எடுத்தாளப்பட்ட பகுதி - தமிழ் எழுத்துக்கள் - ஸ்ரீமான் வ.உ.சிதம்பரம்பிள்ளையவர்கள் எழுதியது
எடுத்தாளப்பட்ட பகுதி
தமிழ் எழுத்துக்கள்
(ஸ்ரீமான் வ.உ.சிதம்பரம்பிள்ளையவர்கள் எழுதியது)
சென்ற சில வருஷங்களாகச் சில அறிவாளிகள் நம் தமிழ்ப் பாஷையில் சில எழுத்துக்கள் குறைவாயிருக்கின்றனவென்றும் அக்குறைவை நிவிர்த்திக்கத்தக்க பிற பாஷை எழுத்துக்களேனும் பிறசில குறிகளேனும் நம் தமிழ்ப்பாஷை எழுத்துக்களோடு சேர்க்கப்பட வேண்டுமென்றும் கூறிவருகின்றார்கள். ஆனால், அவர்களில் ஒருவரும் அவை சேர்க்கப்படுதல் நம் தமிழ்ப்பாஷைக்காவது அதன் வளர்ச்சிக்காவது இன்றியமையாததென்று காட்டத்தக்க காரணம் ஒன்றையும் இதுகாறும் கூறிலர். இச்சேர்க்கை நம் தமிழ்ப்பாஷைக்கு இன்றியமையாததென்று காட்டக் கருதி நமது நண்பர் ஸ்ரீ, சி. சுப்பிரமணிய பாரதியவர்கள் சென்ற ஆடி மாதத்தில் வெளிவந்த நமது "ஞானபாநு"வில் "தமிழில் எழுத்துக்குறை' என்னும் தலைப்பெயரோடு நிரூபம் வரைந்துள்ளார்கள். அந்நிரூபத்தில் மேற்கண்ட சேர்க்கையைச் செய்ய வேண்டுமென்பதற்காகக் கூறப்பட்டுள்ள காரணம் ஒன்றே. அஃதாவது, பிறபாஷைகளின் மனிதப் பெயர், நகரப்பெயர் முதலியவற்றிற் சிலவற்றை அப்பாஷையாளர் உச்சரிக்கும் சப்தத்தில் நாம் உச்சரிக்குமாறு செய்யத்தக்க சில எழுத்துக்கள் நமது தமிழ்ப் பாஷையில் இல்லையென்பதே நமது நண்பரவர்கள் தமது நிரூபத்தின் ரு-வது பகுதியில் "ஸம்ஸ்க்ருதச் சொற்களை ஸம்ஸ்க்ருத வழக்கப்படி நாம் உச்சரிக்க வேண்டிய அவசியமில்லையாதலால், நமக்கு அந்த எழுத்துக்கள் வேண்டுவதில்லையென்று சிலர் ஆக்ஷேபிக்கலாம். சரி - நியாயமென்று வைத்துக்கொள்வோம்" என்று கூறுகின்றார்கள். அச்சிலர் பிறபாஷைகளின் மனிதப்பெயர், நகரப்பெயர், முதலியவற்றையும் அவ்வப்பாஷைகளின் வழக்கப்படி நாம் உச்சரிக்கவேண்டிய "அவசியமில்லையாதலால், நமக்கு அந்த எழுத்துக்கள் வேண்டுவதில்லையென்று கூறுகின்றனர். இக்கூற்றையும் நமது நண்பரவர்கள் "சரி, நியாயமென்று வைத்துக் கொள்வோம்" என்று அங்கீகரிக்கக் கடமைப்பட்டுள்ளார்கள், முந்திய ஆக்ஷேபமும் பிந்திய கூற்றும் வேறல்லவாகலான். அவ்வாறு நபது நண்பரவர்கள் அங்கீகரிப்பார்களாயின் நமது தமிழ்ப்பாஷை எழுத்துக்களோடு பிற சில பாஷை எழுத்துக்களையேனும் பிறசில குறிகளையேனும் சேர்த்தல் இன்றியமையாததென்பதைக் காட்டத்தக்க காரணம் ஒன்றும் நமது நண்பரவர்கள் நிரூபத்தில் கூறப்படவில்லையென்பது அதனைப் பார்த்த மாத்திரத்தில் விளங்கும். அவ்வின்றியமையாமையைக் காட்டத்தக்க காரணம் ஒன்றேனும் நமது நண்பரவர்களாலாவது அவர்களைப் போன்ற வேறு பாஷா திருத்தக்காரர்களாலாவது கூறப்படுமாயின் அப்போது நமது தமிழ்ப்பாஷை எழுத்துக்களோடு பிறசில பாஷை எழுத்துக்களைச் சேர்ப்பதா பிற சில குறிகளைச் சேர்ப்பதா என்னும் விஷயத்தைப் பற்றிச் சிந்திக்கவும் தீர்மானிக்கவும் நாம் முன் வரக்கடமைப்பட்டுள்ளோம். நிற்க.
"சுதேசமித்திரனைச் சென்ற 15 வருஷங்களாகப் படித்து வருகிற ஓர் அய்யங்கார் நமது நிதானக் கட்சித் தலைவருடைய 'Gokhale' என்ற பெயரை 'கோக்களே' என்று உச்சரித்தது நமது நண்பரவர்களுக்குத் தப்பாகத் தோன்றியதும், நமது ஸ்ரீ அரவிந்தரவர்களின் தமிழ் உபாத்தியாயர் ஒரு வங்காளியின் Birendranath Datta
Gupta என்ற பெயரைத் தமிஷர் 'பிரேந்திரநாத தத்த குப்தர்' என்று தான் வாசிப்பரென்று கூறியது நமது அரவிந்தரவர்களுக்குச் சிரிப்பை உண்டுபண்ணியதும் நமது சமஸ்கிருதப் பண்டிதர்களும் வங்காளிப் பண்டிதர்களும் 'பழனி' " கிழவி" என்னும் தமிழ்ச் சொற்களை 'பளனி' 'கிளவி' எனவும், 'அறம்' 'மறம்' என்னும் தமிழ்ச்சொற்களை 'அரம்' 'மரம்' எனவும், 'மன்றம்' 'கன்று' என்னும் தமிழ்ச் சொற்களை 'மந்ரம்' 'கந்ரு' எனவும், 'Forlces' 'Fourth' என்னும் ஆங்கிலச்சொற்களை போர்ப்ஸ், போர்த் எனவும் 'Zeal' 'Zenith' என்னும் ஆங்கிலச் சொற்களை 'ஜீல்" 'ஜெனித்' எனவும் உச்சரிக்குங்கால் நாம் தப்பென்று கூறுவதையும் நமது ஆங்கில நண்பர்கள் சிரிப்பதையும் போன்றனவேயன்றி வேறல்ல. தெய்வபாஷையென்றும் பூரணபாஷையென்றும் பல பாஷைகளுக்கும்
தாய்ப்பாஷையென்றும் சொல்லப்படுகிற ஸம்ஸ்கிருத பாஷை எழுத்துக்களோடும் பல புதுமைகளையும்
திருத்தங்களையுங் கொண்டுள்ள பாஷையென்று சொல்லப்படுகிற வங்காளிப் பாஷை எழுத்துக்களோடும் ழ, ற, ன, F, Z என்னும் எழுத்துக்களையாவது அவற்றின் ஒலிகளைக் குறிக்குங் குறிகளையாவது சேர்ப்பதற்கு நமது நண்பரவர்களும் அரவிந்தரவர்களும் முயற்சித்து வெற்றி பெறுவார்களாயின் அவர்கள் நமது தமிழ் மக்களுக்கு ஒப்பற்ற வழி காட்டிகளாவார்கள்; பின்னர் நமது தமிழ்மக்கள் அவர் களைப் பின்பற்றத் துணிவார்கள். இதுகாறும் தமிழ்ப்பாஷை எழுத்துக்களில் குறையுளது அல்லது தமிழ்ப்பாஷையில் குறையுளது என்று கூறியவர்களில் ஒருவரும் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பூரணமாகக் கற்றுணர்ந்தவராகவாவது சமஸ்கிருத சம்பந்தமில்லாதவராகவாவது சம்ஸ்கிருத பாஷையில் மேற்சொல்லிய திருத்தங்களையோ வேறு திருத்தங்களையோ செய்ய வேண்டுமென்று கூறியவராகவாவது காணப்படவில்லையென்றும், அவர்கள் நம் தமிழ்ப்பாஷையைத் திருத்த முற்படுகின்றார்களோ வருத்த முற்படுகின்றார்களோ என்றும் நம் தமிழ் மக்களிற் சிலர் ஐயமுறுகின்றனர். அவருடைய அவ்வையத்தை நிவிர்த்திப்பதற்காகவாவது நம் தமிழ்ப் பாஷையில் திருத்தம் செய்யவேண்டுமென்று கூற முன்வருபவர்கள் தமிழ் இலக்கணங்களுக்கெல்லாம் மூலமென்று சொல்லப்படத் தக்கதாயுள்ள தொல்காப்பியம் ஒன்றையும் தமிழ் இலக்கியங்களுளெல்லாம் சிறந்தவையென்று சொல்லப்படத்தக்கனவாயுள்ள 'சீவக சிந்தாமணி 'சிலப்பதிகாரம்' 'மணிமேகலை" "திருக்குறள்' 'கலிங்கத்துப்பரணி' 'கலித்தொகை' 'திருக்கோவையார்' முதலியவற்றில் ஒரு சிலவற்றையுமாவது பூரணமாகக் கற்கவேண்டுவது இன்றிமையாதது. இது நிற்க.
ஒரு பாஷைச் சொற்களை அப்பாஷை எழுத்துக்களாலேயே எழுதப்படுதல் நன்றென்றும் பிறபாஷை எழுத்துக்களால் எழுதப்படுதல் தீதென்றும் சில அறிஞர் கூறுகின் றனர். அவ்வாறு அவர் கூறுவதற்குரிய காரணங்களிலொன்று ஒரு பாஷைச் சொற்கள் மற்றொரு பாஷை எழுத்துக்களால் எழுதப்படுமானால் நாளடைவில் உலகிலுள்ள பல பாஷைச்சொற்களும் பிறபாஷைச் சொற்களோடு கலந்து எவையெவை என்னென்ன பாஷைச் சொற்களென்று தெரியாமற்போகுமென்பது. மற்றொன்று ஒவ்வொரு பாஷைக்கும் புதிது புதிதாக இலக்கணங்களும் அகராதிகளும் எழுத நேருமென்பது. இன்னொன்று ஒவ்வொருபாஷை அகராதியும் இலக்கணமும் உலகத்திலுள்ள பல பாஷைகளின் பல சொற்களையும் கொள்ள நேருவதுடன் பல பாஷைகளில் பலவாறு உச்சரிக்கப்படும் சொற்களெல்லாம் பலமுறை எழுதப்பெற நேருமென்பது. இன்னுமொன்று கடைசியாக உலகத்திலுள்ள சகல பாஷைகளின் சகல சொற்களையும் கொண்டுள்ள அகராதிகளும் இலக்கணங்களும் ஒவ்வொரு பாஷையிலும் எழுதப்படவும் அவற்றை ஒருவரும் கற்க முடியாமற் போகவும் நேருமென்பது. வேறு சில அறிஞர் பல பாஷைச் சொற்கள் பல சுவைப் பொருள்களுக்கு நிகராமெனவும், சிலர் சில சுவைப் பொருள்களை விரும்பாததுபோல சில பாஷையினர் பிற சில பாஷைச் சொற்களை விரும்பாரெனவும், சில சுவைப் பொருள்களைச் சிலர் முழுப் பொருள்களாகவும் சிலர் பொடிகளாகவும் சிலர் திராவகங்களாகவும் உபயோகிக்க விரும்புவதுபோல சில பாஷைச்சொற்களைச் சிலப்பாஷையினர் முழுச் சொற்களாகவும் சில பாஷையினர் சிதை சொற்களாகவும் சிலபாஷையினர் முற்றுமுரு மாற்றப்பட்ட சொற்களாகவும் உபயோகிக்க விரும்புவரெனவும், பல் பாஷைச் சொற்களையும் பல பாஷையினரும் எடுத்தாள வேண்டுமென்பது பல சுவைப் பொருள்களையும் பல மனிதரும் உபயோகிக்க வேண்டுமென்பதை ஒக்குமெனவும், பிற பாஷைச் சொற்களை முழுச்சொற்களாகவே ஒரு பாஷையினர் எடுத்தாளவேண்டுமென்பது சில சுவைப் பொருள்களை முழுப் பொருள்களாகவே எல்லோரும் உபயோகிக்க வேண்டுமென்பதை நிகர்க்குமெனவும், ஒவ்வொருவரும் அவரவர் இஷ்டப்படி (பிறரை வருத்தாதவாறு) நினைக்கவும் பேசவும் செய்யவும் விடுதலே சுதந்தர இலக்கணமென்பது போல ஒவ்வொரு பாஷையாசிரியரும் விதித்துள்ளபடியே அவ்வப்பாஷையினர் பிறபாஷைச் சொற்களை உபயோகித்துக் கொள்ளுமாறு விடுதலே சுதந்தர இலக்கணமெனவும் கூறுகின்றனர். இரு வேறு பாஷையினர் அவ்விருவருமறிந்த ஒரு பாஷை மூலமாகவே ஒருவரோடொருவர் சம்பாக்ஷிப்பராதலால் ஒரு பாஷையின் சொற்களை அப்பாஷையினர் உச்சரிப்பதுபோல மற்றொருபாஷையினர் உச்சரித்தலின்றியமையாத தன்றென்பர் வேறு சில அறிஞர். உலகத்திலுள்ள சகல பாஷைகளின் சகல சப்தங்களையும் தெரிந்தெடுத்து எந்தெந்தப் பாஷையில் எந்தெந்த சப்தங்களில்லையோ அந்தந்த சப்தங்களைக் குறிப்பதற்குச் சில எழுத்துக்கள் அல்லது குறிகள் ஏற்படுத்தி அவற்றை அந்நியபாஷையினரோடு எவ்வித சம்பந்தமாவது வைத்துக்கொள்ள விரும்புகின்றவர் மாத்திரம் கற்றல் ஆவசியகமென்பர் சிலர். அவ்வாறு அந்நிய பாஷைசப்தங்களை எடுத்தாள விரும்புவோர் அவ்வச்சப்தங்களைக் குறிக்கும் அவ்வப்பாஷை எழுத்துக்களையே எடுத்தாளுதல் நன்மையென்றும் அவற்றிற்குப் புதிய குறிகள் ஏற்படுத்துதல் தீமையென்றும் கூறுவர் வேறு சிலர். நம் தமிழ்ப்புலவரோ தமது இனிய பாஷையானது யாவராலும் எளிதாகக் கற்கப்படத்தக்கவாறு முப்பது எழுத்துக்களுக்குள் அமைந்திருக்கின்றதென்றும், வேறு பாஷை எழுத்துக்களை இதன் எழுத்துக்களோடு சேர்த்து இதன் எழுத்தெண்ணிக்கையை அதிகமாக்கி இதனைக் கற்பதற்குக் கஷ்டமடையுமாறு செய்தல் கூடாதென்றும், அந்நியபாஷையினரோடு சம்பந்தம் வைத்துக்கொள்ள விரும்பும் அரசர் வணிகர் முதலியோர் மாத்திரம் மேற்குறித்தவாறு தமிழ்ப்பாஷையில் இல்லாத பிற பாஷைச் சப்தங்களைக்குறிக்கும் அவ்வப்பாஷை எழுத்துக்களைக் கற்றாள வேண்டுமென்றும் கூறுகின்றனர். இப்புலவரிற் சிலர் றா,றோ,னா,னோ, என்னும் எழுத்துக்களும் முறையே றா, றோ,னா, னோ, என்று எழுதப்பட்டுத் தமிழ்ப்பாஷையைக் கற்றாளுதலை இன்னும் எளிதாக்கவேண்டுமென்று விரும்புகின்றனர். இதுகாறும் கூறப்பட்டுள்ளவற்றையும் இவைபோன்ற பிறவற்றையும் நமது நண்பரவர்கள் சிந்தித்துத், தமிழ்ப்பாஷை எழுத்துக்களிற் பிறபாஷை எழுத்துக்களையோ அவற்றின் சப்தத்தைக் கொடுக்கும் குறிகளையோ சேர்ப்பதும், தமிழ்நாட்டுக் கிராமங்களில் உழவுத் தொழில் செய்து ஊரைவிட்டு வெளியேறாதிருக்கும் தமிழ்மக்களும் பிற பாஷையினரின் சம்பந்தம் வேண்டாத தமிழ்மக்களும் அவற்றைக் கற்க வேண்டுவதும் ஆவசியகம் தானா என்பதைத் தீர்மானித்து அதனைத் தக்க காரணங்களோடு நமது "ஞானபாநு" மூலமாக வெளியிடுவார்களாக.
-ஞானபாநு, செப்டம்பர், 1915; தொகுதி-3, பகுதி -6
Comments
Post a Comment