எடுத்தாளப்பட்ட பகுதி பாரதி வாழ்ந்த பாண்டி -விந்தன்

 

எடுத்தாளப்பட்ட பகுதி

பாரதி வாழ்ந்த பாண்டி -விந்தன்

    துரியோதனன், துச்சாதனன் ஆகியோரை எதிர்த்துப் பாரதப் போர் நடத்தினார்கள் அர்ச்சுனன், வீமன் ஆகியோர். அதே பாரதப் போரைப் பிரெஞ்சுக்காரனையும் பிரிட்டிஷ்காரனையும் எதிர்த்து நடத்தினான் பாரதி.

    எங்கே? தனக்குப் புகலிடம் தந்து உயர்ந்த ‘புதுவையில்'

   அந்தப் போரில் தன்னையே அர்ச்சுனனாகப் பாவித்துக் கொண்ட பாரதி, ரிக்ஷாக்காரனைப் பார்த்தனாக்கினான், அவன் இழுக்கும் ரிக்ஷாவை ரதமாக்கினான்.

   அந்த ரதத்தில் முறுக்கிவிட்ட மீசையுடன் ஏறி அமர்ந்த பாரதி, "பார்த்தா, ஓட்டடா ரதத்தை'' என்றான்.

   ரதம் அசல் ரதத்தைப் போலவே கடகடவென்று ஒலித்துக் கொண்டே ஓடிற்று. காரணம் வேறொன்றுமில்லை, அப்போது ரிக்ஷா சக்கரங்களில் ரப்பர் டயர் பொருத்தப்படாமல் இருந்தது தான்!

   ரதம் எங்கே ஓடிற்று? குருட்சேத்திரத்தில் ஓடவில்லை, பாண்டி வீதிகளிலே ஓடிற்று. அதனாலென்ன, அதையே போர்க்களமாகக் கொண்டுவிட்டான் பாரதி.

"வில்லினை எடடா, வில்லினை எடடா -அந்தப்

                                     புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா!"

    பாடியவன் பார்த்தனான ரிக்ஷாக்காரன் அல்ல- அவன் எப்படிப் பாடுவான்? தன்னையே பார்த்தனாகவும் பாவித்துக்கொண்டு பாரதியே பாடினான். ஆனால் அவன் கையில் அப்போது வில்லும் இல்லை, அம்பும் இல்லை, இருந்தவை பேப்பரும் பேனாவுமே அவற்றை வைத்துக் கொண்டு அவன் நடத்திய பாரதப்போர் ஜனப் பிரசித்தம், சரித்திரப் பிரசித்தம், ஜகத் பிரசித்தம்!

    அத்தகைய மாவீரனுக்கு, மா கவிஞனுக்குப் படை திரட்டிக் கொடுத்த பாண்டியிலே நான் கால் எடுத்து வைக்கிறேன். என் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது, ஆறி அடங்கக்கூடிய நிலைக்கு வந்துவிட்ட என் ரத்தத்தில் சூடேறுகிறது, அங்கங்கே நரை தட்டிப் போன ரோமங்கள் கூடக் குத்திட்டு நிற்கின்றன. தாழ்ந்த தலை நிமிர்கிறது, ஒடுங்கிப்போன கண்கள் ஒளி வீசுகின்றன, மீசை துடிப்பதற்குப் பதிலாக அதை எடுத்துவிட்ட மேலுதடுகள் துடிக் கின்றன, கூன் விழுந்துபோன முதுகு பின்னால் சரிந்து, மார்பை முன்னால் தள்ளி வைக்கிறது, கை வீச்சில் ஒரு கம்பீரம். நடையில் ஒரு மிடுக்கு -ஆகா, இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் பாரதி நினைவில் இப்படி ஒரு உத்வேகமா'

   கடற்கரைச் சாலை வழியே ஏறுநடை போடுகிறேன். இந்திய விடுதலைக்காக வெளிநாட்டினரின் உதவி கோரிக் கடல் கடந்து சென்ற வங்க வீரன் சுபாஷ் சந்திரபோஸுக்கு முன்னால், அதே உதவிக்காகப் புதுவையிலிருந்து கடல் கடந்து சென்ற தமிழ் வீரன், பாரதியின் தோழன் மாடசாமியின் நினைவு வருகிறது. 'போனவன் போனவன்தான், அங்கிருந்து திரும்பவேயில்லை' என்பதை நினைத்ததும் என் கண்கள் கலங்குகின்றன. துடைத்துக்கொண்டு மேலே நடக்கிறேன்.

   மணக்குட விநாயகர் கோயில் கண்ணில் படுகிறது. "வாழ்க புதுவை மணக்குடத்து வள்ளல் பாதமணி மலரே''" என்ற பாரதியின் பாடலாலேயே அவரை வழிபட்டுவிட்டு, ஈசுவரன் கோயில் வீதியின் பக்கம் திரும்புகிறேன்

''அன்றொருநாள் புதுவை நகர்தனிலே

                                             கீர்த்தி அடைக்கலஞ்சேர்

                                            ஈசுவரன் தர்மராஜா என்றபெயர்

                                           வீதியிலோர் சிறிய வீட்டில்…’’

      என்று தான் இருந்த வீட்டைப் பற்றிப் பாரதி பாடினானல்லவா?- அந்த வீட்டைப் பார்க்கிறேன். 'பாரதி இருந்தான் என்ற பெருமையைத் தவிர வேறொரு பெருமையும் எனக்கு இல்லை' என்பதுபோல் அது இப்போது பாழடைந்து கிடக்கிறது. தற்போது பாண்டிச்சேரி முதலமைச்சராயிருக்கும் திரு. பரூக் அரசாங்கச் செலவில் அந்த வீட்டை வாங்கி, அதில் பாரதியின் ஞாபகார்த்தமாக ஏதாவது செய்யவேண்டும் என்று முயன்று வருகிறார். அவருடைய முயற்சி வெற்றியடைய வேண்டுமானால் மத்திய சர்க்கார் கண் திறக்க வேண்டும். கலைஞர் கருணாநிதி தற்போது எட்டயபுரத்திலுள்ள பாரதி பிறந்த வீட்டையும், கடையத்திலுள்ள 'காணி நிலம் வேண்டும் பராசக்தி, காணி நிலம் வேண்டும்' என்று பாரதி பாடிய இடத்தையும் வாங்கிக் 'கவினுறு மாளிகை' கட்டிக் கவிஞரின் கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அவற்றுடன் அவர் இதையும் சேர்த்துக்கொண்டு பரூக்குடன் ஒத்துழைத்தால் வெற்றி நிச்சயம் அவசியம் ஒத்துழைப்பார் என்றும் நம்பலாம்.

    அங்கிருந்து வைசியர் வீதிக்கு வருகிறேன். இங்கேதான் பாரதியின் பாசறையாக விளங்கிய கல்வே சங்கரச் செட்டியாரின் வீடு இருக்கிறது. திரு. வ.வே.சு அய்யர், வழக்கறிஞர் துரைசாமி அய்யர், புரட்சி வீரர் மாடசாமி, திரு. சுப்பிரமணிய சிவா, திரு. வாஞ்சி, திரு. நாகசாமி போன்றோர் இந்த வீட்டில்தான் அடிக்கடி கூடி, வெள்ளையனை இந்தியாவிலிருந்து விரட்டுவ தற்கு வேண்டிய வழிவகைகளைப் பற்றி யோசிப்பார்களாம். அதன் விளைவுகளில் ஒன்றுதான் ஆங்கிலேயக் கலெக்டரான ஆஷ் துரையை மணியாச்சியில் வாஞ்சி சுட்டுக் கொன்றதாம்.

    இந்த நிகழ்ச்சியைப் பற்றி இப்போதும் ஜீவியவந்தராயிருக்கும் திரு. நாகசாமி அய்யர்தான் எவ்வளவு உற்சாகமாகப் பேசுகிறார்!

    அவருடைய இருப்பிடத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டு போய் அவரைச் சந்திக்கிறேன். அய்யருக்கு வயது இப்போது எண்பத்து மூன்று, எப்போதும் படுக்கையை விரித்து வைத்துக்கொண்டு படுத்த படுக்கையாயிருக்கிறார். நான் அருகில் சென்று உட்கார்ந்து அவரைத் தொட்டு உசுப்பி, “ஐயா, ஐயா!'' என்கிறேன்.

    "யார் அது?" என்று கேட்டுக்கொண்டே திரும்புகிறார்.

    ''நான் ஒரு பத்திரிகையாளன், பாரதியைப் பற்றி உங்களுடன் சிறிது நேரம் பேசவேண்டும்.

    அவ்வளவுதான், இருபது வயது இளைஞனைப் போல அவர் துள்ளி எழுந்து உட்காருகிறார்.. "பாரதியை ஆசிரியராகக் கொண்டு சென்னையில் நடந்து வந்த 'இந்தியா' பத்திரிகை அங்கே பிரிட்டிஷ் அடக்குமுறைக்கு ஆளாகிப் பாண்டிச்சேரிக்கு வந்தது. அதற்கு முன்னாலேயே பாரதி இங்கே வந்து விட்டார். 'இந்தியா' பத்திரிகையிலே நான் அவருக்குத் துணையாசிரியராயிருந்தேன்'' என்று ஏக உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார்.

    "அப்புறம்?" என்கிறேன் நான்

    "பகலில் பத்திரிகை வேலை, இரவில் வெள்ளைக்காரனை எப்படி ஒழிக்கிறது, அதற்கு மக்களை எப்படித் தயார் செய்கிறது என்கிறதைப் பற்றி யோசிக்கிற வேலை!’’

    "அந்த வேலையில் ஒன்றுதான் ஆஷ் துரையைச் சுட்டதாக்கும்?"

    ஆமாம் அவனைச் சுட்ட அந்த வாஞ்சிக்கு நான்தான் குறி பார்த்துச் சுடக் கற்றுக் கொடுத்தேன்''

    "உங்களுக்குத் துப்பாக்கி ஏது?"

    "பாரிஸிலே எங்களை ஆதரிக்கிற சீமாட்டி ஒருத்தி இருந்தாள் அவளுக்கு எழுதி வரவழைத்தோம் "நீங்கள் எதைக் குறி பார்த்துச் சுடக் கற்றுக் கொடுத்தீர்கள்? காக்கை, குருவிகளைப் பார்த்தா?"

    ''காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்று பாடும் பாரதியின் தோழர்களாச்சே நாங்கள், அப்படிச் செய்வோமா? கீழே இருந்து தென்னை மரத்தில் இருக்கிற தேங்காய் குலையைக் குறி பார்த்துச் சுடக் கற்றுக் கொடுத்தேன்.

    "கடைசியில் என்ன ஆயிற்று?"

   "போட்ட திட்டப்படி வாஞ்சி ஆஷைச் சுட்டுவிட்டுத் தன்னையும் சுட்டுக்கொண்டான் ஆனால்,

   "என்ன ஆனால்?"

   "எவ்வளவோ சொல்லியும் அவன் ஒரு தவறு செய்துவிட்டான்

   ‘’என்ன தவறு?"

   "நம்முடைய கடிதப் போக்குவரத்து எதையும் பாக்கெட்டில் வைக்காதேடா, பாக்கெட்டில் வைக்காதேடா என்று நான் படித்துப் படித்துச் சொன்னேன். அதைக் கவனிக்காமல் அவற்றில் சிலவற்றைப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அவன் தன்னை சுட்டுக் கொண்டிருக்கிறான். அது போலீஸாரிடம் சிக்கிக்கொண்டு விட்டது. அவர்கள் எங்களைக் கண்காணிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்தச் சமயம் பார்த்து அரவிந்தரும் வங்கத்தில் ஏதோ தப்புத் தண்டா செய்துவிட்டு வந்து எங்களுடன் சேர்ந்தார். போலீஸ் கெடுபிடி இன்னும் அதிகமாயிற்று. அவர்கள் எங்களைக் கண்காணிப்பது போலவே நாங்களும் அவர்களைக் கண்காணிக்க ஆரம்பித்தோம். அதற்கு உதவியாகச் சங்கரச் செட்டியார் மாடியின் நடுவேயிருந்து பார்த்தால் கீழேயுள்ள தரை வரை தெரியும்படியாக ஒரு ஜன்னல் அமைத்துக் கொடுத்தார். எங்களில் ஒருவன் மாடிக்குப் போய், அங்குள்ள ஜன்னலுக்கும் கைப்பிடிச் சுவருக்குமாக நடை போட்டுக் கொண்டிருப்பான். ஒற்றர்கள் யாராவது வந்தால் உடனே அவன் ஜன்னலுக்கு வந்து, அதன் வழியாகக் கீழே கூடியிருக்கும் எங்களை எச்சரிப்பான். நாங்கள் அங்கிருந்து தப்பிவிடுவோம்.''

   "ஆச்சரியமாயிருக்கிறதே! செட்டியார் வணிகர் என்று கேள்விப்பட்டேன். பொதுவாக வணிகர்கள் பணம் பண்ணுவதைத் தவிர வேறு எந்தவிதமான லட்சியமும் இல்லாதவர்களாயிருப்பார்கள். அத்தகையவரை ஓர் அரும்பெரும் லட்சியவாதியாக மாற்றக் கூடிய சக்தி அந்த நாளிலேயே பாரதியின் பாடல்களுக்கு இருந்திருக்கிறது. இல்லையா?"

   "அது மட்டுமா? பெண்கள் விடுதலை குறித்து அவர் பாடிய பாடல்களும் பெரும் புரட்சி செய்தன. எங்களுடைய போதாத காலம் பிரிட்டனும் பிரான்சும் செய்து கொண்ட ஓர் உடன்படிக்கையின்படி பிரெஞ்சுப் பகுதிகள் சில ஆங்கிலேயர் வசமாக இருந்தன. அதில் பாண்டிச்சேரியும் சேர்ந்துவிடும் போலிருந்தது. அப்படி ஆகியிருந்தால் எங்கள் கதி அதோகதியாகியிருக்கும். ஆகவே. அதை வேறு எதிர்த்துப் பாரதி கிளர்ச்சி செய்ய வேண்டியதாயிற்று. அந்தக் கிளர்ச்சியை அப்போதிருந்த கவர்னரின் ஆலோசகர்கள் பொருட்படுத்தாமல் உடன்படிக்கையை அப்படியே நிறைவேற்ற இருந்தார்கள். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது- அதாவது. அந்த ஆலோசகர்களின் மனைவிமார்கள் பாரதிக்காகத் தங்களுடைய கணவன்மார்களையே எதிர்த்து நின்று உடன்படிக்கையைத் தூக்கியெறிந்துவிட்டார்கள்!"

   "தேவலையே, இந்தப் புரட்சிகளையெல்லாம் அங்கே பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் செய்வதற்கு முன்னாலேயே நீங்கள் இங்கே செய்து விட்டீர்கள் போலிருக்கிறதே!"

   ''ஆமாம், எதிலும் முதலாயிருக்கிற தமிழன் அதில் மட்டும் பின்வாங்கிவிடுவானா?"

   உணர்ச்சிவேகத்தில் பெரியவருக்கு உள்ளுக்கும் வெளிக்குமாக மூச்சு வாங்குகிறது. முதிர்ந்த வயது காரணமாக ஞாபகமறதி வேறு அடிக்கடி வந்து அவருடைய பேச்சுக்கு முட்டுக் கட்டை போடுகிறது. அந்த நிலையில் அதற்குமேல் அவரைச் சிரமப்படுத்த விரும்பாமல் நான் அவரிடமிருந்து விடைபெறுகிறேன்.

   "இது என்ன உற்சாகம்? காலை நேரத்தில் வந்திருந்தால் இன்னும் உற்சாகமாகப் பேசியிருப்பார்!" என்று சொல்லிக் கொண்டே அவருக்குத் தற்போது அடைக்கலம் தந்திருக்கும் வீட்டுக்காரர் என்னை நோக்கி வருகிறார்.

  அவரைப் பார்த்தால் எனக்குப் பிராமணராகத் தோன்றவில்லை. "உங்களுக்கு இவர் என்ன வேண்டும்?" என்று என் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்காகக் கேட்கிறேன்.

  "ஒன்றுமில்லை நானும் மனிதன் அவரும் மனிதன் அவ்வளவுதான் எங்களுக்குள்ள உறவு!'' என்கிறார் அவர்.

  "உங்கள் தொழில்?"

  "கள்ளுக்கடையில் குமாஸ்தாவாக இருக்கிறேன். எங்கள் குடும்பத்தில் பத்துப் பேர் இருக்கிறோம். இவரையும் குடும்பத்திலொரு ஆளாகச் சேர்த்துக் கொண்டிருக்கிறோம்.’’

   "ஏன் இவருக்குச் சொந்தக்காரர்கள் யாரும் இல்லையா?"

   "இருக்கிறார்கள் இவருடைய பழக்கவழக்கங்கள் அவர்களுக்குப் பிடிப்பதில்லை. அவர்களுடைய பழக்கவழக்கங்கள் இவருக்குப் பிடிப்பதில்லை. அதனால் அவர்கள் இவரை ஒதுக்கிவிட்டார்கள் இத்தனைக்கும் அரவிந்தாசிரமத்திலிருந்து இவருக்கு மாதம் ஐம்பது ரூபாய் உதவித் தொகையாக வந்து கொண்டிருக்கிறது"

   "உங்களுடைய பழக்கவழக்கங்களெல்லாம் இவருக்குப் பிடிக்கிறதா?" "பிடிக்காமலென்ன, எந்தவிதமான பேதமும் கிடையாது இவரிடம்"

   "ஒருவேளை பாரதி கண்ட 'அபேதானந்த சுவாமி'களில் இவரும் ஒருவராயிருப்பாரோ?" என்று எண்ணிக்கொண்டே நான் வெளியே வருகிறேன்.’’

   எண்பது வயதைக் கடந்த ஏழெட்டுப் பெரியவர்கள், "ஐயா, வணக்கமுங்க!" என்று என்னைக் கைகூப்பி வரவேற்கிறார்கள்.

   அவர்கள் யாரென்று தெரியாமல் நான் விழிக்கிறேன். அதை என் விழிகளிலிருந்து தெரிந்துகொண்டு, "நீங்கதானே மீசைக்கார அய்யரைப் பற்றித் தெரிஞ்சிக்கப் பட்டணத்திலேயிருந்து வந்திருக்கீங்க?'' என்று கேட்கிறார் அவர்களில் ஒருவர்.

   ''எந்த மீசைக்கார அய்யரை?" என்று நான் அப்போதும் ஒன்றும் புரியாமல் கேட்கிறேன்.

   "அதுதாங்க, பாரதியாரை நாங்க 'மீசைக்கார அய்யர்'னுதான் கூப்பிடுவோமுங்க.

   "அப்படியா, நீங்க யாரு?"

   ''பறையருங்க, குப்பத்திலேருந்து வாறோமுங்க.’’

   ''பறையர்னு சொல்லாதீங்க, அரிஜன்னு சொல்லுங்க!''

   நான் திருத்துகிறேன். "அந்தப் பேரு எங்க மீசைக்கார அய்யருக்குப் பிடிக்காதுங்க, ‘அது என்னப் புதுப் பேரு'ம் பாருங்க!''

   "சரிதான், அந்த விஷயத்திலே உங்க மீசைக்கார அய்யர் அம்பேத்கார் கட்சிபோல இருக்கு''

   ‘’ஆமாங்க, காந்தி ஆலயப் பிரவேசம்கூட அவருக்குப் பிடிக்கலீங்க எங்களுக்கு முதல்லே வேண்டியது ஆலயப் பிரவேசம் இல்லே, இதயப் பிரவேசம்'தான்னு சொல்லி, அவர் எங்களுக்கெல்லாம் பூணூலை மாட்டிப் பிரமோபதேசம் செய்தாருங்க. அப்புறம் எங்களிலே ஒருத்தனைச் சமைக்கச் சொல்லி, அவரும் எங்களோடு உட்கார்ந்து சாப்பிட்டாருங்க, அப்போ நாலைந்து அய்யமாருங்க சேர்ந்து வந்து, 'ஏண்டா, நீ பிராமணனாயிருந்தும் இப்படிச் செய்யலாமா?"ன்னு அவரைக் கேட்டாங்க. அதுக்கு அவர் கடகடன்னு சிரிச்சுட்டு, 'நான் பிராமணன் என்கிறதை எப்பவோ மறந்துட்டேன் நீங்க ஏண்டா அதை இன்னும் ஞாபகத்திலே வெச்சிட்டு அவஸ்தைப்படறீங்க? போங்கடா'ன்னுட்டாருங்க!''

   "அதனால் என்ன ஆயிற்று, தெரியுமா? உங்கள் 'மீசைக்கார அய்யர்' இறந்த பிறகுகூட அவரைச் சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்ல அவ்வளவு சுலபமாக ஆள் கிடைக்கவில்லை அதற்காக அவருடைய பிணம் ரொம்ப நேரம் காத்துக் கொண்டிருக்க வேண்டியிருந்தது'' என்று சொல்லிவிட்டு, நான் மெல்ல அவர்களிடமிருந்து நழுவுகிறேன்

   "கொஞ்சம் வெத்திலையாச்சும் வாங்கிப் போட்டுக்கிட்டுப் போங்க!'' என்று அவர்களில் ஒருவர் மடியை அவிழ்க்கிறார். 'மீசைக்கார அய்ய'ருக்காக ''சரி, கொடுங்கள்" என்று வாங்கிப் போட்டுக் கொண்டு மேலே நடக்கிறேன்.

   முத்தியால்பேட்டையிலுள்ள சித்தானந்த சுவாமிகளின் மடம் என் கவனத்தைக் கவருகிறது. புதுவை நண்பர்களான பிரம்மராய அய்யர், எலிக்குஞ்சு செட்டியார், வேணு முதலி, குவளைக்கண்ணன், குள்ளச்சாமி ஆகியோரைப் பற்றித் தன் கட்டுரைகளிலும் கவிதைகளிலும் குறிப்பிட்டிருக்கும் பாரதி, இந்த மடத்தையும் மறக்காமல்,

"சித்தாந்தசுவாமி திருக்கோயில் வாயிலில்

              தீபவொளியுண்டாம்- பெண்ணே,

              தீபவொளியுண்டாம்'

 

              முத்தாந்தவீதி முழுதையுங் காட்டிட

              மூண்ட திருச்சுடராம்- பெண்ணே,

              மூண்ட தீச்சுடராம்!"

    என்று பாடியிருக்கிறார் அல்லவா? அதை நினைவுகூர்ந்து மேலே செல்கிறேன். கருவடிக்குப்பத்திலுள்ள ஆரோக்கியசாமி முதலியார் மாளிகையும், அதைச் சுற்றியுள்ள மாஞ்சோலைகளும் என் கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவருகின்றன. பாரதி அடிக்கடி வந்து உலாவிய அந்த இடத்திலே நானும் சிறிது நேரம் உலாவி மகிழ்கிறேன்.

    குக்கூ, குக்கூ!

    பாரதியின் 'குயில் பாட்டு' பிறந்த இடமல்லவா?- குயில் கூவுகிறது'

   அழகு கொஞ்சும் இந்த இடத்தை,

                   "வேகத் திரைகளினால் வேதப் பொருள் பாடி

         வந்து தவழும் வளஞ்சார் கரையுடைய

               செந்தழிழ்த் தென்புதுவை யென்னும் திருநகரின்

         மேற்கே. சிறுதொலைவில் மேவுமொரு மாஞ்சோலை

         நாற்கோணத்துள்ள பல நத்தத்து வேடர்களும்

                  வந்து பறவை சுட வாய்ந்த பெருஞ்சோலை"

   என்று எவ்வளவு அருமையாய்க் குறிப்பிடுகிறான் பாரதி''

இத்தனை இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, கடைசியாக பாரதி சரண் புகுந்த முத்துமாரியம்மனைப் பார்க்காமல் வந்துவிடலாமா?- அவளையும் பார்க்கிறேன்.

                        "உலகத்து நாயகியே'

எங்கள் முத்துமாரியம்மா, எங்கள் முத்துமாரி!

                         உன் பாதம் சரண் புகுந்தோம்

எங்கள் முத்துமாரியம்மா, எங்கள் முத்துமாரி!"

    என்று அவன் பாட்டாலேயே அவளையும் வழிபட்டுவிட்டுத் திரும்புகிறேன்

    ஏறக்குறைய பன்னிரண்டு ஆண்டுகள் பாரதிக்குப் புகலிடம் தந்து உயர்ந்த பாண்டிச்சேரியை ஓரிரு நாட்களில் சுற்றிப் பார்த்து, அவனைப் பற்றிய தகவல்கள் அத்தனையையும் அறிவதென்பது முடிகிற காரியமா, என்ன?

-தினமணி கதிர்

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு