நாடகத்தின் நான்காம் காட்சி –தீனன்
நாடகத்தின் நான்காம் காட்சி –தீனன்
செல்லும் இடங்களும் பெயர்களும் வழிகளும்
மறந்து மறந்து போகிறது
பசிக்கு அழுகும் குழந்தையை சுமக்கும்
பெண்ணின் சித்திரம் இடையிடை தோன்ற
கொம்பு முளைத்த நாய்களைத் தேடி
தெருக்கள் தோறும் அலைந்து
திரிந்தேன்
சித்திரக் கூத்துக்குள்
குருவி வேடனை
பாம்பு தீண்டிய நான்காம் காட்சியில்
பிரபஞ்சத்தைக் குறித்த வசனத்தைச் சேர்ப்பது
நாடகக் கூத்தின் ஆழத்தைக் கூட்டலாம்
தெருக்களின் பாரத்தை
இடையினில் சுமக்கும்
வனப்புகளழிந்த பெண்ணிடம் செல்வதில்
வெட்கப்படுகிறேன் ஒவ்வொரு இரவும்
குழந்தையின் கொம்புகள்
நீளத் தொடங்கிய
நான்காம் மாதத்தில்
கொலைகள் நடந்தது
சாக்கடை விரிந்த
நகரப் பகுதிக்குள்
ஞாபகமழிந்து
வாழும் வேடன் நான்
பாம்புகளுமிழ்ந்த விஷத்தினை முறிக்க
சதையினில் வளந்தன
கலவியின் முட்கள்
இடையினில் நாயினை சுமப்பவள் மீது
ரத்தக் கோடுகளிட்டுக் களிக்க
வேசிகள் வாழும் நான்காம் தெருவில்
புற்றுவளர்ந்த வீட்டினைத் தேடி
கொம்பு முளைத்த நாய்களினோடு
ரத்த முகர்ச்சியில் நாட்களைக் கழித்தேன்
சுவர்களழிந்து வர்ணமிழந்து
துன்ப இருள்களின்
மர்ம துவாரத்தில்
மூச்சுகளடங்கிய பாழ்வெளிதன்னில்
ரகசியமான வீட்டினைப் பார்த்து
கொம்புகளதிர நாய்கள் குலைத்தன
ஒளிகளணைந்த
பேயிருள் சூழ
நிலவொளி பொய்த்த
வேட்டை நாட்களின் அசரீரியாக
நினைவு வளர்ந்தது
மறந்த கானகம் மீண்டும் விழித்ததில்
வானத்தின் பாரம் தலையில் இறங்க
குருதி ஒழுகிய காதுகளோடு
சத்தமொடுங்கிய பாழ்வெளி வீட்டின்
மரண வடிவுடைய வாயிலில் நுழைந்தேன்
இச்சையில் அலைந்த
கானக இரவுகள்
மிருகத்தின் வாடையில்
கற்பனைப் பெண்ணில்
இழைதழைக் கனவில் கழிந்ததையொத்த
கலவியின் வாசனை
தலைக்குள் விஷமாய்
சுரக்கத் தொடங்கவே
நாடகக் கூத்தின் நான்காம் காட்சியில்
கொலைகள் நடந்த நான்காம் மாதத்தில்
வேசிகள் வாழும் நான்காம் தெருவில்
மரணவடிவுடைய வாயிலைக் கொண்ட
புற்றுகளாக கலவியை வளர்க்கும்
நிலவொளி புகாத வீட்டினில் நுழைந்தேன்
சித்திரமாக நினைவினில் வெட்டி
ஞாபகமழிக்கும் காட்சிக்கு மாறாய்
நாயோ குழைந்தையோ
இடையினிலின்றி மோகனமான இளம்பெண்ணொருத்தி
வளைவுகள் கூச
முற்றத்தில் நின்றாள்
அழுக்குகளடைந்த நாய்களின் உடலில்
பூமியைப் பிளக்கும் கொம்புகள் ஒளிர்ந்தன
ஜீவனில் கலந்த அவரசத்தோடு
ஒளிரும் நாய்களைப் பொருட்படுத்தாமல்
உடம்பு
அதிர இளம்பெண் சிரித்தாள்
மறதியழிந்தது ஞாபகமழிந்தது
வழிகளும் இடங்களும் பயணமும் சலித்தன
நாய்களின் கொம்புகள்
வேடனின் ஆன்மா
பிரபஞ்சத்தின் வசனம் அர்த்தமிழந்தது
நகரங்கள் குருவிகள் கானகமெல்லாம்
வெடித்துச் சிதறிட
கத்திய என்னைக் கண்டு வெருண்டு
கொம்புகள் ஒடிய ஓடின நாய்கள்
அழுகைக்கும் சிரிப்புக்கும் ஆறுதலாக
கைகளைக் கோர்த்து
தலையினைக் கோதி
யவ்வனப் பெண் என்னை அறைக்குள் அழைத்தாள்
ஆடைகளகன்ற நித்திய உருவில்
வளைவுகள் மினுங்க நின்றவள் கண்கள்
நிலவொளியாக கூசத் தொடங்கின
அழுகையை நிறுத்திய குழந்தையும் வேடனும்
யவ்வனப் பெண்ணின் இடையினில் சுரந்த
தாய்மையைச் சுவைத்தனர்
Comments
Post a Comment