புதுச்சேரி திருநங்கையரின் வாழ்வியல் சடங்குகள் -நா. பரசுராமன்

 

புதுச்சேரி திருநங்கையரின் வாழ்வியல் சடங்குகள்

-நா. பரசுராமன்

 

முன்னுரை

     இந்த உலகில் ஆணும் பெண்ணும் இயற்கையின் படைப்பு என்பதில் எந்தளவு உண்மை இருக்கிறதோ அதைப்போலவே திருநங்கையர் படைப்பும் உண்மையே. தமிழ் இலக்கியங்களிலும், நாட்டுப்புற வழக்காறுகளிலும், சமூகத்தின் பல்வேறு சடங்குகள், வழிபாடுகள், திருவிழாக்கள் ஆகியவை சமூகத்தின் விளிம்பு நிலை மனிதர்களாக இன்றளவும் பார்க்கப்படுகின்றன. திருநங்கையரின் நாட்டுப்புற சடங்குகளையும் வழிபாடுகளையும் குறித்து பார்க்கப்படவுள்ளன. மேலும் முதலில் திருநங்கையர்களின் வழிபாடான மாத்தா ராணி வழிபாடு, கூத்தாண்டவர் குல தெய்வ வழிபாடு, பெண் சடங்கு, கூறிக் கொடுத்தல், தத்தெடுத்தல் சடங்கு, இறப்பு மற்றும் பிறப்பு சடங்கு, குறிப்பாக அவர்களின் இரகசிய சடங்குகளும், மறைக்கப்பட்ட சடங்குகளும் ஏதேனும் உள்ளதா? மற்றும் குடும்ப அமைப்பு, உறவு நிலை, சட்ட திட்டங்கள், கட்டுப்பாடுகள் போன்ற தகவல்களை முழுமையாக மற்றும் உண்மையாக தெரிய வேண்டும் என்பதற்காக புதுவையைச் சுற்றியுள்ள சில திருநங்கையரின் வாழிடத்திற்கு சென்று தரவுகள் சேமித்து அவற்றினை வகை தொகைபடுத்தி இக்கட்டுரையில் கொடுத்துள்ளேன்

 

மாத்தா ராணி வழிபாடு

மாத்தாராணி வழிபாடானது பெண் தெய்வத்தைக் குறிக்கும் வழிபாடாகும். மாத்தராணியை சந்தோஷி மாத்தா எனவும் சேவல் மாத்தா எனவும் திருநங்கையரால் பக்தியோடும் பயத்தோடும் வணங்கும்  குலதெய்வமாகவே மாத்தா ராணி  வழிபாடு அமைந்துள்ளது. அவர்களுடைய குலதெய்வமாகவும் முதன்மை தெய்வமாகவும் வணங்குவது சேவல் மாத்தா தவிர கூத்தாண்டவர் கிடையாது. கூத்தாண்டவர் வழிபாடானது புராணக்கதை அடிப்படையில் வைத்து வழிபடுகிறார்கள் குஜராத்தில் அமைந்துள்ள சந்தோஷி மாத்தா கோவிலுக்கு வருடத்திற்கு ஒரு முறையாவது சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். ஆணாகப் பிறந்து விட்டோம் எங்களை பெண்ணாக மாற்றுபவள் சேவல் மாத்தா. ஏற்றுக் கொள்பவளும் அத்தெய்வமே என்கிறார்கள். அறுவை சிகிச்சைக்கு முன் சேவல் மாத்தாவின் வழிபாடு பெருமளவில் அமைகிறது. செவ்வாய்க்கிழமைகளில் மட்டுமே அத்தெய்வத்தின் வழிபாடு நிகழ்கிறது. அறுவை சிகிச்சைக்கு முன் சேவல் மாத்தாவிடம் உத்தரவு கேட்கும் சடங்கு நடைபெறுகிறது. அந்த வழிபாடானது நடு இரவில் பிரமாண்ட உணவுப் படையுடன் நடைபெறுகிறது அதில் குறிப்பாக அறுவை சிகிச்சைக்கு செல்ல இருக்கும் திருநங்கைகளை நிர்வாணப்படுத்தியே பூஜை நிகழ்கிறது. சந்தோஷி மாத்தா தெய்வத்தின் உருவமானது சேவல் மீது அமர்ந்திருக்கும் கோலத்தில் உள்ளது. அதனால் அவர்கள் தனது வாழ்நாளில் சேவல் இறைச்சியை உண்பது இல்லை. அதனை தெய்வமாகவே வழிபடுகின்றனர். .ஆனால் சேவல் இறைச்சி உணவு உடலுக்கு சூட்டை ஏற்படுத்தும் என்பதற்காகவும், அதேசமயத்தில் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் அரிப்பும், காயமும் ஏற்படும். அவற்றை தவிர்ப்பதற்காகவும் சேவல் இறைச்சி உண்ணப்படுவதில்லை. இவை அறிவியல் ரீதியான உண்மை.

 

கூத்தாண்டவர் வழிபாட்டு முறை

     கூத்தாண்டவர் என்று நாட்டுப்புறங்களில் அழைக்கப்படும் கடவுள் மகாபாரத்தில் அரவான் எனும் கதாபாத்திரமாக இடம்பெற்றுள்ளது. இது வில்லிபாரத்தில் களப்பலியாக்கப்பட்ட பாத்திரப் படைப்பாகும். ஒரு பாத்திரம் உயர்த்தப்படுவதற்கு அப்பாத்திரத்தில் ஏதேனும் சிறப்பு இருக்க வேண்டும் அந்த சிறப்பு இந்த கூத்தாண்டவர்க்கு உள்ளது. நாட்டுப்புற மகாபாரத்தில் கிருஷ்ணரிடம் அரவான் கேட்கும் வரங்கள் கவனிக்கத்தக்கதாகும். அரவான் கிருஷ்ணரிடம் மூன்று வரங்களைக் கேட்கிறார். ஒன்று பலியிடு முன் தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். இரண்டு வீரனிடம் சாக வேண்டும். மூன்றாவதாக போர் முழுவதையும் காண வேண்டும். இந்த மூன்று வரத்தில் சிக்கலானது திருமணமே. பலியிடப் போகும் ஒருவனை எந்த பெண்ணும் மணக்க முன் வர மாட்டாள். எனவே கிருஷ்ணனே பெண் வேடமிட்டு மோகினியாக மணக்கிறாள்(ன்). அதன் பிறகு  சில கூத்தாண்டவர் கோவிலில் மோகினியாக அவதாரம் எடுத்த கிருஷ்ணனின் முகம் பெண் வேடமிட்டு கோலத்தில் ஒரு பக்க மீசை இல்லாமல் காணப்படுகிறது. அடுத்து கூத்தாண்டவரின் ஆண்மை சிறப்பை வெளிக்காட்ட மீசையை மேல் நோக்கி வைக்கப்பட்ட நிலையில் கூத்தாண்டவருக்கு திருக்கல்யாணம் நடைபெறும் நிகழ்ச்சியாக உள்ளது. இதில் மூன்று நிகழ்வுகள் நடைபெறுகின்றன. ஒன்று மோகினிக்கு கூத்தாண்டவருடன்  திருமணம் நடைபெறுகிறது.  இரண்டு கூத்தாண்டவர் பலியிடப்படும் படுகம் மூன்று இறப்புக்கு பின் ஒப்பாரி வைத்தல் இதனை தொடர்ந்து திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சிக்காக திருநங்கைகள் புதும பெண்ணாக அலங்காரம் செய்து கொண்டு தனக்குத்தானே தாலி கட்டிக் கொள்கிறார்கள் இதன்படி கூத்தாண்டவரை கணவனாக திருநங்கைகள் ஏற்றுக் கொள்கின்றனர் திருமணம் முடிந்தவுடன் அன்றி இரவு முதலிரவு நடப்பது மரபு. அதேபோல கூத்தாண்டவர்க்கும் தமக்கும் முதல் இரவு நடப்பதைப் போல எண்ணி அன்று இரவு அலங்காரம் செய்து பூ முடித்து பால் பழுத்துடன் கூத்தாண்டவர் முன் வந்து  ஆடிப்பாடி மகிழ்வர். அடுத்து படுகள் நிகழ்ச்சிக்காக களிமண்ணால் பெரிய பொம்மை செய்து அதில் கூத்தாண்டவர் உருவ சிலையை வைத்து போர் கடவுளான காளிக்கு பலியிடும் செயலாக நடத்தப்படும் அரவான் லிக்கு பதிலாக சில இடங்களில் ஆடு, மாடு,எருமை முதலிய உயிரினங்களை  பல இடங்களில் பலியிடுதல் உண்டு பலியிடும் நேரத்தில் தெரிவிப்பதற்காக வானை நோக்கி ஒற்றை வெடி விடுவார்கள் அதனைக் கேட்ட திருநங்கைகள்  தாலியை அறுத்துக் கொள்வார்கள் பின்பு அவர்கள் கூத்தாண்டவர் தலையை வைத்து ஒப்பாரி வைப்பர் இது அழுகள நிகழ்ச்சி என்பர்.  இவை அனைத்து நிகழ்வுகளும் கூத்தாண்டவர் வழிபாட்டில் திருநங்கைகள் வழிபடும் முறையாக உள்ளது.

 

திருநங்கைகள் குறித்து உளவியல் பார்வை

     ஆணாக இருந்து பெண்ணாக மாறப்பட்ட திருநங்கைகள் ஆணாக இருக்கும்போதே உடல் அளவில் எவ்வித மாற்றமும் ஏற்படாதபோதும் கூட மனதளவில் பெண்ணின் மனதை நிலையாக பெற்றிருப்பார்கள். மேலும் ஆணின் மனநிலையில் நான் ஆண் இல்லை பெண்தான் என்ற போராட்ட மனநிலையை நிலையாக பெற்றிருப்பதே அவர்களுடைய இயல்பாகும். இதை உளவியல் கண்ணோட்டத்துடன் பார்க்கும்போது ஆண் பெண்ணாகவோ, பெண் ஆணாகவோ மாறுகின்ற மாறாட்ட உள்ளத்தில் வேட்கை வெளிப்பாடாகும். உளப்பகுப்பாய்வில் மாற்றுப்பால்நிலை(Transexualism) என்று கூறப்படுகிறது. ஒரு ஆண் பெண்ணாக மாற விரும்பினால் அதற்கு நனவிலி காரணம் உள்ளது. பிராய்டியத்தின்படி அனைத்து மனிதர்களும் இரட்டை பாலுமை (Bisexuality) உடையவர்கள் ஆவார்கள். உள்ளத்தளவில் ஆதிக்கம் செலுத்துகிற பாலுமையே நடவடிக்கையாகவும் நடத்தையாகவும் வெளிப்படும் என்பது உளவிதி என்று ஒரு ஃப்ராய்டியன் பார்வையில் தமிழ் நாட்டுப்புற வழக்காறுகள் என்ற நூலின் வழியாக தற்கால உளப் பகுப்பாய்வாளர் தி.கு.இரவிச்சந்திரன் குறிப்பிடுகிறார்.

 

பெண் சடங்கு    

அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அன்று முதல் 40 நாட்களாக பணவெல்லத்தாலான பானத்தையும் மற்றும் இறைச்சிகளையும் உட்கொள்ளலாம். ஆனால் கண்ணாடி பார்க்காமல் ஆண் முகத்தை பார்க்காமல் 40 நாட்கள் இருக்க வேண்டும். 41 நாளன்று பச்சை நிற உடையை உடல் முழுவதும் அணிந்து பால்குடம் தலையில் ஏற்றி கடலில் கலக்கப்படும் சடங்கு பெண்  சடங்காகும். தமிழகத்திலும் புதுவையிலும் வழிபடும் நாட்கள் வேறுபடுகின்றன. தமிழகத் திருநங்கைகள்  பயன்படுத்திய சுவீகாரசடங்கு புதுவை வட்டார திருநங்கைக்கு தெரியப்படவில்லை. அது சார்ந்த புரிதலும் இல்லை. வட மாவட்டங்களில் மட்டுமே  இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

 

தத்து கொடுத்தல்

     குடும்பத் தலைவி நாயக் என்று அழைக்கப்படுகின்றனர். சுற்றி இருக்கும் வட்டாரக் குழுக்களுக்குள் குழந்தைகளை வாங்கிக் கொள்ளும் போது  தலைவிகளும் உங்கள் வீட்டுப் பெண்ணை ஏற்றுக் கொள்கிறோம் என்று உறுதி கூறி பணம் மற்றும் பழ வகைகளை பரிமாறிக் கொள்ளுதல் முறை தத்துக் கொடுத்தல் முறையாகும்.

 

ரகசிய சடங்குகள்

     திருநங்கைகள் பன்றியை தெய்வமாகவும்  வழிபடுகின்றனர். பன்றியை பன்றி  என்று அழைக்காமல் ரேவதி என்று சொல்லி அழைக்கின்றனர். ஏனெனில் இவருடைய முன்னோர்கள் அறுவை சிகிச்சைக்கு முன்பு ஒரு ஆண் பன்றியின் ஆணுறுப்பை வெட்டி சிதைவுரை செய்து உயிருடன் இருக்கிறதா என பார்த்து வழிபாடு நடத்தப்பட்டன தற்போது அந்த வழிபாட்டையும் சடங்குகளையும் பெருமளவில் நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.

 

மறைக்கப்பட்ட சடங்கு

     ஹெர்மாபுரோடைட் (Hermaphrodite) இருபால் உயிரியலில் விவரிக்கப்படுவது இருபால் உறுப்புகள் ஒருங்கே/ ஒரே உடலில் அமையப்பெற்ற ஓர் உயிரினம். ஆண்பால் உறுப்பும் பெண்பால் உறுப்பும் ஒரே உடலில் இடம்பெற்று இருத்தலே இரு பாலுடலி எனக் கூறப்படும். இரு பாலுடலி குழந்தைகளை சில பெற்றோர்கள் அவர்கள் வளர்க்காமலே திருநங்கைகளிடம் அக்குழந்தையினை ஒப்படைத்து விடுகின்றனர். அக்குழந்தையைத் தெய்வமாகக் கருதி நன்முறையில் வளர்த்த செய்திகள் திருநங்கைகளின் முன் தலைமுறையிடம் இருந்ததை கள ஆய்வு வழியாக பெற முடிந்தன. அக்குழந்தையைத் திருநங்கைகள் சடங்கின் வாயிலாக பெற்றுகொள்வது குறிப்பிடத்தக்கது. இதை மறைக்கப்பட்ட சடங்காக கருதுகிறார்கள்.

 

இறப்பு சடங்கு

ஒரு திருநங்கை பிறக்கும்போது ஆணாகப் பிறந்து திருநங்கையாக மாற்றம் பெறுவதால் ஆணுறுப்பு எடுக்கப்படுகிறது. பின்பு இறப்பு ஏற்படும்போது திருநங்கையாக அவருடைய ஆன்மாவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நம்பப்படுகிறது. அதனால்  இறுதி சடங்கில் கோதுமை மாவில் ஆணுறுப்பு போன்ற வடிவத்தைச் செய்து ஆணுறுப்பு இருக்கும் இடத்தில் வைத்து இறுதி சடங்கு நடைபெறுகிறது. இது அவர்களுடைய வழக்கமாக இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

முடிவுரை

இறுதியில் அவர்கள் எதிர்பார்ப்பது எல்லாம் பொதுமக்களிடம் சமமான உரிமை மட்டுமே. அவர்களுடைய கூத்தாண்டவர் வழிபாடானது இருட்டடிப்பு செய்யப்பட்ட திருநங்கைகள் சமூகத்தை வெளி கொண்டு வந்தது உண்மையே எனலாம். இரண்டாம் தரத்தை விட கீழ்ப்படுத்தப்பட்டிருப்பதும் தீண்டாமையை விட கொடுமையானது அதாவது கீழ் சாதி என்று சொல்லப்படுகின்ற மக்களுக்கு நடந்து கொண்டிருக்கும் தீண்டாமையை விட கொடுமையானது. தற்பொழுதும் நிலையானது இருட்டடிப்பு செய்யப்பட்ட ஒரு இனமாகவே திருநங்கைகள் வாழ்ந்து வருகின்றனர் என்பது தற்போது நிதர்சனமான உண்மை. விரைவில் திருநங்கைகளின் நிலை மாற்றம் பெறுதல்வேண்டும் மற்றும் அவர்களின் நலவாழ்விற்கு உதவும் வகையில் ஆய்வு அமைய வேண்டிய தேவையை இக்களப்பணி உறுதி செய்கிறது.

 

களப்பணிச் சென்ற இடங்கள்

வில்லியனூர், பிள்ளையார்க்குப்பம், மடுகரை, நெட்டப்பாக்கம்

 

 

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு