பேதைமை என்பது பொதுச்சொல் -அழகுராஜ் ராமமூர்த்தி

                           பேதைமை என்பது பொதுச்சொல் -அழகுராஜ் ராமமூர்த்தி 

   ‘‘உளன்று உலாவும் மனம்’’ கட்டுரையில் பேதை என்ற சொல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 1955 முதல் 1966 வரை வெளிவந்த ஜெயகாந்தன், கு.அழகிரிசாமி, நா.பார்த்தசாரதி. கி.ராஜநாராயணன் ஆகியோரது கதைகளின் தலைப்புகளிலும் கதைக்குள்ளும் பேதமை பற்றிய கண்ணோட்டங்கள் வெளிப்பட்டிருக்கிறது. பேதை என்ற சொல் பெண்ணை குறிப்பதாயும் பேதமை பண்பைச் சொல்வதாகவும் அமையப்பெற்றுள்ளது. பெண் முதன்மையிடம் பெறும் கதைகளில் பேதை என்ற சொல்லும் சிறுவர்கள் முதன்மையிடம் பெறும் கதைகளில் பேதைமை என்று சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பேதைமை என்ற பொதுச் சொல்லை வைத்து பேதை என்ற வகைப்பாட்டில் அக்குணம் பெண்களுக்குரியதாக வழிந்து திணிக்கப்பட்டிருக்கிறது. ஆளுமை என்பது ஆண்மை ஆனது போன்று பால் சார்ந்த சொல் அரசியல் பின்புலத்தில் இருந்தே பேதை என்ற சொல்லை அணுக வேண்டியிருக்கிறது. பொருள் வயப்பட்டு  பார்த்தால் கதைகளில் வரும் பேதைமைக்கும் வள்ளுவர் கூறும் பேதைமைக்கும் இடையில் முரண் தெரிகிறது.


        1955 ஆகஸ்ட் மாத ‘‘சரஸ்வதி’’ இதழில் ஜெயகாந்தனின் ‘‘பேதைப்பருவம்’’ சிறுகதை வெளியாகியுள்ளது. இந்த கதை மேல்தட்டு இளைஞன் ராஜாவுக்கும் பறைச்சேரியைச் சார்ந்த பன்னிரண்டு வயது மருதாயிக்குமிடையில் நடந்த நிகழ்வை மையமிட்டு எழுதப்பட்டிருக்கிறது. ரகுநாதனின் ‘‘கன்னிகா’’ நாவலில் பறைச்சியை ஏன் தொடக்கூடாது? என்ற கேள்வி பேதையான கமலாவிடம் எழுகிறது. ‘‘பேதைப்பருவம்’’ கதையில் பேதைப்பருவத்திற்கும் மங்கைப் பருவத்திற்கும் இடையில் இருக்கும் மருதாயி நான் பறைச்சி என்னை நீங்கள் தொடலாமா? என்று கேட்கிறாள். இவ்விரு கதைகளும் 50களின் தொடக்கத்தில் வெளியாகியுள்ளது. இதன்வழி பறைச்சியை தொடக்கூடாது என்கிற சமூகக் கற்பிதம் குழந்தைகளிடையே  நடைமுறையிலிருந்தது தெரிய வருகிறது. கதை நடக்கும் இடம் ஆற்றங்கரைப் பகுதி. வாழை திரைப்படம் வெளியானதை தொடர்ந்து சினிமா விகடன் வலையொளி தளத்தில் வெளியான நேர்காணலில் மாரி செல்வராஜ் மற்றும் நிவிதா இடையே நடந்த உரையாடல் இணையத்தில் வைரலானது. அதில் கீழ்நாட்டுக்காரர்கள், மேல்நாட்டுக்காரர்கள் பற்றிய செய்திகள் பேசப்பட்டது. ஆற்றுப்பாசனத்தை ஒட்டி வேளாண் செய்யும் நபர்களை கீழ்நாட்டுக்காரர்களாக  குறிப்பிடுகின்றனர். பேதைப்பருவம் கதையில் மருதாயி குடும்பமும் விவசாயம் செய்யக்கூடிய குடும்பம். ராஜா மற்றும் மருதாணி இடையில் காதல் மலர்ந்து இருவரும் முத்தம் கொடுக்கின்றனர். முத்தம் கொடுத்த மறுநாள் மருதாயிக்கு வயதான நபர் ஒருவருடன் கல்யாணம் நடக்கிறது. அப்போது தூரத்திலிருந்து ராஜாவை பார்த்து சிரிக்கிறாள். ராஜா குற்றவுணர்வுக்கு உள்ளாகிறான். பேதை பருவத்தில் நிகழ்ந்த பால் இச்சை சார்ந்த ஓர் நிகழ்வு மூலம் குற்றவுணர்வடைவதை கதை மையப்படுத்துகிறது. 


 சங்கிலி வீரன்  மற்றும்  கதாபாத்திரங்களுக்கிடையே பெயரை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பகுதிகளில் உரையாடல் நன்கு அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும்,  மருதாயி பற்றிய வர்ணனைகள், கடலை மிட்டாய், முறுக்கு, சாணி போன்றவை கதைப்போக்கிற்கு வலு சேர்க்கிறது.   தின்பண்டங்கள் பற்றிய இடத்தை  பேதைமை வகையில் வைத்துப் பார்க்கலாம் என்றாலும் கூட நினைவுகளின்  குற்றவுணர்வு பேதைமை காலத்தில் செய்த செயல்பாடுகளை உணர்த்துவதே  இக்கதையின் ‘‘பேதைமை’’ பகுதியாக எனக்கு தெரிகிறது. 

      

     1960 மார்ச் மாத ‘‘கலைக்கதிர்’’ இதழில் கு.அழகிரிசாமியின் ‘’பேதமை’’ சிறுகதை வெளியாகியுள்ளது. காக்கா முட்டை திரைப்படத்தின் காட்சிகளை நினைவுபடுத்துவனவாக இருக்கும் இக்கதை ஒன்பது மற்றும் ஆறு வயதுடைய இரண்டு சிறுவர்கள் அடி வாங்குவதிலிருந்து தொடங்குகிறது. இக்கதையின் முடிவு வெளிப்படையாக கதாபாத்திரங்கள் ஒன்றுக்கொன்று சேரும் விதத்தை நேரடியாக சொல்லாதவாறு முடிவு கொடுக்கப்பட்டிருந்தால் கதையின் தன்மை முழுமையான பரிணாமம் அடைந்திருக்கும். இரண்டு சிறுவர்களை பார்வை இழந்த பிச்சைக்காரனின் சோற்றுத்தட்டில் மண்ணள்ளி போட்டதற்காக கடைக்காரன் ஒருவன் அடிக்கிறான். அச்சிறுவர்கள் வாங்கிய அடி திராணிக்கு அதிகப்படியாக இருந்ததால் கதையின் போக்கு சிறுவர்களின் செயலை விசாரணைக்கு உட்படுத்தி அவர்களது பேதைமையைக் காரணம் காட்டுகிறது. ‘‘எல்லோரும் சேர்ந்து அந்தச் சிறுவர்களை வதைக்கத் தயாராக இருந்தபோது, எனக்கு மட்டும் அவர்கள் மீது அனுதாபமும் அன்பும் பிறந்தன. அவர்கள் செய்த பெரிய குற்றம், அவர்களுடைய பெரிய பேதமையைத் தான் எனக்கு எடுத்துக்காட்டியது. ‘பேதைமை’ என்றால் இது சாமானியமான பேதைமையா?  குருடன் சோற்றில் மண் அள்ளிப்போட்டுச் சிரித்த பயங்கரப் பேதைமை. குழந்தைகளே! நீங்கள் இப்படியா வளர வேண்டும்? என்று எனக்குள்ளேயே துயரத்தோடு சொல்லிக் கொண்டேன்’’ என்பதாக சிறுவர்களை அடியில் இருந்து காப்பாற்றியவனின் மனமொழி சொல்கிறது. பேதமை என்பது அறியாமையின் வடிவமாக இருப்பதை பயங்கரமான செயல் ஒன்றை  மாதிரியாகக் கொண்டு அழகிரிசாமி சொல்லியுள்ளார். இதன்வழி அறியாமை பயங்கரமான முறையில் பிறரை பாதித்தாலும் தான் செய்தது தவறு என்கிற உணர்வைத் தராமலேயே இருப்பது முன்வைக்கப்பட்டிருக்கிறது. கொடிய நிலையை துயரநிலையாக அழகிரிசாமி எழுதியுள்ளார். இந்த துயர நிலை அறிதலோடு பார்ப்பவர்களை உடைத்து அறியாமையின் மீது பரிதாபம் கொள்ளச் செய்கிறது. 


       கதையில் வரும் சிறுவர்கள் பார்வை இழந்தவருடைய சோற்றுத்தட்டில் மண்ணள்ளி போடுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று குடும்பத்திற்குள் உள்ள தாய், தந்தை பிரச்சனை, இரண்டாவது தந்தையிடம் நிகழ்த்திய விளையாட்டு மனப்பான்மை. இவற்றில் எதை காரணமாக கொண்டாலும் ஒன்றுக்கொன்று தொடர்பற்று கதை முழுமையாக வேறொரு கோணத்தை நோக்கி சென்றுவிடும். கதையில் உதவுவருபவன் உதவி செய்யும் மன வலிமை முழுமையாக பெறாதவனாக சித்தரிக்கப்படுகிறான். மனம் சார்ந்து உதவ வேண்டும் என்கிற உந்துதல் இருப்பினும் சிறுவர்களின் அழுக்கு நிறைந்த உடலை தொட்டு உதவுவதை சமூகம் எவ்வாறு அணுகும் என்கிற பயமும் சேர்ந்து அவனுக்குள் இருக்கிறது. ஒளியற்ற இருள் பகுதியில் சிறுவனைத் தூக்கிச் செல்வதிலிருந்து மனப்பூர்வமாக இரக்கம் காட்ட வேண்டும் அல்லது உதவி செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருந்தும் இச்சமூகம்  தன்னை எவ்வாறு கருதும் என்கிற இயலாமையே தடையாக இருந்திருக்கிறது. 


     1963க்கு முன் எழுதப்பட்டது என்ற குறிப்புடன் நா.பார்த்தசாரதி எழுதிய ‘‘பேதைமை’’ சிறுகதை கிடைக்கிறது. வெங்கட்ராம ஐயரின் குடும்பத்தைப் பற்றிய இக்கதையில் ராமு தான் பேதைமை கொண்ட சிறுவனாக காணப்படுகிறான். ராமுவின் பிறப்பையொட்டி கதையில் பெயர் குறிப்பிடப்படாத வெங்கட்ராம ஐயரின் மனைவி இறக்கிறாள். அச்சமயத்தில் அவரது மகள் ரங்கு கணவனைப் பிரிந்து மீண்டுமாக பிறந்த வீடு திரும்புகிறாள். ராமு ரங்குவின் வளர்ப்பில் வளர்க்கப்பட்டு கொண்டிருக்கும் ஒரு நாளில் ரங்குவும் இறந்து விடுகிறாள். அந்த இழப்பின் போது ராமு கேட்ட கேள்விகளும் செய்த சேட்டைகளுமே கதைக்கு பேதமை என்று தலைப்புச் சூட்ட காரணமாகின்றன. அக்கா இறக்கவில்லை என்று வாதாடும் ராமுவும் இறந்தது தெரிந்த பின் இறப்பு என்றால் என்ன என்ற கேள்வியோடு திரியும் ராமுவும்  தான் இக்கதையின் மைய இழை. இறப்பின் துக்கத்தை உணர முடியாத அளவு பேதைமை கொண்ட ராமுவை பார்த்தவுடன் நாமும் சிறு குழந்தையாகவே இருந்திருக்கலாமோ என்ற சிந்தனையை கதைக்குள் எந்த கதாபாத்திரமும் உணரவில்லை. ஆனால் நா.பார்த்தசாரதி தனது சொந்தக் குரலில் அதனை கதைக்குள் நின்று விளக்குகிறார். கதையில் உரையாடலும் எழுத்தாளரின் சொந்தக்குரலும்  ஓர்மைபட முயன்று  விலகியிருப்பது தெளிவாகத் தெரிகிறது.


     சாவு என்றால் என்ன என்று ராமுவும் கோவிந்தும் உரையாடும் பகுதி ஓரளவு கைகூடி வந்திருக்கிறது. கிணற்றில் விழுந்தால் சாகலாம் என்ற கோவிந்தின் பரிந்துரைப்படி ராமு கிணற்றில் விழுந்து இறந்து அக்காவை பார்க்கச் செல்ல எத்தனிக்கிறான். இந்த இடத்தில் கிணற்றில் விழுந்தால் சாகலாம். செத்தால் உடலை தீயிலிடுவார்கள். செத்த பிறகு முன் செத்தவர்களை பார்க்க முடியும் முதலானவை ராமு தரப்பு உண்மைகளாக நம்பப்படுகிறது. பேதைமை நிரம்பிய போது சொல்லப்படும் கருத்துகள் கனமேறி  ஆழப் பதிகிறது என்கிற உளவியலை  நா.பார்த்தசாரதி முன் வைக்கிறார். ‘‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா’’ என்ற பழமொழி ஒன்று உண்டு. இந்த பழமொழிக்கு வழங்கப்படும் அர்த்தங்களில் ஒன்று ஐந்து வயதில் செய்ய முடியாதது ஐம்பது வயதில் செய்ய முடியுமா என்பதாகும். இந்த உட்பொருளையே கதை கூறுகிறது. ‘‘குழந்தையுள்ளம் பேதைமை நிறைந்தது. நன்மையோ, தீமையோ கேட்பனவெல்லாமே அங்கு நம்பிக்கை உரிய உண்மைகளாகப் பதிந்து விடுகின்றன’’ என்ற நா.பாவின் வரிகளில் கருத்து இருக்கிறது. ஆனால் கதைக்குள் இதன் பொருத்தப்பாட்டை இசைவாக உணர முடியவில்லை. எனினும் இக்கருத்து ‘‘பசுமரத்தாணி’’யை நினைவுபடுத்துவதாகவே இருக்கிறது. பேதைமை காலத்தில் சொல்லப்படும் கருத்துக்களும் பார்வைக்கு கிடைக்கும் பண்பாட்டுச் செயல்பாடுகளும் குழந்தைகளிடம் செலுத்தக்கூடிய தாக்கத்தை பேதைமை கதை பேசுபொருளாக கொண்டிருக்கிறது.


     1966 ஜூலை மாத ‘‘சாந்தி’’ இதழில் வெளியான கி.ராஜநாராயணனின் ‘’பேதை’’ அவரது சிறுகதைப் போக்கை பிரதிபலிக்கக்கூடிய முக்கியமான கதையாக எனக்குத் தெரிகிறது. கி.ராவின் சிறுகதை ஆற்றலை அடையாளப்படுத்தும் கதைகளில் ‘‘பேதை’’யும் ஒன்று. வரலாறு, வட்டாரப் பண்பாடு ஆகியன இக்கதையில்  தென்படுகிறது. கு அழகிரிசாமி பேதைமை கதையில் செய்ய தவறியதை கி.ராஜநாராயணன்  பேதை கதையில் செய்திருக்கிறார். பேச்சி என்ற பெண் யாரால் கர்ப்பம் அடைகிறாள் என்பது கதைக்குள் எங்கும் நேரடியாக சொல்லப்படதிருப்பது கதையை பரிணாமமடைய செய்கிறது.  இரண்டு கதைக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. ‘‘பேதைமை’’யில் சிறுவர்களை சுற்றி இருப்பவர்கள் சூடு வைக்க வேண்டும் முதலான பல்வேறு தண்டனைகளை  வசையாக உதிர்ப்பது போல ‘‘பேதை’’யில் பேச்சியை உயிரோடு புதைத்து விடுவோம் கண்டம் கண்டமாக நறுக்கினாலும் மனசு ஆறாது என்று திட்டுகின்றனர். மேலும் ‘‘பேதைமை’’யில் சிறுவர்கள் செய்த தவறுக்காக அடி வாங்குவது போல ‘‘பேதை’’யில் தன்னை புணர்ந்தவர் இவர் தான் என்ற சொல்லத் தெரியாத காரணத்திற்காக பேச்சி அடி வாங்குகிறாள். இரண்டு கதைகளிலும் வறுமை வருகிறது. ‘‘பேதைமை’’யில் குடிசையும் ‘‘பேதை’’யில் வலசை பெண்களும் வறுமைக்கான குறியீடுகள் ஆகின்றன. ‘‘பேதைமை’’யில் சிறுவர்களை அடிக்க நினைத்தவன் அவர்கள் அடி வாங்குவதை பார்த்து உதவுவது போல ‘‘பேதை’’யில் பேச்சியை திட்டியவர்கள் அவளது நிறைமாத கர்ப்ப வயிற்றைப் பார்த்து இரக்கம் கொள்கிறார்கள். உடங்காடு, சீனி கிழங்கு, பருத்தி, வலசை பெண்கள், மேகாடு, இலஞ்சி, செங்கோட்டை, மங்கம்மா சாலை போன்றவை கதை நிகழும் பின்புலத்தைச் சொல்கின்றன. பேச்சி மற்றும் பெண்கள் பற்றிய வர்ணனையும் டிப்தீரியா நோயினால் குழந்தை இறப்பதும் ‘‘பேதை’’யில் முக்கியப் பகுதியாகிறது. ஜெயகாந்தனின்  ‘‘பேதைப்பருவம்’’ கதையில்  மருதாயி பற்றிய வர்ணனைகளும் இவ்வகைப்பட்டதே.  இரண்டு கதைகளிலும்  அடித்தட்டு பெண்கள் வர்ணிக்கப்படுகின்றனர்.


   பிற வலசை பெண்களைத் தனியாகவும் பேச்சியைத் தனியாகவும் கி.ரா வர்ணிக்கிறார். பேச்சியின் முலைகள் கதையின் பிரதான அங்கமாகின்றன. வெளியூரிலிருந்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பம் தரித்து குழந்தை பெறுவதும் அந்த குழந்தை இறந்ததை நம்பாது அடம்பிடித்து புதைத்த குழந்தையைத் தோண்டி எடுத்து சுடுகாட்டில் வெந்த பிணத்தைத் தின்று உடன்காட்டில் தூக்கமின்றி அலைந்து திரிவதும் பேதைமையாக கதையில் வருகிறது. அறியாமையை கடந்து மனமுதிர்வுறாத தன்மையை பேதைமையாக இக்கதை சுட்டுகிறது.


 உடன்காட்டில் தூக்கமில்லாதிருக்கும் காட்சி கதைகளில் தனித்து பார்க்கத்தக்கதாக தெரிகிறது. பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவலில் சந்தனபாண்டி உடைமர.த்தில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் பகுதியில் அவன் தூக்கமற்றவனாகவே காணப்படுவான் வேப்பமர அடியில் மட்டும் பேச்சுக்கு நல்ல தூக்கம் வருவதாக சொல்லப்படுகிறது. உடைமரத்துக்கும் தூக்கத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்புகளை தனியே ஆராயலாம். மீண்டும் கர்ப்பம்தரித்து நிர்வாணமாக கத்திக் கொண்டு பேச்சி ஊரை வலம் வரும் இடம் புதிர்த்தன்மையுடன் நின்று தொன்மங்களை நினைவுபடுத்துகிறது. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் நிர்வாணம் என்றாலே ஜெயகாந்தனின் ‘‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’’ நாவலில் வரும் இதே பேதமை தன்மை கொண்ட பேபியே நினைவுக்கு வருகிறாள்.


  பேதைமையின் பல பொருள் பயன்பாட்டை இந்நான்கு கதைகளின் வாயிலாக அறியமுடிகிறது. முன்வைக்கக்கூடிய முறைகளிலும் அர்த்தங்களிலும் மாறுபாடு இருந்தாலும் கூட அவையனைத்தும் உணர்த்தக்கூடிய கருத்து ஒன்றுக்கொன்று  பொருந்தி போவதாகவே இருக்கிறது. 


Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு