சத்யா -விசித்திரன்

 

                சத்யா -விசித்திரன்


    டிங்… டிங்… டிங்… நேரம் பிற்பகல் 3 மணி ‘சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்’. யோவான் எட்டாம் அதிகாரம் 32 ஆம் வசனம் என்ற மணியோசை பூங்காவில் தூங்கிக் கொண்டிருந்த சத்யாவை கண்விழிக்க செய்தது. ஊளை வழிந்த கண்களை கசக்கி பேண்ட் ஜோப்பில் வைத்திருந்த மொபைல் போனில் மீண்டும் ஒருமுறை மணி சரியாக 3 ஆகிறதா என சோதித்துப் பார்த்தான். கடவுளை சோதித்துப் பார்ப்பது சரிதானே இன்றைய வழக்கம் உடனே அவன் படுத்திருந்த ஸ்டோன் பெஞ்சை விட்டு மடார்! என்று எழுந்து உட்கார்ந்தான். ஒரு கையில் ஊளையைத் துடைத்தும் மறுக்கையில் வாயில் இருந்து ஒழுகிய ஜொல்லினால் படிந்த கோட்டுவாவினை துடைத்துக் கொண்டு இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தான் சத்யா. தன்னுடைய உடைமைகளை சரியாக ஒழுங்கு செய்தான் பெஞ்சின் மூலையில் கிடந்த செவிக்கேட்பியை சரியாக எடுத்து அதற்கு பொருத்தமான காதுகளில் ரைட் லெப்ட் என்று பொருத்தினான்.

 

    கால்களை கீழே இறக்கி தன்னுடைய செம்பழுப்பு நிற ஷூவைப் போடத் தொடங்கினான். அவனின் காலின் அளவைவிட அது சற்று சிறியது. எந்த அளவிற்கு சிறியது என்றால், கச்சிதமாய் உள்ளது என்று சொல்லுவதை விட ஒரு சுற்று சிறியது. பெரும்பாலும் சத்யா ஷூவை விரும்புவது இல்லை இது அவனுடைய பள்ளியில் பயின்ற சகத் தோழிமார்கள் வாங்கிக் கொடுத்தது. இது அவனுக்கு தனி ஸ்பெஷல்.  அந்த ஷுவின் ஓட்டைக்குள் காலை கஷ்டப்பட்டு திணித்துக் கொண்டிருந்தான். ஒருவகையில் இதுவும் ஒரு வன்புணர்வு தான் விரும்பாத ஒன்றை கட்டாயப்படுத்திக் கொடுப்பதைத் திணிப்பு, வன்புணர்வு என்ற வார்த்தைகளில் பொருத்தினால் சரியாக தான் இருக்கும். தனது வலது கை ஆள்காட்டி விரலை ஷுவின் நுனியில் வைத்து பின்னோக்கி இழுத்து துளையைப் பெரிதாக்கி அதே சமயத்தில் பாதங்களை உள்நோக்கி லேசாக தள்ளி, பழைய சக்கர தையல் மிஷினைப் பெடல் செய்வதுபோல் முன் காலை அழுத்தமாக வைத்து குதிகாலை மேல் கீழ் என்று தொடர்ச்சியாக மாற்றி மாற்றி அசைத்துக் கொண்டிருந்தான். விரலால் பின்னிழுப்பது, பாதத்தை உள் நுழைப்பது, குதிகாலை அசைப்பது, இந்த மூன்று செயல்களும் ஒரே வேளையில் நடப்பதால் மட்டுமே  ஷூ அணிதல் என்பது சாத்தியமாகும். இது ஒரு தனி கலை என்று சத்யா பலமுறை தனக்குத்தானே இதே ஷுவை மாட்டும் போதெல்லாம் சொல்லிக் கொள்வான்.

                 

     மதியம் அங்கேயே தூங்கி விட்டதால் சாப்பாடு நொந்து போய் இருக்கும். அதை அப்படியே வீட்டிற்கு கொண்டு போனால் அவன் அம்மாவிற்கு என்ன சொல்வது என்றெல்லாம் யோசிக்க வேண்டி வரும். அதனால், தன்னுடைய பேக்கில் உள்ள சாப்பாட்டு டிப்பனை கைகளில் ஏந்திக் கொண்டு கொட்டுவதற்கு ஏற்ற இடத்தை தேடிக்கொண்டு கண்களால் நோட்டமிட்டான். அந்த பார்க்கின் முடிவில் சுற்றுப்புற சுவரில் சாய்ந்து, இரண்டு தெருநாய்கள் படுத்து கிடந்தது. எப்படியோ அவை இரண்டிற்கும் ஏழு எட்டு வயது இருக்கும் அவற்றின் உரோமங்கள் எல்லாம்  கொட்டி தோல்  சுருங்கிக் கிடந்தது. அந்த இரண்டு நாய்களுக்கும் கருத்தடை ஆப்ரேஷன் செய்தது, அவற்றின் காதுகளில் இருக்கும் கத்தரிப்பைப் பார்த்ததின் மூலம் தெரிந்து கொண்டான். ஒரு ஆம்பள நாய், ஒரு பொட்ட நாய். இரண்டும்  நாய்களும் சண்டையிடாதவாறு ஆளுக்கு ஒரு பிடி சோற்றை ஒருபுறம் வைத்தான். அவனுடைய டிபன் பாக்ஸ் சத்தம் தான், நாய்களை தனியே அழைக்க சத்யாவிற்கு வேலையே இல்லாமல் செய்து விட்டது. அபுக்கு… அபுக்கு… என்று அவசர அவசரமாய் இரண்டு மூன்று வாய் சாப்பிடும் முன்னே அருகில் இருக்கும் இளம் நாய்கள் ஓடி வந்து தின்ன முற்பட கொஞ்ச நேரத்தில் அந்த இடமே அமிளி குமிளியானது. பவ்…. பவ்….. என்று  குரைக்கும் அவற்றின் ஒலிகள் அந்த அமைதியான சாலையின் தவத்தை கலைத்தது. சத்யா அந்த காட்சிகளைக் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினான் சரியாக நாலு மணி வாக்கில் அவன் வீடு சென்று விடுவான் கல்லூரி விட்டதும், இன்றும் அது போல போக வேண்டிய கட்டாயம் சத்யாவிற்கு இருந்தது இப்போதே நேரம் ஆகிவிட்டது,  அவசரமாக சரக்கு சரக்கு என்று ஷூவைத் தேய்த்து நடை போட்டான். கல்லூரியில் இருந்து வருவது போல பாவலா செய்துக் கொண்டே வீட்டை நோக்கி நடந்தான். ஆம்! சத்யா இன்று கல்லூரிக்கு செல்லவில்லை அமிர்தாவை எதிர்கொள்வதில் அவனுக்கு பெரும் தயக்கமே இருந்தது. அதனால்  கல்லூரிக்கு செல்லாமல் அங்கிருந்து 8 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் சண்முகனார் பூங்காவில் படுத்து விட்டான். இந்தப் பூங்கா அமைந்திருக்கும் நகரில் தன்னுடைய வகுப்பு நண்பர்களும், தன்னுடைய உறவினர்களும்  யாரும் இல்லை என்பது சத்யாவுக்கு நன்கு தெரியும். காரணம் அந்த பூங்காவில் உள்ள நீச்சல் குளத்திற்கு தன்னுடைய நண்பர்களுடன் சென்ற ஆண்டு வந்திருக்கிறான்.

 

“மாமா இன்னா எடம்டா இது? வந்ததே இல்ல”

 

“டேய் நல்லா இருக்குமாடா ? சத்யா, ஒரே கலிஜா இருக்கப்போகுது”

 

“ரித்திக்கே அதெல்லாம் நல்லா தான்டா இருக்கும் வாடா” என்று சத்யா அப்போது அழைத்து வந்திருந்தான். யாரும் அறியாத மறைவான இடம் தனக்கு உள்ளது என்ற ஒருவித மன மகிழ்ச்சி சத்யாவிற்கு ஒரு ஓரமாய் மின்னியது .

 

     பரபரப்பாக கல்லூரியில் இருந்து வருவது போல, பேக்கினை ஒரு மூலையில் போட்டுவிட்டு, தண்ணீரை பிடித்து. சலப்… சலப்… என்று அடித்துக்  கழுவி விட்டு, அந்த ஈரத்தை துடைக்காமல் அப்படியே சமையல் கட்டில் சென்று, பித்தளை தவளையில் தண்ணீர் மொண்டு கட கடவென குடித்தான். அவன் அன்னாந்து குடிக்க வெளி பிதுங்கி இருக்கும் அவனின் தொண்டை குழியில்  நீர்  செல்வது பார்க்க, தளம்  போட ஜல்லிக்கலவை தரைதளத்திலிருந்து மூன்றாவது மாடிக்கு எடுத்து செல்லும் லிப்ட் போல் மேல் கீழ் என்று ஏறி இறங்கியது. கிரீஸ் போடாமல் இயக்கும்  சக்கர சத்தம் போல் அவன் தண்ணீரை விழுங்குவது இருந்தது. உடனே துண்டை எடுத்து முகத்தைத் துவட்டி, கட்டிலில் அமர்ந்து அப்பா… என்று பெருமூச்சு விட்டான். இது வழக்கமாக செய்வது இதில் எந்த குளறுபடியும் வராமல் பார்த்துக் கொண்டான். இதன்பின் செய்யும் செயல்பாடுகள் எல்லாம் அந்தந்த நாட்களில் நிகழ்வை பொருத்து தீர்மானித்துக் கொள்வான். சத்யா வீட்டில் நுழைந்த நேரம் அவனின் அம்மா அங்கு இல்லை. எப்போதும் அவன் வரும்போது அவனுக்கு வீட்டில் அவள் இருக்க வேண்டும்.  அக்கம் பக்கத்தில் கதை பேச சென்றிருந்தால் அறைக்குள் இருந்தே தொண்டைக் கிழிய “எம்மோ எம்மோ” என்று கத்துவான். இன்று அதுபோலே ஒன்றும் செய்யாமலே இருந்தான். அவனுக்கு இன்றையப் பொழுதை ஓட்டிவிட்டதுப் போல் எல்லா நாளும் இருந்து விட முடியாது என்பது நன்கு தெரியும்.. கல்லூரியைக் கட் அடிப்பது எத்தனை நாட்களுக்கு முடியும். கட்டாயம் செல்ல வேண்டும். அமிர்தாவிடம் ஓடி ஒளிவது இனிமேல் சாத்தியப்படாது, என்று தனக்குத்தானே அசை போட்டுக் கொண்டிருந்தான். சரி, நாளைக்கு கட்டாயம் என்னதான் நடந்தது,  சொல்லிவிடலாம் என்று முடிவு செய்தான். ஆனால் ஃபோனில் அவன் அனுப்பிய மெசேஜ்களை இன்னும் திறந்து கூட பார்க்கவில்லை. அவளுக்கோ சத்யாவின் மீது மிகுந்த கோபம் இன்றும் அவன் வரவை எதிர்நோக்கி காத்திருந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியதினாலே  இன்று ஒரு மெசேஜும் செய்யவில்லை. சத்யாவிற்கு தன் மீது தான் தவறு உள்ளது என்பது நன்கு தெரியும் சண்டை போட அவனுக்கு எந்த அருகதையும் இல்லை என்பதை தனக்குள்ளே சொல்லிக் கொண்டிருந்தான். இது போன்ற விஷயத்தை அவன் யாரிடமும் இதற்கு முன் சொல்லியதும் இல்லை. அமிர்தா நெருக்கமானவளாக இருந்தாலும், இதைச் சொல்ல வேண்டும் இதை சொல்லக்கூடாது என்று நமக்கே ஒரு பொதுவான கட்டுகள் மனதில் உண்டாகி தான் இருக்கிறது. இதைத்தான் ‘காமன் சென்ஸ்’ என்று இன்றைய தமிழில் சொல்கிறார்கள். கைகளைப் பிசைந்தவாறு அமர்ந்திருக்க, ஒவ்வொரு விரலிலும் நெட்டை உடைத்து அந்த சத்தத்தில் சிலாகித்து இருந்தான் சத்யா.

 

விறுவிறு என்று காதில் ஃபோன் வைத்துப் பேசிக்கொண்டே உள் நுழைந்த சத்யாவின் அம்மா சத்யாவைப் பார்த்தவுடன்,

 

“வந்துட்டியா டா? எப்ப டா வந்த? சரி நல்லதா போச்சு சீக்கிரமா ரெடி ஆகு.

 

உங்க அத்தை வீட்டுக்கு போகணும்”

 

“எந்த அத்த வீட்டுக்குமா? ஈஸ்வரி அத்தையா?”

 

“ஆமா பாப்பா வீட்டுக்கு தான்”

 

சத்யாவின் அம்மா அவளின் நாத்தனாரை சிறு வயது முதலே பாப்பா என்று அழைப்பது வழக்கம். சத்யாவும் அதற்கு பழகிப்போனதால் “சரி சரி”  என்று பதிலளித்தான். “எதுக்குமா போகணும் திடீர்னு” என சத்யா கேட்டதைப் பொருட்படுத்தாமல் அவள் ஃபோன் பேசுவதிலே மும்முரமாக இருந்தாள். சத்யாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. வெகு நேரம் குழப்பத்தில் இருந்தான்‌. ஒரு ஆறு நிமிடத்திற்கு பின் அவளே வந்து சத்யாவிடம் “உங்க ஈஸ்வரி அத்தை இருக்காளா அவ பொண்ணு பெரிய பொண்ணு ஆயிட்டா நாளைக்கு நம்ம போகணும், நீ ரெடி ஆகு உங்க நைனா இருந்திருந்தா, அவரு தான் எடுத்து முன்ன நின்னு செய்யணும், அந்த மனுஷன் இல்ல பெருசா நம்மளால எதுவும் செய்ய முடியலனாலும் அங்க போய் நிற்கிறது தான் நல்லா இருக்கும்.  இல்லாங்காட்டி பொழுதுபோக்குக்கு பொறி கிடைச்ச மாதிரி ஊரே ஏதாவது சொல்லிக்கிட்டு கெடக்கும், அதுவும் உங்க அப்பா வீட்டு ஜனத்துல ரெண்டு மூணு சிரிக்கிங்க இருக்காளுங்க, சரியான அவுசாரி முண்டைங்க எப்ப சண்டை வரும்னு காத்துகிட்டு இருக்காளுங்க, ஊர் குடிய கெடுக்கறதுல என்ன ஆனந்தம்  னு தெரியல, நல்லா சொந்த பந்தம் கூடிப் பேசிக்கிட்டா போதும், பச்சை முளகா கிள்ளி சூத்துல வச்ச மாதிரி இருக்கும் போல அவங்க வாயை அடைக்க ஆச்சோம் உடனே போகணும் நான் இப்போ நைட்டே  கிளம்புறேன். நீ காலங்காத்தால வந்து சேரு”  என்று அவசரமாக சொல்லி அங்கிருந்து நகர்ந்து வீட்டின் மற்றொரு அறையில் இருந்து ஒரு புதுப் புடவை சுற்றிக்கொண்டு வெளியே வந்தாள். மந்திரவித்தைப் போல் நொடியில் அந்தப் புடவையை அவள் சுற்றிக்கொண்டாள். மணிப்பர்ஸில் காசை வைத்து அதை ஜாக்கெட்டுக்குள் நுழைக்க பார்த்தாள் பெரிய பர்ஸாக இருந்ததால் முடியாமல் கையில் ஏந்தி விற்க் விற்க்கென நடைப் போட்டாள். கோடை காலங்களில் வந்து செல்லும் தண்ணீர் லாரி போல் பட்டென சத்யா  முன்தோன்றி மறைந்து போனால் சத்யாவின் பதிலைக் கேட்க கூட அவளுக்கு நேரமில்லை.

 

     சத்யாவுக்கு நாளை அமிர்தாவிடம் சொல்லிவிட வேண்டும், என்ற அவனின் நினைப்பு நடக்காது என தெளிவுக்கு வந்தான். அன்று இரவு வீட்டில் யாரும் இல்லை தனியாக படுத்துக் கொண்டான். காலையில் அவன் அம்மா சமைத்த உணவு ஏதோ கொஞ்சம் எஞ்சி இருந்தது. அதை சாப்பிட்டு அரை வயிற்றோடு  படுக்கைக்கு சென்றான் சத்யா. அமிர்தாவிற்கு என்ன சொல்வது என்பது கூட அவனுக்கு மனதில் தோன்றவில்லை. அப்போது, வெங்கட் அண்ணன் உடனான கடைசி சந்திப்பில் நிகழ்ந்தது தான் அவன் மனதில் வந்து வந்து போனது.  இரண்டாம் ஆண்டு கடைசி பருவத்தேர்வு நாளில் பேருந்து நிலையம் நோக்கி நடந்து வந்த சத்யா வெங்கட் அண்ணனைச் சந்தித்தான். வெங்கட் அண்ணன் தன்னுடைய பைக்கில் சத்யாவை வீட்டிற்கு கொண்டு போய் விடுவதாக சொல்லி அவனை ஏறச் சொன்னார்.  சத்யாவும் அவருடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே பயணித்து கொண்டிருந்தான். இது முதல் தபா இல்லை பலமுறை இது போன்று அழைத்துக் கொண்டு போய் அவர் விட்டிருக்கிறார். செல்லும்போதெல்லாம் அவர் தன்னுடைய சொந்தக் கதைகளை பேசுவார் சத்யாவும் அதற்கு ஹும்… கொட்டிக் கொண்டும், சரி சரி என சொல்லியும், சில சமயங்களில் தலையசைத்தும் அவருக்கு பதில் அளிப்பான். இன்று சத்யாவிடம் வெங்கட் அண்ணன் சொல்லியிருந்தார்…………. அதை நினைத்து திரும்பி ஃபோனை பார்க்க மணி 2:15 இருந்தது. நாளை சீக்கிரமாக செல்ல வேண்டும் என்பதை நினைவுபடுத்தி கண்களை இறுக்கி மூடினான். நாளை நடந்ததைக் கூறி விடலாம். இந்த சத்தியம் அவனை விடுதலையாக்கும் என்று நம்பி இருக்க, விடுதலை ஆகும் நாள் நீட்டிக்கப்பட்டதை எண்ணி வருத்தத்தோடு படுத்து உறங்கினான். கைதி சத்யா.

 

 

 

 

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு