ஔவை தோட்ட பல்கனிகள் -அகிலா சுப்பரமணி
ஔவை தோட்ட பல்கனிகள் -அகிலா சுப்பரமணி
இசையின் ஔவை பற்றிய
கட்டுரைகள் ‘‘‘களிநெல்லிக்கனி - ஔவையார் கவித்துவத் திரட்டு’’ என்ற நூலாக காலச்சுவடு பதிப்பகம் மூலம் வெளிவந்திருக்கிறது. ஆனால்
இக்கட்டுரை நீலி இதழில் வெளிவந்த தொடரை மட்டுமே மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது.
‘‘உவப்ப தலைக்கூடி
உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்’’
எனும் குறளுக்கு ஏற்றார் போல் வாழ்ந்தவர் ஔவை. சான்றாக அதியன் ஔவையின் நட்பினை எடுத்தியம்பலாம். இருவருக்கிடையிலான நட்பிற்கு அடையாளமாக இருப்பது நெல்லிக்கனி. ஔவையைப் பற்றிய இசையின் ‘‘‘‘வாயில்’’ கட்டுரையில் அவர் ஔவை மீது வைத்திருந்த கடல்கடந்த அன்பினையும், அவர் பாடல் மற்றும் எழுத்துக்களின் மீது அவருக்கு இருக்கிற அவாவினையும் அறியமுடிகிறது. ஔவை பாடிய பல பாடல்கள் திரைப்படங்களில் பாடல்களாக வந்துள்ளன. ஔவை என்றாலே நினைவுக்கு வருவது திரைப்படங்களே. திரையில் தோன்றும் கே.பி.சுந்தராம்பாள் ஔவையின் வேடமிட்டு நடித்தார் என்பதைவிட திரைப்படங்களில் ஔவையாக வாழ்ந்தார் என்பதே உண்மை. அப்போது இருந்த காலக்கட்டத்தில் பெண்களை இந்த சமூகம் எப்படியெல்லாம் நடத்தியது என்பது சொற்களால் சொல்ல இயலாதவை. அப்படிபட்ட சமூகத்தில் கே.பி.சுந்தராம்பாள் சம்பளமாக ஒரு லட்சம் வாங்கினாராம். அன்றைய காலகட்டத்தில் ஒரு பெண் இவ்வளவு பெரிய தொகையினை ஊதியமாக பெற்றதை ஔவையின் சொல்லில் ‘‘அரிது அரிது’’ எனச் சொல்லலாம்.
ஔவையைப் பற்றிய கட்டுரையில் கே.பி.சுந்தராம்பாள் அவர்களை பற்றி குறிப்பிடாமல் போயிருந்தால் இசையை நானே திட்டித் தீர்த்திருப்பேன். ஆனால் அவர் கே.பி.சுந்தராம்பாளை தன் பாட்டி பேச்சியம்மாள் சாயலில் கண்டு நெக்குருக வைத்துவிட்டார். இதனை ஔவைக்கு அவர் செய்யும் மரியாதையாகவே காண்கிறேன். இதிலிருந்து ஔவையின் மீதுள்ள இசையின் ஈடுபாட்டை உணரமுடிகின்றது. தமிழ்மரபில் இன்றுவரை ஔவையின் எண்ணிக்கையில் ஏறுமுகமும் இறங்குமுகமுமாகத்தான் இருக்கிறது. சங்ககாலம் முதல் சிற்றிலக்கிய காலம் வரை எட்டு ஔவையார்கள் இருப்பதை தாயம்மாள் அறவாணனின் ‘‘அவ்வையார் படைப்புக் களஞ்சியம்’’ ஆய்வுநூலை துணையாகக் கொண்டு ‘‘‘‘வாயில்’’ கட்டுரை குறிப்பிடுகிறது. ஆனால் ஏழு நாட்களுக்கு முன் எனது ஆசிரியர் ஔவை என்ற பெயரில் சங்க காலத்தில் வாழ்ந்தவர் அறுவர் தான் என்று அழுத்தமாகக் குறிப்பிட்டார். இதில் எதை ஏற்பது என்று தெரியவில்லை. எனவே தான் ஔவையின் எண்ணிக்கையில் இன்றுவரை ஒரு முடிவுக்கு வரமுடியாமல் இருக்கிறது. ஒன்றை மட்டும் நாம் தெளிவுற அறியமுடிகிறது. ஔவை என்ற பெயரில் பல்வேறு புலவர்கள் நம் தமிழ் மொழிக்கு இனிமை சேர்த்துள்ளனர் என்பதை மட்டும் மறுக்கவியலாது. அதேசமயம் ஔவையிடம் இருந்த பிற்போக்கு கருத்துக்களை ஏற்க இயலாது. ஔவையின் அகம், புறம் சார்ந்த பாடல்களோடு பிற பாடல்களையும் மேற்கோள் காட்டியதோடு நிறைய நூல்களின் சான்றுகளையும் தொட்டுக்காட்டி வாசிப்புச் சுவை குறைவின்றி கட்டுரையை இசை அமைத்துள்ளார்.
‘‘கைகவர் முயக்கம்’’ கட்டுரையில் porn வீடியோவுடன் தொடர்புபடுத்தி பக்கத்து வீட்டு பையனின் வயதினைக் குறிப்பிடாமல் அவன் கூறிய உவமையை இக்கட்டுரையில் பதிவிட்டிருப்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது. ஔவையார் தனது பாடலில் ஓரிடத்தில் வெள்ளிவீதியாரை பற்றி குறிப்பிட்டிருப்பார். அதேபோல் வெள்ளிவீதியாரும் ஔவையாரை தனது பாடலில் ஓரிடத்தில் குறிப்பிட்டிருப்பார். சங்ககால இலக்கியங்களில் ஒரு பெண்பாற் புலவர் இன்னொரு பெண்பாற் புலவரை தன்னுடைய பாடலில் குறிப்பிட்டிருப்பதை அக்கால கட்டத்திற்கு அரிய செயல்தான். அப்படிப்பட்ட அரிய செயலை செய்த இருவருக்கும் ஏதோ ஒரு வகையில் நட்புறவு இருந்திருப்பதை இக்கட்டுரை மூலம் அறிய முடிகின்றது. ஔவையின் மனநிலையை ஒத்ததாகவே வெள்ளிவீதியாரின் மனநிலையும் இருப்பதை இவர்களின் பாடல்களின் மூலம் காணமுடிகின்றது. சங்ககால பெண்பாற் புலவர்கள் ஆடவர் விதித்த வாழ்க்கை நெறிகள் பலவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. அக்கால கட்டத்தில் ஆண்களுக்கு எதிராக சிந்திப்பதும் செயல்படுவதுமான அரிய செயலை ஔவையாரும் வெள்ளிவீதியாரும் செய்துள்ளனர் என்பதனை மறுக்க இயலாது.
சங்ககாலத்தில் பெண்ணின் ஓங்கிய குரல்கள் அனைத்தும் புறத்திணையாக்கப்பட்டு கைக்கிளையில் சேர்க்கப்பட்டிருப்பதை இன்குலாப் அவ்வை நாடகத்தில் எழுதிய முன்னுரை மூலம் அறிய முடிகின்றது. இதன் காரணமாக நக்கண்ணனையின் அகப்பாடல்கள் புறத்திணை ஆக்கப்பட்டன என்ற செய்தியினையும் ஔவையார், வெள்ளிவீதியாரின் பாடல்கள் அதிலிருந்து தப்பி பிழைத்திருப்பதையும் இன்குலாப் குறிப்பிடுகிறார். மூவேந்தர்கள் மற்றும் பாரியைப் பற்றிய செய்தியினை ஔவை தனது பாடலில் பாடியுள்ளார். பாரியை குறித்து ஔவையின் பாடலில் இடம்பெறும் செய்திகள் கட்டுக்கதைகளாகவே பார்க்கப்படுகின்றன. ஔவையின் அகநானூறு பாடலில் பாரியின் பறம்பு மலை சுனை பற்றிய குறிப்பு உள்ளது . இக்குறிப்பு கட்டுக்கதைகளாகவே பார்க்கப்படுவதனை இன்குலாப் கூறுகிறார்
. .பாரி வள்ளல், பாரி மகளிர் ஆகிய இருவருக்கும் இடையில் நட்புறவு இருந்ததற்கான எவ்வித சான்றும் கிடைக்கப்பெறவில்லை. . பாடலில் வரக்கூடிய செய்தியினை கவித்துவ நோக்கில் இசை கூறி செல்கிறார். காமத்துப்பாலில் வரக்கூடிய குரல் ஒன்றிற்கு இசை கூறும் விளக்கம் பாரதிதாசனின் படைப்புகளில் ஒன்றான ‘’எதிர்பாரா முத்தம்’’ நாடகத்தின் கதை தலைவியாகிய பூங்கோதை தான் எனக்கு நினைவுக்கு வருகிறாள். இங்கு தலைவி தலைவனை எங்கு சென்றாலும் உடன் அழைத்து செல் இல்லையேல் நீ வரும் பொழுது நான் இங்கு இல்லேல் என்று கூறுகிறாள் தலைவனிடம். ஆனால் எதிர்பாரா முத்தத்தில் தலைவன் பொருள் ஈட்டுவதற்காக தலைவியிடம் கூறாமலேயே சென்று விடுகிறான். இதனை அறிந்த தலைவி வாழ்வோ சாவோ அவனுடன் தான் என்று துணிச்சலுடன் அவன் சென்ற அதே பாதையில் பயணிக்கிறாள். .இத்தகைய துணிவு ஏன் இப்பெண்ணிற்கு வரவில்லை என்று எண்ணத் தோன்றுகிறது. சங்க காலத்தில் தலைவன் பொருள் தேடி சென்ற பின் திரும்பி வர இயலாத பட்சத்தில் தலைவி ஏன் தலைவனை தேடி செல்வதில்லை என்ற ஒரு கேள்வி எழத் தொடங்குகிறது. என்னைப் பொருத்தமட்டில் நல்ல கவிஞன் என்பவன் தன்னிடம் இருக்கின்ற நிறைகளை மட்டும் கூறுபவன் அல்லன் குறைகளையும் சொல்பவனே நல்ல கவிஞன் அவ்வகையில் நற்றிணையில் 390வது பாடலுக்கு எனக்கு பொருள் விளங்கவில்லை என்று கவிஞர் கூறியது பாராட்டிற்குரியது. அப்பாடலில் உள்ளுறையானது பயின்று வந்துள்ளதை மட்டும் என்னால் அறிய முடிகின்றது. இது யாருடைய கூற்றாக இருக்கும் என்பதில் எனக்கும் சிறு ஐயம் உள்ளது. இருந்தாலும் தலைவி கூற்றாக இருக்குமோ என்பது ஒரு சந்தேகம். மற்றபடி கவிஞர் இசை கூறிய அனைத்து கருத்துக்களும் ஏற்கக் கூடியதாக உள்ளது.
‘‘கைகவர் முயக்கம்’’
கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள
ஔவை எழுதிய அகநானூறு 11வது பாடலில் இளமை நிலையாமையை உணர்ந்த
தலைவி நாம் இருவரும் இருக்கும்
காலம் கொஞ்சம்
தான் அக்காலம்
வரை இருவரும்
சேர்ந்து இன்பம் துன்பமாகிய இரண்டினையும்
செறிவுற சேர்ந்து
வாழ்ந்து கொண்டே தலைவனை பொருள் ஈட்ட சொல்வதாக
அமைந்துள்ளது. மிகப் பழமையான இலக்கண நூலான தொல்காப்பியத்திலும்
மேற்கூறிய செய்திகள்
இடம் பெறுகின்றன.
பிரிவின் வகை இரண்டு;
‘‘இருவகைப்
பிரிவும் நிலைபெறத்
தோன்றலும்
உரிய தாகும் என்மனார் புலவர்’’ (தொல்.பொரு-13)
தலைவன் பிரிந்து செல்வதற்கான
காரணங்கள் மூன்று என்று தொல்காப்பியம்
குறிப்பிடுகிறது.
‘‘ஓதல் பகையே தூதிவை பிரிவே’’ (தொல்.பொரு -27)
என்கிறது தொல்காப்பியம். இம்மூன்று காரணங்களுக்காகவே தலைவன் பிரிந்து செல்கிறான். தலைவன் செல்லும்போது என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை ஔவையின் பாடல் வழி அறிய முடிகிறது.
தமிழர்
மரபில் களவு என்பது மறைவாக செய்வது. களவு காலத்தில் தலைவன், தலைவி இருவருக்கும்
இடையில் திருமணத்திற்கு முன் ஏற்படுகின்ற நிகழ்வுகள்
அனைத்தும் களவு ஒழுக்கத்தில் அடங்கும்.
ஆணும் பெண்ணும்
மறைமுகமாக தங்களுடைய
அன்பினை பரிமாறிக்
கொள்கின்றனர். இத்தகைய
களவு காலத்து
செய்தியினையும் ஔவை
தனது பாடல்கள்
வழி சொல்லியிருப்பதை
‘‘உன் ஆசைக்கு
யாருமில்லை’’. கட்டுரையில்
இசை விளக்குகிறார்.
‘‘தலைவி வீட்டைத்
துறந்து தலைவனோடு
சென்று விட்டாள்.
இந்தச் செய்தியை
தோழி செவிலிக்குச்
சொல்கிறாள். ‘உன் மகள் அவள் விரும்பிய தலைவனோடு
சென்று விட்டாள்.
அவர்கள் மணம் முடித்துக் கொண்டனர்.
அது உறுதியாகி
விட்டது. இனி அதை மாற்றவியலாது’’
என்ற செய்தி தொல்காப்பியத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தில் பொருளதிகார
களவியலில் தோழி கூற்றில்,
"நாற்றமும் தோற்றமும்
ஒழுக்கமும் உண்டியும்
செய்வினை மறைப்பினும்
செலவினும் பயில்வினும்"
( தொல்.பொரு-112)
நூற்பாவில் மேற்குறிப்பீட்டிற்கும் செய்தியினை சேர்த்து 30 செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. தலைவன், தலைவி உடன்போக்கு சென்ற பின் தோழி செவிலியிடம் நிகழ்த்தும் கூற்றாக இது இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தை மூவேந்தர்கள்
மற்றும் அதியர், கொங்கர், தொண்டையர்
போன்று வேறு
சில மறக்குடிகளும்
ஆட்சி செய்தனர்
என்பது அனைவரும்
அறிந்த செய்தியே.
அவர்களுள் ஒருவரான
‘கோசர்’ என்கிற
மறக்குடி குறித்தும்,
அவர்களது மாறாத வாய்மை குறித்தும்
ஔவை தனது பாடல் வழி குறிப்பிட்டுள்ளார். தனி மரபினை சார்ந்த
குறுநில மன்னரைப்
பற்றி ஔவை பாடியிருப்பது ஆச்சரியத்திற்குரியது. ஏதோ ஒரு வகையில் ஔவைக்கும்
அம்மரபினை சேர்ந்த
குறுநில மன்னருக்கும்
தொடர்பு இருந்திருக்க
வேண்டும். அதன் காரணமாகத்தான் ஔவை கோசர் குடியினைச்
சார்ந்தவர் பற்றி பாடலில் எடுத்தியம்பியுள்ளார் என்பது எனது தனிப்பட்ட
கருத்து.
"நாலூர்க் கோசார் நன் மொழி போல
வாய் ஆகின்றே
தோழி”
.கோசர் குலத்தில் பிறந்தவர்கள் சொன்ன சொல் எப்படிப் பிழையாதோ அதுபோல தலைவியின் உடன்போக்கும் உறுதியாகிவிட்டது என்கிறாள் ஔவை. அக்குலத்தில் பிறந்தவர்கள் யாரும் பொய் உரைக்க மாட்டார் போலும். எனக்கு தெரிந்து இவர்கள் அரிச்சந்திரன் வகையறாவை சார்தவர்களாக இருக்க வேண்டும். கோசர் என்ற சொல்லைத் தவிர்த்து மற்ற செய்திகளை அழகுறவே எடுத்தியம்பியுள்ளார் கவிஞர். ஆனால் கோசர் என்ற சொல்லின் பின்னணியை ஏனோ விளக்காமல் விட்டுவிட்டார். தலைவி தலைவன் மீது இருந்த காதல் மிகுதியால் தலைவனின் பிரிவினை ஆற்றாது உடல் மெலிந்து போகிறாள். அப்பொழுது அதனைக் கண்ட தாய் அவளுக்கு பேய் பிடித்துள்ளது என்று எண்ணி தலைவியை வெறியாட்டு நிகழ்த்தும் இடத்திற்கு அழைத்து செல்வதும் அதற்கு முன்பு கட்டுவிச்சியை அழைத்து குறி கேட்கும் செய்தியும் தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளது.
முலையிடை முனைவர் என்ற சொற்கட்டை ஔவை பயன்படுத்தியுள்ளார். பக்தி இயக்க காலகட்டத்தில் இறைவனை துதிப்போரும் இறைவனின் முலைகளை பற்றி பாடல்களில் பாடியுள்ளனர்.. ஆண்களுக்கு முலைகளின் மீது இவ்வளவு ஈர்ப்பு இருக்கிறது .என்பதனை கவிஞர் எழுதிய கருத்துக்களை எல்லாம் பார்த்த பின் எனக்கொரு கேள்வி எழுகிறது. இக்கேள்விக்கான விடையை அந்த இறைவன் தான் தர வேண்டும் படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மன் ஏன் பெண்களுக்கு மட்டும் முலைகளை வைத்து படைத்தான்? ஆண்களுககு ஏன் வைக்கவில்லை. இதற்கான விடையை யார் தருவாரோ? இனிவரும் பிறவிகளிலாவது அந்த பிரம்மன் ஆண்களுக்கு முலைகளை வைத்து படைக்கட்டும். அப்பொழுதுதான் பெண்களின் வலியினை ஆண்களால் உணர முடியும். அக்காலத்தில் தலைவிக்கு எதிரான ஒரு உறவுநிலையில் பரத்தையர் இருந்துள்ளனர். தலைவனுக்கு மட்டும் பரத்தையர் என்ற உறவு இருக்கிறது. ஆனால், தலைவிக்கு பரத்தையன் என்ற ஒரு உறவு எதுவும் இல்லை. அப்படி இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் ஒரு முறை சிந்தித்துப் பாருங்களேன். தலைவனிடத்தில் தலைவியும் தலைவி இடத்தில் தலைவனும் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும். தலைவி பரத்தையனை நாடி செல்வதாகவும் தலைவன் பரத்தையை நாடிச் சென்ற தலைவியின் மீது ஊடல் கொண்டிருப்பதாகவும் பாடல்கள் எவையேனும் ஒன்று இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. அப்படிப்பட்ட பாடல்கள் கனவிலும் கூட எவராலும் இயற்ற இயலாது என்பதனை மட்டும் நன்கு அறிய முடிகின்றது.
சங்ககாலத்து பாடல்களைப் படிக்கும் போது தலைவன் தலைவிக்கிடையே ஏற்படும் ஊடல் இவைகளின் வழியே ஏற்படும் சமூகம் சார்ந்த பிரச்சனைகள், சாதி ரீதியிலான பிரச்சனைகள் அனைத்தையும் பார்க்கும் போது மேற்கூறிய நிகழ்வுகளைத் தான் எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது. எப்பொழுதும் தலைவனைப் பிரிந்து தலைவி மட்டும் இரவு நேரத்தில் துயராற்றாது வருந்துவதாகவே பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏன் தலைவன் தலைவியை பிரிந்து வருந்துவதாக அதிகப்படியான பாடல்கள் அமைக்கப்படவில்லை. பெரும்பாலான பாடல்களில் தலைவியே உடல் மெலிந்து பசலை நோய்க்கு ஆட்படுகிறாள். தலைவியையே கட்டுவிச்சியிடம் அழைத்து செல்கின்றனர். வெறியாட்டு நிகழ்த்தும் இடத்திற்கும் தலைவியையே அழைத்து செல்கின்றனர். இப்படி மேற்கூறிய செய்திகளில் ஒன்றேனும் தலைவனுக்கு நிகழாமல் போகிறதே என்பது தான் என்னுடைய வருத்தம். தலைவனுடன் தலைவி உடன்போக்கு செல்லத் தயாராகிறாள். அப்போது தலைவன் தலைவியை அழைத்து செல்லும் பாதையின் கடினத்தன்மை கண்டு தயங்குகிறான். அப்போது தோழி தலைவனிடம் கூறுகிறாள். உன்னோடு இருந்தால் அவளுக்கு இந்த கொடிய பாதைக் கூட இனிமையே பயக்கும் என்கிறாள். இதனை தொட்டு செல்லும் தொல்காப்பிய செய்தி ஒன்று உண்டு. தலைவியைக் காணவரும் தலைவன் தலைவியிடம் இடத்தை தெரிவிக்குமாறு கூறுகிறான். அப்பொழுது தலைவன் வரும் பாதையானது கடுமையான பாதையாக இருக்கின்றது. அதனை பெருமளவு பொருட்படுத்தாமல் தலைவியை சந்திப்பதற்காகவே தலைவன் வருவதாக தொல்காப்பியத்தில் இடம்பெற்றிருக்கிறது.
சங்ககாலத்தில் புறம் சார்ந்த பாடல்களை அதிகப்படியாக எழுதிய பெண்பாற் புலவர்கள் ஔவையாரும் நப்பசலையாரும் ஆவர். பெண்களின் வீரத்திற்கு வித்திட்டவர் மாசாத்தியார் ஆவார். ஔவை மூவேந்தர்களை பற்றியும் நாஞ்சில் வளவனை பற்றியும் தம் பாடல்களில் போற்றி பாடியுள்ளார். ஆனால் ஔவை அதிகப்படியான நட்பு உறவு கொண்ட அரசன் ஒருவன் உள்ளான். அவன் எப்படிப்பட்ட அரசன் என்பதனை ஔவை தன் பாடல்கள் வழி எடுத்தியம்பியுள்ளார். அனைவருக்கும் தெரிந்த விதத்தில் கூற வேண்டுமென்றால் தொண்டைமான் இளந்திரையனிடம் சென்று அதியனின் வீரத்தினை பற்றியும் அவனது கொலைகளத்தில் வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் பற்றியும் ஔவை கூறிய செய்தியை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். ஔவை பாடிய புறம் சார்ந்த பாடல்களில் அதிகப்படியாக பாடியதும் அதியனைத் தான். அதியமான் நெடுமான் அஞ்சிக்கும் ஔவைக்கும் இருக்கும் நட்புறவினை ஒரு சிறிய நெல்லிக்கனி விளக்கிவிட்டு சென்றிருப்பது அதிசயம், ஆனால் உண்மை. அதே சமயம் அதியனும் ஔவையின் மீது கடல் கடந்த அன்பு வைத்திருந்தான் என்பதனையும் அதே சிறிய நெல்லிக்கனி சொல்லி சென்றிருக்கிறது. இக்காலத்தில் அப்படிப்பட்ட நெல்லிக்கனி கிடைக்க வாய்ப்புகள் கூட இல்லை . அப்படி கிடைத்தாலும் அது அதியனைப் போல் அதை மற்றவருக்கு தரும் மனம் வருமா என்ன? அக்காலத்தில் ஒரு பெண்பால் புலவரின் மீது அதீத அன்பு வைத்த அரசன் எனக்குத் தெரிந்து அதியன் ஒருவனே. அதீத அன்பு இருக்கும் இடங்களில் சில சண்டைகளும் வரத்தான் செய்யும்."எத்திசை செலனின் அத்திசை சோறே" என்ற பாடல் இருவருக்குமிடையில் ஏற்பட்ட சிறு கசப்பின் காரணமாக ஔவை அதியனிடம் கோபித்துக்கொண்டு சென்றபோது பாடியது.
ஔவை அதியனின் மகன் பொகுட்டெழினி பற்றியும் பாடி உள்ளார். இதுவும் ஔவை அதியனின் மீது வைத்த அன்பிற்கு சான்றாக அமையும். ஔவை, அதியன் ஆகிய இருவருக்குமிடையே எப்படிப்பட்ட உறவு இருந்தது என்பதனை ஆராய்ந்து கொண்டிருக்கும் அறிஞர்களுக்கிடையே இன்று வரை பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன என்பதனை இக்கட்டுரையில் மூலம் இசை சொல்லி செல்வதாக எண்ணுகிறேன். ஔவை அதியனின் நட்பினைப் பற்றி பேசினால் தமிழ்ச் சொற்களுக்கு பஞ்சம் ஏற்படும் என்பதனால் இத்துடன் அவற்றினை நிறுத்துகிறேன். முடிந்தவரை இக்கட்டுரையில் இசை ஔவை அதியன் நட்பின் மூலம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட அன்பு மிகுதியை ‘‘தொழுது, ஆற்றா தியாகம்’’ கட்டுரையில் விளக்கியுள்ளார். அதியனுக்கு மகன் பிறந்த பொழுது அவனைக் காண அதியன் செல்லும் காட்சியினை கூறும் பாடலில் காட்சி சித்திரம் என் கண் முன் தோன்றி மறைகிறது. அதியன் மாபெரும் வீரனாக இருந்தாலும், பல போர்களில் வென்றிருந்தாலும், ஒரு தந்தையாக தோற்றுவிட்டார். தந்தையின் அதீத அன்பினை பெற்றவள் என்ற அடிப்படையில் எனக்கு இசையும் அவர் பங்கிற்கு சாதாரணமாகச் சொல்லி சென்றதாகவே தோன்றுகிறது. பொகுட்டெழினியை மற்றொரு புலவர் கடையெழு வள்ளல்களுள் ஒருவனாக குறிப்பிடும் செய்தியும் உள்ளது. இவற்றைப் பற்றிய செய்திகளை ஔவை எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் பொகுட்டெழினியின் கொடை சிறப்பினை தன் பாடலில் குறிப்பிட்டுள்ளார். ‘‘விருந்தும் மருந்தும் மூன்று நாட்களே’’ என்ற பழமொழி அதியனிடம் தோற்றுப்போனதை அதியனின் கொடை திறன்களான மலை ,யானை, ,கடல் போன்றவற்றினுடன் தொடர்புபடுத்தி பல பாடல்களை ஔவையும் பிற புலவர்களும் பாடியுள்ளதனை இசையின் ‘‘தொழுது, ஆற்றா தியாகம்’’ கட்டுரை வாயிலாக அறிய முடிகின்றது. அதியன் இறந்தபின் ஔவை பாடிய பாடல் வழி அதியன் பாடினியான ஔவை மீது செலுத்திய அன்பையும் அதனை அவ்வை புரிந்து கொண்ட விதத்தினையும் தெரிந்து கொள்ளலாம். இசை, அதியனின் கொடை சிறப்புகளை எவ்லாம் ‘‘தொழுது, ஆற்றா தியாகம்’’ கட்டுரையில் கொட்டி தீர்த்து விட்டார் எனலாம்.
வெவ்வேறு காலங்களில் வாழ்ந்த புலவர்களின் பாடல்கள் அடங்கிய தனிப்பாடல் திரட்டிலுள்ள ஔவையாரின் பாடல்களை ‘‘ஔவையின் தனிப்பாடல் திரட்டுகள்’’ கட்டுரை விளக்குகிறது. தனிப்பாடல் என்பது சமயம் சார்ந்த கருதுக்களை வெளிப்படுத்தவோ அல்லது பிற செய்திகளை எடுத்துரைக்கும் நோக்கிலோ வருவதல்ல. தமிழ் மொழியின் சிறப்பினை எடுத்தியம்பும் நோக்கத்தில் மட்டுமே உருவாக்கப்பட்டதாக கருத்தில் கொண்டால் இனிது. ஔவையின் தனிப்பாடலில் எளிய வகையில் சொற்கள் அமைக்கப்பட்டு அறக் கருத்துக்கள் அனைவரையும் சென்றடையும் வண்ணம் அனைவருக்கும் புரியும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது. அதனால் தான் என்னவோ பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலேயே ஔவையின் பாடல்களை வைத்து விடுகிறார்கள். ஔவையின் தனிப்பாடல்களை படிக்கும்போது அவரவர் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப மாறுபட்ட உணர்வுகள் ஏற்படுகின்றன. இப்பாடல்கள் படிக்க படிக்க பன்முக சுவையினை நல்குவதில் ஐயமில்லை.
பல்வேறு வகையான தனிப்பாடல் திரட்டு பற்றிய செய்திகளையும் ஔவைக்கும் கம்பனுக்கும் இடையில் ஏற்பட்ட சொற்போர் குறித்தும் ‘’அவ்வையின் தனிப்பாடல்கள் குறித்த இரண்டு கட்டுரைகள்’’ கூறுகிறது. ஒட்டக்கூத்தர், புகழேந்தி, கம்பன் ஆகியோரின் பாடல்கள் தனிப்பாடலில் இடம்பெற்றிருப்பது குறித்த செய்தி சிறப்பானதாக தெரிகிறது. அவ்வையின் பாடல் என்றாலே எனக்கு முதலில் நினைவுக்கு வருவது அவர் எழுதிய ஆத்திச்சூடி தான். ஆத்திச்சூடியில் ஔவை கல்வி கற்கும் மாணவர்களுக்கு தேவையான அனைத்துவித நல் ஒழுக்கத்தையும் எளிய நடையில் கூறியிருக்கிறார். கம்பீரமான நடைக்கும் சீரிய பேச்சுகளுக்கும் சொந்தக்காரரான பாரதி, ஔவையார் ஆத்திச்சூடியில் சொல்லப்படுகின்ற கருத்துக்களை எல்லாம் மறுத்துரைக்கும் நோக்கில் புதிய ஆத்திசூடி எழுதினார். பாரதி ஔவையின் ஆத்திசூடியில் உள்ள கருத்துக்களை எல்லாம் அப்படியே ஏற்கவில்லை. சான்றாக ஔவை கோபம் தணிக்கப்பட வேண்டும் என்கிறார். பாரதியோ உன்னிடம் கோபம் கொள்பவரிடம் கோபம் கொள் என்று மிடுக்காக கூறுகிறார்.
இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு பிறகு பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என ஔவைக்கு அன்றைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத இச்சமுகத்தில் கோபம் கொள்பவரிடம் அமைதியாக சென்றால் இன்னும் பலவீனமாக எண்ணி இன்றைக்கு நடக்கின்ற கொடூரத்தைவிட இன்னும் இரண்டு மடங்காக நடந்தால் அதனைத் தாங்கும் சக்தி பெண் சமூகத்திற்கே இல்லை. பாரதியும் பெண்களுக்கு விடுதலை வேண்டும், கல்வி வேண்டும். அவர்களின் வாழ்க்கையை அவர்கள் வாழ வேண்டும் என்றெல்லாம் எண்ணி தன்னுடைய படைப்புகளை படைத்திருக்கிறார். ஆனால், பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்ற ஒற்றை சொல்லை மட்டும் விட்டுவிட்டு சென்றது ஏனோ? இக்காலகட்டத்தில் ஔவை இருந்திருந்தால் அவரின் படைப்பு எவ்வாறு இருந்திருக்கும் என்று சற்று எண்ணித்தான் பாருங்களேன். அன்பற்ற ஒருவனுக்கு மான் போன்ற ஒரு பெண்ணை திருமண பந்தத்தில் சேர்த்து வைத்த பிரம்மனின் நான்கு தலைகளையும் கிள்ளி எறிய வேண்டும் என்று ஔவை தன் பாடலில் ஆவேசம் கொள்கிறாள். இதற்கே இப்படி ஆவேசப்படும் ஔவை இன்று சிறு பெண் பிள்ளைகளுக்கு நடக்கும் அவலங்களை எல்லாம் அறிந்திருந்தால் என்ன செய்திருப்பாளோ? எனக்குத் தெரிந்து "கொடிது கொடிது பெண்ணாய் பிறத்தல் கொடிது" "அரிது அரிது ஆடவர் ஒழுக்கம் பெறுதல் அரிது" என்று ஔவை பாடியிருப்பாளோ என்னவோ? அவ்வையின் ஆவேசத்திற்கு இவ்வரிகள் எல்லாம் ஒரு பொருட்டே இல்லாமல் கூட இருக்கலாம்.
இப்பொழுது
தான் ஔவை பற்றிய சிறப்புகளை
எடுத்துக் கூறினேன்.
அடுத்த நொடியே என் கண்ணில்
பட்ட வரிகள் இவை.
"கூசி நிலை நில்லாக் குலக்கொடியும்
கூசிய
வேசியும் கெடும்" .
இவ்வரியினை
இசையைப் போல என்னாலும் ஏற்றுக்கொள்ள
இயலவில்லை. பல அற கருத்துக்களை
கூறிய ஔவையா இதை சொன்னார்.
மனம் ஏனோ இதை ஏற்க மறுக்கிறது. அக்காலத்தில்
பல்வேறு ஔவைகள் இருந்தார்கள். எனவே அந்த அவ்வைகளின்
யாரோ ஒருவர் இதை எழுதியிருக்கக்கூடும் என்று மனம் சொல்கிறது. ஆனால் அறிவுக்கு தெரிகிறது
இதனையும் ஔவை என்ற பெயரில்
தான் எழுதியுள்ளார்.
என்ன சொல்வது
என்று தெரியவில்லை.
அவள் இதனை எழுதும்போது எந்நிலையில்
இருந்தாள் என்று அவளின் மன எண்ணங்கள் எவ்வாறு
இருந்தன என்று அறிய இயலவில்லை.
ஔவையின் ஆத்திச்சூடிக்கு அயோத்திதாசர் பண்டிதரும் ரா.ராகவையங்காரும் உரையெழுதி உள்ளனர். இவர்களின் உரையினை ஆராயும் நோக்கில் இசையின் ‘‘அயோத்திதாச பண்டிதரும் ரா.ராகவையங்காரும்’’ கட்டுரை அமைந்ததுள்ளது. அயோத்திதாசர் உரையில் அவர் ஆத்திசூடியை ஆத்திசூடி என்று அழைப்பதற்கு மாறாக ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நறுந்தொகை ஆகிய மூன்று நூல்களையும் உள்ளடக்கி ‘‘திரிவாசகம்” என்றழைக்கும் செய்தி இசையின் மூலம் கிடைக்கிறது. இதில் வரக்கூடிய ‘‘நறுந்தொகை’’ என்னும் நூலை அதிவீரராம பாண்டியன் எழுதியிருக்கிறார் என்ற செய்தியும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. திரிவாசகம் பெளத்த நெறிகளை உரைக்கும் திரட்டு ஆகும். ஔவை எவ்வித சமயம் சார்ந்த செய்திகளையும் தனது பாடல் வழி அவர் புலப்படுத்தவில்லை என்பதனை நான் முன்னரே எடுத்தியம்பியிருந்தேன். ஏனென்றால், இப்பொழுது அயோத்திதாசர் ‘‘பௌத்த சமயத் திரட்டு’’ என்று திரிவாசகத்தை குறிப்பிடுகிறார். இக்கருத்தினை என்னால் ஏற்க இயலவில்லை பல கருத்துக்களை போதித்த ஔவை ஆத்திசூடியை சமயம் சார்ந்த ஒன்றாக பார்த்திருக்கமாட்டார் என்று நம்பிக்கை கொள்கிறேன். ஔவையினை பௌத்தர்கள் கொண்டாடுவதில் தவறில்லை. அதேசமயம் அங்கு சமயம் சார்ந்த எண்ணங்கள் எழாமல் இருக்குமா? அல்லது சமயத்தைப் பரப்பும் எண்ணம் ஏற்படாமல் தான் இருக்குமா? என்பது எனது கேள்வி. இசை பல்வேறு இடங்களில் அவரது கேள்வியை எழுப்பியிருந்ததாலும் அதற்கு கூறிய விடைகளும் சரியாக இருந்ததாலும் மேற்கூறிய கேள்வியிலிருந்து விடுபட என்னால் இயலவில்லை. எனக்கு தோன்றிய இக்கேள்வி ஏன் இசைக்கு தோன்றுமில்லை என்பது என்னுடைய வருத்தமே தவிர மற்றபடி இக்கட்டுரையில் இசையின் பங்கு என்பது அளப்பரியது. இவர்கள் இருவரின் உரையிலும் இடம்பெறுகின்ற கருத்துகள் ஒன்றுக்கொன்று பொருத்தப்பாடு இருப்பதாக தெரியவில்லை இருவரின் உரைகளில் இருக்கும் கருத்தும் வெவ்வேறு பாதையை வழிவகுப்பதாக அமைந்துள்ளது. ரா.ராகவையங்கார் அவர் பங்கிற்கு அவர் உரையை சிறப்பாக செய்துள்ளார். அதேபோல் அயோத்தியதாசர் பண்டிதரும் அவர் பங்கிற்கு சமயம் சார்ந்து அவர் உரையை சிறப்பாக செய்துள்ளார் என்பது என்னுடைய கருத்து. இவர்கள் இருவரின் உரை சார்ந்த கருத்துகளும் அனைவரும் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. இசை அவர்களின் இக்கட்டுரையை வாசித்த பின் எனக்கு எழுந்த கேள்விகள் எனது அறியாமையின் காரணமாக கூட எழுந்திருக்கலாம். ஆனால் இக்கட்டுரையை வாசிக்கும் பொழுது என் உள்மனதில் இருந்து எழுந்த கேள்விகளே இவை. இக்கட்டுரையை முழுமையாக வாசித்த பின் கவிஞர் ஔவை மீதும் தமிழின் மீதும் மாறா காதல் கொண்டுள்ளது தெரிய வருகிறது.
Comments
Post a Comment