றாம் சந்தோஷின் “சொல் வெளித் தவளைகள்” வேறு சில பார்வைகள் -ஜெ.காமாட்சி காயத்ரி
றாம் சந்தோஷின் “சொல் வெளித் தவளைகள்”
வேறு சில பார்வைகள்
-ஜெ.காமாட்சி காயத்ரி
றாம் சந்தோஷின் சொல் வெளித்
தவளைகள் கவிதைத் தொகுப்பு நவீன கவிதைகள் குறித்தான ஆரம்பநிலை வாசகருக்கு சற்றே
தடுமாற்றத்தைத் தரும். நவீன கவிதைச் சூழலில் புறந்தள்ள முடியாத இடத்தை இக்கவிதைத்
தொகுப்பு பெற்றிருக்கிறது. அதற்கு இக்கவிதைகளின் உருவமும் உள்ளடக்கமும் பெரும் காரணங்கள். உணர்வுகளின் விசும்பலில் மட்டுமே கவிதை வாசித்திருந்த
மனங்களுக்கு இக்கவிதைகள் வேறொரு புது அனுபவத்தைக் கொடுக்கும்.
அரசியலோ, ஆன்மீகமோ, அகமோ, புறமோ எல்லாவற்றையும் ஒருவித பகடியோடு அணுகி, அதன் வழியே சிந்திக்க வைக்கும் பண்பு கவிதைகளில் கைகூடி வந்திருக்கிறது. மரபினைத் திணித்தல், நம்புதல் அல்லாமல் தனக்கேற்ப, தன் காலத்திற்கேற்ப மரபை மாற்றிக்கொள்ளும் பாங்கை கையெடுத்திருக்கிறார் றாம் சந்தோஷ். இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் நிகழ்த்துக் கலை போல நிகழ்கின்றன. இன்றைய அரசியல் அவலங்களை கேலிக்குள்ளாக்குவதன் வழி அவற்றை கேள்வி கேட்கும்படியாக அமைந்துள்ளன. சில கவிதைகள் வாசிக்கும் போது சிலேடைப் புகழ் காளமேகப் புலவரும், ஞானக்கூத்தனும் நினைவில் வருகின்றனர்.
றாம் சந்தோஷின் கவிதைகள் மொழி விளையாட்டை சோதனை செய்து பார்க்கின்றன.
மொழி விளையாட்டு எனும்போது மொழி கொண்டு விளையாடுதல் என்றும், விளையாட்டை மொழியால்
உருவாக்குதல் என்றும் பொருள் கொள்ளலாம். இக்கவிதைகள் இரண்டாம் வகைத்ததாக உள்ளது.
‘’மொழி – விளையாட்டு என்பது ஒரு குறிப்பிட்ட விதிமுறைக்கு (இலக்கணத்திற்கு) உட்பட்டு விளையாட்டுகளைப் போல ஆடப்படுவது. இது மொழியை வைத்து விளையாடும் விளையாட்டு அல்ல. விளையாட்டைப் போல தனித்துவமான ஆட்டவிதிகளால் ஆன ஒருவகை ஒழுங்கமைப்பாக மொழி பயிலப்படுவது. ஒவ்வொரு விளையாட்டும் அதற்கென பிரத்யேகமான விதிகளால் கட்டமைக்கப்பட்டிருப்பதைப் போல, மொழிக்குள் தனித்துவமான விதிமுறைகளால் கட்டப்படுவது. மொழி – விளையாட்டு என்பது மொழியின் அர்த்தத்தை அம்மொழி – விளையாட்டின் விதிமுறை தீர்மானிக்கும். ஒரு பொதுவிதி கொண்டு அதைப் பொருள்கொள்ள முடியாது. கவிதை தனக்கென தனித்தமைந்த விதிமுறைகளால் ஆடப்படும் ஒருமொழி –விளையாட்டாக இக்கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. (மேலும், மொழி-விளையாட்டைப் பற்றிய கோட்பாட்டை அறிய விட்கென்ஸ்டைன், லியோடார்ட் வாசிக்கலாம்.’’ என்று ஐமாலன் இந்நூலுக்கு எழுதிய பாயிரத்தில் எழுதியிருப்பார்.
தமிழ்க் கோட்பாட்டு அறிஞர்கள் பலரும் இந்த மொழி விளையாட்டை தங்கள் படைப்புகளில் நிகழ்த்திக் காட்டியுள்ளனர். ஆனால், இக்கவிதைகள் மொழி விளையாட்டாக அல்லாது மொழி நடனமாக மாறியிருக்கிறது. விளையாட்டு எனில், ஆட்ட விதிகளுக்கு உட்பட்டே ஆட இயலும். ஆனால் படைப்பாளர் இந்த பிரதியில் தனக்கு தேவையான அடவுகளைத் தானே உருவாக்கி, தொனிக்கு ஏற்றவாறு மாற்றவும் செய்திருக்கிறார்.
இதுகாறும் நிலைபெற்றிருந்த கவிதை என்பதின் வடிவமும், அதன் உட்பொருளும், வரையறையும் மாறியிருக்கின்றன. இக்கவிதைளை மரபு மீறலாக கொள்வதாக அல்லாமல் மரபின் உதவிகொண்டே மரபை மீட்கிற கவிதைகளாகக் கொள்ளலாம். சொல் வெளித் தவளைகள், அகவாழ்வையும் புறவாழ்வையும் கீழே கிடத்தி, உவமைகள் மற்றும் விவரணங்களின் வழி அதன் அப்பாலான நோக்கத்திற்கு அறிவு வழி அழைத்து செல்கிறது.
இக்கவிதைத் தொகுப்பு தலைவன், தலைவி, மரபு, அரசியல், நீட், கடவுள் ஆகியவற்றை பகடி மற்றும் கேலிக்குள்ளாக்குபவை, தொல்காப்பிய சாயல், விலங்குகளின் பரிமாணம் போன்ற நுண்கருத்துகள் பலவற்றை ஏற்கனவே ஆய்வாளர்கள் ஆராய்ந்து வந்துள்ளனர் என்பதால், ஆய்வாளருக்கு இஃதொரு வாய்ப்புக்கேடு. கூறியது கூறலாகவோ, சென்று தேய்ந்து இறுதலாகவோ இக்கட்டுரை அமைந்துவிடல் கூடாது. இதுவரை எடுத்துக்காட்டப்படாத சில கூறுகளை, கவிதைகளை ஊடறுத்து பார்த்ததின் வழி கண்டறிய முடிந்தது.
1. ஆளுமையைமாற்றியமைத்தல் (Personality Modification)
கவிதைகளில் இடம்பெறும் மாந்தர்கள் இயல்பாக கொண்டுள்ள, கொண்டிருக்க வேண்டிய ஆளுமைகளை மாற்றியமைத்து கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. அவ்விதம் மாற்றியமைக்கப்பட்ட கூறுகளை நான்காக பகுக்கலாம்.
அ. தலைவன் தலைவியின் பாலினத்தை மாற்றியமைத்தல்
சில கவிதைகளில் பயின்று வரும் தலைவன், தலைவி என்ற பாத்திரங்களின் பாலின ஆளுமை மாற்றியமைக்கப்படுள்ளது. Mrs.கண்ணகி II கூத்தாண்டவன் (காப்பியச் சுருக்கம்) என்ற கவிதையில் நிகழ்காலத்தில் பெண்பாலாக இருக்கிற கவிதை மாந்தர் புராதனத்தில் ஆண்பாலாக மாற்றப்பட்டுள்ளார். புராதனக் கண்ணகி பெண்ணாக இருந்ததால் முலையெறிந்து ஊரெரித்தாள் என்பது தொன்மம். கவிதையில்- புராதனக் கண்ணகி- ஆணாக மாற்றப்பட்டு இருப்பதால் குறியெறிந்து வீடெரிப்பதாக அமைகிறது.
“Mrs.
கண்ணகி II கூத்தாண்டவன் (காப்பியச்சுருக்கம்)
தன்தொப்புளின் கீழ் ஒரு சிவப்புநிறப்பூ
முளைத்தபோது
அவள் பிரமிப்புற்றாள்.
உண்மையில் புராதனத்தில் அவனாக
இருந்த அவள்.
குறியெறிந்து வீடெரிக்க – இரண்டாம் கண்ணகி
எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டாள்.
கடைசியில் வானுலகம் சென்ற அவளுக்குச்
சிலை எடுப்பார் யாருமில்லாததால்
கதையில் வராமலும் காணாமல்போனாள்”
ஆ.உயர்திணை மாந்தர்களை அஃறிணையாக மாற்றியமைத்தல்
பண்டுகாலமாகவே கவிதைகளில் அஃறிணை உயிரினங்களை தலைவனுக்கும் தலைவிக்கும் உவமையாக எடுத்துக்காட்டும் மரபு இருந்து வருகிறது. சொல்வெளித் தவளைகள் கவிதைத்தொகுப்பில் புதுமையாக வெறும் உவமை உருவகமாக அஃறிணை உயிர்கள் பயன்படுத்தப்படாமல், அஃறிணையாகவே உயர்திணைமாந்தர்கள் மாறியிருக்கிறார்கள். உதாரணமாக புணர்தலும் புணர்தல் நிமித்தமும் கவிதையைக் கொள்ளலாம்.
“புணர்தலும்புணர்தல்நிமித்தமும்
ஒரு யானையாகி அவளைப் புணர்கிறேன்:
எதுவும் நீடிப்பதில்லை.
பூக்களை உதிர்க்கும் அசையும் மரமாய் அவளானபோது,
வௌவால்கள் அவளுடம்பின் சருகுகளாயின.
தேவையெல்லாம் தற்போது: தோழீஇ!”
இ. படைப்பாளர் தன் ஆளுமையிலிருந்து மாறுபட்டு எதிர்பாலின உணர்வுகளை பாடுதல்
படைப்பாளர், அடிப்படையான தன்பாலினத்தை மாற்றி கவிதையில் எதிர்பாலின உணர்வுகளை கச்சிதமாக
எழுதுவது தமிழ்ச்சூழலில் புதிதான ஒன்றல்ல. தமிழ்ச்சான்றோர்களான கபிலர், மாணிக்கவாசகர்
போன்றோரும் இதனை சோதனை செய்து வெற்றியும் கண்டுள்ளனர். அவ்வகையே
றாம் சந்தோஷும் அடிப்படையான தன் பாலினத்தை மாற்றி கவிதையில்
பெண்பாலாக மாறி பெண் உணர்வுகளை எழுதியுள்ளார்.
“தலைவனும்
நானும்
ஒரு பார்க்கினிடையே
பார்த்துக்கொண்டபோது
மெல்லிய பூ வாசம்
ஒருவித போதையைத் தந்தது.
மலர்மொய்க்கும் வண்டென அவனான போது
குறிகளைக் கழற்றி நிலத்திடை வீசினோம்.
அவை தனித்து
ஏதேதோ செய்து கொண்டிருக்கின்றன.
அவன் கொக்காகவும் நான் மீனாகவும்
மாறி
விளையாடத் தொடங்குகிறோம்.”
என்னும் கவிதையில் கவிஞன் தன்பாலினத்தை பெண்ணாக மாற்றியமைத்து எழுதியிருப்பது புலப்படும். இதே கவிதையை வேறுநோக்கில் ஆராயும்போது, இதில் நான் என்பது ஆணா? பெண்ணா? என்று குழப்பம் ஏற்படும். நான் எனும் பாத்திரத்தை பெண்ணெனக் கொள்வதற்கான எந்த குறிப்பும் கவிதையில் இடம்பெறவில்லை. .
ஈ. நான் எனும் பாத்திரம் வேறுவேறு ஆளுமைகளில் பயின்றுவரல்
நான் எனும் பாத்திரம் இயல்பாக ஒரு ஆணாகவோ, பெண்ணாகவோ அல்லது அஃறிணை உயிரினங்களாகவோ அமைதல் இயல்பானதாகும். சில கவிதைகளில் இந்த எதார்த்தத்தைக் கடந்து மீஆளுமைகளைக் கொண்டதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. நான் என்னும் பாத்திரம் தவளைக் குஞ்சுகளை உற்பத்தி செய்பவனாக, நிலவைத் தின்பவனாக, மின்மினியின் கடவுளாக விதையிலிருந்து உருவாகும் உடல் கொண்டவனாக கவிதைகளில் பயின்று வருகிறது.
2. பல குரல் – கவிதையில் ஒன்றுக்கு
மேற்பட்ட கூற்றுகளைக் கண்டறிதல்
இரண்டாவது கூறாக கவிதையில் ஒன்றுக்கு மேற்பட்ட கூற்றுகளைக் கண்டறிதலைக் கொள்ளலாம். ஒரு கவிதையில் படைப்பாளரின் குரல் ஒரு மாந்தரின் குரலாக ஒருங்கே கேட்கும். சில வேளைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட குரல்களை நம்மால் கண்டறிய முடியும். ஒரு நிகழ்வை கவிஞர் தன் குரலாகவோ அல்லது கவிதையில் பயின்று வரும் ஒரு மாந்தரின் வழியாகவோ விவரணை செய்து கொண்டிருக்கும்போது, திடீரென வேறொரு குரல் எதிர்ப்புறமாக உருவாகி, முன்னால் உள்ள குரலோடு உரையாடும். இது ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகளிலும் நிகழ வாய்ப்பிருக்கிறது. அச்சமயம், வாசகரால் ஒன்றுக்கு மேற்பட்ட குரல்களை கவிதையில் கண்டறிய முடியும். சொல்வெளித் தவளைகள் கவிதைத் தொகுப்பில் யானை உருவகத் தலைவன் தான் என்றாலும், எங்கள் ஊரில் ஒரு தமிழ்ப்புலவன், ஊரெல்லாம் ஆன்டி இண்டியன்கள் என்று தொடக்கவரிகள் கொண்ட கவிதைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட குரல்களைக் கண்டறியலாம். உதாரணமாக,
“ஊரெல்லாம் ஆன்டி இண்டியன்கள்;
உத்தமர்களை எங்கெனத் தேடுவது?
அவர்கள் அரிதாய் எங்கேனும் இருப்பர்.
அடையாளம் ஏதாவது?
நெற்றியில் பட்டை,
கழுத்தில் கொட்டை,
தலையில் லைட்டா சொட்டை.
மன்னிக்கவும் பெரியவர்களுக்கு
மரியாதை கொடுக்கவேண்டுமல்லவா?
அதனால் என்ன கொடுத்துவிடுவோம்
ஆனால் இவர்களைத் தான் யாரும்
அவ்வாறாக ஏற்றுக்கொள்வதில்லையே?
இருந்தால் என்ன என்கிறீர்களா?
இருந்தாலும் இவ்வளவு நல்ல இண்டியனாய் இருக்கக்கூடாது!
அப்போ நீங்க?
நானும் தாங்க, மறுக்கல;
ஆதார் இருக்கு பாருங்க ஜோபியில!
அப்போ உங்க பையனுக்கு?
அட, அவன் இன்னும் கவர்மெண்ட் அடிக்காத கள்ளநோட்டு.
கனவை இடைமறித்து அவன் கழுத்தை நெறித்துக் கொன்றாச்சு;
கனவோன் உடலதையும் வெட்டிக் கூறிட்டாச்சு
உடலுடையோன் ஒரு கனவானவனாதலால்
அவன் உடலில் வலியில்லை.
இருந்தும், என் கனவோ கலைந்தாச்சு;
கலைந்ததும் கண்களைத் திறக்கச்செய்து பார்க்கிறேன்.
உடலைக் காணவில்லை.
உயிர் மட்டும் மீள ஒரு கனவாச்சு..”
என்ற கவிதையில் 15 வதுவரியில் ‘அப்போ நீங்க?’ என்ற குரல், நமக்கு கவிதையை விவரணை செய்துகொண்டு வரும் குரலோடு ஒரு உரையாடலை தொடங்குகிறதை கண்டறியலாம். மறுபடி 18வது வரியிலும் இரண்டாம் குரல் கேள்வி கேட்கிறது. இவை போலவே, மற்ற இரண்டு கவிதைகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட குரல்களைக் கண்டறிய முடிகிறது.
3. கலைத்துப்போடுதலும்,
பின்னுதலும்
றாம் சந்தோஷின் கவிதைகளில் கலைத்துப்போடும் தன்மை பெரிதும் காணப்படும். எனில், நாமும் அவர் கவிதைகளை கலைத்துப்போட்டு நோக்கும்போது, அவர் கலைத்த தன்மைகளை மூலமாகக் கொண்டு வேறொரு பரிமாணத்தில் கவிதைகளை பின்னியிருக்கிறார் என்பதை அறியலாம். நீட் தேர்வு குறித்தான கவிதை சொல் வெளித் தவளைகள் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இக்கவிதை குறித்து பலவேறான விமர்சனங்களும் ,கருத்துப்பதிவுகளும் வந்துள்ள நிலையில், அவற்றின் மையக்கருத்தை இடையூறு செய்ய விரும்பாது பக்கம் வைத்துவிட்டு, இக்கவிதை எவ்வாறு கலைத்து பின்னபட்டிருக்கிறது என்பதை ஆராயலாம். கவிதைக்கான முதன்மை பொருண்மைகளான நீட் தேர்வு, தேர்வு நாள், தேர்வறை, தேர்வர்கள், சோதனை அலைக்கழிப்புகள் ஆகியவற்றை அங்கங்கே கலைத்துப் போட்டு , ஆண் தேர்வருக்கும் பெண் தேர்வருக்குமான பாலின ஈர்ப்பை துணைப் பொருண்மையாகக் கொண்டு இக்கவிதை பின்னப்பட்டுள்ளது போலவே, இருப்பைக் கலைத்துப் போட்டு இல்லாத மீஎதார்த்தத்தையும், இன்மையைக் கலைத்துப் போட்டு நிகழில் இருப்பதையும், கவிதையை பின்னுவதற்கு பயன்படுத்தி உள்ளார். அதற்கு உதாரணமாக,
“ஒரு வெறியாடலின்போது தன் பசிக்குக்
காற்றில் ஆடும் மயிர்களைத் தின்றாள்.
பசிக்கு அவை, அலைவுறும் கறுத்த சேமியாவாகத்
தெரிந்திருக்க வேண்டும்.
அதன்முடிவில் வந்த அபார வயிற்றுவலிக்கு
ஏற்ப, ஹைய் ஹுய் ஹைய் ஹுய் என்று பாட்டிசைத்து ஆடினாள்.
அஃதே, தின்றவை, உடலில் போய் விதையுற்று
முளைத்தன; அழிந்தன.
முறையே, மூக்கின்கீழே, இன்னபிற இடங்களிலும்
சிறுவழி இடைப்பட்ட கழிவிலும்.
மேலும் இவற்றை, சிலநாள் இடைவெளிவிட்டு
மீண்டும் செய்வாள் என நம்பப்படுகிறது.”
என்ற கவிதையைக் கொள்ளலாம்.
ஆசிரியர் இறந்துவிட்டான் (Author is dead) என்பது திறனாய்வாளர் ரோலன் பர்த்-ன் புகழ்பெற்ற கோட்பாடாகும். ஒரு படைப்பை எழுதிய பிறகு படைப்பாளன் இறந்து விடுகிறான். படைப்பு தான் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் எனில், படைப்பாளனின் வாழ்க்கைச் சூழலும் பின்னணியும் அறியாது படைப்பை அறிதல் என்பது வேர் மறுத்து கனி வேண்டுவது போல அரைகுறையானது. படைப்பாளனின் ஆசைகளும், உணர்வு ஊக்கமுமே படைப்பாக பரிமாணம் அடைகின்றன. அவ்வகையில் றாம் சந்தோஷின் மொழிக் கிடங்கு மிக தேர்ந்த தெளிநிலையோடு திகழ்வது இவரது கவிதைகளை வாசிக்கும் போது உணர முடிகிறது. இவரது கல்விப்புல பின்னணி தமிழ் மரபை ஊன்றிக் கற்று அதன் வழி கவிதைகளை மறுஉருவாக்கம் செய்ய உதவியிருக்கிறது.
மேலும் சில கவிதைகள்
மீஎதார்த்தப் பண்புகளை கொண்டிருப்பது, சமயங்களில் கவிதையின் சாரத்தை மறைத்துவிடுகின்றன. அவையே, வெறுமனே கவிதையின்
விவரணைகளில் மட்டுமே மனம் ஊன்றிட காரணமும் கூட. இக்கவிதைத் தொகுப்பில்
பெரும்பான்மை அரசியல் கவிதைகளே காணப்படுகின்றன. பொதுவில் நடப்புகளை அதிகம்
தெரிந்து கொள்ளாதவருக்கு அந்தக் கவிதைகள் மேம்போக்கான மனநிலையில் மட்டுமே
புரியும். அந்நிகழ்வுகள் நடந்தேறிய காலம் தாண்டியும் அவை வாசித்துணரப்பட
வேண்டுமெனில் மயில் லார்ட் கவிதையில் வருவது போல, கவிதையின் கீழே அந்நிகழ்வு குறித்த குறிப்பு இடுவது
உத்தமம்.
Comments
Post a Comment