அரா கவிதைகள்

                                                       அரா கவிதைகள்  

அந்தச் சரிவு தான்

உதிர்ந்த இலைகளை

காற்றுத் தள்ளும் போது

ஏந்திக் கொண்டு போனது.


சரிவின் நினைவில்

எனக்கு பெருத்த வருத்தம்

வருத்தத்தை பூர்த்தி செய்ய

சரிவின் பள்ளத்தை நிரப்புவதா

மேட்டை உடைப்பதா என

குழப்பத்தில் நடந்த போது

சமதரையில் காய்ந்த இலைகள்

எலும்புக்கூடு போல் கிடந்தன


கரிசனத்தோடு சரிவை

தரிசித்தேன்

அது அப்படியே இருக்கட்டும்

********


நாங்கள் நடந்து போகும்போதெல்லாம்

மழையின் முதல் துளி 

என்மீது தான் விழும்.

அது முதல் துளி இல்லையென்றாலும்

எனக்கு அதுதான் முதல் துளி 


மினுங்கிக் கொண்டிருக்கும்

அந்த நொதும் துளி

கைகளிலேயே காட்சியளிக்கும்

விண்மீன் போன்று சிதறி படிந்ததை

எல்லாரிடமும் காட்டி வியாபிக்க

அவர்கள் ஆமோதித்து 

நடைக்கும் ஓட்டத்திற்குமான

இடையீட்டு நகர்வில் நகர்வர்


இன்றும் மழை பெய்கிறது

நானும் நிற்கிறேன்

என்மீது ஒரு துளி கூட படவில்லை

வான வெளியில்

மறைப்பேதும் இருக்கிறதோ என

நானும் அண்ணாந்து பார்த்தேன்


மின்னும் அந்த மேகம்

மின்னலை வெளியிட்டவாறே

தனக்குள் குமைந்தது

எனக்கும் அதற்குமிடையில்

எவருமேயில்லை..

சுற்றி விழும் துளியின்

இரைசல் கூட 

ஏனோ என்மீது படவில்லை

******


கை நரம்புகளில் தடையேதுமின்றி

இரத்தம் போக்கு வரத்தாக இருக்கிறது

முழங்கையின் பின்னே

நாடி துடிக்கிறது

துடிப்பின் பிரக்ஞையை பெற்றவனாக

மார்புக்குள் துடிக்கும் இதயத்தின் சிற்றோசையை 

பெருகும் கிளர்ச்சியோடு 

பொருத்திக் கொண்டிருக்கும்போது

மூச்சின் ஏற்ற இறக்கம்

காணாமல் போனது


சும்மா படுத்திருக்கும்போது

மூச்சின் ஓட்டத்தை

கவனிக்காமல் இருக்க முயற்சித்த

முயற்சிகளின் தோல்வி

வெற்றியாக நாடித்துடிப்பின் வசமும்

இதய ஓசையினிடமும் 

மிடறு மிடறாக இறங்குவதை

மல்லாக்கப் படுத்தும்

ஒரு சாய்த்துப் படுத்தும் 

களிக்கிறேன். 

களிப்பின் இசைவும் 

சிறிதுவப்ப எனக்கு ஒட்டிக்கொண்டிருக்கிறது

******


உனது வருகையை

உறுதிபடுத்த

உன் பெயரை விளித்து

உச்சரிக்கும் போதெல்லாம்

மூடாமலிருக்கும்

என் விழிகள் திறந்து விடுகின்றன

நீ இருக்கும் இடத்தின்

குறிப்புகளை சொற்களாக்கிய

துணிவோடு

******


அந்த தூக்க காலத்தில்

முகத்தில் ஊற்றப்பட்ட தண்ணீர்

எங்கோ தேங்கியிருந்து

இன்றும் சிந்துகிறது


ஓவியமாகி ஓர் ஓரத்தில்

அதன் சித்திரம்

பட்டன் கழற்றப்பட்டு

பரட்டைத் தலையுடன் நடக்காமல்

நடந்து கடக்காமல்

நின்று கொண்டிருக்கிறது


களைந்து மறையும்

ஓட்டத்தின் வெளிச்சங்கள்

இதையெல்லாம் ஏன் சொல்கிறது


பக்கத்து இருக்கையில் இருந்த

பாட்டி கத்துகிறாள்

தண்ணீர் மேலிருந்து ஒழுகுகிறதென


அவளுக்கு என்ன தெரியும்

நான் எதிர் இருக்கைக்கு

மாறிய பின்

எனதருகே காலை நீட்டுவதற்கு

மட்டுமே அவளுக்கு தெரியும் 


சிந்துவதாக சொன்ன நீர்

இன்னும் சிந்துகிறது

ஓடுகிறது

ஓட முடியாமல் தேங்கி

அங்கேயே தங்கி

கலங்கி எழும் அலையாக

கதறி சாய்ந்தும் பார்க்க


புகை மட்டும் கொஞ்சம்

அலையோடு போராடி

அமர்த்தும் நேரத்தில்

அடுத்த மழை

தொடர் வலையாக

******


மழைக்காலங்களில் நனைந்த ஓமப்பொடியை

கொத்தித் தின்ன வரும்

பெயர் சூட்டப்படாத அல்லது

பெயர் இன்னதென்று

அதற்கும் எனக்கும் தெரியாத வகையில்

இயற்கையாலும் எனது சிற்றறிவாலும்

காலத்தால் டிசைன் செய்யப்பட்ட பறவை அது

அதற்கும் கருப்பும் கருநீல பச்சையுமான

இறக்கைகள் உண்டு.

எப்போதும் பச்சை பூத்திருக்கும்

அதன் கண்களில்

அன்றொரு நாள்

என்றும் காணக் கிடைக்காத

கடலைப் பார்த்து

மூச்சிறைத்தேன்.

******


வயிற்றோடு இராத்திரியில்

அலைகிறேன்

வலியையும் உடன் சேர்த்து

அலைகிறேன்


உச்சரிக்கப்பட்ட சொற்களின் வலி 

வயிற்றுக்குள் குமட்டி பிறட்டி

கேட்கும் பசியில்

கொஞ்சம் பிஸ்கட்டுகளை

தொண்டைக்குள் கரைத்து

ஒழுக விட்டாலும்

குளிரவே இல்லை


நெஞ்சுக்கூட்டிற்குள் வசிக்கும் இதயம்

துள்ள முடியாமல் துடிக்க முடியாமல்

சுருக் சுருக்கென 

எரிகிறது குத்துகிறது


பாதசாரிகள் இறங்கும் படியில் படுத்திருக்கிறேன்

உனது குளிரூட்டப்பட்ட ஒற்றை அறையின் 

குளிர் காற்றில்

காலம் சுகித்து சுழல்கிறது

*******


Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு