிருந்து 2014க்கு இடைப்பட்டவை ஆகும். ஆரம்பத்திலிருந்த எளியையும் விவரணையும் பிற்பாதியில் மாறியுள்ளது.
நூல்: இன்னும் வராத சேதி, ஊர்வசி, டிசம்பர் 2014, காலச்சுவடு பதிப்பகம்.
பின்னிணைப்பு:
https://www.geotamil.com/index.php/2021-02-13-00-58-35/2021-02-14-02-29-39/2982-2014-07-08-01-55-04
Comments
Post a Comment