நிலா கவிதைகள்
நிலா கவிதைகள்
உன்னைக் கடந்து விட்டதைப் போல்
எளிதல்ல
உன் பெயரைக் கடப்பது
உன் பெயரின் பின்னால் இருக்கும்
உன் குரலை
உன் பிம்பத்தை
உன் சிந்தனையை
உன் நினைவுகளை
எப்படி கடப்பேன்
*****
எனக்காகக் காத்திருப்பதில்
சுகமோ? துக்கமோ?அவனுக்கு
என்னைக் கண்டதும்
விரிந்து இடம் பெயரும் இதழின்
வெளிப்பாட்டைக் கண்டு
பொருள் அறிந்து கொள்ள முடியாத
"தெரிவை" நான்
*****
முட்டாள் வலிகள்
என்னைச் சந்திக்க வரும் வலிகளிடம்
நான் ஓர் உயர் அதிகாரியைப் போல்
பரபரப்பாக மிடுக்காக நடந்து கொள்கிறேன்
அவற்றை உடனடியாக சந்திக்க அனுமதிப்பதில்லை
காத்திருக்கும்படி கட்டளையிடுகிறேன்
காத்திருக்கச் செய்வதால்
சில வலிகள் சோர்ந்து விடுகின்றன
சில வலிகள் திரும்பிச் செல்கின்றன
சில வலிகள்
என்னை வசை பாடிவிட்டுச் செல்கின்றன
நீண்டு கிடக்கும் வலிகளின்
வரிசையைக் கண்டு
சில நேரங்களில் அவற்றின் மீது
இரக்கம் கொண்டு
என்றேனும் ஒரு நாள் முழுவதும்
அவற்றைச் சந்தித்துப் பேச
நேரம் ஒதுக்குகிறேன்
அன்றைய தினம் எல்லாம் வலிகள் தான்
வந்த நோக்கத்தை விடுத்து
எத்தனை தினங்களாக காத்திருந்தோம் என்பதையும்
எவ்வாறெல்லாம் துன்பப்பட்டோம் என்பதையும்
கூறிச் செல்கின்றன
முட்டாள் வலிகள்
*******
Comments
Post a Comment