மதில் -அழகுராஜ் ராமமூர்த்தி

 

மதில் -அழகுராஜ் ராமமூர்த்தி

    மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் zee5 மூலம் வெளியான மதில் திரைப்படத்தைப் பார்த்தேன். அப்படி ஒன்றும் அது நல்ல படமாக தோன்றவில்லை. ஒளிப்பதிவு நன்றாக இருந்ததால் படம் தப்பித்தது எனலாம். நல்ல படமாகத் தோன்றவில்லை என்றால் இதை ஏன் எழுத வேண்டும் என்கிற கேள்வி எழலாம். இதைப்பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் மீண்டும் மீண்டுமாக ஏற்பட்டதாலேயே இதனை எழுதுகிறேன்.

       உடைமை கொண்டாடுதல் என்ற நோக்கில் சுவரை வைத்து சுற்றும் கதையாக மதில் திரைப்படத்தின் கதை அமைந்திருக்கிறது. சண்டை போடும் ஒரு பையனை சைக்கிளில் வைத்து தலைமையாசிரியர் அவன் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக முதல் காட்சி இடம்பெற்றுள்ளது. அந்தக் காட்சியில் புரிந்தது அல்லது கதைக்கு தொடர்புடையது என இரண்டு வார்த்தைகள் மட்டுமே இருக்கின்றன. முதலாவது மன்னிப்பு, மன்னித்தால் விட்டு விட வேண்டியது தானே என்கிற மனப்போக்கில் சிறுவன்  நடந்து கொள்கிறான். இரண்டாவது இறந்த பள்ளி மாணவனின் தந்தை கலைத்துறையில் இருந்தவர் என்கிற செய்தி. தலைமை ஆசிரியர் யார் என்பதை இனம் கண்டு கொள்ள முடியவில்லை. ஒருவேளை நான் படத்தை சரியாக கவனிக்க தவறியதன் விளைவா அல்லது காட்சியை தேவையற்ற முறையில் வைத்திருக்கிறார்களா என்றும் பிடிபடவில்லை. படத்தின் முக்கியக் காட்சியை கொண்டுவருவதற்கு முன் ஏதாவது ஒன்றைக் காட்ட வேண்டுமே என்பதற்காக வைத்துள்ளதாகவே முடிவிற்கு வர முடிகிறது.

      எப்படி இருந்தாலும் கதையில் முதல் காட்சியின் கரு சொந்த வீடு இல்லாதவர்களின் பிரச்சனை என்று நாம் நேரடியாக எடுத்துக் கொள்ளலாம். “குடிக்க கஞ்சி இல்லன்னாலும் இருக்க குடிசை வேணும்என்று பலர் சொல்வதை கேட்டிருக்கிறேன். அது இந்தப் படத்தில் உள்ள காட்சிக்கு பொருத்தமான சொலவடையாக படுகிறது. என்னதான் நாடோடி மனநிலை அவ்வப்போது முளைத்து வெயில் மற்றும் மலையை உடன் வைத்து வெட்ட வெளியில் படுத்து தூங்கினாலும் கூட ஏதொவொரு சமயத்தில் தனக்கென்று மறைவான இடம் வேண்டும் என்ற தேவையை உணர்ந்துகொள்ளத்தான் செய்கிறோம். ஒரு இடத்திலிருந்து துரத்தி அடிக்கப்படாமல் சுதந்திரமாக வசிப்பதற்கென்றே அதனை சொந்தம் கொள்ள வேண்டியுள்ளது. சுதந்திரமாக நமக்கு இருக்கும் பைத்தியக்காரத்தனத்தை ஒத்திகை பார்ப்பதற்காகவென்று சொந்தமான மறைவிடம் தேவைப்பட தான் செய்கிறது. சரி படத்திற்கு வருவோம். இந்தப் படம் வலியுறுத்துவது மறைவிடம் என்ற சொல்லிற்கு மாற்றாக இருப்பிடம் என்பதாகும்.

       தந்தை இறந்துவிட்டார், மழை பெய்கிறது. மழை நீர் கொட்டும் வீதியில் இறந்த சடலத்தை கிடத்தி வைத்துக்கொண்டு வாடகைக்கு இருந்த வீட்டின் முதலாளியிடம் வீட்டிற்குள் சடலத்தை வைக்க அனுமதி கேட்கிறார்கள். அவர் ஆக்ரோஷமாக மறுக்கிறார். அப்போது மகனுக்கு தந்தை இறந்ததன் மீது இருந்த வருத்தம் சடலத்தை வைக்க இடமில்லையே என்ற இடத்திற்கு தாவுகிறது. தந்தையின் இறந்த உடலை வைப்பதற்காகவும் அடக்கம் செய்வதற்ககாவும் போராடியவர்களைப் பற்றிய நினைவு வந்தது. தமிழ் மக்கள் அப்படியான காட்சியைப் பார்த்து பழக்கப்பட்டவர்கள்.

      பள்ளி மாணவனுக்கு 55 வயதுக்கு மேல் ஆகிவிடுகிறது. ஆனால் அவன் வயதோடு சேர்ந்து சொந்த வீடு கட்ட வேண்டும் என்கிற எண்ணமும் வளர்ந்ததன் விளைவாக வீடு கட்டக்கூடிய முயற்சியில் அவர் இருக்கிறார். வீடு கட்டக்கூடிய காட்சிகளைப் பேசும் இடத்தில் 1988ல் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியானவீடுதிரைப்படத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். அந்தப் படத்தில் தாத்தா தன் பேத்தி கட்டிய வீட்டை பார்த்து பூரிப்பு அடையும் காட்சியை இளையராஜாவின் இசை சிறந்த தளத்திற்கு கடத்தி இருக்கும். சொந்த வீட்டை பார்த்த பின் பெரியவர் நடந்து செல்லும் வழியில் இறந்து விடுவார். மதில் படத்தில் இறந்தவரது உடல் வைப்பதற்கு என்றே ஒரு சொந்த வீடு தேவைப்படுகிறது. இறப்பு, வீடு என்ற இரண்டிற்கும் இடையில் ஏதோவொரு சம்பந்தம் ஆழமாக ஒட்டிக் கொண்டிருக்கிறது போலும். அதேபோல சேனாதிபதி என்ற கதாபாத்திரம் மதில் என்ற படத்தின் பெயர் ஆகியவற்றை இணைத்து வைத்து பல கோணங்களில் யோசிக்கலாம்.

        வீடு சமூக அமைப்போடு இணைந்து கடந்த நூற்றாண்டில் மட்டுமே பலவிதமான மாற்றங்களை அடைந்திருக்கிறது. பிளாட் முறையில் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பிளாட்களை விலைக்கு வாங்கி அதில் வசிக்கும் முறை பெருநகர வசிப்பிட முறையாக மாறிவிட்டது. மேலும் வீடு கட்டும் முறைகளிலும் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. காண்ட்ராக்ட் முறைப்படி பணத்தை மட்டும் கொடுத்தால் வீட்டை எதிர்பார்த்தபடி வடிவமைத்து கட்டி கையில் ஒப்படைக்கும் நிறுவனங்களோடு உள்ளூர் கான்ட்ராக்டர்களும் தற்போது பெருகியுள்ளனர். வீடு படத்தில் மேஸ்திரி மூலம் வரும் பிரச்சனை முக்கியமான பகுதியாக இடம் பெற்று இருக்கும். இந்த படத்தில் வீடு காண்ட்ராக்ட் முறைப்படி அல்லாமல் சொந்தமாக பொருளை வாங்கி மேஸ்திரி மேற்பார்வையின் கீழ் வீட்டுக்கு சொந்தக்காரரும் இணைந்து வேலை செய்யும் விதமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த படத்தில் இடம் பெற்றிருக்கக்கூடிய வசனங்களை அரசியல் பார்வையுடன் அணுக வேண்டியுள்ளது. காமெடி என்ற பெயரில் ஏதேதோ செய்து வைத்துள்ளனர். பெயிண்ட் அடிப்பதற்கு பெயின்டர் சுற்றுச்சுவரின் மீது ஏறும்போது சுவர் அழுக்காகிவிடுமென துடைத்துவிடுவது போன்ற காட்சிகளை வைத்து வீட்டின் மீது இருக்கும் அவரது பிரியத்தை வெளிப்படுத்துவது அதிகப்படியானதாகத் தெரிகிறது. “நட்புக்காகபடத்தில் வரும் பிரபலமான காட்சி ஒன்றையும் பெயின்டரை வைத்து நவீனவடிவில் கதைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள்.

        மதில் கதையில் இடம்பெறும் வீட்டுக்குச் சொந்தக்காரர் லட்சுமி காந்தன். அவருக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள். மனைவி இறந்து விட்டார் போல அவரைப் பற்றிய எந்த செய்தியும் படத்தில் பெரிதாக இடம்பெற்றதாக தெரியவில்லை. இப்படி சில கதாபாத்திரங்களின் விடுபடுதல்கள் மற்றும் தேவையற்ற சில கதாபாத்திரங்கள் இடம் பெறுதல் முதலானவை படத்தில் தனியாக துருத்திக் கொண்டு தெரிகிறது. மகனுக்கு இந்தி பெண்ணுடன் கல்யாணம் ஆகிவிட்டது. இந்திப்பெண் இந்தப் படத்தில் வரும் இடங்கள் குறைவு என்றாலும் அவர்மூலம் படம் சொல்லக்கூடிய செய்தி கவனிக்கத்தக்கது. லட்சுமி காந்தன் நாடகக்குழு ஒன்றை நடத்தி வருகிறார். அது அவரது தந்தையின் தொழில் என்பது குறிப்பிடத்தக்கது. நாடகக் குழுவின் அங்கத்தினராக மூத்த நடிகர் ஒருவரும் செவித்திறன் குறைந்த நடிகர் ஒருவரும் இரண்டு இளம் நடிகர்களோடு எஸ்.ரோஜா தேவி என்ற பெயர் கொண்ட நடிகையும் இடம்பெற்று இருக்கின்றனர். காவல்துறை ஆய்வாளர் தனக்கிருக்கும் நாடக ஆர்வத்தால் நாடகக்குழுவில் இணைகிறார். நாடகத்தில் புதிதாக நடிக்க வந்தவருக்கு வசனங்கள் கொடுக்கமாட்டார்கள் என்கிற நடைமுறையைச் சொல்வதோடு அவரை வடையும் காஃபியும் வாங்க அனுப்புகின்றனர். காவல்துறை அதிகாரியாக இருப்பினும் நாடகத்திற்கென வரும்போது சில நடைமுறைகள் உண்டு என்பதை அவர்கள் சொல்ல முனைந்தாலும் அதற்குரிய அழுத்தத்தை உணர்த்தாமல் நகைச்சுவையாக அப்பகுதியை நகர்த்த முற்பட்டதாகத் தெரிகிறது. இரட்டை அர்த்தம், எதுகை, மோனை, இயைபு என பலவகைகளைப் பின்பற்றி வசனம் என்ற பெயரில் செய்துள்ள சரக்குகள் எல்லாம் ஒவ்வாமை தரும் வகையில் அமைந்துள்ளது. சிலவற்றை உங்கள் பார்வைக்கு தருகிறேன்

  • Foreign - urine
  • குறி - தற்குறி
  • Old - Gold
  • Lunch - லஞ்சம்

      போன்ற சொற்களை இணையாக வைத்து நகைச்சுவை என்ற பெயரில் கொடுத்ததோடு இரட்டை அர்த்தத்தை தேவையில்லாமல் பயன்படுத்தியும் இருக்கின்றனர். இரட்டை அர்த்தம் வரும்படியான வசனங்களை பாலியல் குறியீடுகளில் அதிகமாக அதன் சுவைநயத்தைக் குறைத்ததில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் முன்னணியில் நிற்கின்றன. அவற்றுடன் போட்டி போடும் வகையில் இப்படியான படங்களும் இப்போது வரத் தொடங்கியுள்ளன. சுவையான ஒரு உத்தியை பாழ்படுத்தியதோடு அதனை மட்டுமே வைத்து வணிக நோக்கில் ரசிகர்களை மடமைத்தனத்தில் மூழ்கடிக்கும் போக்கும் தற்போது வலுபட்டு வருகிறது.

      இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் அரசியல்வயப்பட்டதாக இருக்கிறது.

  • கோட்டால சீட்டு வாங்கி

பேட்டா வாங்க வந்த மாதிரி 

  • தெலுங்கு கத்துக்கோடா பெரிய ஆளா வருவ
  • இந்திக்கு வீட்டுலயே இடம் கொடுத்திருக்கேன்

      போன்ற வசனங்களை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். இட ஒதுக்கீட்டு முறையை விமர்சனம் செயவதோடு நில்லாமல் மற்றொரு இடத்தில் மனைவி சொல்வதைக் கேட்கும் கணவனிடன்சொல்லி வை உன் புருஷன்கிட்டஎன்று சொல்லப்படுகிறது. இதில் மனைவி என்றால் சொல்வதைக் கேட்க வேண்டிய இடத்திலும் கணவன் என்றால் ஏவல் செய்யும் இடத்தில் இருக்க வேண்டும் என்பதை உள்ளர்த்தமாகக் கொண்டு இப்படியான வசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது

       லட்சுமி காந்தன் கட்டிய வீட்டின் சுற்றுச்சுவரை இடைத்தேர்தல் விளம்பரம் செய்வதற்கு தேர்வு செய்கின்றனர். தேர்வு செய்வதற்கான குறியீட்டை நடுஇரவில் பெயிண்ட் பூசி அழிக்கிறார் லட்சுமி காந்தன். மறுநாள் முழுச்சுவரிலும் ஓவியம், எழுத்து என முழுச்சுவரையும் அமர்க்களப்படுத்துகின்றனர். மேஸ்திரியும் பெயின்டரும் சேனாதிபதி என்ற பெயரில் அச்சம் கொள்வதும் பின் சாமான்ய மனிதனாக சித்தரிக்கப்பட்டுள்ள லட்சுமி காந்தனுக்கும் அரசியல்வாதி சேனாதிபதிக்கும் இடையிலான மோதல்கள் சமூக வலைதளம் பொதுமேடை முதலியவற்றை பயன்படுத்தி சேனாதிபதியை லட்சுமி காந்தன் மடக்குவதுமாக படம் முடிகிறது. வழக்கம்போல மகளைக் கொன்றுவிடுவேன் என தந்தையை மிரட்டுவது முதலான காட்சிகள் தவறாமல் இடம்பெற்றுள்ளன. சேனாதிபதி லட்சுமி காந்தன் வீட்டில் மின்சாரம் வராதவாறு செய்கிறான். மின்சாரம் துண்டிக்கப்பட்ட சமயத்தில் புலனாய்வு அதிகாரிகள் வேடமிட்டு மின் அலுவலகம் செல்லும் லட்சுமி காந்தனின் நாடகக்குழு நடித்து மின்சாரத்தை வரவைக்கின்றனர். அப்போது எதற்கென்றே தெரியாமல் லட்சுமி காந்தனின் மகள் அவருக்கு வாழ்த்துகள் சொல்லும்படி காட்சியை அமைத்துள்ளனர். இதேபோல் தொலைக்காட்சியில் விவாதம் செய்யும் காட்சி ஒன்று வருகிறது. அதை ஏன் வைத்துள்ளார்கள் என்றே தெரியவில்லை. படத்தின் ஓட்டத்தை ஓரளவேனும் நன்றாக இருக்கிறது என சொல்ல வருபவர்களை அப்படியெல்லாம் சொல்லக்கூடாது என மிரட்டுவது போல இப்படியான காட்சிகளை அமைத்துள்ளனர்.

      நாடகத்தை மையமிட்ட பெரிய அளவிலான செய்திகள் ஏதுமில்லை என்றாலும் நாடகம் நடிப்பவர்கள் நவீனமயம் ஆனதை பதிவு செய்யும் வகையில்எந்த காலத்தில் இருக்க கையெழுத்து வாங்குறதுக்கு. போன் இருக்குல போட்டோ எடுப்போம்என்று சொல்லக்கூடிய இடத்தைக் குறிப்பிடலாம். மாற்றம் நம்மால் என்ற பெயரில் IASஅதிகாரி ஒருவர் அரசியல் அமைப்பு தொடங்கக்கூடிய இடம். இடைத்தேர்தல் முதலானவை தற்போதைய அரசியல் சூழலுக்கும் ஒத்ததாக இருக்கின்றன. நம் வாக்கு நம் உரிமை என்பது போல என் சுவர் என் உரிமை என்ற முழக்கத்தை லட்சுமி காந்தன் பரப்புகிறார். ஒவ்வொரு நாளாக ஒவ்வொரு செய்தியை வீடியோவாக வெளியிடும் லட்சுமி காந்தன் சேனாதிபதியிடமிருந்து நாடகக்குழுவினரால் பிரிந்து சென்ற இரண்டாவது மனைவியின் பண்ணை வீட்டிலிருந்து ஒரு வீடியோவை வெளியிடுகிறார். லட்சுமி காந்தனைக் கொல்ல வரும்போது வீட்டிற்குள் ஊடகத்தினரை வைத்து படம் எடுக்கும் காட்சி மட்டமும் தப்பித்தோம் பிழைத்தோம் என லாஜிக்காக இருக்கிறது.

      சுவரில் ஓவியம் வரைந்தது தான் இந்த படத்தின் மையமாக இருக்கிறது. பாலங்கள் கட்டியவுடன் பக்கவாட்டுச் சுவர்களை அரசியல் கட்சிகள் உரிமை கொண்டாடுவதை எல்லாம் இப்படம் பதிவு செய்கிறது. 2014 ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியானமெட்ராஸ்திரைப்படம் இரண்டு கட்சியினரிடையே சுவரை வைத்து செய்யப்படும் அரசியலைப் பேசுகிறது. மதில் படம் சாமானிய மனிதன் ஒருவனின் வீட்டுச்சுவருக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான பிரச்சினையை மையப்படுத்துகிறது. சுவர் விளம்பரம் என்பது அரசியலில் முக்கியமான பகுதியாக ஒரு காலகட்டத்தில் இருந்துள்ளது. சுவரை மையமிட்ட எத்தனையோ பிரச்சனைகள் அரசியல்ரீதியாக கிராமங்களுக்குள்ளும் சிறுநகரங்களுக்குள்ளும் இருந்திருக்கிறது. கட்அவுட், நோட்டீஸ், எலக்ட்ரிக் போர்டுகள் என்று பிரச்சாரம் செய்வதைப் போல சுவரோவியமும் முதன்மையான பிரச்சார முறையாக இருந்து வந்துள்ளது. ஓவியக்கலைஞர்கள் பலர் நான் என்னுடைய கட்சியின் சின்னத்தை மட்டும் தான் வரைவேன். எவ்வளவு ரூபாய் கொடுத்தாலும் வேறு கட்சியின் சின்னத்தை வரையமாட்டேன் என்று சொல்லியிருக்கின்றனர். கிராமம் முழுவதும் இருக்கும் சின்னத்தை வைத்து கட்சியில் பெரிய பொறுப்புகள் வாங்கிய அரசியல்வாதிகள் இருந்துள்ளனர். இப்படி சுவரோவியம் பல்வேறு கதைகளையும் செய்திகளையும் தனக்குள் உள்ளடக்கி இருக்கிறது. 1989ஆம் ஆண்டு திறந்தவெளி விளம்பரச் சட்டம் சுவரோவியத்திற்கும் கட்டுப்பாடு விதித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

    இந்தப் படத்தில் நடித்துள்ள நடிகர்களைப் பொருத்தவரை கே.எஸ்.ரவிக்குமார் சில தேவையற்ற வசனங்களை தவிர்த்திருக்கலாம். திவ்யா துரைசாமியின் நடிப்பு நன்றாக வெளிப்பட்டுள்ளது. காத்தாடி ராமமூர்த்தி, சுவாமிநாதன், மைம் கோபி, அர்ச்சனா மற்றும் ஸ்ரீநாத் ஆகியோர் தனித்தனி கதாபாத்திரங்களாகப் பார்க்கும்போது நன்றாகவே நடித்துள்ளனர். ஆனால் திரைக்கதை அவர்களது நடிப்பை கீழே இறக்கிவிட்டது. மதுமிதா வழக்கம்போல தனது பாணியிலேயே நடித்துள்ளார். எஸ்.ரோஜாதேவி என்ற பெயரில் சரோஜா தேவி போல நடிப்பதாக எண்ணி அதிகப்படியான செயற்கை நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். லட்சுமி காந்தனின் மகன் மற்றும் அவனது மனைவி ஆகியோர் இந்தியைப் பற்றி படத்தில் பேச வேண்டும் என்பதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்ட கதாபாத்திரங்களாகத் தெரிகிறார்கள். ஒட்டுமொத்தமாக இந்த படத்தைப் பார்ப்பது ஒரு சோதனை தான். ஒரு முறை சோதனைக்கு ஆட்படுவதில் தவறில்லை என்பவர்கள் படத்தைப் பார்க்கலாம்.

 

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு