ஏ.மதன் கவிதைகள்
ஏ.மதன் கவிதைகள்
நல்ல வேலை எனக்குக் கண்ணில்லை!
காலை மாலை
கருப்பு வெள்ளை
இருட்டு வெளிச்சம்
இரவு பகலென
பாகுபாடு ஏதுமின்றி
பார்ப்பவை எல்லாம்
ஒன்றாகவே இருக்கிறது
அகக் கண்களால் காணும்
இவ்வுலகில்
அன்பெனும் கண்ணாடி அணிந்தவாறு
காதுகள் காட்டும் திசை நோக்கி
கால்களில் நகர்கிறேன்
ஆறில் தொடங்கி
அறுபது மட்டுமாக
மூன்று கால்களில்
எட்டு வைத்து
பல பள்ளங்கள் பார்த்து
சில குழிகளிலும்
வாய்க்கால்களிலும்
நுழைந்துச் செல்கிறேன்
தரையில் சுருண்டுகிடக்கும்
நாய் வாலை மிதித்ததில்
வழிப்போக்கரை இடித்ததில்
வசைச்சொற்களைக் கற்றதிலென கதைகளேறிய அனுபவமுண்டு!
நாடகமான வாழ்க்கையின்
அங்கங்களில்
கவிதைகளான
காட்சிகள் வறள்கிறது
நாங்கள் ஒருபோதும் தயங்குவதில்லை
அவசரப்பட்டு ஓடுவதில்லை
வெற்றியை நோக்கி விரையும்
ஆமைகளாக
படுகொலைகள் பாராமல்
கலவரங்கள் காணாமல்
கவனமாக நடக்கிறோம்.
********
எவ்வித முன்னறிவிப்புமின்றி
திடீரெனத் தோன்றி விட்டாய்!
சத்தமில்லாமல் வந்து செல்லும்
மின்னலைப் போல!
இரவில் திருட வரும்
திருடனைப் போல!
பம்பை ஒலிக்கு வரும்
சாமியைப் போல!
சாலையில் குறுக்கிடும்
ஞமலியைப் போல!
தூக்கத்தில் வரும் நல்ல
கனவைப் போல!
இருதயத்தில் தோன்றும்
காதலைப் போல!
உன் வருகையால்
நிரம்பி வழிகின்றன
என் கண்கள்
Comments
Post a Comment