அரா கவிதைகள்

அரா கவிதைகள்

 

தலைமாட்டுத் தலையனை

மூச்சை நிறுத்த

முயன்றிடும் தகைமையில்

நகைப்பின் உச்சத்தில் நனைந்த

உன் முகத்தின் வியர்வை சிந்த

எப்படி வந்தது ரத்தமென

சிந்திக்காத கண்கள்..

குருதியில் பார்வை இன்றி,

குனிந்து திணித்தது பிணத்தை

 

திமிறிக் குதித்துத் தள்ளி

சாய்ந்து ஓடிய கயவனின்

காலடித்தடத்தில் கழிந்தது

கற்பெனும் கற்பிதக் காலம்

********

கடற்கரை மணலை

கைகளில் அள்ளிப் பார்த்தால்

எதிரில் இருக்கும் கூட்டம்

எங்கோ இருக்கும் சிலரை

முன்னே காட்சியாக்குகிறது

 

ஒரே ஊர்க்காரர்களான

எல்லா வயதினரும் படித்த

பள்ளியின் பெயர்

ஒன்றாய் இருக்கும்

யதார்த்தமான

ஆச்சரிய உலகில்

அழைத்துச் சென்று

பால்ய சேட்டைகளின்

பல ரூபங்களை

சிரிப்புடன் காட்டுவதை

அந்த நேரத்தில் சண்டை போடும்

வேலைக்குப் போகும்

நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்

பயணம் செல்லும்

வெட்டிக்கதை பேசும்

வேண்டுதலில் மூழ்கியிருக்கும்

அவர்களில் ஒருவர் கூட பார்க்கவில்லை.

********

நிறுத்தத்தில் நின்ற பேருந்து

நின்று கொண்டே இருக்கிறது..

ஊது குழலின் சப்தத்திற்காக,

 

ஏதோ ஓர் நிர்பந்தம் 

முடுக்கிய வேகத்தில்

 மெல்ல நகர்கிறது..

 

நியூரானின் நினைவுகளிலிருந்து..

********

முடிவறியா பயணம்

ஓய்வறியா உடலுடன்

தாவல் தாவி சென்றிடினும்

முற்றாக முறிந்து விழாது

இடையில் முளைத்த

ஏகாந்த பெருவீச்சாக, 

எரியும் கனலில் 

ஒற்றை கங்கின்‌‌ செம்மையில்

தீக்கனல் பறம்பிடும்

புது ஆதவன் கதிர்களில்

********

கம்புகளால் ஆன

கம்புத்தாத்தாக்களால் ஆன

வேடிக்கை உலகத்தில்

ப்ளீப்கார்ட்

அமேசான்

ஊழியர்களுக்கு கப்பம் இல்லை

வந்து செல்ல இலவச அனுமதி

 

விடுமுறை நாட்களில் பேரக்குழந்தைகளுடன்

குலாவியும் குரைத்தும் 

விளையாடும் தாத்தா

தவறாமல் சொல்வார் 

விடுமுறை நாள் வியாபாரம் 

நன்றாக ஓடுமென்று

 

கருப்புநிறப் பையைத் தூக்கிக்கொண்டு

ஊழியர்கள் சிரிப்பார்கள்

வியாபாரம் செய்கிறோமென.‌‌..

பொட்டலம் வாங்கிச் செல்லும்

யுவன்களும் யுவதிகளும்

தள்ளுபடியையும் 

கூப்பன் அட்டைகளையும்

கணக்குப் போட்டு

சிரிப்பினூடே வந்து செல்வார்கள்

 

காசு வாங்கவில்லையே!

கடனுக்குப் பொருட்கள் விற்கிறாயா?

எனக் கேட்டுக்கொண்டே

தாத்தா கம்பைத் தூக்கிச் சிரிப்பார்

பக்கம் வருவார்

பேரப்பிள்ளைகள் விளையாட

விளையாட்டுப் பொருட்கள் 

இருக்கிறதா?

இனிப்பு பதார்த்தங்கள் இருக்கிறதா?

ஒவ்வொரு பொட்டலமும் என்ன விலை?

என்ற அவர் கேள்விகளுக்கு

பதில் சொல்ல நேரமின்றி

மீண்டுமொரு முறை சிரிப்பைத் தந்து

பையை மாட்டிச் செல்கிறார்

பரிமாற்ற ஊழியர்.

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு