கைக்குள் பிரியும் ரேகைகள் -அழகுராஜ் ராமமூர்த்தி
கைக்குள் பிரியும் ரேகைகள்
-அழகுராஜ் ராமமூர்த்தி
“கைரேகைக் கொடியில் கனவுப்பூ” என்ற கவிஞர்
பா.இரவிக்குமாரின் கவிதைத் தொகுப்பில் கவிதைகள் ஒருபக்கம் இருக்கிறதென்றால்
மறுபக்கம் கவிதை குறித்த உரையாடல்கள் இருக்கிறது. இவ்விரண்டுமே பலம் சேர்ப்பதற்கு
காரணம் ஒவ்வொருவரும் வெவ்வேறு தர நிலைகளில் நின்று கவிதைகளை
வாசிப்பிற்குட்படுத்தியதாகும். கவிதைகளைக் குறித்து பார்ப்பதற்கு முன்
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகள் குறித்தான பார்வைகளைப் பார்க்கலாம்.
நேரடியாக கவிதைக்குள் செல்லாமல் கவிதைகள் குறித்து ஆழமான வாசிப்பின்வழி நின்று எழுதப்பட்ட
கருத்துகளை முன்வைப்பதையே அவசியமான செயல்முறையாகப் பார்க்கிறேன். இன்று கவிதை
நூல்கள் அதிகம் வெளிவருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்புவரை கவிதை வெளிவந்த
அளவில் ஐம்பது சதவீதம் கூட வாசிக்கப்பட்டு பேசுபொருளாகியிருக்கவில்லை. அதற்குப்
பின் அதிக கவனம் கொள்ளப்படும் இலக்கிய வகைமையாக ஒரு பார்வையில் நாவலுக்கு சமானமாக
வாசிக்கப்படுவதும் பேசப்படுவதுமாக கவிதை பரப்பு மாறியிருக்கிறது. இதில் சமூக
வலைத்தளங்களின் பங்கு மிகுதி. ரவிக்குமாரின் கவிதைகள் வாசிக்கப்பட்டிருக்கிறது.
அது குறித்த கருத்துக்கள் தொடர்ந்து இலக்கியத் துறையில் இயங்கி வரும் படைப்பாளிகள்
மூலம் பேசப்பட்டிருக்கிறது என்கிற வகையில் அவர் ஒரு அதிர்ஷ்டசாலி. இது
எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.
“ந.பிச்சமூர்த்தியின் கலை: மரபும் மனித நேயமும்”
என்ற தலைப்பில் வந்த நூலுக்கான முன்னுரையை சுந்தரராமசாமி “கவிஞன் அல்லாத, கவிதை
வாசகன் ஒருவனை வெகுகாலமாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். கடைசியில் கிடைத்துவிட்டான்
என்று என் மனம் துள்ளிய நேரங்களிலெல்லாம் ‘நானும் கவிதை எழுதியிருக்கிறேன்’ என்று
அவன் தன் ஜேபிக்குள்ளிருந்து காகிதங்களை வெளியே இழுப்பான். மீண்டும் ஒரு கவிஞன்!
எனக்கு பார்க்கக் கிடைக்காத கவிஞன் அல்லாத ஒரு கவிதை வாசகன் இந்த அகண்ட தமிழ்
மண்ணில் எங்கேனும் ஒரு மூலையில் இருக்கக்கூடும். இன்று இல்லையென்றாலும்கூட நாளையே
அவன் முளைவிடக் கூடாது என்பதும் இல்லை.” என்று தொடங்குகிறார். பா.இரவிக்குமார்
சிறந்த கவிதை வாசகர் என்பதை அவர் தனது முன்னுரையில் கூறும் கவிஞர்களின் பெயர்களை
அவர் தெரிந்து கொள்ளலாம்.
அவர்கள் ஒவ்வொருவரும் தனக்கென்று தனியாக ஒரு கவிதைத்தளத்தை அமைத்து புதிய பாணியைக்
கைகொண்ட தமிழின் குறிப்பிடத்தக்க கவிஞர்கள். எடுத்துக்காட்டாக, முன்னுரையிலிருந்து
சில பகுதிகளைத் தருகிறேன்.
“மு.மேத்தா, வைரமுத்து, நா.காமராசன், ஈரோடு
தமிழன்பன், அறிவுமதி, இன்குலாப் போன்ற கவிஞர்களை ஒரு வரிவிடாமல் வாசித்தேன்.”
“கலாப்பிரியா, கல்யாண்ஜி, சிற்பி, பசுவய்யா,
ஞானக்கூத்தன், பழநிபாரதி, இந்திரன், த.பழமலய், மு.சுயம்புலிங்கம், சுகுமாரன்,
தேவதச்சன் என்று எண்ணிக்கையிலடங்காத மிகச்சிறந்த ஆளுமைகளை வாசித்தேன்.”
“என் சமகாலத்தில் எழுதிய மனுஷ்யபுத்திரன்,
யுகபாரதி, மகுடேஸ்வரன், நா.முத்துக்குமார், கபிலன், பச்சியப்பன், இளம்பிறை போன்ற
கவிஞர்களின் கவிதைகளை மேடைதோறும் அப்படிச் சிலாகித்தேன். நான் எழுதியிருக்க
வேண்டிய கவிதைகளை இவர்கள் எழுதுகிறார்கள். யாருடைய குரலில் வெளிவந்தால் என்ன?
இன்று என் ஆன்மாவின் அத்தனை கரங்களாலும் என் சமகால கவிஞர்களின் கவிதைகளைத் தழுவிக்
கொண்டேன்.”
“யுகபாரதி, பச்சியப்பன் தமிழச்சி தங்கபாண்டியன்,
பழநிபாரதி போன்ற கவிஞர்களின் நட்பு வாழ்தலுக்கான அர்த்தத்தைக் கொடுத்தது.”
“இன்று கவிதையின் மொழி எவ்வளவோ மாறிவிட்டது எண்ணி
எனக்கொரு மனத்தடை இருந்தது. நரன், ஸ்ரீநேசன், ராணிதிலக், எஸ்.பாபு, கண்டராதித்தன்,
இசை போன்றவர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.”
மேலே எடுத்தாளப்பட்டுள்ள ஐந்து பத்திகளும்
பா.இரவிக்குமார் எப்படியான கவிதை வாசகர், அவர் வாசிப்புத் தளத்தின் பரந்துபட்ட
பார்வையின் அமைப்பு எவ்வளவு விரிந்துள்ளது என்பதை அறியலாம். சுந்தர ராமசாமி கவிதை
வாசகர்கள் கவிதை எழுதுவது பற்றி நொந்தார். இன்று கவிதையை வாசிக்காதவர்களே கவிதைத்
தொகுப்பு போட்டு அதில் ப்ரான்சிஸ் கிருபா மூலம் நான் கவிதைக்குள் வந்தேன் என்று
சொல்லக்கூடிய நிலை தான் இருக்கிறது. இதற்கு சுந்தரராமசாமி என்ன பதில்
சொல்லியிருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது. வெறுமனே கவிஞர் என்ற அடைமொழிக்காக
தொகுப்புப் போடுபவர்களிலிருந்து வேறுபட்டு, தனித்து, கவிப்பிரக்ஞையோடு
வெளிப்படுகிறார் ரவிக்குமார். அவர் சிறந்த கவிஞராக உருகொள்ளும் பல இடங்கள் இந்த
கவிதைத் தொகுப்பில் சாத்தியப்பட்டு இருக்கிறது. பச்சியப்பன் இத்தொகுப்பில் உள்ள
கவிதைகளைக் குறித்து “இத்தொகுப்பின் சிறப்புகளில் ஒன்று கவிதை சரியான இடத்தில்
தொடங்குவதும் முறையான இடத்தில் முடிவதுமாகும்.” என்கிறார். இது எல்லா
கவிதைகளுக்கும் பொருந்தக்கூடிய கருத்தல்ல. எனது வாசிப்பின் வழி எந்தெந்த இடத்தில்
கவிதை விலகியுள்ளது. எந்தெந்த இடத்தில் கச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளது என்பதையும்
சான்று காட்ட நான் தலைப்படுகிறேன்.
இத்தொகுப்பின் முதல் கவிதை “கடைசி சந்திப்பு” இந்த
கவிதை கடைசி சந்திப்பு எனத் தொடங்கி இறந்துபோனேன் என முடிகிறது. கவிதை சரியான
இடத்தில் தொடங்கி முடிந்துள்ளது என்றாலும் கவிதைக்கு நடுவில் ஐந்தாவது பத்தியில்
“மரணம் அது” என்கிற இடத்திலேயே கவிதைக்கான முடிவு சாத்தியப்பட்டுவிட்டது. ஆனால்
கவிதை முடியாமல் மேலும் மூன்று பத்திகள் நீண்டுவிட்டது. கவிதை நீண்டு சென்றதில்
குறைபட ஒன்றுமில்லை. நீண்டு சென்ற வரிகள் போதுமான அளவு நிறைவை அளிக்காததே குறை.
கவிதை ஒட்டுமொத்தமாக உணர்வை பிரதிபலித்திடுனும் முதல் ஐந்து பத்திகள் நிகழ்த்திய
கவித்துவத் தொடுதல் தடைபட்டு மீண்டும் கடைசி பத்தியில் தொடர்கிறது. “பொய் முகங்கள்”
கவிதை சதுரங்க ஆட்டத்திலுள்ள ஒவ்வொரு நகர்த்து விசைகளையும் தானென பாவித்து நகரும்
வகையில் எழுதப்பட்டுள்ளது.
“மறுபடி வாய்க்க வாய்ப்பேயில்லை
ஆட்டத்தைக் குலைத்து
வெள்ளை உள்ளத்துடன்
சிரிக்கும்
குழந்தை உள்ளம்”
என்கிற வரி சொல்லும் செய்தி பிற்காலத்திய
செயல்பாடுகளின் நோய்மையிலிருந்து வெளிவருவதாக இருக்கிறது. அதற்குப்பின் வரும்
“இதுதான் தொடக்கம்” என வரக்கூடிய பத்தி கவிதையின் சீர்மையை அல்லது அதன் ஓட்டத்தைக்
குலைக்கிறது. கவிதையை ஒரு அனுபவமாக வாசிக்கும் பட்சத்தில் அந்த பத்தி
உட்குரலாக தெரிந்தாலும் ஏதோவோர் தொடர்பறுபட்ட நிலையில் இருப்பதாகவும் தோன்றுகிறது.
இதுபோன்ற இடங்கள் இத்தொகுப்பு முழுக்க ஆங்காங்கே விரவிக் கிடக்கிறது. இது
வானம்பாடி மரபின் தாக்கத்திலிருந்து விளைந்தது என எடுத்துக் கொள்ளலாம்.
சமூகப்பார்வையை வெளிப்படுத்தும் கவிதைகள்
ஆங்காங்கே வந்து நிற்பது இத்தொகுப்பின் நல்ல அம்சம். கனவில் வந்த பிணங்கள் மற்றும்
பிணபூமி போன்ற கவிதைகள் சமூகப்பார்வை கொண்ட தன்மையிலானவை. “கனவில் வந்த பிணங்கள்”
கவிதை முந்தைய கவிதைகளிலிருந்து வேறுபட்ட காத்திரமான வன்குரலால் ஆனது. மதத்தையும்
கடவுளையும் பிணங்களைப் பார்த்து வெறித்த கண்களோடு கேள்வி கேட்கிறார் ரவிக்குமார்.
ஒரு கவிதைக்குள்ளிருந்து கலக்கத்தை ஒதுக்கித் தள்ளி வந்தால் அடுத்த கவிதை
“பிணபூமி”. கு.அழகிரிசாமியின் “இருவர் கண்ட ஒரே கனவு” சிறுகதையை நினைவுபடுத்திய
கவிதை பிணபூமி. “மௌனமும் யுத்தமே” கவிதை பாசாங்குகளையும் போலித்தனங்களையும்
எதிர்த்து போர் செய்யும் போர் செய்து போருக்கான மற்றுமோர் போராக இருக்கிறது.
“சக்தியற்று ஒரு முத்தம்” கவிதையும் போரில் தொலைபடுதலின் வலியை நினைவாக்கும்
கவிதையாக அமைகிறது. “வளைகுடா வீரனுக்கு” கவிதை வன்முறை வெறியாட்டத்தில் துண்டு
துண்டாக சிதறும் உடல்களில் வலியும் இரத்தத்தில் பஞ்சைத் தொய்த்து தரையில் பிளிந்து
இதுதான் இரத்தம் என ஊமையாகச் சொல்கிறது. “உன் அடிச்சுவட்டில் நானும்” கவிதை
செய்வதறியாது நிற்கும் இக்கட்டான சூழலில் காதலையும் விடுதலையையும் சமாந்தரமாக
பேசும் தன்மையிலிருக்கிறது.
“தற்கொலை சில குறிப்புகள் -1, சில குறிப்புகள் -2”
ஆகிய இரண்டு கவிதைகளும் தற்கொலை பற்றிய சிந்தனைகளாக உள்ளது. தற்கொலைக்கான
துணிவற்று யோசித்துப் பார்க்கும் வகையில் இருக்கும் இக்கவிதையை வாசிக்கும்போது
எவருக்கெல்லாம் வாழ்வின் ஏதாவதொரு கணம் நினைவுக்கு வருகிறதோ அவர்கள் அதீத
தனிமையின் உளைச்சலில் சில நாட்கள் பீடிக்கப்பட்டு இருந்துள்ளதை உறுதியாக
சொல்லலாம். தற்கொலை பற்றிய சிந்தனைகளுக்கு அடுத்த கட்டமாக அதன் மீதான விரக்தி
படரும். இந்த இரண்டு கவிதைகளும் சிந்தனை என்கிற தளத்துடன் நிற்கிறது. பல
கவிதைகளில் சாவு மீண்டும் மீண்டுமாக மாறுபட்ட கோணங்களில் வருவதையும்
காணமுடிகின்றது. கைக்குள் பிரியும் ரேகைகளாக சாவின் பல்வேறு கிளைகள் இத்தொகுப்பில்
கவிதைகளாகியுள்ளது. “செத்து விடு” கவிதையில் பாட்டியைச் சாகச் சொல்லும் தொனி
இருக்கிறது. துடி துடிக்காமல் அன்பு வைத்தவர்களின் மடியில் கனம் ஏற்றாமல் எவருடைய
முகச்சுளிப்புக்கும் ஆட்படாமல் சாவது நல்ல சாவு. சாவதற்கு முன் வலி அனுபவித்து
இழுத்துக்கொண்டு கிடப்பது சுற்றியிருப்பவர்களுக்கு துன்பம். ஒருவர் மரண கிடக்கையில்
பல நாட்கள் படுத்துக்கிடக்கும் சமயத்தில் நடக்கும் செயல்களை கவிதையாக்கியுள்ளார்
பா.இரவிக்குமார். தற்கொலை பற்றிய சிந்தனையில் துரோகமும் குரோதமும் முக்கியப்
பங்காற்றும். ஒருவரது மனமாற்றம் அவரை அதிகப்படியாக விரும்புபவருக்கு துரோகமாக
காட்சியளிப்பது இயல்பு. அத்தகைய இயல்பை பிரதிபலிப்பதாக “துரோகம்” கவிதை
இருக்கிறது. “அறைக்குள் ஓர் உடல்” கவிதையும் துரோகத்தால் சிதையும் உடல் பற்றிய
கவிதை. பசலை பிடித்தல் என்கிற பிரிவு நோயைக் குறித்த செய்திகள் சங்க இலக்கியத்தில்
உண்டு. அறைக்குள் உடல் எப்படியெல்லாம் வருந்தி துன்பப்படுகிறது என்பதை நவீனக்
கவிதைகள் சமீபத்திய காலத்தில் அதிகம் பேசுகிறது. அதிலொரு கவிதையாக இந்த கவிதையைக்
கொள்ளலாம்.
தற்கொலையைத் தொடர்ந்தவாறு மரணமும் பிணங்களும்
இத்தொகுப்பில் ஆங்காங்கே கிடக்கிறது. “மரணம் என்பது எதுவுமில்லை” கவிதை உணர்த்தும்
செய்தி மரணம் என்பதில்லை. அடைபடும் வாசல்களே அக்கவிதையின் மையமாக அமைகிறது.
தலைப்பு சொல்லும் செய்தி வேறாகவும் கவிதையின் மையம் வேறாகவும் அமையுமாறு இரண்டு
நீரோட்டங்களைக் கொண்டிருக்கக்கூடிய வகையில் அமையும் கவிதைகளும் இத்தொகுப்பில்
உள்ளன. தோல்வியின் நினைவாட்டத்தில் வரும் இறப்பு குறித்த கவிதைகள் கேள்வி
கேட்பவை.புலம்பலின் இரத்தத்தை கண்ணீராக வடிப்பவை. கண்ணீரை இரத்தமாக உடல் முழுதும்
ஓடச் செய்பவை. இந்த வரிசையில் ஏன் இறக்கவில்லை இன்னும், கடைசி இரவு, உயிர்க்கதறல்
முதலிய கவிதைகள் வருகிறது. இந்த கவிதைகளில் வரும் மரணங்களில் தோல்வி பற்றிய சிந்தனைகள்
மட்டுமல்லாது அபத்தமும் ஆபத்தும் இணைந்து வருகிறது. அபத்தக்கணக்கில் நின்று விடும்
இதயம், மரணத்தைத் தள்ளிப் போடும் கண்கள் முதலான கவிதைகளையும் ஆபத்துக் கணக்கில்
பிணபூமி, உன் அடிச்சுவட்டில் நானும், இரத்த சாட்சிகள் முதலான கவிதைகள் அடக்கம்.
வானம்பாடி கவிதைகளின் தன்மைகளுள் ஒன்று கவிதைக்கான
புறவயப்பட்ட பின்னணிச் சூழல். “இன்றைய விலங்குகள்” கவிதைக்குள் அப்படியான ஒரு
தன்மையும் இருக்கிறது. புறவயப்பட்ட பின்னணிச் சூழல் என்பதோடு அகவய மனமும் இணையும்
இடத்தில் இக்கவிதை வானம்பாடி மரபின் தன்மையிலிருந்து சற்று விலகுகிறது. பூனை, எலி,
சிங்கம், ஆமை, முயல், நரி, கிளி, பாம்பு, வௌவால் என்று வரிசைகட்டி வரக்கூடிய
உயிரினங்களால் கவிதை கட்டப்பட்டுள்ளது. புலன் செயல்பாடு அடிப்படையில் ஒவ்வொரு
உயிரினங்களும் மாறுபடும் வகைமையை ஓரறிவு முதல் ஆறறிவு வரை தொல்காப்பியம்
வகைப்படுத்துகிறது. இதில் விலங்குகள் ஐந்தறிவு உயிர்கள் என்ற வகைப்பாட்டுக்குள்
வருகிறது. “இன்றைய விலங்குகள்” என்ற தலைப்புக்குள் பறவைகள் உள்ளிட்ட ஊர்வனவும்
விலங்குகளாகியுள்ளது. “எந்த மிருகத்துடையது?” என்ற கேள்வியுடன் முடியும்
இக்கவிதைக்கு இன்றைய மிருகங்கள் என்ற தலைப்பிட்டிருந்தால் எத்தனை பொருத்தமாக
இருந்திருக்கும். இப்படியான தர்க்கப் பார்வையைக் கடந்து இக்கவிதையில் வரும்
ஒவ்வொரு மிருகங்களும் சில இடங்களில் குறியீடாகவும் படிமங்களாகவும் வந்திருக்கிறது.
ஒரு கவிதை வாசகனிடம் பல்வேறு சம்பவங்களை பொருத்திப் பார்க்கும் வெளியைத் திறக்க வேண்டும்
என்ற ஒரு நிபந்தனை இருந்தால் அதனை முழுமையாக நிறைவேற்றும் கவிதையாக “இன்றைய
விலங்குகள்” இருக்கும். பெரிய பெரிய கதைகளை அவரவர் அனுபவத்திற்கேற்ப
உருவாக்கிவிடும் வார்த்தைகள் பொருத்தப்பாட்டோடு வெளிப்பட்டிருப்பது கவிதையின்
பலமாக இருக்கிறது.
காதல், ரணம், தினமும், மழையும் நீயும்,
சுதந்திரம், உன் கைரேகைக் கொடியில் என் கனவுப்பூ போன்ற கவிதைகளை வைத்தே
“இத்தொகுப்பு தொண்ணூறுகளின் தொடக்கத்தில் வந்திருக்க வேண்டிய ஒன்று என்ற
நினைப்புடன் வாசியுங்கள்” என்று முன்னுரையில் கூறப்பட்டிருக்கிறதோ என்னவோ?
பெற்றோர்களின் வலியைக் கவிதையாக்குதல், இளம்பருவ காதலைக் கவிதையாக்குதல் என்ற
இரண்டு நிலைகளைத் தொடாமல் எவரும் கவிதை எழுதியிருக்க முடியாது என்றே நான்
கருதுகிறேன். பெரும்பாலானவர்கள் அக்கவிதைகளை கவிதைத் தொகுப்புகளில் இடம்பெறச்
செய்துள்ளனர். கவிதைத் தொகுப்புகளுக்குள் இருந்தாலும் இல்லையென்றாலும் இவ்விரண்டு
நிலைகளில் கவிதைகளை எழுதாமல் இருந்திருக்க முடியாது என நான் நம்புகிறேன். கவிதை
எழுதத் தொடங்கும் நாட்களில் இத்தகைய உணர்ச்சிகள் பெரும்பாலும் கவிதைக்குள்
இடம்பெறுவதுண்டு. ஆனால் வெறுமனே உணர்ச்சியை மட்டும் தூண்டிவிட்டு கவிதை அப்படியே நின்றுவிடும்.
“அன்புள்ள அப்பா” கவிதைக்கு முன் இருக்கும் மூன்று கவிதைகள் காதலைப் பற்றியன. அந்த
மூன்று கவிதைகளிலும் தொண்ணூறுகளின் மொழியில் உணர்ச்சி மட்டும் வெளிப்பட்டு
நின்றுவிட்டது. ஆனால் “அன்புள்ள அப்பா” கவிதையிலும் தொண்ணூறுகளின் மொழி
தட்டுப்பட்டாலும் உணர்ச்சி மொழிவயப்பட்டு கவிதையாகி உள்ளது. கீறல்களில் பெதடின்
போடுவதிலிருந்து திரையரங்கு முறுக்கு வரையிலான நினைவுகள் அனைத்தையும் “மங்கலாய்
நினைவில்” எனக் குறிப்பிடும் இடத்தில் கவிதைக்கான மடை வைக்கப்பட்டுள்ளது.
தொண்ணூறுகளின் மொழியில் சமகால கவிப் பொருண்மையாலான
கவிதையாக ஒருமையில் அன்புசெய்தல், வெறுமையாய் மாறும் இதயம் ஆகிய கவிதைகள்
இருக்கிறது. கவிஞர் பச்சியப்பன் கருத்துப்படி தன்னைப் பற்றிய கவிதைகள் என்று
வகைபிரித்தால் அதில் “என் பிரபஞ்சம்” கவிதை விடுபடாமல் நிலைபெறக்கூடியதொரு
கவிதையாக இருக்கும். “கடைசி சந்திப்பு” கவிதையிலுள்ள குறையை ஆரம்பத்திலேயே
சுட்டிக்காட்டினேன். அந்த குறை நீங்கி “சாம்பலாவதன் வலி” சீர்மையுடன்
வெளிப்படுகிறது. அதேபோல “பொய் முகங்கள்” கவிதையிலிருந்த குறை “மனதில் ஒரு வாள்”
கவிதையில் நிறைவாகியுள்ளது. “நான் தாகமாய் இருக்கிறேன்” இயேசுவின் சிலுவைக் காட்சியும்
ஐந்தாம் வார்த்தையும் படிமங்கொள்ளும் கவிதையாகும். இப்படியான மாறுபட்ட கவிதைகள்
பா.இரவிக்குமாரின் கவியாக்கத்திற்கு வலுசேர்ப்பவை. நாமாக இல்லை நாம், வெறுமை,
ஒருமையில் அன்புசெய்தல் என்ற மூன்று கவிதைகளும் சொல்லும் செய்தியும்
வெளிப்படுத்தும் உணர்ச்சியும் ஒன்றே. ஆனால் சொல்லும் மொழி, சூழல், நேரம்,
சொல்லப்படும் இடம் ஆகியன ஒன்றுக்கொன்று முரண்பட்டு பிணைகிறது. ஏதோவொரு தொடர்பும்
விலகலும் இந்த கவிதைகளுக்குள் நிகழ்ந்துள்ளது. துரோகம், உனக்கான மனம் ஆகிய
கவிதைகள் ஒரே தன்மையன. “அந்நியன்” ஏக்கத்தின் குரலாகவும் “வலி” ஏக்கத்திற்கான
பின்னணி அல்லது ஏக்கம் ஏற்படுவதற்கான காரணமாக அமைகிறது. வெறுமை, வாழ்க்கை போன்ற
கவிதைகள் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்களை இருத்தலியல் சிக்கல்களோடு அணுகுகிறது.
வாழ்க்கைச் சிக்கல்களைப் பேசும் இப்படியான கவிதைகள் எழுத எழுத பல பக்கங்கள்
நீள்பவை. எழுத எழுத குறையாதவை. ஆனால் ஏனோ சில கவிதைகளுடன் இத்தொகுப்பு
முடிந்துவிட்டது. வண்ணத்துப்பூச்சி, சுதந்திரம், கண்ணீர் முதலான கவிதைகளில்
வண்ணத்துப்பூச்சியை பறக்கவிட்ட பா.இரவிக்குமார் தமிழின் ஏனைய கவிஞர்களைப் போல
பூனையையும் கவிதைகளுக்குள் ஓட விட்டுள்ளார். இவற்றைத் தாண்டி உடல்கள்
இத்தொகுப்பில் முதன்மையாகின்றன. வெறுமை, உயிர் பூ, கனவில் வரும் பிணங்கள்,
அறைக்குள் ஓர் உடல், செத்துவிடு, சக்தியற்ற ஒரு முத்தம் என பல கவிதைகளில் உடலின்
தேவையும் அவத்தையும் முன்வைக்கப்படுகிறது. நாமாக இல்லை நாம், அந்நியன் முதலான
கவிதைகள் சமகால கவிஞரான மனுஷ்யபுத்திரன் தொடும் கவித்துவத்தைத் தொடும் வகையில்
அமைந்துள்ளதையும் பார்க்க முடிகிறது.
Comments
Post a Comment