எடுத்தாளப்பட்ட பகுதி - இந்தியாவும் விடுதலையும் -திரு. வி.க
எடுத்தாளப்பட்ட பகுதி
இந்தியாவும் விடுதலையும் -திரு.வி.க
இயற்கை வளம்
தொன்மை சிலவிடங்களில் ஆக்கம் பெறுவதுண்டு;
சிலவிடங்களில் ஆக்கம் பெறுவதில்லை. இயற்கை வளம் நன்முறையில் அமைந்துள்ள இடங்களில்
தொன்மை ஆக்கமுறும்; மற்றவிடங்களில் அஃது ஆக்கமுறாது. சில நாடுகள் தொன்மை
இழந்தமைக்குக் காரணம் அவ்விடங்களில் இயற்கைவளம் செவ்விய முறையில் அமையாமையேயாகும்.
நமது இந்தியாவில் தொன்மை இன்னும் நிலவுகிறது. இந்தியாவின் செவ்விய இயற்கை வளம்
அதன் தொன்மையை ஓம்பி வருகிறது.
இந்தியா இயற்கை வளங்கொழிக்குஞ் செழிய நாடு.
இந்தியாவில் இயற்கைக்கூறுகள் மலைகளாகவும், காடுகளாகவும், வயல்களாகவும்,
கடல்களாகவும், ஆறுகளாகவும், பிரிந்தும் தொடர்ந்தும் வளஞ்செய்கின்றன. இந்தியாவில்
ஆங்கொரு மலை-ஈங்கொரு மலையோ, ஆங்கொரு காடு ஈங்கொரு காடோ, ஆண்டோர் வயல் ஆறு - ஈண்டோர்
ஆறோ, ஈண்டொரு ஆண்டொரு வயலோ இருக்கின்றன? மலையும் காடும் ஆறும் வயலும் குலங்குலமாக –
கூட்டங் கூட்டமாக அணி அணியாக பரவல் பரவலாக -அல்லவோ ஆங்காங்கே காட்சியளிக்கின்றன?
நீலக்கடலோ மூன்று புறமும் ஒரே காட்சி வழங்குகிறது.
இத்தனை வளங்கள் கெழுமியுள்ள ஒரு நாட்டில் மலை
வளம் சுருங்குமோ? நீர்வளம் அருகுமோ? நிலவளம் குன்றுமோ? குடிவளம் குலையுமோ?
இந்தியாவில் நவதானியங்கள் விளைகின்றன; நவமணிகள் கொழிக்கின்றன; பொன்னும் பிறவும்
வழங்குஞ் சுரங்கங்களுமிருக்கின்றன. வாழ்வுக்குரிய பொருளெல்லாம் இந்தியத் தாயின்
கருவிலுண்டு என்று சுருங்கச் சொல்லலாம். இது பற்றியே நமது அருமை இந்தியாவைக்
காமதேனு என்று சான்றோர் அழைத்தனர் போலும்! உணவுக்கும் உடைக்கும் பிறவற்றிற்கும்
மற்ற நாடுகளை எதிர்நோக்கி வாட்டமுறும் நிலைமையில் இந்தியாவின் இயற்கை வனம் அமைந்து
நிற்கவில்லை.
இயற்கையும் வாழ்வும்
இந்தியாவின் இயற்கைவளம் தட்பவெப்பநிலையை அளவுபடுத்தியிருக்கிறது. இந்தியா தண்மையால் நடுக்குற்றுக் கிடப்பதுமில்லை; வெம்மையால் வெந்தொழிவதுமில்லை. இரண்டும் ஒத்து நடக்கும் பெருமை வாய்ந்தது நமது நாடு.
தண்மை மிகுந்துள்ள நாட்டில் வாழ்வோர்
பெரிதும் பேராசைக்கு இரையாகிப் பிறரைத் துன்புறுத்தித் தமது வாழ்வை நடாத்தும்
நாட்டம் உடையவராவர். வெம்மை எரிக்கும் நாடு, வாழ்க்கைக்குப் பெரிதும் உரியதாகாது.
அது பரல்நிரைந்த பாலையாகும்.
இந்தியாவில் தட்பமும் வெப்பமும் ஒத்து
நடத்தலான், அஃது இயற்கை வாழ்வுக்கு உரியதாய்ப் பயன்பட்டு வருகிறது. இயற்கை
வாழ்வினர்க்குப் புறநோக்கு மட்டும் மலராது; அகநோக்கும் மலரும். அகநோக்கற்ற-
தனிப்பட்ட புறநோக்கு, பேராசை உணர்வைப் பெருக்குவதாகும். அறவுணர்வுக்குப்
புறநோக்குடன் அகநோக்குத் தேவை. இந்தியாவின் இயற்கை இருநோக்கு வழியே அறத்தை
வளர்க்குந் தன்மையது. இந்தியா தகுதி வாய்ந்த தென்க,
அஹிம்ஸை
அறத்திற் சிறந்தது எது? அஹிம்ஸை, இஃ
தொன்றுள்ள இடததில் மற்ற அறக் கூறுகளெல்லாம் தாமே விளங்கும். அஹிம்ஸைக்கு அடிப்படை
தயா - தயை .'அஹிம்சா பரமோ தர்மா' என்னு பெருமொழியும், 'தயா மூல தர்மம்' என்னுந்
திருமொழியும் முன்னாளில் எந்நாட்டில் பிறந்தன? வளர்ந்தன? சரித்திர உலகை நோக்குக.
மற்ற நாடுகளில் அஹிம்ஸா தர்மம் தோன்றுவதில்லையோ? வளர்வதில்லையோ? போதனையினாலும் சாதனையினாலும் பிறநாடுகளிலும் அஹிம்சா தர்மம் தோன்றும்; வளரும். ஆனால் அவ்விடங்களில் அத்தருமம் நிலைத்து நிற்பதில்லை. காரணம் அவ்விடங்களில் இயற்கை வளமெனும் ஒளியை அஹிம்ஸா தர்மம் பெறுவதில்லை. அதனால் அஃது அவ்விடங்களில் ஒரேவழி வளர்ந்து வீழ்ந்துபடுவதாகிறது.
இந்தியாவின்
இயற்கை, அஹிம்ஸா தர்மம் வளர்தற்குரிய ஒளியைக் கால்கிறது. அதனால் அஹிம்ஸா தர்ம
வளர்ச்சிக்குரிய இந்தியா ஒரு சக்தி பீடமாக (Power House) விளங்குகிறது.
பிறநாடுகளினின்றும் இந்தியா போந்து இந்தியாவைத் தாய்நாடாகக் கொண்டவரும் நாளடைவில்
அஹிம்ஸையில் பற்றுள்ளங் கொள்வோராவர். இந்தியாவின் இயற்கை மனநிலையையும்
மாற்றவல்லதென்க.
ஆரியரும் இந்தியாவும்
ஆரியர் ஒரே இடத்தில் வாழ்ந்தவரென்பதும்
பின்னே அவர் பலவேறு நாடுகளுக்குப் போந்தனரென்பதும் பல சரித்திர ஆசிரியர்
உள்ளக்கிடக்கை. ஆரியர் ஒரே இடத்தில் வாழ்ந்தபோது அவர் பெரிதும் ஆடுமாடுகளை
வளர்த்து அவற்றைக் கொன்று தின்று வந்தனர். இந்திய நாடு நோக்கிய ஆரிய மக்கள் ஆடு
மாடுகளைக் கொன்று தின்பதை நிறுத்திவிட்டார்கள். மற்ற நாடுகள் நோக்கியவர் இன்னும்
பழைய வழக்கத்திலேயே மூழ்கிக் கிடக்கின்றனர். இந்தியாவின் இயற்கை தன்னை அடைந்த
வரையும் தன் வண்ணமாக்குவதென்க.
ஆரியர்
இந்தியாவுள் நுழைந்தபோது புலால் தின்பவராகவேயிருந்தனர்; விலங்குகளை வேள்வித்
தீயிலிட்டுச் சுட்டு அவியுண்டு வந்தனர். அந்நாளில் விருஷப தேவர் என்ற அறவோர்
தோன்றி மக்களுக்கு அஹிம்ஸா தர்மத்தை அறிவுறுத்தினர். மக்கள் படிப்படியே
கொலையையும், கொலை வேள்வியையும் விடுத்தார்கள். கொலை கொல்லாமையாக மாறிற்று; கொலை
வேள்வி. கொல்லா வேள்வியாய்- ஆத்மஞான வேள்வியாய் தியாக வேள்வியாய் - மாறிற்று.
இம்மாறுதல்களை வேதத்திற் காணலாம்.
வேதத்தில் சில
பகுதிகள் கொலையையும் கொலை வேள்வியையுங் கூறுகின்றன; சில பகுதிகள் கொல்லாமையையும் –
ஞானவேள்வியையுங் கூறுகின்றன. கொலையையும் கொலை வேள்வியையுங் கூறும் பகுதிகள்
வேதத்தின் முன்னேயிருப்பன; கொல்லாமையையும் - ஞானவேள்வியையுங் கூறும் பகுதிகள்
வேதத்தின் பின்னேயிருப்பன. இரண்டையுங்கொண்டு என்ன ஊகிக்கலாம்? ஆரிய மக்கள்
இந்தியாவிற் புகப்புக இந்தியாவின் இயற்கை நலத்தை நுகர நுகர அவர்கள் அஹம்ஸா
மூர்த்திகளானார்கள் என்று ஊகிக்கலாம்.
இந்திய ஆரிய
மக்களும், மற்ற நாட்டு ஆரிய மக்களும் பல வழியிலும் மாறுதலடைந்துவிட்டார்கள்.
இருவரும் ஓரினத்தவர். நம்புதற்கும் இடமில்லாமற் போயிற்று இந்திய ஆரியர் பலர்
அறவோராய் - செந்தண்மையினராய் மாறினர், மற்ற நாட்டாசியர் மிலேச்சராய்ப் பிறரை
வதைப்பவராயினர். இந்திய ஆரிய மக்கள் எழுதியுள்ள நூல்களையும், மற்றவர் எழுதியுள்ள
நூல்களையும் ஆராய்ந்தால் உண்மை விளங்கும். முன்னதை ஆத்ம சக்தியை வளர்ப்பனவாகவும்,
பின்னவை தேக சக்தியை வளர்ப்பனவாகவுமிருத்தல் வெள்ளிடைமலை.
உலகம் ஹிம்ஸைக்கு
இரையாகிவரும் இந்நாளிலும்- சேர்க்கை காரணமாக இந்தியா தனது அற நெறியினின்றும்
வழுக்கி வீழ்ந்துள்ள இவ்வேளையிலும் - அஹிம்ஸையை அறிவுறுத்தும் பெரியோர்
யாண்டுள்ளனர்? இந்தியாவிலன்றோ? இந்தியாவை, எத்தகை இருள்சூழினும் அதன் நெஞ்சில்
எம்மூலையிலாதல் அஹிம்ஸா தர்ம தெய்வம் உறங்கியேனும் கிடக்கும். அஹிம்ஸை,
இந்தியாவின் உயிர் - உயிர் நாடி.
சமதர்மம்
இக்கால உலகம் பெரிதும்
ஹிம்ஸைமயமாயிருக்கிறது. எங்கணும் போராட்டமே பெருகிவருகிறது. மக்கள் அரக்கராகி
வருகிறார்கள். உலகின் தற்கால நிலை மாறி அமைதி நிலைபெறுதற்குப் பொதுவுடைமை அல்லது
சமதர்மம் வேண்டற்பாலது என்று பேசப்படுகிறது.
பொது உடைமைத் தத்துவத்தை
உலகத்துக்கு அறிவுறுத்தியவர் சிலர். அவருள் சிறந்து விளங்குவோர் காரல் மார்க்ஸ்.
மார்க்ஸியம்
மார்க்ஸியம் நல்லதே; கெட்டதன்று,
மார்க்ஸியத்தில் சில குறைகள் சொல்லப்படுகின்றன. உலகில் குறையற்ற ஒன்றைக் காண்டல்
அரிது. மார்க்ஸியத்தில் சில குறைகளிருக்கலாம். அதனால் மார்க்ஸியத்தையே கடிவது
அறிவுடைமையாகாது. யான் இந்தியன் எனக்கு என்ன தோன்றுகிறது? 'காரல் மார்க்ஸ் இந்திய
மண்ணில் தோன்றி, இந்திய நீரருந்தி, இந்தியக் காற்றில் உலவி. இந்திய ஒளியில்
மூழ்கி, இந்தியக் கல்வி பயின்று, நூல்கள் எழுதியிருப்பரேல் அவர்தம் நூல்கள்
இன்னும் மணம் பெற்றிருக்குமே' என்று தோன்றுகிறது. சுக்கிர நீதி, கௌடில்யர் அர்த்த
சாஸ்திரல், நாரத ஸ்மிருதி, உபநிஷ தம், திருக்குறள் முதலிய நூல்களின் சாரம்,
மார்க்ஸியத் தில் படிந்தால். அஃது இந்தியாவுக்குப் பலவழியிலும் நலஞ்செய்வதாகும்
என்று யான் கருதுகிறேன்.
மார்க்ஸியம் எங்கும் பேசப்படுவதால் அதைப்
பற்றி ஈண்டுப் பேசுதல் நேர்ந்தது. அதைப்பற்றிப் பின்னும் பேச எண்ணியிருக்கிறேன்.
'மார்க்ஸியம்' ஏதோ புதுமை என்று எவருங் கருதவேண்டுவதில்லை. எப்புதுமையும் ஒரு
பழமையினின்று பிறப்பதேயாகும். மார்க்ஸியத்துக்கும் பழமைக்கால் உண்டு.
நமது நாட்டிலும் மார்க்ஸ் போன்றவர்
சிலரிருந்தனர். சார்வாகத்துக்குக் கால்கொண்டவர் எவர்? பிரகஸ்பதியல்லவோ? 'பிரகஸ்பதி
மடம்' என்ற அமைப்பு எதை அறிவுறுத்திக் கொண்டிருந்தது? தேவ குருவாகிய பிரகஸ்பதி,
சார்வாகத்தையும் அறிவுறுத்தியதன் நோக்கமென்ன? சார்வாகம் வேதத்துக்குப் புறம்பு
என்று எந்த வைதிகரும் கூறார்.
மார்க்ஸியம் சார்வாகத்தை இக்கால முறையில்
கூறுவது. அஃது உள்ளவாறே எந்நாட்டிலும் வளராது. அஃது அவ்வந்நாட்டு இயற்கை
வளத்துக்கேற்ற முறையிலேயே வளர்ந்து வரும். மார்க்ஸியம் ருஷியாவில் வளர்ந்து
வரவில்லையா என்று சிலர் கேட்கலாம். மார்க்ஸியம் உள்ளபடியே குஷ்யாவில் வளர்ந்து
வருகிறதா என்று சிந்தித்துப் பார்த்தல் வேண்டும் மார்க்ஸியம் ருஷ்யாவில் முன்னே
லெனினிஸமாக வளர்ந்து வந்தது. இப்பொழுது அஃது ஆங்கே ஸ்டாலினிஸமாக வளர்ந்து
வருகிறது. மார்க்ஸியம் இனி ருஷ்யாவில் எந்நிலையடையுமோ?
மார்க்ஸியம் ஒருவிதத் தத்துவம். அது
நடைமுறையில் அதன் தத்துவப்படியே வளராது; நாடுகளின் இயற்கை நோக்குக்கும்
போக்குக்கும் ஏற்ற முறையிலேயே வளர்வதாகும். நமது இந்தியா-பழமையில் பேர் பெற்ற
இந்தியா-மார்க்ஸியத்தை அப்படியே ஏற்று நடத்தல் அரிது. எத்துணையோ தத்துவ இயல்களை
உண்டு, ஜீரணஞ் செய்து, சத்தை ஏற்று, அசத்தைத் தள்ளிய இந்தியா - மார்க்ஸியத்தை
மட்டும் உள்ளவாறு ஏற்குமா? அதை உள்ளவாறே ஏற்க இந்தியாவின் இயற்கை இடந்தராது. ஆதலின்,
'மார்க்ஸியம்' என்றதும், 'அந்தோ! சார்வாகம் உலகாயதம்-நாஸ்திகம்' என்று
மருட்சியடைந்து, 'அதைத் தீண்டலுமாகாது' என்று பிடிவாதஞ் செய்வது அறிவுக்கழகன்று
தார்க்கீகத்தையும் மிமாஞ்சசுத்தையும் ஈன்ற இந்தியா-வியாச சூத்திரத்தை ஈன்ற
இந்தியா-திருவள்ளுவரையும் இளங்கோலையும் ஈன்ற இந்தியா-மார்க்ஸியத்தை ஏற்க அஞ்சுமோ?
அதை ஆராய்ந்து உண்மை காணப் பின்னிடுமோ? ஒருபோதும் அஞ்சாது; பின்னிடாது. எதையும்
ஆராய்ந்து பார்க்கும் உரிமை மன்பதைக்கிருத்தல் வேண்டும். அவ்வுரிமையற்ற இடம்
நாகரிகம் செறிந்ததாகாது.
மார்க்ஸியம் ஹிம்ஸையைப் போதிப்பதென்று சில
இடங்களில் கருதப்படுகிறது. இஃது உலகை ஹிம்ஸிக்குங் கூட்டத்தாரின் பொய்ப்பிரசாரம்.
பொய்ப் பிரசாரத்துக்குச் செவிசாய்க்கும் அளவில் நின்றுவிடுவது தவறு.
மார்க்ஸியத்தைத் துருவி ஆராய்ந்து பார்த்தல் வேண்டும்; பார்த்தால் அதன் முடிவு
ஹிம்ஸையை அறிவுறுத்துகிறதா அல்லது அஹிம்ஸையை அறிவுறுத்துகிறதா என்பது புலனாகும்.
மார்க்ஸியத்தில் ஆங்காங்கே ஹிம்ஸை இருத்தல் உண்மை. அது தனிமனிதனை உளங்கொண்டதன்று;
அஹிம்ஸை முடிவைக் குறிக்கொண்டது. நமது இந்தியாவின் பண்டை அஹிம்ஸா தர்மத்தைப்
புதுக்கவல்லது மார்க்ஸியம் என்பது எனது கொள்கை, மார்க்ஸியம், சுக்கர நீதி
சாணக்கியம் உபநிஷதம்-திருக்குறள் முதலிய வற்றின் சாரம் படியப்பெற்று. இந்திய
இயற்கைக்கேற்ற வண்ணம் இந்தியாவில் பரவினால், இந்தியா அஹிம்ஸாமயமாகும் என்பது எனது
உறுதியான நம்பிக்கை.
அஹிம்ஸையின் நுட்பம்
அஹிம்ஸா தர்மம் பல பொருளில் வழங்கப்படுவது;
அஹிம்ஸையைக் கோழமையின் பாற்படுத்திப் பேசு வோரும் உளர். அவர், அஹிம்சையின்
தத்துவத்தை உணராதவரென்க. அஹிம்ஸா தர்மத்தில் விளைவதே வீரம் என்பது.' அஹிம்ஸா வீரமே
வீரம், மற்றையது வீரமாகாது. அது கொலையாகும்.
போர் இருவகை ஒன்று அறப்போர்; மற்றொன்று
மறப்போர். அறப்போர் தன்னலமற்றது; மற்றையது தன்னலமுடையது. தன்னலமற்ற -அஹிம்ஸா
தர்மப் போர் கொலையாகாது. மற்றப் போர் கொலையின்பாற்படும். விளக்கம் பகவத்கீதையிலும்
திருக்குறளிலும் பார்க்க.
அஹிம்ஸா தர்ம இயல்களையெல்லாம் ஈண்டு
விரித்துரைத்தல் அநாவசியம். அஹிம்ஸா தர்மம் வாழ்விடை வளர்தற்குரிய முயற்சிகளில்
தலைப்படுதல் சிறப்பு. அம்முயற்சிகளால் பொருளாதாரம் செம்மையுறும்; போர் நிகழாது.
அஹிம்ஸா தர்ம ஆக்கத்துக்குப் பொருட்பொதுமை இன்றியமையாதது. பொருட்பொதுமை இல்லாத
இடத்தில் அஹிம்ஸா தர்மம் வளர்தல் அரிது
பண்டை இந்தியாவின் பொருட்பொதுமை அடையும்
வகையில் தொழில்முறைகள் அமைந்திருந்தன. அத்தொழின் முறைகள் பின்னே மாய்ந்தன. அதனால்
அஹிம்ஸை வளராதொழிந்தது.
பொதுமை அறத்தைக் கெடுக்கவல்லது. சாம்ராஜ்ய
ஆட்சிமுறை. சாம்ராஜ்ய ஆட்சிமுறையில் அஹிம்ஸா தர்ம வளர்ச்சிக்குரிய தொழின்முறைகள்
அமைவதில்லை. அதனால் பொதுமை குலைந்துவிடும். பொதுமை மறையுமிடத்தில் அஹிம்ஸையும்
மறையும்.
விடுதலை
இக்கால உலகம் ஹிம்ஸைக்கு இரையாதல் கண்கூடு.
காரணம் சாம்ராஜ்ய நோய் உலகிடைப் பரவியதேயாகும். அந்நோய் நமது இந்தியாவிலும்
புகுந்துகொண்டது. அதனால் இந்திய இயற்கைவழி மக்கள் வாழ்வு நடைபெறுவதில்லை.
அந்நோயினின்றும் இந்தியா விடுதலை அடைதல் வேண்டும்; அடைந்தால் இந்தியாவின் இயற்கைக்குரிய
அஹிம்ஸை நன்கு வளரும். ஆகவே, இப்பொழுது இந்தியாவுக்கு என்ன வேண்டும்? விடுதலை
வேண்டும். இதுபற்றியே இந்நூலுக்கு 'இந்தியாவும் விடுதலையும் என்னுந் தலைப்புச்
சூட்டப்பட்டது.
1947 ஆகஸ்ட் 15-ம் நாள் முதல் இந்தியா விடுதலை அடைந்தது என்று சிலர்
கனவு காண்கின்றனர். இந்தியா விரும்பியது முழு விடுதலை, இப்பொழுது முழு விடுதலை
கிடைத்துவிட்டதோ? இல்லை. ஆதலின் இந்தியா இன்னும் முழுவிடுதலை அடையவில்லை என்க.
இதுபற்றிய விளக்கத்தை நூலின் இறுதியில் பார்க்க.
Comments
Post a Comment