சத்யா -விசித்திரன்
சத்யா -விசித்திரன்
இறால் வேகவைக்க தேவைப்படும் இளஞ்சூடு போல கதிர் உமிழும் சூரியன். ஈரப்பதம் உள்ளக் காற்று அடர் தாவரங்களின் பச்சைவாசனை மூக்கைத் தொளைக்கும் வழக்கமான ஜுன் மாதத்திற்கான வானம் அதுவல்ல. வான்கோ ஓவியங்களில் வரும் புலர்ந்தும் புலராதது போன்ற காலைப்பொழுது. பரப்பரப்பான மாநில நெடுஞ்சாலையில் அமைந்த அந்த கல்லூரி ஒரு புத்தமடம் போன்றது. அவ்வளவு அமைதி, மனநிம்மதி. இரண்டு வாசல் கொண்ட அந்த கல்லூரி வாயில்களில் கடமைக்கென்று இரண்டு காவலர்கள் தெரிந்த முகங்கள் ஆயினும் கழுத்தில் தொங்கும் ஐடி கார்டில் உள்ள முகம் சரிதானா? என்று சோதித்து அனுப்புவர். தொழில்பக்தி போல கல்லூரி உள்ளே சென்று பார்த்தால் கல்லூரிக்கு சம்மந்தம் இல்லாத பத்து பதினைந்து பேர் தினமும் உள்ளே நுழைந்துவிடுவர்.
பக்தியில் குறைபாடு இருக்கிறது போல, வாசலில் நிற்கும் ஒரு அக்கா ரொம்ப பழக்கம். பெயர் எல்லாம் கேட்கக்கூடாது. காரணம் யாருமே கேட்டதில்லை. நல்ல உறவுகளுக்கு பெயர்களோ அடையாளங்களோ தேவைப்படுவதில்லை. ‘செக்யூரிட்டி அக்கா’. என்று சொல்வதில் வரும் நெருக்கம் பெயரில் கிடைக்காது போல, எங்களைப் பார்த்தவுடன் ‘என்னடா சாப்டியாடா’ என்று கேட்க முகத்தில் பட்டுத் தெறிக்கும் புன்முறுவல் சாப்பிடாமல் வரும் பல காலைப் பொழுதுகளிலும் எங்களை அறியாமலே ‘சாப்பிடோம் கா’ என்ற பதிலளிக்கச் செய்யும், மந்திரப்புன்னகை பலருக்கும் அந்த சூட்சமம் புரியாது.
வண்ண வண்ண ஆடைகளில் மாணவர்கள் உள்ளே செல்வதை பார்க்கையில் குழந்தை பிரிக்க முற்பட்டு கிழிந்த ஜெம்ஸ் மிட்டாய்களின் சிதறல் போல் இருக்கும். கல்லூரியில் உட்சாலைகளில் அழகிற்காக வளர்க்கப்பட்ட மரங்கள் நெட்டை நெட்டையாய் சல்யூட்டு அடிப்பதுபோல் இருக்கும். காற்று அவ்வப்போது இலைகளை அசைப்பதை வைத்தே அவை மரங்கள் என்று அறிய முடியும். புல்வெட்ட வரும் கார்டனர் ராஜேந்திரன் அண்ணண் ஒவ்வொரு முறையும் இந்த இடத்தில் பணிசெய்யும் போதெல்லாம் இங்கு இருந்த மகிழ மரங்களையும் அந்த மகிழம்பூ வாசனையும் நினைவு கூறுவார். ‘‘இந்த மரம் இன்னா காத்து தருதுனு நட்டு வச்சுனு இருக்காணுங்க’’ என்று நெட்டை மரங்களைத் திட்டும்போது ஏதும் சொல்ல முடியாமல் அவை மௌனமே காத்திடுகின்றன.
கல்லூரி வாசலில் இருந்து வகுப்பறை வரையிலும் ‘‘வா மச்சான், வா மாமா’’ என்ற சொல்லாடல்கள் காதில் விழாமல் இருக்காது. கல்லூரி நேரம் காலை 8:30மணி என்பது எழுதபட்ட விதி. ஆனால் யாரும் அவ்வாறு வருவதில்லை முதல் மணிநேரம் (ஃபஸ்ட் ஹவர்) யாரு என்று ஆட்களுக்கு தகுந்தார்போல் வருவது ஒருமித்த நிகழ்வு. அப்படி பார்த்தால் இன்று முதல் மணி நேரம் ஜெனரல் இங்கிலீஷ் எடுக்கும் விஷ்ணுபட் சார் உடையது. மாணவர்களை அதட்டிக் கேட்கும் பழக்கம் இல்லாதவர். முன்னால் படித்த சீனியர்கள் சொல்லும் போது ‘’முன்னாடி எல்லாம் அவரு செம டெரரு புக் இல்லனா கிளாசுக்கு உள்ளயே விடமாட்டாரு.. புக்கெல்லாம் கிளாஸில பறக்கும் ஆனால் இந்நாளிலே அந்த கூற்றெல்லாம் ஏருக்கு மாறாக உள்ளது. அவ்வளவு அமைதியாகி விட்டார்.’’ வயது மூப்பும் அவர் எதிர்நோக்கி இருக்கும் புரோவின்ட் ஃபண்ட்டும் அவருடைய உக்கிரத்தை தணித்துவிட்டது போல் நினைக்கிறேன். ஆனால் அமிர்தா கிளாஸ் தொடங்குவதற்கு முன்பாகவே வந்து அமர்ந்தாள். காரணம் நேற்றைய தினம் சத்யாவை சந்தித்து என்ன ஆனது என்று கேட்கவேண்டும் என நினைத்தால் அது கைக்கூடவில்லை.. இன்னைக்கும் ஏதாவது டிமிக்கி கொடுத்து விடுவான் என்பதற்காக வெகுசீக்கிரம் வந்துவிட்டாள். என்றைக்கும் சத்யா வகுப்பிற்கு வருவதற்காக வீட்டில் இருந்து கிளம்பியவுடன் ஒரு மெசேஜ் போட்டுவிடுவான். ஆனால் இன்றோ ஒன்றுமே வரவில்லை.
ஒரு
வழியாக விஷ்ணுபட் சாரும் அவருடைய பாடத்தை
முடிந்தார். என்றுமே இவ்வளவு நேரம் அவர் வகுப்பில் அமராத அமிர்தாவிற்கு
புதுவித அனுபவமாக இருந்தது. மணியோ 9:30யை நெருங்க
முற்பட்டுக் கொண்டிருந்தது. விஷ்ணுபட் சார் அங்கிருந்து
கிளம்பியவுடன் வகுப்பு
முழுவதும் ஒரே சலசலப்பு. வகுப்பில் இருந்தபோதும் இதே கதைதான். பெரும் மாறுபாடு ஒன்றும் இல்லை. அமிர்தாவின் வகுப்பு தோழிகள் எல்லாம் ‘‘வாடி போய் கேன்டின் போய்ட்டு வருவோம்.’’ கூப்பிட்ட உடன் அரை மனசுடன் அந்த மர நாற்காலியை
விட்டு எழுந்தாள். கைகளால் மேசையை தடவிக்கொண்டே
அதன் முடிவில் வருகையில், ‘இன்னும் கொஞ்சம் இந்த மேசை
நீண்டு கொண்டே இருந்து
இருக்கலாம்’ என
மனதிற்குள் பேசிக்கொண்டே,
அந்த தீண்டல் அவளுக்கு
ஒரு ஆறுதலை தந்தது போலும் கேன்டினுக்கும் வகுப்பறைக்கும் ஓயாது நடந்த கால்களினால் உண்டான தடத்தின் வழியே அமிர்தாவும் உடன் தோழிமார்களும் சென்றனர். கேன்டினில் எப்பொழுதும் மூன்று, நான்கு
ஆண்களின் அட்டிகள் இருக்கும். பெண்களை ரசிப்பதற்கென்று. ஆனால் சற்றே கூர்ந்து கவனித்தால் கோயட் கல்லூரிகளில் ஆண்களை சைட் அடிக்கும் பெண் குழுவும் அங்கே தென்படும். ஆண்களின் உருவ அமைப்பு, முடியின் வருணனையெல்லாம் கேட்க முடியும்.
‘ஏய் அவன பாரேன் வெள்ளையா ஐட்டா இருக்கான்’
‘மச்சி அந்த மூலையில் பாரு.. ஜிம் பாடி கருப்பா இருக்கான்’
‘அங்க ஒருத்தன் வாரான் பாரு தொப்பையா’
‘அவனுக்கென்ன குறைச்சல் சப்பியா இருக்கான்’
இது போன்ற ரம்மியமான காட்சிகள் காணக் கிடைக்கும். அமிர்தாவும் இந்த குழுவில் ஒரு அங்கம் வகிப்பவள். காலையில் வரும் பிரேக் ஹவரில் கட்டாயம் போய்விடுவாள். இது தொழிலாகவே கொண்டிருந்தாள். இன்று மனமோ முழுதும் அங்கு இல்லை. அவர்கள் அடிக்கும் நல்ல ஜோக்குகளுக்கும் சிரமப்பட்டு சிரித்தாள். அவளுக்கு வாங்கிய பப்சும் ஒரு கடியுடன் மீதம் இருந்தது. அந்த கடி கூட சம்பிரதாயத்துக்கு தான் என்பது அறிந்த ஒன்று. இண்டர்வெல்லுக்கு பாதி பேர் கிளம்பிவிடுவது வழக்கம் அப்படி இருக்க இனி இன்றைக்கு சத்யா கட்டாயம் வரமாட்டான் என்கிற உறுதிபடுத்திக் கொண்டாள். சத்யாவின் கோபம் இருக்க இருக்க அவளுக்கு கூடியது.
சத்யா வரமாட்டான் என்று அறிந்த பின்னர் அமிர்தா வகுப்பிற்கு செல்வதில் எந்த பலனும் இல்லை என முடிவெடுத்து அங்கிருந்து நகரத் தொடங்கினாள். பஸ் வருவதற்கு 1:45மணி ஆகும் அதுவரையில் கல்லூரியின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள ஸ்டோன் பென்சில் அமிர்தா அமர்ந்திருந்தாள். உடலை விட்டு விதைப்பை வெளியே வந்திருப்பது போல் கல்லூரி வளாகத்திற்கு உள்ளே இருந்த அந்த வாகை மரம் தன் கைகளை வெளியே தள்ளி அமிர்தாவிற்கு நிழல் கொடுத்துக் கொண்டிருந்தது. சிறிது நேரம் ஃபோனை பார்த்துக் கொண்டிருந்த அமிர்தா அதில் தோய்வடைந்து பையில் இருந்து ஒரு சிறிய புத்தகத்தை கையில் எடுத்தாள். ஏற்கனவே பாதிக்கு மேல் அந்த கதையினை வாசித்து இருந்தாள். பிரபஞ்சனின் ‘மரி என்கிற ஆட்டுக்குட்டி’ அந்த கதையை, அவ்வளவு நேரம் நிழல் கொடுத்து கொண்டிருந்த மரம் காற்றினால் சலசலத்தது. இவ்வளவு நேரம் இலைகளால் ஒட்டு போட்டிருந்த நிழல் கிழிந்த டவுசர் போல் வெயிலை பிரசவித்தன. பனியார குழிகள் அளவினான அந்த ஒளி ‘’குழந்தைகள் வாழ்வில் புதிய வர்ணங்களைச் சேர்த்து பலூன்கள்’’ என்றாள். ‘மரி’ ஆகிய வரிகள் மேலும் பிரகாசித்தன. பிரபஞ்சன் இன்னும் ஒளிபெற்றார். அந்த பக்கத்திலிருந்து ஆர்வமுடன் படிக்கலாம் என்று தொடங்கிளாள். திடீரென்று அந்த வழியே கடந்து சென்ற சரிதா அக்கா ‘’அமிர்தா எப்படி இருக்க டி’’ என்றவுடன் பிரபஞ்சனை கீழே வைத்துவிட்டு யாரென்று அறிய தலைதூக்கினாள்.
ஆள் பார்ப்பதற்கு ஒடிசலான உடம்பு கண்ணங்குழிகள் மேலும் உள்வாங்கி இருந்தது. மெரூன் கலர் நைலான் புடவையைச் சுற்றிக் கொண்டு இருந்தாள். அவளின் முதுகில் தோள்பட்டை எலும்புகள் நகர்வது அப்பட்டமாக காணலாம். அமிர்தா வந்தது சரிதா என்று அடையாளம் கண்டுகொண்டாள் ‘’சொல்லுங்க அக்கா எப்படி இருக்கிங்க? பாத்தே ரொம்ப நாளாச்சுனு? வீட்ல எல்லாரும் எப்படி?’’ என்ற கேள்விகளை அடுக்கிகொண்டே போனாள் அமிர்தா. சரிதாவிற்கு ஓரே ஆச்சரியம் அமிர்தாவின் நலவிசாரிப்பை பார்த்து, காரணம் அமிர்தாவும் சரிதாவும் சந்தித்தது இரண்டே முறைதான் இதற்கு முன்பு சத்யாவுடன் மெக்கானிக் ஷெட் வந்திருந்தபோது வெங்கட் அண்ணன் என் மனைவி தான் என்று சரிதாவை அறிமுகப்படுத்தினார். பின்பு கல்லூரிக்கு பஸ் ஏறும்போது ஒருநாள் சன்னல் ஓர இருக்கையில் அமர்ந்திருந்த அமிர்தா, வீட்டிற்கு காய்கறி வாங்கி சென்றிருந்த சரிதாவை பார்த்து பேசினாள். இவை தவிர எதார்த்தமாகக் கூட பார்த்தது கிடையாது. வியப்பை எல்லாம் ஓரங்கட்டி ‘’ஆ! நல்லா இருக்கேன் டி (உதட்டில் இருந்துமட்டும்). நீ என்ன ஆளு ஒரு மாதிரியா இருக்க’’ என்று கேட்டாள் சரிதா.
‘’அதெல்லாம் ஒன்றும் இல்லக்கா’’
‘’சும்மா சொல்லுடி’’
‘’இந்த சத்யா பையன் தான் சொல்லாமா கொல்லாம எங்காயவது போயிடுறான் கடைசியா நேத்து உங்க வூட்டுகாரர் கூட பேசுனா அதுக்கு அப்புறம் அவன ஆலே காணோம்’’. வெங்கட் அண்ணன் பேச்சை எடுத்தவுடன் சரிதாவின் முகம் வாட்டம் அடைந்தது. சரிதாவின் மூலம் எதையாவது அறியலாம் என்று நினைத்த அமிர்தாவிற்கு இது பெருத்த ஏமாற்றத்தை தந்தது.
‘’என்னக்கா ஆச்சு’’ அவருக்கும் உங்களுக்கும் ஏதாவது சண்டையா?
‘’ஹூம்…..அத
ஏன்டி கேக்குறா அவருடன் என்னிக்கு நிம்மதியா இருந்தேன் சண்டைனு தனியா ஒன்னு சொல்ல..’’ பெருத்த மூச்சுடன் ஒரு நிசப்தம் . வெங்கட் அண்ணன் பேச்சை எடுத்தவுடன் ஏன்? சத்யா வாட்டமடைந்தான். இப்போது சரிதா அக்கா சொல்லிச் செல்வதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ
என்ற கலக்கத்திலே சரிதாவிற்கு
அங்கிருந்து விடைகொடுத்தாள்.
மீண்டும் அந்த ஸ்டோன் பென்ச் மீது அமர்ந்து,
பிரபஞ்சனை கையில் எடுத்தாள்….
Comments
Post a Comment