சத்யா –விசித்திரன்
சத்யா –விசித்திரன்
“என்னடா இந்த வேகம் போதுமா? இல்ல மொல்லமா போகட்டா” என்ற வெங்கட் அண்ணனின் கேள்வி எதிர்காற்றில் துண்டு துண்டாய் எப்எம் ரேடியோவில் சேனலை டியூன் செய்யும் போது வரும் இரைச்சல் போல் சத்யாவின் காதில் விழுந்தது. தெளிவாக அவரின் பேச்சு புரியவில்லை என்றாலும் வேகத்தை குறைக்க சொல்ல வேண்டும் என்று சத்யா முன்பே தீர்மானித்து இருந்தான். வெங்கட் அண்ணன் காதின் அருகில் சென்று “ஸ்லோ ஸ்லோ” என்று சத்யா சொன்னது, ஸ்….ஸ்…. என பாம்பு சத்தமிடுவதைப் போல் இருந்தது. “புரியலடா சத்தமா பேசு”, “ஆ மொல்லமா போ ண்ண மொல்லமா போ ண்ண” என்று இரண்டு மூன்று முறை சொன்ன பின்பு வேகம் குறைந்தது. சத்யாவும் இயல்பு நிலைக்கு திரும்பினான். “என்னடா சத்யா நல்லா சொயட்டிக்குனப் போல” “ஆமா கிருகிருனு வருது ன, எதுக்கு இம்மா வேகம் அடுத்த தபா இதே மாதிரி பண்ணுனா, உன்கூட வரவே மாட்டேன்”, என்றவுடன் வெங்கட் அண்ணன் “அப்படியெல்லாம் சொல்லாதடா” என கெஞ்சல் மொழியில் சொன்னார். இப்படி எல்லாம் ஓட்டுனா சீக்கிரமா நட்டுக்க வேண்டியது தான், வீடுனு இருக்கிறது ஞாபகம் இருக்கா? இல்லையா? சின்ன பையன் நான் உனக்கு புத்தி சொல்லனுமா சொல்லு, சரிதா அக்கா பார்த்தாச்சும் உனக்கு பொறுப்பு வரணும்ல” என்று சத்யா தன்னுடைய வயதுக்கு மீறிய அளவில் பேசியதை வெங்கட் அண்ணன் கண்டுகொள்ளவில்லை சத்யாவிற்கே தெரியும் தான் எல்லை தாண்டிப் பேசி விட்டோம், இருந்தாலும் அந்த நேரத்தில் கட்டுக் கொள்ள முடியவில்லை. வேகத்தில் வார்த்தைகள் நினைத்ததைப் போல் வருவதில்லை நினைக்கும் வார்த்தைகள் வேகத்தில் பேசி விடுவதுமில்லை. எல்லோரிடமும் கோபத்தில் நின்று போன வார்த்தைகளும் பேச வேண்டாம் என நினைத்ததை இழந்த வார்த்தைகளும் ஏராளம். சத்யாவும் அதே போன்று ஒரு உணர்விலே ஆட்பட்டு கிடந்தான்.
வெங்கட் அண்ணன் அவ்வளவு நேரம் பேசிய அனைத்தையும் நகைச்சுவையாக எண்ணி சிரித்தார். இருந்தும் கடைசியில் தன்னுடைய மனைவி பற்றி சத்யா பேசத் தொடங்கியதும் அவரின் முகம் மாறுதல் அடைந்தது. அதற்கு முன் அவன் பேசியவற்றை விட்டு தன்னுடைய இல்லற வாழ்க்கைக் குறித்த சத்யாவின் கேள்விக்கு சட்டெனத்தாவினார் வெங்கட். இவ்வளவு நேரம் சென்றிருந்த வேகத்தை காட்டிலும் படிப்படியாக வேகம் குறைந்தது. “உன்கிட்ட ஒன்னு சொல்றேன் சரியா, அது என்னோட ரகசியம் நீ இதை பகிரங்கப்படுத்த நினைச்சாலும் அது உன்னோட பாடு, ஆனா எனக்கு சொல்லனும்னு தோணுது. நான் சரிதாவ ஒன்னும் புடிச்சு கட்டிக்கல.. அது ஒரு கட்டாய கல்யாணம்“
“அப்போ அவங்களுக்கு“
“அது எனக்கு தெரியல, ஆனா இப்போ தெரியும் அவளுக்கு என்ன புடிக்காதுன்னு. பின்ன என்ன மாதிரி ஆம்பளைய இல்ல என்ன மாதிரி ஒருத்தனை எப்படி புடிக்கும், அவங்களுக்கு புடிச்ச மாதிரி என்னால இருக்க முடியாது . இன்னும் ஓப்பனா சொல்லட்டுமா அவளோட என்னால படுக்க முடியாது” இந்த வார்த்தை சத்யாவை திடுக்கிட செய்தது. “அண்ணோவ் என்ன னா ஏதேதோ பேசுறீங்க, சாரி ண்ணா நான் தெரியாம கேட்டுட்டேன், வண்டிய ஓட்டுங்க” என்று சத்யா படபடத்து சொன்னான். “இல்லடா சத்யா சும்மா கேளு எனக்கு ஒரு லவ் இருந்துச்சு முன்னாடி எல்லாம் அண்ணன் உங்கள் லவ் பத்தி சொல்லுங்கன்னு நீ கேட்கும்போது நானும் அப்படியே சிரிச்சு மலுப்பிட்டு போயிடுவேன். ஆனா, இப்போ என்னன்னு தெரியல உன்னாண்ட சொல்லணும்னு தோணுது முழுசா சொல்றேன் கேளு நான் 12வது படிக்கும்போது……..” வேகம் படிப்படியாக குறைந்தது வண்டியும் இறைந்தது பின்னாடி இருந்த சத்யா நிதானத்துடன் “அண்ணா கீயர கொரைங்க” சொல்ல இன்னும் கொஞ்சம் முறுக்கினார் வெங்கட் . வண்டி கதறியது. சத்யா சட்டென பின்னோக்கி இழுக்கப்பட்டு திடுக்கிட்டான். அவன் பதினோராம் வகுப்பில் இயற்பியலில் படித்த மொமென்ட் ஆஃப் இன்ஷியா எல்லாம் நினைவுக்கு வந்து போனது. “ நாங்க ரெண்டு பேரும் ஒரே கிளாஸ் தான், சாதாரணமா தான் பேசிக்கிட்டு இருந்தோம். அப்புறம் ரெண்டு பேருக்கும் ஜெனரல் மேக்ஸ் வராது, அப்ப எங்க பிசிக்ஸ் சார் சங்கர் ஒரு டியூஷன் சென்டர் வைச்சி இருந்தாரு, அங்க மேக்ஸ் சொல்லி தராங்கன்னு சேர்ந்தோம். ஆரம்பத்தில் எதார்த்தமா பேசிக்கிட்டு இருந்தது திடீர்னு எப்படி காதலா மாறுச்சுன்னு தெரியல, எங்கள பார்த்தா லவ்வர்ஸ் என்று அப்ப யாரும் சொன்னதில்ல நாங்க நல்ல திக் ஃப்ரெண்ட்ஸ் அப்படின்னா எல்லாரும் சொல்லுவாங்க நினைச்சுட்டு இருந்தாங்க ஆனா எங்க ரெண்டு பேரு மனசுக்கும் நல்லா தெரியும் இது வெறும் நட்பு இல்லன்னு, முதல்ல நான் தான் சொன்னேன் எனக்கு பிடிச்சிருக்குன்னு என்ன வேணும்னாலும் நினைச்சுகிட்டு போகட்டும், உலகம் என்ன சொன்னா என்ன அப்போ அப்படி ஒரு துணிச்சல் படக்குனு சொல்லிட்டேன். பதில் நான் எதிர்பார்த்த மாதிரி தான் இருந்துச்சு. ரெண்டு பேரும் அவ்வளவு சந்தோஷமா நாள ஓட்டுனோம். ஸ்கூல் முடிஞ்சது பின்னால நா காலேஜுக்கு போகல அதனாலயான்னு தெரியல அப்போதுல இருந்து பேச்சு வார்த்தை கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிட்டே வந்துச்சு ரெண்டு பேரும் என்னதான் வந்தாலும் பாத்துக்கலாம், யாரு எது சொன்னாலும் நம்ம வாழ்க்கை வாழ போறது நாம தானே னு நாங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி ஆறுதல் சொல்லிக்கிட்டு ஓட்டிட்டு இருந்தோம். திடீர்னு ஒரு நாள் வந்து ‘வேணா வெங்கட் இது செட் ஆகுமான்னு தெரியல எனக்கு பயமா இருக்கு எங்க வீட்ல செத்தாலும் ஒத்துக்க மாட்டாங்க ஏதோ தப்பு பண்ற மாதிரி தோணுது நம்ம பிரேக் அப் பண்ணிக்கலாமா’ சொன்னவுடன் எனக்கு அழுகையே வந்துருச்சு” என்று சொல்லிக்கொண்டு வரும்போது வெங்கட் அண்ணன் தேம்பிக் கொண்டிருந்தார். சத்யாவும் ஆறுதல் கூறுவது போல தோள்களை பிடித்து செரி விடுனா செரி விடு பார்த்துக்கலாம் வெங்கட் அண்ணன் இன்னும் சற்று அதிகமாக விசும்பினார். “ஓ! இதான் உங்களுக்கு சரிதா அக்காவை புடிக்கலையா சரி சரி எல்லாம் சரி ஆயிடும்னா” என்று சொல்லிக்கொண்டு கொஞ்ச நேரம் சத்யா அமைதியானான். தனக்குள் இருக்கும் வரை தான் அது ரகசியம் பிறரிடம் சொன்னால் அது எப்படி ரகசியமாக இருக்கும்? இப்போது மூன்று பேருக்கு அந்த விஷயம் தெரியும் வெங்கட் அண்ணன் சத்யா மற்றொன்று பேரிரைச்சல் கொண்ட அந்த காற்று. வெங்கட் அண்ணன் காதலியின் பெயரை சத்யா கேட்கலாமா என்ற தயக்கத்தில் இருந்தான். அவரே சொல்ல வேண்டாம் என்று தவிர்த்த பெயரை வலுக்கட்டாயமாகக் கேட்கக் கூடாது அல்லவா! பரவாயில்லை இங்கிதத்தை தொலைத்து கேட்டுவிட முடிவு செய்தான். பல நேரங்களில் இது போன்ற கேள்விகள் இன்னும் பல தெளிவுகளை நமக்குள் அளிக்கிறது. ரொம்ப கூச்சப்பட்டு நாகரிகம் பார்த்து இதுவரையில் கிடைத்தது என்ன நமக்கு? “அண்ணே!” தொண்டையிலிருந்து “அவங்க பேரு என்னதுன? ஓ! நான் பேரு சொல்லலையா அவரு பேரு சரவணன் சத்யாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவனின் மௌனத்தில் பொதிந்த கேள்வி இதுவென புரிந்து கொண்டார் வெங்கட். மௌனங்கள் பதில்களாக தான் இருக்க வேண்டும் என்று என்ன கட்டாயம் இருக்கிறது. “ஆமாண்டா சத்யா எனக்கு ஆண்களை தான் புடிச்சிருக்கு. நான் உண்மையா காதலிச்சேன் ஆனா என்ன பண்றது இன்னிக்கு இருக்கிறது போல அவ்வளவு விழிப்புணர்வு எல்லாம் எங்க இருந்துச்சு இப்பதான் ஜூன் பிரைடு எல்லாம் நடக்குது உனக்கு தெரியாதா நானும் அந்த கம்யூனிட்டி தான் இது போல அவ்வளவு பெருசா அன்னைக்கு இருந்து இருந்துச்சுன்னா அவனும் சாரி அவரும் என்னை விட்டு போறத பத்தி யோசிச்சிருக்க மாட்டாருல….. அதுக்கு அப்புறம் வேற யாரு மேலயும் எனக்கு இந்த உணர்வு தோணுது இல்ல, வீட்லயும் நான் இப்படின்னு சொல்ல முடியல. நீயே யோசிச்சு பாரேன் அந்த கல்யாண மேடையில நான் உட்கார்ந்து இருக்கிற அப்போ என்னோட மனவேதனைய! என்னால புடிக்கலைன்னு சொல்ல முடியல, சரிதா என்னோட பக்கத்துல நெருங்க நெருங்க அனல அள்ளி மேல மாதிரி இருந்துச்சு. அந்த நேரம் ஹோம குண்டத்துக்கு உள்ள போடலாம்னு தோணுச்சு அப்போ அதை காட்டிலும் குண்டத்துல இருந்த அனல் கம்மிதான்”. சத்யாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. எப்போதும் 20 நிமிடங்களில் வெங்கட் அண்ணன் கடையில் இருந்து வீட்டுக்கு சென்று விட இன்று மட்டும் கூட்ஸ் வண்டி தண்டவாளம் போல் பாதை நீண்டு கொண்டே போவதாக உணர்ந்தான். ‘‘சத்யா இங்க பாரு இதெல்லாம் நான் ஏன் உன்கிட்ட சொல்றேனா……..எனக்கு என்னனு தெரியல உன்கிட்ட அந்த நெருக்கம் கிடைக்குது… எனக்கு உன்ன பிடிச்சிருக்கு”
சத்யாவிற்கு அடி வயிற்றில் தூக்கி வாரி போட்டது. “இது அந்தக் காலம் மாதிரி இல்லன்னு உனக்கு தெரியும் இப்போ இது எல்லாம் ரொம்ப நார்மலைஸ் ஆகிட்டு இருக்கு எதுவா இருந்தாலும் சொல்லு நான் டிஸ்டர்ப் எல்லாம் பண்ண மாட்டேன்” என்ன சொல்ற கேட்டவுடன் சத்யா சீட்டின் நுனிக்கு நகர்ந்து சென்றான். அவனுக்கோ வாயெல்லாம் குளறியது வண்டி வழக்கமாக செல்லும் வழி அது என்றாலும் புதிதாக செல்லும் பாதை போல அக்கம் பக்கம் விழித்து பார்த்துக் கொண்டிருந்தான். கைகளில் எல்லாம் வியர்வை மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் மாற்றுப் பாதையில் வண்டிகள் செல்ல அதே பாதையில் வெங்கட் அண்ணன் வண்டியை திருப்ப பயம் தொண்டையைக் கவ்வியது ஏதோ நடந்து விட போகிறது என நடுங்கினான். ஆனால் வெங்கட் அவனிடம் கேட்டுத் தொனி என்பது பயமுறுத்துவதாக இல்லை கண்டிப்பாக ஏதும் நடக்காது தன்னை வன்புணர்வு செய்து விட முடியாது என்ற வைராக்கியத்துடன் இறுக்கமாக அமர்ந்திருந்தால் சத்யா உடனே என்ன சொல்ற என்னோட மனசுக்கு தோணுச்சு நான் கேட்டுட்டேன். இதுதான் காரணம் என்று நான் சரிதாக்கு சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டா….
“என்ன சொல்ற” இன்று இரண்டு மூன்று முறை அழுத்தி கேட்ட உடன் சத்யா பதறிப்போனான். வீடு எங்கோ தூர தேசத்தில் போய்விட்டதாக அவன் நினைத்தான். “தோ தோ வீடு வந்துருச்சு நா கிளம்புறேன்” என்று விறுவிறு நடை போட்டு அங்கிருந்து நகர்ந்தான். அவர் கண்களிலிருந்து தப்பி மறைவதே இலக்காக இருந்தது. கண்களை மெல்ல திறந்து மூடினான். தூக்கம் மட்டும் வரவில்லை. ஜன்னல் வழியாக ஊ.. ஊ.. காற்று . வெங்கட் அண்ணன் மோட்டார் பைக் சத்தத்தை நினைவு படுத்தியது. ஹூம்ம்….
(நீளும்)
Comments
Post a Comment