சமகால பிழைப்பும் வாழ்வும் -அழகுராஜ்


சமகால பிழைப்பும் வாழ்வும் -அழகுராஜ்

      “பிழைத்தல் அல்ல வாழ்தல்" 10 நூல்களைக் கொண்ட நூல் வரிசையாக ஜியோடாமின் மூலம் எழுதப்பட்டிருக்கிறது. இதனை பூவுலகில் நண்பர்கள் நேர்த்தியாக வெளியிட்டுள்ளனர். சில இடங்களில் மட்டுமே எழுத்துப் பிழைகள் இருக்கின்றன. இருப்பினும் இந்நூலின் எளிமையான நடையும் வலுவான கருத்துக்களும் வாசிப்பில் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. “பிழைத்திருத்தலுக்கும் வாழ்தலுக்குமான வித்தியாசம் மலைக்கும் மடுவுக்குமானது" என்று புத்தகம் தொடங்குகிறது. பிழைத்திருக்க வேண்டுமென வாழ்தலும் வாழ்வதற்காக பிழைத்திருத்தலும் இரு வேறு பொருள் கொண்டது. இந்த புத்தக வரிசையை வாழ்தல் தான் வேண்டும் என்பவர்களுக்கு உரியது என்கிறார் ஜியோடாமின். இந்த நூலின் தரத்தையும் வாசிக்கப்படுவதன் அவசியத்தையும் உணர்ந்து பரிசளித்த தோழர் சக்தி விக்னேஷ்குமார் அவர்களுக்கு நன்றி.

இந்நூலின் பத்து பகுதிகள்:

  1. உயிர்வலை
  2. நாமும் நம் உறவினர்களும்
  3. ஏற்றத்தாழ்வுகளின் கதை
  4. பற்றி எரியும் பூமி
  5. பூமிக்கு நெருப்பு வைத்தவர்கள்
  6. பச்சை வியாபாரம்
  7. எந்திரன் “வேலையில் கரையும் வாழ்வு"
  8. விளக்கை சுற்றும் விட்டில் பூச்சிகள்
  9. குறைவே நிறைவு
  10. வளங்குன்றா வளர்ச்சி அல்ல; தேவை, மட்டுறு வளர்ச்சி

      என 10 பகுதிகள் அடங்கிய இந்நூலின் ஒவ்வொரு பகுதியும் சுவைபட விளக்கி புரிய வைக்கும் கலைச்சொற்களற்ற எளிய மொழியால் தகவல்களை கடத்தும் தொகுப்பாக அமைந்துள்ளது. இந்நூல் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு நூல்களும் தனித்தனி நூல்கள் என்றாலும் ஒன்றுக்கொன்று தொடர்பும் தொடர்ச்சியும் இருப்பதாகத் தெரிவதால் தனித்தனி நூல்கள் குறித்த வாசிப்புப் பார்வையாக இல்லாமல் இக்கட்டுரை பிழைத்தல் அல்ல வாழ்தல் தொகுப்புக்கான வாசிப்பனுபவமாக எழுதப்படுகிறது.

     மனிதன் இயற்கையை சார்ந்து வாழ்கின்றான். இயற்கை அவனது உடலாக இருக்கிறது. அவன் இறந்து போகக்கூடாது என்றால் இயற்கையுடன் அவன் தொடர்ந்து பரிமாற்றத்தில் இருந்து வர வேண்டும் ஏனென்றால் மனிதன் இயற்கையில் ஒரு அங்கமாக இருக்கிறான்" என்ற மார்க்ஸ் சிந்தனைக்கு ஏற்ப இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான சமகால த் தொடர்பே இந்நூல். கடலில் இருந்து உயிர்களினுடைய தோற்றவியல் தொடங்குவதும் அதன் வழியாக ஏனைய பகுதிகளுக்கு வளங்கள் கடத்தப்படுவதும் தெளிவான எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டிருக்கிறது. சாலமன் மீன்களின் இடப்பெயர்வு மற்றும் இனப்பெருக்க காலங்களை பற்றிய பகுதிகளில் அவை புவியின் காந்தப்புலம் மூலம் மற்றும் சூரியனின் இடமாற்றத்தை வழிகாட்டியாக கொண்டு தனக்கான பயணத்திற்குரிய வழியை செம்மைப்படுத்துகின்றன. இந்த இடமாற்றத்திற்கு பயிற்சி அளிக்கும் இடமாக கடல்களை விடவும் நதிகளை விடவும் செழிப்பானதாக காணப்படும் நதியின் முகத்துவாரங்கள் அமைந்துள்ளது. அந்த நதியின் முகத்துவாரங்களில், கழிமுகத்தில் தான் மீன்களினுடைய உற்பத்தி பெருகுவதை புவியியல் மற்றும் உயிரியல் அடிப்படையில் இந்நூல் விளக்கியுள்ளது. ஒரு மீனின் இடப்பெயர்ச்சியானது நதிநீரில் இருந்து கடல் நீருக்கு மாறும்போதும் கடல் நீரிலிருந்து நதிநீருக்கு மாறும்போதும் உப்பு அடர்த்தியின் விளைவாக வேதியியல் உயிரியல் மாற்றங்கள் மீன்களுக்குள் நடக்கக்கூடிய செய்தியையும் இத்தகைய இடப்பெயர்ப்பின் போது 12 அடிவரை எம்பி குதித்து மீன்கள் பயணிக்க கூடிய சுவாரசியமான தகவல்களையும் ஜியோடாமின் சேர்த்து பேசியுள்ளார். இயற்கையில் கழிவு என ஏதும் இல்லை என்பார்கள் அதேபோல மீன்களினுடைய கழிவில் நைட்ரஜன் அதிகப்படியாக இருக்கிறது. மீன்களின் இடப்பெயர்வின்போது மலைகளில் உள்ள தாது பொருட்கள் மீன்களின் வாயிலாக கடலை அடைகிறது பண்டமாற்ற முறைகளைப் போல மலைக்கும் கடலுக்கும் இடையில் தாது பொருள் பரிமாற்றம் நிகழ்கிறது.

   ஆப்பிரிக்க நிலப்பகுதியான சவானாவின் நிலவியல் அமைப்பையும் அகேஷியா தாவரங்களையும் விளக்கும் பகுதிகள் ரஷ்ய நாவல்களில் வரும் ஆசையாக பார்க்க நினைக்கும் இடங்களின் மாற்று வடிவமாக இருக்கிறது. நாகலட்சுமி சண்முகம் மொழிபெயர்த்த யுவால் நோவா ஹராரியின் சேப்பியன்ஸ், எஸ்.ஏ.பெருமாள் எழுதிய மனித குல வரலாறு நூல்களைப்போல முதல் இரண்டு நூல்கள் காணப்படுகின்றன. மனித குல வரலாறு நூலினை எஸ்.ஏ.பெருமாள் பொதுவுடைமைப் பார்வையில் விளக்கியிருப்பதைப் போலவே ஜியோடாமின் இந்த நூல் தொகுப்பு முழுவதும் ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறென மார்க்ஸ் கருத்துகளை ஏந்தி அதன் வழி வரலாற்று வழியிலான நிகழ்ச்சிகளையும், ஏமாற்றும் சூழ்ச்சிகளையும் அவர் சிந்தித்த உண்மைகளையும் முன்வைத்துள்ளார்.

     டிக்டிக், கோரனுக் மான் வகைகள், ஒட்டகச்சிவிங்கி போன்ற விலங்குகள் உணவு எடுக்கும் படிநிலையினை முன்னுதாரணமாக வைத்து பரந்த புல்வெளிக்காட்டில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் எவரும் இல்லை என்பது சுவைபட கூறப்பட்டுள்ளது. சாண வண்டுகளினுடைய இருப்பு பற்றிய பகுதியை வாசிக்கும் போது சமீபத்தில் பார்த்த ஒரு காணொளி நினைவுக்கு வந்தது. அந்தக் காணொளியின் சாராம்சம் என்னவென்றால் ஆஸ்திரேலிய மேய்ச்சல் நில பகுதிகளில் மேய்ச்சல் அதிகமாகும் போது மேய்ச்சலில் ஈடுபடும் உயிரினங்களின் சானங்களும் அதிகப்படியாகி இருக்கிறது. அந்தச் சாணங்கள் அதிகமாக அதிகமாக அதன் மூலம் நோய்த்தொற்று பல விதங்களில் பரவிய நேரத்தில் சாணங்களை அகற்றுவதற்கு பல்வேறு வகைப்பட்ட சாண வண்டுகள் ஆஸ்திரேலியா நிலப்பகுதிக்கு கொண்டு வந்திருக்கின்றனர். இந்த மேய்ச்சல் நில உயிரிகளினுடைய அதிகரிப்பு என்பது மனிதர்களினுடைய லாப நோக்கே ஆகும். மனிதர்களின் வாசமறியாத காடு தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கிறது என்பது முழுக்க உண்மை. மனிதனின் லாபநோக்கு தான் இயற்கை அழிவிற்கான முதற்படி ஆகும். காடுகள் என்பது மரங்கள் மட்டுமல்ல, அதில் உள்ள உயிரினங்களும் தான். காடுகளை உருவாக்குகிறோம் என்கிற பெயரில் தோப்புகளை பலர் உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். நாம் எவ்வளவுதான் மரங்களை வளர்த்தாலும் அது காடுகளாக மாறாது ஏனென்றால் காடுகளில் இயற்கையாகவே அதற்கேற்ற உயிரினங்கள் வாழ்கின்றன. உயிரினங்களையும் சேர்த்து அமைவது தான் காடு. இயற்கையாக இருக்கும் காடுகளை அழித்துவிட்டு புதிதாக காடுகளை உருவாக்குகிறோம் என்று சொல்வது பிழையான நடைமுறை. சாயவனம் நாவலில் காடழிப்பு நிகழும்போது பதறி சாகும் உயிரினங்களைப் பார்த்தால் காடு என்றால் என்ன என்பது புரியும். புவி வெப்பமயமாதலை மையமிட்டு அதிக அளவு மரங்களை வளர்ப்பதற்கு முனைகிறோம் உண்மையை பார்த்தோமானால் காடுகளை விட அதிக அளவில் ஆக்சிஜனை உற்பத்தி செய்யக்கூடிய இடமாக கடல் காணப்படுகிற செய்தி இந்நூலில் பதிவாகி இருக்கிறது. வாசகசாலை தளத்தில் கடலும் மனிதனும் என் தொடரை நாராயணி சுப்பிரமணியன் எழுதினார் அதில் கடல் சார்ந்த பல்வேறு தகவல்கள் இருக்கிறது அதையும் இந்த தொகுப்போடு சேர்த்து வாசிக்கலாம். வேட்டை முதலான தொழில்கள் உயிர்களுக்குள் நடைபெற்றாலும் அவைகள் ஒரு கூட்டுறவு வாழ்வினை வாழக்கூடிய நடைமுறையையும் கரையான், தேனீ முதலான உயிர்களுடைய கட்டமைப்பும் அதே சமயம் முதலாளித்துவ போக்குகள் அற்று கூட்டமாக வாழும் உயிரின குழுமத்தையும் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் இந்நூலில் வாசிக்கலாம். சாதுவான ஓநாய்களின் இனப்பெருக்கத்தால் நாய்கள் உருவானதை முன்வைத்து உயிரின கலப்புகளை ஆதாரங்களும் விலங்குகளுக்குள் உருவாகும் அல்பினோ குறைபாடு என்பது ஹைபிரிட் பொருட்களில் விதை இல்லாமல் இருப்பதோடு ஒப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. பலமிக்க உயிரினமோ அல்லது புத்திசாலித்தனமிக்க உயிரினமோ அல்ல; எந்த உயிரினத்தால் தன் சூழலுக்கு ஏற்றபடி தகவமைத்துக் கொள்ள முடிகிறதோ அதுவே பிழைத்திருக்கும் என்ற சார்லஸ் டார்வின் கூற்றை இயற்கை தேர்ந்தெடுப்பு என்ற பெயரில் தகுந்தன தப்பி பிழைக்கும் என்கின்ற போர்க்கள உத்தியோடு ஜியோடாமின் முன்வைக்கிறார்.

      “ஒன்றறி வதுவே உற்றறி வதுவே" என்று உயிரினங்களை தொல்காப்பியம் வகைப்படுத்துகிறது. அந்த வகைமைக்கு உட்பட்ட பொருத்தப்பாட்டை ஜியோடாமின் தொகுத்தளித்துள்ள பேலியோசோயிக், மீசோசோயிக், சீனோசோயிக் காலங்களுடன் ஆய்வுக்கு உட்படுத்துவதற்கான பொறியை பெறமுடியும். திடீரென பெய்யும் பெருமழையைக் காட்டிலும் பருவத்தில் பெய்யும் மழையை உயிர்ப்பெருக்கத்திற்கு அவசியம். காலநிலை மாற்றத்தின் மூலம் உயிரின சமநிலை உணவுத்தேவையையும் விலங்குகளுக்கிடையிலான பிணைப்பையும் ஜங்கிள் புக் படம் மூலம் ஜியோடாமின் உதாரணப்படுத்துகிறார்.  

     “நாம் காலநிலை நரகத்திற்கான அதிவேக பாதைகள் சென்று கொண்டிருக்கிறோம். ஒத்துழையுங்கள்; இல்லையேல், ஒழிந்து போ(வோம்)வீர்கள்!" என்ற கருத்தை ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டனியோ தெரிவித்து இருக்கிறார். இது முற்றிலும் உண்மையை பிரதிபலிக்கக் கூடிய கருத்து ஆகும். இதன் அடிப்படையில் காலநிலை மாற்றத்தினை அதற்கான தீர்வுகளை இந்நூலின் பகுதிகள் கலைச் சொற்களின் மிரட்டல் இன்றி எளிமையான நடையில் முன்வைக்கிறது. ஒளியை பிரதிபலிக்கும் பசுமை குடில் விளைவும் பசுமையாக வாயுக்களின் சுழற்சியும் புவி வெப்பமாதலின் பிரச்சனைகளும் பனி உருகி கடலுக்குள் செல்வதும் கடல் ஆவியாகி கடல் உயிரினங்களை அச்சுறுத்துவதோடு மற்றும் புயல் உள்ள பேரிடர்களுக்கான தொடக்கத்தை கடல் ஏற்படுத்தி வைப்பது முதலானவை சங்கிலித் தொடர் நிகழ்வுகள் ஆகும். விவசாய, மேய்ச்சல் நிலங்களில் பெருமழையைக் காட்டிலும் பருவமழை உயிர் பெருக்கத்திற்கான அவசியம். காலநிலை மாற்றமானது மனித இருத்தலுக்கான சிவப்பு எச்சரிக்கை என்கிறார் ஆண்டனியோ. வெப்பநிலை அதிகரிப்பினுடைய எதிர்வினை எல்லா உயிர்களிடமும் பரப்பப்படுகிறது. சராசரி அளவை விட 1.5டிகிரி வெப்ப அதிகரிப்பால் பூச்சிகளும் 70-90% வெப்பநிலை அதிகரிப்பு கடலுக்குள் நிகழும் போது பவளப் பாறைகளும் அழிகின்றன. உணவுச் சங்கிலி பாதிப்பும் உயிரின அழிவால் ஏற்படும் அபாயம் உள்ளது. சி.மோகன் தமிழில் மொழிபெயர்த்த ஜியாங் ரோங் எழுதிய ஓநாய் குலச்சின்னம் நாவலில் உணவுச் சங்கிலித் தொடர் அறுபடும் போது நிகழும் பாதிப்பை பார்க்கலாம். உலகம் முழுவதும் பிணைக்கப்பட்டுள்ளது. ஓரிடத்தின் அழிவு மற்றொரு பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் நோய் தொற்றினை நாம் சான்றாக எடுத்துக் கொள்ளலாம் கொரோனா எய்ட்ஸ் ஈக்கள் மற்றும் கொசுக்கள் மூலமாக பரவக்கூடிய நோய்கள் எல்லாம் ஏதோ ஓரிடத்தில் உற்பத்தியாகி உலகம் முழுவதும் பரவி இருக்கின்றன. நெகிழிப்பை பயன்பாடு நிலம் மற்றும் நீர் வாழ் உயிர்களை தொடர்ந்து அச்சுறுத்தியே வருகிறது. குறிப்பாக மீன்கள் உற்பத்தி ஆகும் கழிமுகம் பாதிப்படைகிறது. கடலில் நச்சுத் தாவரங்கள் வளர்வதற்கான சூழலை நெகிழிப்பைகளும் கடலின் வெப்பநிலையும் இயல்பாக ஏற்படுத்தி விடுகிறது. மாற்றாக துணிப்பை பயன்படுத்தலாம் என்று ஒரு மாயை நம்மை முழுவதுமாக சுற்றி இருக்கிறது. துணிப்பை உற்பத்தியை மக்கள் தொகையோடும் பயன்பாட்டு அளவோடும் ஒப்பிட்டால் இதற்கான சாத்தியம் எவ்வளவு என்பதை புரிந்து கொள்ளலாம். காலநிலை மாற்றம் மூலமாக புவி முற்றொழிப்பு நிகழ்கிறது. 

      காலநிலை மாற்றத்தில் கார்பன் முக்கியமான பங்கு வகிக்கிறது. அத்தகைய கார்பன் பெரு நிறுவனங்கள் மூலம் உபரியாக உற்பத்தி செய்யப்படுகிறது. சந்தையில் பரிமாறிக் கொள்ளவோ அல்லது விற்கவோ உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பண்டம் என்கிறோம். பெரு நிறுவனங்களை கூர்ந்தால் அவற்றின் பண்ட உற்பத்தியில் இரண்டு விதமான அச்சுறுத்தல்கள் வெளிப்படுவதை புரிந்து கொள்ளலாம். ஒன்று உழைப்பு சுரண்டல், மற்றொன்று சூழலியல் பாதிப்பு. உழைப்பு என்பது எவ்வித அழுத்தமும் இன்றி இயல்பான மனநிலையோடு நாம் முழு ஈடுபாட்டுடன் செயல்படுதலாகும். வேலை என்பது பிழைத்திருக்க மனிதன் செலுத்தும் உழைப்பு. சுரண்டல் மற்றும் உமிழ்வின் மூலமான பாதிப்புகள் இந்நூல் வரிசையில் அடுக்கி காட்டப்பட்டுள்ளது. உற்பத்தி பெருகுவதை நோக்கமாக வைத்து தரமான பொருட்களை உற்பத்தி செய்யும் வழிகள் தெரிந்தும் சுற்றுச்சூழல் பாதிப்போடு வணிகத்தை பெரு நிறுவனங்கள் பெருக்குகிறது. தனி மனிதர்களுடைய சூழலியல்சார் குற்றவுணர்வை மறுபரிசீலனைக்கு உள்ளாக்கி சந்தை பொருளாதாரத்தை இயக்கும் சக்திகளை குற்றவாளிகள் என்பதை இந்நூல் முன்வைக்கிறது.

  • 100 ஆண்டுகளுக்கு முன்பு தரமான பல்பு தயாரிக்கும் நுட்பம்
  • 50 ஆண்டுகளுக்கு முன்பு தரமான பேனா தயாரிக்கும் நுட்பம்
  • 30 ஆண்டுகளுக்கு முன்பு தரமான தொலைக்காட்சி செய்யும் நுட்பம்
  • 15 ஆண்டுகளுக்கு முன்பு தரமான சார்ஜ் நிற்கும் செல்பேசிகள் தயாரிக்கும் நுட்பம்

    தெரிந்திருந்தும் வணிகத்திற்காக அவை பயன்படுத்தப்படவில்லை. இலவசமாக ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பேனாக்கள் கொடுக்கப்பட்டு குறைவான விலை என மாயக்கவர்ச்சியுடன் விளம்பரமாகி சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதோடு விலைக்குறைவு என மக்களை பெருநிறுவனங்கள் ஏமாற்றியுள்ளன. ஒப்பீட்டளவில் பார்த்தால் எந்த பேனா நமக்கு சேமிப்பாக இருக்கிறது என்பதை நீங்களே பார்த்து கொள்ளலாம். ஆதி பொதுவுடமை சமூகம் முடிவு பெற்று அடிமை சமூகம் உருவான போது பொருட்கள் பண்டங்கள் ஆகின. இன்று நாம் வாழும் அரசியல் அமைப்பு மக்களாட்சி அமைப்பு அல்ல, முதலாளித்துவ ஆட்சி அமைப்பு என்பதை நம்மைச் சுற்றி நிகழும் சுரண்டல்களின் மூலம் உறுதிபடுகிறது. லாபம் என்பது தொழிலாளிகளின் அதிகப்படியான உழைப்பு என்கிறார் மார்க்ஸ். இங்கு அந்த உழைப்பு சுரண்டப்படுகிறது. பணக்காரர்கள் உழைப்பால் மட்டுமே உருவாவதில்லை. விலைக்குறைவு என உழைப்பாளிகளையும் தரமானது என நுகர்வோரையும் ஏமாற்றுவதன் மூலம் உருவாகிறார்கள். 

     காலநிலை மாற்றத்திற்கு மனிதனே காரணம் என்ற குற்றவுணர்ச்சி பரப்பப்படுகிறது. உண்மையை தேடிச் சென்றால் பொருளாதார சூழலை மையமிட்டு பெரு நிறுவனங்கள் செய்யும் சதியாகவே காலநிலை மாற்றம் இருக்கிறது. பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது போல பச்சை வியாபாரம், சூழலியல் கருத்தரங்கு என பலவித முகமூடிகளையும் இந்நிறுவனங்கள் வசதியாக அணிந்துகொள்கின்றன. சிலந்தி வலைக்குள் வண்டுகள் சிக்குவது போல கார்ப்பரேட் காலத்திற்குள் நாம் சிக்கியிருக்கிறோம். உயிரைக் குடிக்கும் புட்டி நீர், கார்ப்பரேட் கோடரி உள்ளிட்ட எழுத்தாளர் நக்கீரனின் சூழலியல் நூல் தொகுப்புகளில் ஆவணங்களுடன் பெரு நிறுவன அரசியல்  அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக “மறைநீர்" முதலான கருத்தாக்கங்களுக்கான உற்பத்தி பொருட்களை ஜியோடாமின் முன்வைக்கிறார். தொழிற்புரட்சியின் விளைவாக நிகழக்கூடிய பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் சூழலை நாம் வளர்ப்பதற்கான தடைகளாக இந்நிறுவனங்களே இருக்கின்றன. காரணம் என்னவென்றால் முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த அடிப்படை பண்பு தொடர்ந்து விரிவடைதலே ஆகும். இருநூறாண்டுகளில் நிகழ்ந்த பொருளாதார நடவடிக்கைகள் எல்லாம் மனிதன் தனக்கும் இயற்கைக்கும் வெட்டிய சவக்குழிகள் ஆகும். உழைப்பு சந்தைபடுத்தப்படுவதன் மூலம் மனிதன் தன்னைத்தானே பண்டமாக மாற்றியுள்ளான். காட்டிற்கு நடுவிலுள்ள நீலகிரி கேம்ப் பயரில் தோதுவர் பழங்குடியினர் பணத்திற்காக பாடி நடனமாடுகிறார்கள். பிழைத்தலுக்காக தன்னையும் தான் மகிழ்ச்சியாக வெளிப்படுத்திய கலையையும் பண்டமாக முன்வைக்கின்றனர். “நவீன மனிதன் தன்னிடமிருந்தும் தன் சக மனிதரிடமிருந்தும் இயற்கையிடமிருந்தும் அந்நியமாகி இருக்கிறான். அதிகபட்ச லாபங்களை அள்ளித்தரும் ஒரு முதலீடாக தன்னுடைய வாழ்க்கையையே உணருமளவிற்கு ஒரு விற்பனை பண்டமாக அவன் மாற்றப்பட்டிருக்கிறான்" என்று எரிக் ப்ரோம் சொல்லிய வாசகத்திற்கு ஏற்ற காட்சியாக ஜியோடாமின் 1936ல் வெளிவந்த சார்லி சாப்ளினின் மாடர்ன் டைம்ஸ் படத்தை முன்வைத்துள்ளார். https://youtu.be/6n9ESFJTnHs உழைப்பிற்கும் வேலைக்கும் பெருத்த வேறுபாடு இருக்கிறது. உழைப்பு என்பது பிழைத்திருக்க ஒரு மனிதன் செலுத்தும் உழைப்பு. வேலை என்பது கட்டாய உழைப்பு என்ற வேறுபாட்டை உணர்த்தி இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் செய்வது எது என்பதையும் நிபுணத்துவத்தின் அடிப்படையில் நிகழும் முரண்களையும் இந்நூல் முன்வைக்கிறது. பெரிய பெரிய சூழலில் மாநாடுகளே பெரு நிறுவனத்தின் உதவியால் விளம்பரத்திற்கென அல்லது தங்களை நியாயப்படுத்துவதற்கான நடைபெறுவதை நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். இந்நூலின் மட்டுறு வளர்ச்சி பகுதியில் மன்னராட்சிக்கு பின் மக்களாட்சி அல்ல முதலாளித்துவ ஆட்சி இருக்கிறது என்பதற்கான சுவடுகள் தெரிய வருகிறது. பேராசிரியர். ராஜமுத்திருளாண்டி தொகுத்துள்ள கதாயுதங்கள் என்ற நூலில் விஞ்ஞானி எழுதிய முன்னை இட்ட தீ என்ற கதை உள்ளது. அதில் கார்ப்பரேட் முதலாளிகளின் மூளையின் வேலை எப்படியானது என வாசித்து தெரிந்து கொள்ளுங்கள். சுதந்திரம் என்பது எதையும் செய்வதற்கான உரிமம் அல்ல என்பதையும் அது ஒரு பொறுப்புணர்வு என்பதையும் தனி நபர்களுக்கு உணர்த்தும் பணியை இந்நூல் பூர்த்தி செய்கிறது.

      இந்த பூமியில் பல லட்சம் ஆண்டுகள் பிழைத்திருந்த மனித இனம் தன்னுடைய இருநூறு ஆண்டு கால பொருளாதார நடவடிக்கைகளால் அவற்றிற்கு சவக்குழி வெட்டியுள்ளதை ஒவ்வொரு நூற்பகுதிகளிலும் ஜியோடாமின் தொட்டு செல்கிறார். குறிப்பாக அமெரிக்க தேசம் குடிமக்களால் ஆன தேசமாக இல்லாமல் நுகர்வோர்களால் இயங்கக்கூடிய தேசமாக மாறி வருகிறது தொடர் பழக்கங்களை கவர்ச்சிகரமாக செலுத்தி அடிமை முறையை புகுத்தக்கூடிய வகையில் நுகர்வோராக மனிதர்கள் உடனடி வெற்றியும் குடிமக்களாக தோல்வியும் அடைகின்றனர் இதில் விளம்பரங்கள் முக்கிய பங்கு நிலை பெறுகிறது. நுகர்வுக்கு முன் வரிசையான பல கேள்விகளை இந்நூல் அடுக்குகிறது. நுகர்வோருக்கென,

  1. மறுபரிசீலனை
  2. புறக்கணித்தல்
  3. குறைத்தல்
  4. பழுது பார்த்து பயன்படுத்துதல்
  5. மாற்று பயன்பாட்டிற்கு உட்படுத்துதல்
  6. பகிர்தல்/பரிசளித்தல்
  7. மறுசுழற்சி செய்தல்
  8. தொழுவுரமாக்கல்
  9. மகிழ்தல் 

     என்று 9 விதிகளை பகுத்து அதனை செய்வதற்கான வழிமுறைகளையும் QR பட வடிவில் ஜியோ டாமின் கொடுத்திருக்கிறார். அதனை நான் எழுத்து இணைப்பாக கீழே கொடுத்திருக்கிறேன்.

https://youtu.be/h_Sgc4xocPo

https://youtu.be/eG6gJ614T3w

https://youtu.be/JJxnau7cZyU

      இந்நூல் தரும் முடிவுகளில் சிலவற்றை வேண்டுமானால் தனி மனிதர்கள் முயன்று பார்க்கலாம் பெருவாரியான முடிவுகளை அரசு மட்டும் தான் செய்ய முடியும். நான் எனும் சொல்லும் போது தோற்றுவிடுகிறோம், தனி மனிதர்களாக சிந்திக்கும்போது உதிரிகளாகி விடுகிறோம் இந்நூல் நாம் என மாறுவதற்கான வழிகளை சேர்த்து சொல்லி இருக்கிறது. உற்பத்தியை வைத்து நாட்டின் வளர்ச்சியை கணக்கிடக் கூடிய பொருளாதார முறையில் பெருத்த குறைகள் உண்டு. அத்தகைய பொருளாதார அடிப்படையை வைத்து தங்களை வளர்ந்த நாடாகவோ அல்லது வளர்ந்து வரும் நாடாகவோ பலர் குறிப்பிட்டு கொண்டு இருக்கின்றனர். வளர்ந்த நாடுகளின் கழிவுகளை மறுசுழற்சிக்கு மூன்றாம் உலக நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது இந்நிலை மாறுவதற்கேற்ற சூழல் உலகமெங்கும் ஏற்படுத்தப்படுவது இன்றைய காலநிலையின் தேவை. .

  1. வறுமை ஒழிப்பு
  2. பட்டினியின்மை
  3. உடல்நலம் மற்றும் நலமான வாழ்வு
  4. தரமான கல்வி
  5. பாலின சமத்துவம்
  6. தூய்மையான குடிநீர் மற்றும் சுகாதாரம்
  7. அனைவருக்குமான தூய்மையான எரிசக்தி
  8. நல்ல வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி
  9. தொழில்துறை-புதுமைகள்-உட் கட்டுமானம்
  10. குறைக்கப்பட்ட ஏற்றத்தாழ்வுகள்
  11. நிலைத்த நகரங்களும் சமூகங்களும்
  12. நிலைத்த நுகர்வும் உற்பத்தியும்
  13. காலநிலை மாற்றத்திற்கான செயல்பாடுகள்
  14. கடல் வாழ் உயிரினங்கள்
  15. தரைவாழ் உயிரினங்கள்
  16. அமைதி நீதி மற்றும் உறுதியான நிறுவனங்கள்
  17. குறிக்கோள்களை ஏற்றுவதற்கான கூட்டு

      என ஐக்கிய நாடுகள் சபை SDG (sustainable development goals) என்ற அளவீட்டின் அடிப்படையில் 17இலக்குகளை முன்வைக்கிறது. இந்த இலக்குகளின் குறிக்கோள்களை பிழைத்தல் வாழ்தல் தொகுப்பு தனக்குள் அடக்கமாக கொண்டிருக்கிறது. இது அனைவராலும் வாசித்துப் பார்க்கப்பட வேண்டிய தொகுப்பு.

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு