சத்யா –விசித்திரன்


சத்யா –விசித்திரன்

      “டேய்! டேய்! இந்த ஒரு நாடகம் மட்டும் வைடா பாத்துட்டு போயிறேன் வைடா” என்று கெஞ்சிக் கொண்டிருந்த எதிர்வீட்டு சியாம்ளா ஆயாவின் தாழ்ந்த குரல் சற்றென்று அவள் பேரனின் பதிலற்ற முகத்தினை நோக்கி “ தூம அடையாறு வைக்குதா பாரு “ என்று கலகலவென்று திட்டத் தொடங்குவது தெருவின் நாலாப்புறமும் கேட்கத் தொடங்கும். சென்ற வாரம் ஆராயி கோழி பாயம்மா வீட்டு வாசல் மண்ணை சீச்சீ விட்டதுக்கு சரியான சண்டை “ஏண்டி கோழி வளக்கிறவ வீட்டுல வச்சி வளத்துக்கோ ஊரு மேய விட்டா ஏ வூட்ட எல்லாம் சீச்சிட்டு கிடக்குது”.

     “வேணும் னே வா பண்ணுறோம் அப்படி பேசுற” 

     “அடிக்கு தேவிடியா முண்ட பேச்ச பாத்தியா எவளோ அதுப்பு இருக்கும் வாய முடிச்சி கிழிச்சி தச்சுடுவேன்”

    “தச்சுத்தான் பாறேன் டி நானும் பாக்கத்தானப் போறேன் முண்ட” என்று ஆராயி விடாமல் பாயம்மாவும் மேல் சண்டைக்கு ஏறினாள்.

     “நீயும் ஊரு மேல போ “ என்று பாயம்மா ஒருபக்கம் விடாமல் பேச அக்கம் பக்கத்தினர் இதுவரை கண்கொட்டாமல் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பார்த்துட்டு எழுந்து செல்வது போல் வேண்டா வெறுப்பாக விலக்கிக் கொண்டிருந்தனர். அதிலும் பூபதி அண்ணே “நல்லா குஜாலா இருக்குல “ என அடித்த கிண்டலைக் கேட்டு ஆமாம் என்று பதில் கூறமுடியாமல். பலரும் மௌனத்தினாலும் சிறிதே புருவத்தின் மேல் அசைவுனாலும் அவர் கருத்தினை ஆதரிப்போராக சமிக்ஞை செய்தனர். சற்று நேரத்திற்கு முன்புதான் முறவாசல் செய்து கூட்டிய மண் மூன்று வாரங்களாக கட்டிய கரையான் புற்று கணக்காய் குவிந்து இருந்தது. கீழே கிடந்த மண்ணை யெடுத்து வாரி “நீ நல்லா இருப்பியாடி கையில கட்ட மொளைக்க வாயில புழுவைக்க நாசமா போயிடுவடி” என்று ஆராயி பாயம்மா மேல் வீச “சண்ட போடுற முண்ட ஏன் வீட்டு வாசல் மண்யெடுத்த இறைப்பா என்ற தன்னுடைய விம்மலை சொல்லமுடியாமல் உதடுகளை கடித்து கோபத்தை அடக்கி கொண்டிருந்தாள் அந்த மெத்தை வீட்டுக்காரி. மறுபுறம் சிறுவர் சிறுமிகளுக்கு திடீர் பொழுதுபோக்கு, வேலைக்கு செல்வது வீட்டிற்கு வருவது என்று கம்பெனி ஷிப்டுகளில் மாட்டிக் கொண்டிருந்தவர்களின் தலைகள் வெளியே நீட்டும் நேரம் அது. ஒரே தெருவில் ஐந்து வருடங்கள் இருந்தாலும் அறிதாய் பார்க்கக் கிடைக்கும் முகங்கள் பார்த்துக் கொள்ளும் நேரமும் அதுவே. அனைவரும் மடக்க “இன்னொரு தபா ஏன் வீட்டு முன்னாடி கோழி மேய்ச்சுது மண்ணெல்லாம் சீச்சி விட்டுச்சுனு கேள்வி பட்டேன் பாத்தேன், மவளே கோழி அடிச்சு சாப்டுவேன்”. பாயம்மா அடி தொண்டையில் இருந்து எக்காளமிட்டாள்.ஆராயியும் பதிலுக்கு ஏதோ சொல்ல அக்கம் பக்கத்தார் அவளை இழுத்துக் கொண்டு போக அவளின் மொழிகள் எழுத்துக்கள் அழிந்த காகிதங்களாய் ஒன்றுமே புரியாமல் அடியே......பாக்க.... விடுங்க......  தூரத்து மெல்லொலிகளை காற்றில் கரைந்து போயின

      இன்று நேரம் ஆகிவிட்டது கோழி இன்னும் வரவில்லை என ஆராயி அதைத் தேடிக் கொண்டிருந்தாள் “யக்கா ஏன் கோழிய பாத்தியா” என் பார்க்கும் முகங்கள் விடாமல் கேட்டாள். பாயம்மா வீட்டைத் தாண்டும் போது “உண்மையால அடித்து தின்னு இருப்பாளோ?” என அந்த இடத்தில் மட்டும் மூக்கால் தேடினால் ஆராயி. எல்லா கோழிகளுக்கு தனித்தனியே வாசம் உண்டு போல. பாயம்மா வீட்டில் சமையலறை ஜன்னல்கள் ஓரம் கண்களை உலாவிட்டே மெதுவாக நடந்து சென்றாள்.  கடைசியில் அந்த தெருவின் முக்கில் யாரும் குடியேறாத பழைய வீட்டின் அருகில் ஒட்டி இருக்கும் பாதம் மரத்தின் மீது  ஜம்முனு கோழி படுத்து இருந்தது. வெளிச்சம் இல்லாத அந்த இடமும் கருநீல நிறத்தில் வண்ணம் பூசிய அந்த பழைய வீட்டுச் சுவரும் தன் கைகளை நீட்டிப்பரப்பிய நாலே முக்கால் வயதான பாதாம்  மரமும், அந்த கருப்பு கோழி உட்கார்ந்து இருந்ததை மறைத்துக் கொண்டது.  உள்ளே செல்ல செல்ல பொருள்களை தனதாக்கி கொள்ளும் இருளைப்போல் அந்த கோழியை தனதாக்கியது, அந்த பாதாம் மரமும் பழைய சுவரும். கோழியை கண்டுபிடித்த மகிழ்ச்சியில் ஆராயி அதை அணைத்து கொண்டு அதே தெருவோரம் வந்தாள். பாயம்மா வீட்டில் இருந்து வெளியே வந்த பார்வதி கையில் புளிச்ச கீரை தொக்கு வைத்திருந்தாள். “என்னடி ஆராயி கோழி கிடைச்சுடுச்சா” என்றவுடன் “ஆமாக்கா தோ!” என கோழியை காண்பித்து “அந்த முக்குவூடுல அதுமேல ஜம்பம்மா போய் உக்காந்துட்டு இருந்துச்சி “

   “சரி சரி டி”

   “கையில  என்னதுக்கா”

   “அதுவா! பாயம்மா புளிச்சக்கீரை தொக்கு செஞ்சு இருந்தாங்க அதான் கொஞ்சம் வாங்கிட்டு வர போனேன்” ஆராயிக்கு சுருக்கென்று இருந்தது. “ச்சீ நம்ம மூக்கு அப்படியா என்ன செத்துப் போச்சு, கொஞ்ச நேரத்துல கோழி குழம்பு வாசனை வந்துச்சு” என்று தனக்குள்ளே முணங்கிக் கொண்டிருந்தாள். உண்மையில் இந்த இடத்தில் மூளை தான் வாசனை பிடித்தது மூக்கு ‘சும்மா இரு மனமே’ என்றே இருந்து விட்டது. “அக்காவ் கோழி கிடைச்சிடுச்சுன்னு எங்க வூட்டுக்காரருக்கு ஃபோன் போட்டு சொல்லணும் போன்ல பேலன்ஸ் தீர்ந்து போச்சு கொஞ்சம் போன் குடேன்” என கேட்க “தோ! வா டி வீட்ல அமிர்தா இருப்பா அவளாண்ட வாங்கி தரேன்” என்று வீட்டு வாசலில் நின்று கொண்டு “அமிர்தா ஓய்…….

   அமிர்தா‌…..ஆ……அமிர்தா…..ஆ

   செவிட்டு முண்ட காதுல வாங்குதா பாரு” எந்நேரம் பாரு ஃபோன பாத்துட்டு இருக்கும்”  எனக் கூறிக்கொண்டு பார்வதி உள்ளே நுழைந்தாள். கையில்‌ வைத்திருந்தா புளிச்சக்கீரை பாத்திரத்தை சமையல் கட்டில் வைப்பதற்கு முன்னால் அமிர்தாவை கண்களால் தேடிக் கொண்டிருந்தாள். கட்டிலின் மேல் அமிர்தா ஃபோனை வெரித்து பார்த்துக் கொண்டிருந்தாள். தொடுதிரை மேல் விரல்களை வைத்து எப்போதும் ஆசிரியர் திருத்துவது போன்று மேல்நோக்கி  தேய்ப்பது கொண்டிருப்பதுப் போல இப்போது இல்லாமல் வெறுமனே தொடுதிரையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தாள். ஏதோ ஒன்றின் உடைய காத்திருப்பு அவள் கண்கள் முழுதும் பரவியிருந்தது. இரும்பு கட்டிலின் மேல் டம் ….. என்று புளிச்சக்கீரை பாத்திரத்தை வைத்தாள் பார்வதி. அந்த அதிர்வலையில் திடுக்கிட்டு பதறினாள் அமிர்தா. பார்வதி வழக்‌கம் போல்  “காது கேக்குதா இல்லையா செவிடா நீ? 

   “ஆ!....சொல்லுமா என்ன ஆச்சு?”

    “ஆ மயிராச்சு , சாவுக்கு வர சொன்னா பாலுக்கு தாண்டி வருவ  பிரோஜனமா ஒன்னு பண்ணி இருக்கியா”

   இன்னா மா?

   “சரி ஃபோன கொஞ்சம் குடு அவ பேசணுமா” என்று வார்த்தைகளுக்கிடையே சிறிய நேர இடைவெளி விட்டு அமிர்தா கொடுப்பதற்கு முன்பே கையில் இருந்து குடுடி என்று வெடுக்கென பிடுங்கினாள். எல்லா முறையில் எளிதில் தந்து விடுவாள் அமிர்தா. ஆனால் இன்று சின்ன தயக்கம் காண்பித்தாள் “அம்மோ…” என்று இழுத்துக் கொண்டிருந்தாள். இடது காலை பின்னோக்கி வளைத்து உட்கார்ந்திருந்த அமிர்தாவால் உடனே எழுந்திருக்க முடியவில்லை. “அம்மா… அம்மா…” என்று கூறிக் கொண்டே இரண்டடி எடுத்து முன் வைத்தாள்.  ஐந்து நிமிடத்திற்கு பின்பு பார்வதி ஃபோனை கொண்டு வந்து அமிர்தாவிடம் நீட்டி “ரொம்ப தாண்டி ராங்கிக்கிற பாலா  வேடிக்கை காட்டுற ஃபோனை கேட்டா, நானும் ஒன்னு வாங்கிக்கிறேன், கண்றாவி இத ஆன் பண்ண தெரியாது, கத்துக்குறேன் அப்புறம் உன்னாண்ட வந்து கேட்க மாட்டேன் டி ஹூம்.....ஹூம்…… என்னடி பார்வதியால முடியாதுன்னு நினைக்கிறியா” என்று தன்னிலை விளக்கமாக பார்வதி சொன்ன எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் வெடுக்கென்று ஃபோனை வாங்கி அந்த நேரத்தில் ஏதாவது போன் வந்ததா? என்று கடகடவென்று சோதித்துப் பார்த்தாள். ராப் பாடல்களின் உச்சஸ்தானத்தில் மீட்டப்படும் கிட்டார் போன்று வேகமாக அவளின் விரல்கள் அந்த தொடுதிரையை மீட்டின. ஏதும் அழைப்புகள் வராதது எண்ணி ஆசுவாசப் பட்டாலும் அதே வேளையில் எதுவும் வரவில்லை என்ற கவலையும் அமிர்தாவை வேதனைக்கு உள்ளாக்கிடுவேன் காரணம் அந்த ஒற்றை அழைப்பு.

   வழக்கமாக ஐந்தே முக்கால் மணியில் இருந்து 6 மணிக்குள்ளாக சத்யாவிடம் இருந்து அழைப்புகள் வந்துவிடும் இருவரும் அன்றாடம் நடந்த நிகழ்வுகளை பேசி சிலாகித்து மகிழ்ந்திருப்பார். விடுமுறை நாட்கள் இந்த அழைப்புகளுக்கெல்லாம் பொருந்தாது ஒரு நாள் அமிர்தா அவளின் தாய் மாமன் இறப்பிற்காக வெளியூருக்கு சென்று இருந்தால் இதை அறியாது சத்யாவும் வாடிக்கையான நேரத்திற்கு அழைப்பு விடுக்க ஏதும் சொல்லாமல் வழக்கம்போல் பேசி வைத்தாள் மறுநாள் வகுப்பறையில் “ஏய் லூசு நேரம் காலம் எல்லாம் இல்லையாடா? சாவுல இருக்கிறப்போ கரெக்டா கால் பண்ற” என கேட்க சத்யா அமிர்தாவை நோக்கி “எனக்கு தான் தெரியாது கால் பண்ண உனக்காட்சும் அறிவு வேண்டாம் அப்புறம் கூப்பிடுகிறேனு சொல்லி போன வைக்க வேண்டியதுதானே” என்று சொன்னவுடன் திருதியான விழித்துக் கொண்டிருந்தாள் அன்று அவள் முகம் போன போக்கை வைத்து கிட்டத்தட்ட ஒரு மாதம் வரைக்கும் கலாய்த்து தள்ளினான் சத்யா. ஆனால் இன்றோ ஒரு அழைப்பும் வரவில்லை இது பெருத்த ஆச்சர்யத்தையும் வருத்தத்தையும் ஒரு சேர அமிர்தாவினுள் ஏற்படுத்தியது. 

   மணி கொஞ்சம் கொஞ்சமாக கோடை வெயிலில் நிழல் நகர்வதைப் போல ஓடிக் கொண்டிருந்தது ஒவ்வொரு முறை ஃபோன் அதிரும் போதெல்லாம் அமிர்தா எடுத்துப் பார்த்து கொண்டிருந்தாள்.

    ஏமாற்றம்…… ஏமாற்றம்……. மற்றுமொரு முறை ஏமாற்றம்

   மாற்றமின்றி இதுவே அமிர்தாவுக்கு கிடைத்துக் கொண்டிருந்தது. 

   முடிவில் மணி ஏழைத் தொட்டது. பார்வதியும்  “ஏண்டி வீட்ட பாத்துக்கோ மிளகா தனியா அரைக்க கொடுத்திருந்தேன்ல ஏழு மணிக்கு வர சொன்னாங்க போயி வாங்கிட்டு வரேன் மறுபடியும் சொல்றேன் வீட்டை பாத்துக்கோ இதையாச்சும் காதுல வாங்கு” என்று கூறிவிட்டு அங்கிருந்து பார்வதி மெல்ல நகர்ந்தாள். அமிர்தாவும் இதுதான் சரியான நேரம் என்று எண்ணி சத்யாவுக்கு போன் பண்ணினாள்.

   பலமுறை அழைப்பு விடுத்தும்  கவனியாது போல் சத்யா பாவனை செய்து இருந்தான்.

     மாலையில் அமிர்தா பஸ் ஏறிச் சென்றவுடன் சத்யா பஸ்டாண்டுக்கு தாமதமாகவே வந்தான். அது அவன் வரும் வழக்கமான நேரமில்லை. வெங்கட் அண்ணன் குறித்து அமிர்தா கேட்கும் கேள்விகளை எவ்வாறு எதிர்கொள்வது என மனத்தில் போட்டு புழுங்கி கொண்டிருந்தான். கட்டாயம் மாலையில் போன் பண்ணும்வோம் அதை இன்றைக்கு தவிர்த்து விடுவோம் என்று முடிவு செய்தே அந்த பஸ் ஸ்டாப்பில் இருந்து கிளம்பினான் சத்யா.

     கூச்சலும் குமட்டல் வாடையும் நிறைந்த ஒத்த வாடை நோக்கி நடந்த சத்யாவுக்கு இது பெரிய தொந்தரவு செய்யவில்லை. கறிகடைக்கு ப்ராய்லர் கோழிகள் ஏற்றி வரும் வண்டியின் அருகே யாரும் செல்வர் இல்லை. அந்த  கூண்டுகளின் நிலைமை என்பது மிகவும் அருவருக்கத் தக்கது துருபிடித்த அந்த கம்பிகளின் ஊடே  என்றோ மாட்டிய இறக்கைகள் இறந்து போன கோழிகளின் நினைவு சின்னங்களாய் அங்கேயே தங்கி விடும், காய்ந்த எச்சங்கள் கூண்டுகளின் கீழ் பகுதியை துளைகள் அற்றதாய் மாற்றி விடும்.  வாடிக்கையாக கட்டாயம் அந்த வண்டியில் இரண்டு மூன்று கோழிகள் இறந்து கிடக்கும். கோழிகளின் அவலக்குரல்கள் காதுகளில் குடையும், அந்த வண்டியை தாண்டுபவர் மூக்கை பொத்தாமல் போனதே கிடையாது. மூக்கை பதம் பார்த்து விடும். அந்த வண்டியில் வந்து கோழிகளை இறக்கிவிட்டு வருபவர்களுக்கு மூக்கு இல்லையா? வயிறு அதைக் காட்டிலும் வெறுமையாய் இருக்கிறது நினைக்கிறேன். சத்யா அந்த வண்டியினை கடக்கும் வரையில் அசைவற்ற கல்லினைப் போல் முகத்தில் எவ்வித பாவனைகளும் செய்யாமல் இருந்தான். மகிழமரம் தரும் காற்றில் அவன் தலைமுடி அசைந்தாடுகிறதே மற்ற படி எல்லாம் அம்மிக்கல் இறுக்கம்.

      வீட்டினுள் நுழைந்த சத்யா தன்னுடைய இயல்பில் இருந்து விலகியே இருந்தான். என்ன சொல்லி சமாளிப்பது என்றே தனக்குள்ளே பல முறை கேள்விகள் எழுப்பி விடைகாண முயன்று கொண்டிருந்தான். அமிர்தா விடாமல் ஃபோன் அடித்தும் அதை எடுக்காமல் தவிர்த்துவிட்டது அவனுக்கு பெருத்த ஆசுவாசத்தை தந்தது. தற்காலிகமாக இதை தள்ளிப்போட்டானே தவிர கட்டாயம் பதில் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவனுக்கு இருந்தது.

     ஆனா விஷயங்களை தள்ளிப்போடுவதில் எங்கோ ஒரு ஆனந்தம் கிடைக்கிறது இதை மறுப்பார் யாருமிலர். அந்ந ஆனந்தத்தை  அன்றைய இரவு விழுங்கி விழுங்கி பகல் (பயம்)வளர்ந்தது.

     அமிர்தாவும் எப்படியாவது  கேட்டு விட வேண்டும் என்ற வேட்கையில் போர்வையைப் போர்த்தி படுக்க சென்றாள். சொல்லாமல் தப்பிக்க வேண்டும் என்று சத்யாவும் நினைந்திருக்க முரண்களுக்கு மத்தியில் நகர்ந்த இரவு 

ஆராயி கோழியின் கொ  கொ கொ கூச்சலில் பிடிபட்டு போனது.

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு