நானும் மயிரை விட்டேன் -அரம்பன்

நானும் மயிரை விட்டேன் -அரம்பன்

 

     தமிழில் பிரிவு காலத்தில் துயரையும் உணர்ச்சிப் பெருக்கையும் பாடி அனுப்பும் தகைமையை பதிவு செய்யும் இலக்கிய வகையாக தூது இலக்கியங்கள் இருந்தன. தூது மூலம் பெறப்படும் செய்தி அகம் அல்லது புறம் என எத்தன்மை வாய்ந்ததாக காணப்படினும் அதனைப் பெறுபவர் வெளிப்படுத்தும் உணர்வு தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. தமிழில் தூது இலக்கியத்திற்கென ஒரு வரலாறு உண்டு, அஃறிணைப் பொருட்களும் உயர்திணையினரும் தூது சென்றதை சங்கப் பாடல்களிலும் பிற்கால சிற்றிலக்கிய வகையான தூது இலக்கியத்திலும் காணலாம். அந்த வரிசையில் வரும் ஒரு படைப்பாகவே குவிரனின் மயிர் விடு தூது எனும் தற்காலத்திய சிற்றிலக்கிய படைப்பைக் காண வேண்டியுள்ளது. மரபு இலக்கியத்தின் வலிமை அதன் சொல்லாட்சியில் உண்டு எனலாம். யாப்பிற்காகவே சொற்களை உருவாக்கிய வரலாறு தமிழுக்கு இருப்பதாகவே நான் கருதுகிறேன். குவிரன் இந்த படைப்பில் தனக்குள் இருக்கும் மரபிலக்கியச் சொற்களை எளிமையாக சேர்த்து இலக்கியம் படைத்துள்ளார்இலக்கணம் அறிந்தவர்கள் இந்த படைப்பினை விமர்சனப்பூர்வமாக அணுகுவதற்குரிய வழிகள் ஒருவேளை திறந்து கிடக்கலாம். நான் அவற்றை தற்போது கணக்கில் கொள்ளாது இந்த முயற்சியை அறிமுகப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு ‘’மயிர் விடு தூதுக்கானஅறிமுகத்தை எழுதுகிறேன்.

         ‘’ஓதல் பகையே தூதிவை பிரிவே’’ என்று தொல்காப்பியர் பிரிவை வகைப்படுத்துகிறார். ஓதல் பகையோடு தூதும் பிரிவு ஏற்படுத்தும் முறைமையாக இருந்திருக்கிறது என்பதை இதன் வழி தெரிந்து கொள்ள முடிகிறது. தொல்காப்பிய சிறப்பு பாயிரத்திற்கு இளம்பூரணர் உரை அளிக்கும்போது ஒரு நூலுக்கு நூலாசிரியரின் ஆசிரியர், நூலாசிரியரின்   உடன்படித்தோர், நூலாசிரியரின் மாணவர் ஆகியோரோடு அந்நூலுக்கு உரை செய்வோர்  சிறப்பு பாயிரம் எழுதலாம் என குறிப்பிடுகிறார். அதன்படி குவிரனுக்கு நான்  ஒரு சாலை மாணாக்கன் என்பது மரபுப்படி இந்த அறிமுக கட்டுரையை வழங்குவதில் இயல்பாகப் பொருந்துகிறதுபுத்திலக்கியங்களுக்கு  முன்னுரிமை அளித்து செயல்பட்டு வரும் ஒரு இதழில் மரபிலக்கியம் அறிமுகப்படுத்தப்படும் போது மரபுகளின் சில கூறுகளையாவது கடைப்பிடிப்பது பொருத்தமாக இருக்கும் எனநினைத்தது இயல்பாகவே நிறைவேறி இருக்கிறது.   கூதிர் இரண்டாம் இதழில் வெளிவந்த வாசகர் பக்கத்தில் மரபுக் கவிதைக்கும் இடம் அளித்திருக்கலாம் என்று கருத்து இடம்பெற்றுள்ளதுஅக்கருத்துப்படி மரபுக் கவிதைகளுக்கு இடமளிக்கும் விதமாக குவிரனின் மயிர் விடு தூது கூதிர்  இதழில் வெளிவர இருக்கிறது. குவிரனின் உடன்படிப்பவன் மரபிலக்கியத்தையும் கற்பதற்கு விரும்புபவன் என்பதைத் தாண்டி நாள்தோறும் கொத்துக் கொத்தாக கொட்டும் மயிர் கற்றைகளை கையில் எடுத்து இருபது, முப்பது என எண்ணி காற்றில் தூது விடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பவன் என்ற காரணமும் மயிர்  விடு தூதை அறிமுகப்படுத்துவதற்கு பொருத்தமான காரணமாக கூடுதலாக சேர்ந்து கொண்டது.

       தமிழ் இலக்கியத்தில் மயிர் என்பது காதல் போன்றது. காதல் இலக்கியத்தில் பேசப்படுவதை வைத்துகாதலைப் பாடாத  கவிஞன் உண்டோ’  என்றெல்லாம் கேட்பவர்கள் உண்டு. இப்படியாக கேட்கப்படும் போது காதை பொத்திக் கொள்ளும் பல்வேறு தருணங்கள் எனக்கு  வாய்த்திருக்கிறது. அவர்கள் பாடும் காதல் காதை  பொத்த வைக்கும் ஆற்றல் நிரம்பியது. காதலுக்கு இருந்த கவனம் தமிழ் இலக்கியம் முழுக்க முளைத்து நீண்டு வந்த மயிருக்கு கிடைக்கவில்லை. மயிர் பலவாறாக இலக்கியத்துள் பயன்படுத்தப்பட்டும்  முதன்மைப் பொருளாக கண்டுகொள்ளப்படவில்லை.

 

‘’ கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

    காமம் செப்பாது கண்டது மொழிமோ

    பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
    
செறி எயிற்று அரிவைக் கூந்தலின்

    நறியவும் உளவோ நீ அறியும் பூவே.’’ 

       எனும் குறுந்தொகையின் இரண்டாவது பாடலில் இறையனார் கூந்தல் எனும்  பாடுபொருளை தொடங்கி வைக்கிறார்கூந்தலுக்கு நறுமணம் உண்டா? என்ற சர்ச்சையில் இருந்து பன்னெடுங்காலமாக இலக்கிய பாடுபொருளில் மயிர் பல்வேறு வகைகளில் இடம்பெற்றே வருகிறது. நல்லதங்காள் நாட்டுப்புற கதைப்பாடலில் அக்கமாதேவியின் சைவ நெறி பாடல்களில் பாஞ்சாலியின் கதை என  மயிர் பல பரிணாமம் பெற்றிருக்கிறது.

       கிறிஸ்தவர்களின் வருகையையும் சிகை அலங்காரத்தில் ஏற்பட்ட மாற்றத்தையும் பேசும் இராபர்ட் கால்டுவெல்லின்குடுமி பற்றிய சிந்தனைகள்’  என்ற வரலாற்று ஆவணம், ஆண் மையக் குறியீட்டில் மீசையை பார்க்கும் கந்தர்வனின்மீசைகள்கவிதை தொகுப்பு, கல்வி சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் இருக்க மயிரை மட்டும் வைத்து ஒழுக்கத்தை நிர்ணயம் செய்யும் போக்கை அலசும் பெருமாள்  முருகனின்மயிர் தான் பிரச்சனையா?’ என்ற கட்டுரை நூல், இந்தியப் பண்பாட்டின் மீசை மற்றும்  மயிர் கடந்து வந்த பாதைகளைக் கொண்டு வேகமாக நகரும் ஆதவன் தீட்சண்யாவின்மீசை என்பது வெறும் மயிர்நாவல் என்று இலக்கியம் கடந்து சமூகத்தை மையப்படுத்தி பேசும் நூல்களும் வந்துள்ளன. இத்தகைய நூல்கள் சமூகம் மயிரை மையப்படுத்தி இயங்குவதை குறிப்பிடுவதாக வெளிவந்துள்ளன. ‘மயிர்’  என்ற பெயரில் இராயகிரி சங்கர் இணைய இதழ் நடத்துவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

      ‘சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்நூலின்  முன்னுரையில் பழ.அதியமான் ‘’ குடுமி போய் கிராப் வந்தது கேவலம் மயிர் குறைந்த நிகழ்வா? கொதிக்கும் எண்ணெயை உடல் முழுவதும் வாங்கிப் பற்றி எரிய வேண்டியிருந்ததே!’’ என்று நிகழ்ந்த வரலாற்றைப் பதிவு செய்கிறார். நான்‘’ Beard is not only a hair’’ என சில ஆண்டுகளுக்கு முன் முகநூலில் எழுதியிருந்தேன். இவை அனைத்துமே மனிதனின் அக மற்றும் புறவய பார்வையாக ஒருங்கே வைத்து பார்க்கப்பட வேண்டியன. இங்கு குடுமியும் மீசையும் மயிரும் கௌரவமாக ஆணவமாக  வீம்பின் அடையாளமாக உணர்வுக் குறியீடாக பலவாறு பண்பாட்டில் இருந்து வருகிறது. எவ்வகை பயன்பாட்டில்  இருப்பினும் அது சாதாரணமாக கடந்து போகும் காரியமாக அன்றி சலசலப்பை ஏற்படுத்துவதாகவும் நிலைபெற்று இருக்கிறது. இவ்வாறு நிலைபெற்ற இலக்கியப் பயணம் மேற்கொண்டுள்ள மயிரை தூது பொருளாக பயணம் அனுப்பத் தேர்வு செய்துள்ளார் குவிரன்

     மயிருக்கும் நறுமணத்திற்கும் உள்ள தமிழின் ஆதித் தொடர்ச்சி  மயிர் விடு தூதில் கிளறப்படுகிறது. மயிரைத் தூது அனுப்பும் தலைவன் அதாவது காதலன் முடி திருத்தும் தொழில் செய்பவனாக இப்படைப்பில் வெளிப்படுகிறான்.  ‘ஆதி மருத்துவர் சவர தொழிலாளர் ஆக்கப்பட்ட வரலாறுஎன்ற கோ. ரகுபதியின் நூல் பல்வேறு தரவுகள் அடிப்படையில் முடி திருத்துநர்கள் கடந்து வந்த  வரலாற்றினைப் பதிவு செய்திருக்கிறது. மயிர் விடு தூதில் அந்த வரலாற்றின் வலியை உணர்த்தும் சில சொற்கள் இடம் பெற்றிருக்கின்றன. காதல் காலத்தில் காதலன் தான் செய்யும் தொழில் மீது முழுமையாக கவனம் செலுத்த முடியாத  சில நாட்களை  அனுபவிப்பது  இயல்பானது. அத்தகைய காலத்தில் அவனது மனநிலையில் ஏற்படும் திடீர்  மாற்றத்தை காதலியின் உருவம் முன்வந்து நிற்பதால் கவனம் செலுத்தி தொழில் செய்ய முடியாத நிலையாக மயிர் விடு தூது குறிப்பிட்டுச் சொல்கிறது 

     காதலியை பகற்கனவில் காணும் காதலன் தொழிலில் செய்யும் பிழைகளைக் குறிப்பிடும் இடத்தில் அங்கத சுவையை மயிர் விடு தூது சற்று ஏற்றியுள்ளது. ‘கூர்தகடுஎன்னும் சொற்பிரயோகம் பனுவலுக்குள் பொதிந்து நின்று கொடுக்கும் கவித்துவம் இப்படைப்புக்கு மேலும் அழகு சேர்க்கிறது. என்வரையில்கூர்தகடுஎன்ற சொல் இப்படைப்புக்கு புதுப்பொலிவு கொடுத்திருக்கிறது எனலாம். எத்தன்மை கொண்ட படைப்பாக இருப்பினும் அதன் அழகியலுக்கு முன்மாதிரியாக ஒரு சொல் வாசகர் மத்தியில் அமைந்து விடுவதுண்டு. அப்படியானதொரு சொல்லாக கூர்தகடு இருக்கும் என்பது என் அனுமானம்.

     தறிநெசவு, கொல்லனின் பட்டறை என்று மயிர் செல்லும் இடங்கள் எவ்வித தொடர்பு அறுதலுமின்றி சீராக செல்வது வாசிப்பில் ஓர்மையைக் கொடுக்கிறது. இப்படைப்பை பொருத்தவரை இளமயிரிலிருந்து நரைமயிர் வரை பேசுவது சிறப்புக்குரிய அம்சமாக அமைந்துள்ளது. சுவைபடுதல் எனும் நோக்கில்  மயிர் விடு தூது வெற்றி பெறும் என்றே நம்புகிறேன். இந்த சுவைபடுதலுக்கு மயிரை வர்ணிக்கும் இடங்களும் மயிரற்ற வாட்டத்தைப் பேசும் இடங்களும் கோர்வைப்படுதலில் நிகழ்ந்த பிணைப்பு முக்கிய இடம்பெறுகிறது. தற்போது பெரும்பாலும் மரபுக் கவிதைகளை அமைப்பதில் இந்த கோர்வையில் தான் தவறு இழைக்கப்படுகிறது.. இப்பனுவல் அந்த குலைவை சீர் செய்ய முனைந்த படைப்பு என கூறலாம்.

      நவீன   இலக்கிய எழுதுமுறையான  நான் லீனியர் பாணியை மரபு இலக்கியங்களில் காணும்போது அதன் வாசிப்பு நெறிவதோடு அனுபவ நிலை கடத்தப்படுவதிலும் வாசிப்பு முழுமை அடைய முடியாத நிலை உருவாகி வருகிறது. தற்போதைய உரைநடை முறையில் இப்படியான சிக்கல்களை வாசிப்பில் கலைக்கப்பட முடியும்  என்ற இடத்தை அடைந்து வருகிறோம். யாப்பு வகைப்பட்ட இலக்கணங்களில் இத்தகைய மாற்றத்தைக் கொண்டு அதன் சாதகமான அம்சங்களைப் பேசுவதில் எவ்வளவு வாய்ப்பு இருக்கிறது என தெரியவில்லை

 பழைய தமிழ் படங்களில் வரும் முடி திருத்துநர்கள் எப்படியாக காட்சிபடுத்தப்பட்டனர். அவர்களது நிலை சமூகத்தில் என்னவாக இருந்தது. மேலும், குடுமி முதலான சிகை அமைப்புகளின் இருப்பை மித்திரன் ஜவகர் இயக்கிய உத்தமபுத்திரன் படத்தில் பார்க்கலாம். குடுமியும் மொட்டை போட்டுக்கொள்ளுதலும் கௌரவமாகவும் சபதமாகவும் எப்படி சமூகத்தில் நிலைபெற்றதென்பது மானுடவியல் ஆய்வோடு தொடர்புடையதுஇன்று ஏற்பட்டுள்ள சமூக மாற்றத்தை தன் காதலுக்கான பலன் தரும் அம்சமாக காதலன் மயிர் விடு தூதில் பயன்படுத்துகிறான்கோகுல் இயக்கியசிங்கப்பூர் சலூன்என்ற படத்தை சமீபத்தில் பார்த்தேன். அந்த படம் மயிர் விடுதூதின் சில வரிகளை வாசிக்கும் போது கண் முன் வந்து நின்றது. உலகமயமாதலைப் பற்றி எத்தனையோ கட்டுரைகள், உரைகள், இலக்கியங்கள், செய்தி தொடர்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. உலகமயமாதலைப் பேசும் நவீன இலக்கியங்கள் வரிசையில் தமிழ் யாப்பு மரபில் புனையப்பட்ட பனுவலாக மயிர் விடு தூது வைக்கப்படுவதற்கான வழியும் நமக்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

       மரபைத் தொட்டு நவீனத்தை பேசுவதோடு நிற்கும் போக்கில் மயிர் விடு தூது நிற்கிறது. மீண்டும் ரபு நோக்கி இழுக்கும் பின்னை போக்குகள் இப்பனுவலில் இல்லை. ஆனால் புறம், அகம், புறம் என்ற நிலை இருக்கிறது. எது எப்படி இருப்பினும் அகத்திற்கு புகழ்பெற்ற தூது இலக்கியங்களில் புறச் செய்திகளால் என்னை கவர்ந்த பனுவலாக மயிர் விடு தூது அமைகிறது. அகம் சார்ந்த காதலைப் பரிமாற தூது அனுப்பும் செயல்கள் எல்லாம் பேசப்பட்டாலும் கூட அவற்றில் உணர்வுகள், காதலின் கைக்கிளை மற்றும் பிரிவு நிலைகள் உள்ளது உள்ளபடி பதிவு செய்யப்பட்டு இருப்பினும் பொருத்தமான அமைப்பில் அவை பனுவலாக்கப்பட்டிருப்பினும் புறம் கொடுக்கும் வசீகரிப்பு அகத்தை விட கூடுதலாக எனக்குத் தெரிகிறது. மரபை முற்று முழுதாகப் புறந்தள்ளாது சீர்மைப்பண்பு தென்படும் இலக்கியங்களை ஊக்கப்படுத்த வேண்டிய தேவையிருக்கிறது. யாப்பிற்குட்பட்டு கவிதை எழுதுவதில் ஆர்வம் காட்டும் குவிரன் போன்றவர்கள் தற்கால வழக்கில் இருக்கும் சொற்களை யாப்பிற்கு உட்படுத்தி இலக்கியம் படைப்பதில் சில சோதனைகளை செய்வது மொழிக்கு வலுசேர்க்கும்  என்பதை கவனத்தில்  கொண்டு வருங்காலத்தில் செயல்பட வேண்டும்

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு