பூனையின் கண்கள் -தீனன்
பூனையின் கண்கள் -தீனன்
மழைப்பொழுதுகளை விரும்பாத
சராசரி உள்ளூர்வாசிகள் நிறைந்த ஊரில்
தூக்கக் கலக்கத்தோடு நகர்கிறது நேரம்
சைகைமொழியை வெறுக்கும் செவிட்டுக்
குழந்தையை
வயிற்றுக்குள் சுமந்த சிறுமி
பிறந்து மரித்த ஊரும்
கடவுளுணராத பிரதேசமும் அதுவே தான்
நீர்த்தொட்டிகளை அலைந்து விளையாடி பொழுது போக்கும்
அவ்வூர்க் காற்றின் ஊழைகள்
அந்தரமான வெறுமையில் வித்தியாசப்படுகிறது
நிதானத்தை மறந்த
பேய்ச் சனங்களை விட்டு
அவன் ஒதுங்கியே வாழ்ந்தான்
அரைத் தூக்கத்தில் மூழ்கிய ஊரின் சுபாவம்
புதைமணல் பிரதேசங்களின் சகதியையொத்த
மனநிலையில்
அவனை நிறுத்தியிருக்கலாம்
மழைக்கால ஈரங்களின் படர்க்கைக்
குமிழிகள்
வெளிரிய முகமுடைய பெண்ணின்
பருக்களாகப்படுகிறது எனக்கு
ஆழ்ந்த தூக்கத்தின் தன்னிச்சை சிரிப்புகளுக்கு
கடன்பட்டிருக்கிறேன்
என்றென்றும்
துளைகளின் அடியாழத்தில்
சிரத்தையிழக்கிறது பிரக்ஞை
மண்டிக்கிடக்கும் இருள்களுக்குள்
ஆண்டாண்டுகளாய் வளர்ந்த அச்சங்கள்
நையத் தொடங்குகிறது
வன்முறைகளறியாத வாழ்வின்
இயற்கைகளுக்கு எதிரான விதிமீறல்
புள்ளிகளுக்குள்ளிருந்து பெருகி
சுயநினைவுகளில் ஏறும் விஷத்தின் பச்சை வாசனை
இப்போதெல்லாம் குமட்டுவதேயில்லை
வயிற்றைத் தாண்டிய
உணவுக் குழாய்களின் பசியை
தீர்க்க முடியாமலிருப்பதும்
தியானம் தான்
மடிப்புக் குழையாத பின்னலைக் கொண்டவள்
எனது தாயாக இருந்திருக்கக்கூடும்
சிந்தனையில்லாத கணங்களை
ஜன்னல் இடுக்குகளில் சேமித்து வைக்கிறேன்
அவளுக்குப் பரிசளிக்க
பிரசவ வேதனையை அறிந்திராத
அவ்வூர் சனங்களுக்கு
அவளின் அலறல் விசித்திரமாகப் பட்டிருக்கலாம்
செவிட்டுத் தன்மையுடைய
எனது காதுகளை அவர்கள்
சுண்டி விளையாடினார்கள் என்று
பின்நாட்களில் பாட்டி சொன்னாள்.
சைகைமொழி பிடிக்காத என்னை
வாயசைவுகளுக்குப் பழக்கியவள்
அவள் தான்
மயானக் கொள்ளைக்கு அருகே நின்ற
எனது குடிசைக்குள்
நட்சத்திரங்களின் பிணவாடை அடிப்பதுண்டு
சூரியனை எரித்தும்
சந்திரனைப் புதைத்தும்
ஆகாயச் சடங்குகள் தினம் தினம் நடக்கும்
தவளைக் குஞ்சுகளை சமைத்துப் போடும்
பாட்டியுடன் இருந்தவரை
நான் பசியை உணர்ந்ததேயில்லை
பச்சைப் புதர்களுக்கு சுவையிருப்பதை அறிந்தவன்
அவ்வூரில் நான் மட்டும் தான்
செடிகளின் ஒவ்வாமையில்
மரணத்துக்கருகில் சுருண்டு கிடந்த நாட்களில்
இதையெல்லாம் நான் யோசித்திருக்கவில்லை
அசைவுகளேதுமின்றி
எண்ணங்கள் கூர் அம்புகளாக
தலைக்கு மேல் கெட்டிப்பட்டு நின்றது
மரணத்தைப் பிழைத்த மூலிகை நாளொன்றில்
தூக்கங் கலைத்த எண்ணங்கள்
ஈவு இரக்கமின்றி பாய்ந்தன
கொஞ்சம் பைத்தியம் என்று உள்ளூர்வாசிகள்
என்னைப் பற்றி கிசுகிசுக்க
அதுவும் காரணமாக இருக்கலாம்
பிரசவ வலியை அவர்கள் அறியாமலிருப்பதில்
ஆச்சர்யம் ஒன்றுமில்லை
நான் எனக்கு செவிடனாய்ப் படுவதைவிட
எனக்கு தான் அவர்கள் ஊமைகளாகவே படுகிறார்கள்
தேயிலைக்கு பஞ்சம் வந்த காலத்தில்
அவர்கள் கிறுக்குப் பிடித்து
அலைந்ததைப் பார்த்து ரசித்திருக்கிறேன்
ஒருவரை அவமானப்படுத்த
முகத்தில் எச்சில் துப்பும் பழக்கமுடையவர்கள் அவர்கள்
ஊரைத் தாண்டிய உலகமிருப்பதை
அவ்வூரில் நான் மட்டுமே அறிந்திருந்தேன்
அனைத்துமே நடந்து கொண்டிருந்த
அந்த ஊரில்
எதுவுமே நிகழாத மயக்கத்த்தில்
மக்கள் கட்டுண்டு கிடந்தனர்
இரக்கமேயில்லாத இயற்கைக்கு
அவர்கள் அந்நியர்கள்
சூரிய வெப்பத்தை பானைகளில் சேகரித்து வைக்கும்
அவர்களின் பழக்கம் விநோதமானது
சிரத்தையற்ற மாலை வேளைகளில்
வயலோர நடையை விரும்பும் சொற்ப மனிதர்களிடம்
நான் பேச எத்தனித்திருக்கிறேன்
அறைகளுக்குள் பல்லிகளைப் போல் பதுங்கிக் கிடப்பதில்
அவர்களுக்கிருந்த விருப்பத்தை
அதன்மூலமே நான் அறியநேர்ந்தது
சிலவற்றை என்னால் புரிந்துகொள்ள முடியாதது
நல்லது தான்
வயதை உரிஞ்சும் நாட்களை
ஊரார் என்மேல் ஏவி விட்டனர்
வலியெடுக்கும் இரவுகள்
மீண்டும் என்னைத் தாக்கத்தொடங்கின
துர்கனவுகள் எனக்குள் நெழிந்து கொண்டிருக்கிறது
அடுப்புக்குள் சமாதி நிலையில் உறங்கும் பூனை
அப்பழுக்கற்ற கருத்த இமைகளுக்குள்
தனது கொளுத்த கண்களை திருகத் தொடங்கியது
நீர்மை பூத்த நெருப்புத் துண்டங்கள் மூச்சுவிடுவதாய்
நெஞ்சு ஏறி இறங்குகிறது
சேமித்து வைத்த தாயின் நினைவுகளை
நறுக்கியெறியும் கூர்முனைகளாக
ஊரின் வெறுப்பு விகசித்து நிற்கிறது
வயதை உரிஞ்சும் நாட்களின் சாபம்
இறையை விழுங்கும் பாம்பென
ஆண்டாண்டு காலத்தை பற்றி இழுக்க
அசைவுகள் மறத்த ஊத்தைச் சவமாய்
குடிசைக்குள் கிடந்தேன்
நாட்கணக்காக
போர்வைக்குள் ஒளித்த உடலினைத் தேடி
பந்தங்கள் ஏந்தி இருட்டுக்குள்ளிருந்து
பேய்ருசி கொண்டு ஊரார் வந்தனர்
செவிட்டுக் குழந்தையை ஈன்றெடுத்த
அபலை சிறுமியே அவர்கள் கண்டது
நினைவும் காலமும் குழம்பிய நிலையில்
பிரசவக் கோட்டினைத் தடவிக் கொடுத்த
மயானக் கிழவியை வெறித்தனர் அனைவரும்
புதைத் தூக்கத்தில்
தெருமயக்கத்தில்
அறையின் மூலையில்
பிணங்களைப் போல
இத்தனை காலமும் பதுங்கிக் கிடக்கையில்
அனைத்தையும் மீறிய வாழ்க்கையைத்
தேடிய
செவிடனின் சாவைக் கண்டு ரசிக்க
பந்தமெடுத்து
இருட்டின் ஊடாக
பேய்ருசி கொண்டு
திரண்ட உள்ளூர் வாசிகள்
ஆகாயத்தின் அழுகிய வாடையில்
மயானக் கொள்ளையில் ஒற்றைக் குடிசையில்
ரத்தம் ஒழுகும் பெண்ணுடலருகில்
செவிட்டுக் குழந்தையை மடியினில் கிடத்தி
ஒழித்துச் சிரிக்கும்
கிழவிக்கு இருப்பது
பூனையின் கண்கள்
என்பதை உணர்ந்தனர்
Comments
Post a Comment