அரா கவிதைகள்

 

அரா கவிதைகள்  

 

கடலோடு கபடி விளையாடும்

இரு சிறுவர்களின் கால்கள்

பொதிந்து எழும் நண்டின் கால்களை

நறுக்கென மிதிக்கிறது

சுளுசுளுவென பித்த திரவங்களால்

கடல் நிறைந்து

இராட்சத செதில் முளைத்த மீன்கள்

தனது அரசை கிரீடம் சூடிய கப்பல்களில் 

வந்திறங்கி பொழிகிறது

 

இரண்டாம் ஆட்டத்தில்

நனைந்தோடின சிறுவர்களின் 

கால்கள் சங்கொன்றைத் தேய்க்க 

புகைமண்டலத்தில் ஒலிக்கும் ஓங்காரம்

படையெடுத்து புகைக்கிறது

சாவகாசமாக படகைத்தள்ளி

சிகரெட் புகைத்து வருபவர்களது

வலையினுள் 

தலைச் செதில் கிரீட மீன்கள் 

பிடிபடுவதும் பிடிபடாததும்

சிறுவர்களின் கால்களுக்குள் 

ஒளிந்திருக்கிறது.             

                          

நீள்கின்ற மாலைப்பொழுதில்

வலைக்குள் கால் கொடுக்குகளைக்

கொத்தி கொத்திப் பயிற்சியெடுக்கும்

நண்டுகளின் காலடிக்குள் மிதிபடும்

ஒவ்வொரு கிரீடத்தின் ரத்தினங்களும்

பரிசளிக்கப்படும் கோப்பைகளின் ஒளிவீச

சிறுவர்கள் இன்னும்

கால்களிலேயே நிற்கின்றனர்

*****

 

அந்த அறையினில்

அடிக்காத குறையில் சண்டை

சண்டை முற்றி முடியவும்

சிறிது நேரம் வரை

சத்தமின்றி அமைதி அமர்ந்திருந்தது

அப்போது அவன்

குடித்து விட்டு வைத்த

டம்ளரிலும் அதே 

அமைதியின் சூடு தெரிந்தது

சண்டையும் டீயும்

இப்போது இல்லை

அமைதியும் சூடும் கூட

இன்னும் தணியவில்லை

******

 

தேவனே,

தடிமனான முட்கள் முளைத்த

அத்தி மரத்தின் பின்னே

மெலிந்த உடல் மறைத்து நிற்கிறேன்

குரல் தள்ளும் என் வாயொலியில்

என் நிர்வாண உடலின் அங்கங்களின் மயிர்களை

காற்றில் நெளிய விட்டு

இரைந்து கேட்கிறேன்

 

ஒவ்வொரு சொற்களுக்கும் ஈடாக

உதிரும் உலர்ந்த பழங்களிலிருந்து

வடிந்த நீரெல்லாம் 

காற்றாகி ஓலமிடுகிறது.

 

விடாமல் கேட்கிறேன்

 நிர்வாணத்தை மறைக்க

கோவணத்தின் சிறு கிளிசலைத் தாரும்

ஆடையை உடுத்தி அவள் முன் நிற்க அனுமதியும்

அத்திகள் உதிர்கின்றன 

இலைகள் காய்கின்றன

தழுவ முந்துகின்றன முட்கள்

தயவாய் கேட்கிறேன் 

நிர்வாணம் மறைக்க 

ஒட்டுத்துணி வேண்டும்

*******

 

எதையும் வாங்க 

மனம் கொள்ளவில்லை

வாங்கித் தான் ஆக வேண்டும்

அவனிடம் சில்லறை..

 

எதைத் தான் வாங்குவது

எதையும் வாங்க விருப்பமில்லை

சில்லறையைத் தவிர.

******

 

கண்ணைப் பார்த்தது

போன்றதொரு எண்ணம்

ஆம், ஒரேயொரு எண்ணம்

கண்ணைப் பார்த்தது 

யாரென தேடல்

 

கண்களால் கண்ணையே பார்த்த

அந்த உருவத்தைப் பார்த்துவிட்டேன்

அந்த உருவத்தின் தலையிலும்

கண்கள் இருந்தது

பதிலுக்கு பதிலாக 

பார்த்துக்கொண்டே இருந்தேன்

பக்கத்தில் இருந்த தோழரிடம்

பார்வையில் கண்ணைப் பார்க்கும்

பார்வைக்கு காரணம் கேட்டவுடன்

ப்ராய்டின் உளவியல் கதையை

பாரபட்சமின்றி ஓட்டினார்.

 

நேரே வளைந்து சென்று

கண்ணுக்கு நேராக நின்று

கண்ணைப் பார்க்கும்

காரணத்தைக் கேட்டிருக்கலாம்

நானோ கேட்கவில்லை

நானே வெகுநேரம்

காரணமின்றியே 

கண்களைப் பார்த்ததால்

கேட்காமல் விட்டிருக்கலாம்..

 

அதனால் என்ன கெட்டது

கண்களை ஒன்றும்

பிடுங்கி விடவில்லையே

பலநாட்கள் வெற்றுப்பார்வை 

பார்த்துக்கொண்டே இருந்து

பார்க்காமல் போனால் தான்

பிடுங்கியது போன்று இருக்கும்

 

இந்த ஒருநாளில் 

அப்படி ஏதும்

நிகழ்ந்துவிடாது.

********


Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு