சூழலியல் திறனாய்வு நோக்கில் கானகன் நாவல்-கோ. வெங்கடாசலம்
சூழலியல் திறனாய்வு நோக்கில் கானகன் நாவல்
-கோ.
வெங்கடாசலம்
முன்னுரை
பரந்து விரிந்த இந்த புவிக்கோளமானது காடு, மலை, கடல், பாலைவனம் என பன்முகங்களைக் கொண்டு உயிரினத் தோற்றங்களுக்கும், அதன் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்து வருகிறது.
இயற்கையின் சிறப்பே மனிதனை உள்ளடக்கிய பல்உயிரின கட்டமைப்பாகும். அபரிமிதமான அறிவியல் வளர்ச்சி, வானளாவிய தொழிற்சாலைகள் ஆகியன இருகரம் கோர்த்து இயற்கையின் மீதான பன்முகத் தாக்குதலை நிகழ்த்துகின்றன. இதன் ஒட்டுமொத்த விளைவு புவியின் இருப்புக்கே மிகப்பெரிய அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையல்ல.
பண்பட்ட மனிதர்களாக சமூகத்தில் இருப்பவர்கள் தங்களின் பேராசை காரணமாக காட்டின்மீதும், அங்கு வாழும் பழங்குடியினர் மீதும் நிகழ்த்தும் அத்துமீறல்களை பேசுவதே கானகன் நாவல்.
சூழலியல் திறனாய்வு நோக்கில் அந்நாவலை அணுகுவதே இக்கட்டுரையாகும்.
சூழலியல்திறனாய்வு
- அறிமுகம்
சூழலியல் திறனாய்வு இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் தோன்றியது.
Eco
criticism என்ற சொல்லானது கிரேக்க மொழியில் உள்ள பின்வரும் வார்த்தைகளைக் கொண்டு உருவானது. Oikos, Kristis. “Eco criticism
என்ற 'Oikos’, 'Kritis’ என்கிற கிரேக்க சொற்களிலிருந்து உருவானதாகும். ‘Oikos’ என்ற சொல் வீட்டைக் குறிக்கும். தொல்காப்பியம் குறிப்பிடும் திணை என்கிற சொல் இதற்கு நிகரானது. முதல், கரு, உரி என்கிற முக்கூட்டில் இயற்கை, மனிதன், தெய்வம் என அனைத்தும் அடங்கியுள்ளன. இயற்கை, மனிதன், தெய்வம் ஆகியன அடங்கிய அகப்பரப்பே ‘Oikos’ என்பதாகும்.
‘Kritis’ என்றால் ஆய்வதாகும். இயற்கை மற்றும் மனிதன் உள்ளடக்கிய புவியை ஆராய்வது என்பது இதன் பொருள் ”மேற்கூறிய இக்கூற்று சூழலியல் திறனாய்வு நோக்கில் அகநானூறு என்னும் நூலில் இரா. ஸ்ரீவித்யா அவர்கள் வழங்கியுள்ள அணிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Eco criticism என்ற இச்சொல்லை முதன்முதலில் 1978ஆம் ஆண்டு வில்லியம் ரூக்கர்ட்(William Rueckert) என்பவர் தனது கட்டுரையான “இலக்கியமும்
சூழலியலும்”
சூழலியல் திறனாய்வில் ஒரு சோதனை
(Literature and Ecology; An experiment in
Ecocriticism) என்னும் கட்டுரையில் பயன்படுத்தியுள்ளார்.
சூழலியல் திறனாய்வு
- வரையறை
சூழலியல் திறனாய்வு சார்ந்து பல திறனாய்வாளர்கள் பல வரையறைகளைத் தந்துள்ளனர். அவற்றுள் சில,
இலக்கியத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் உள்ள உறவினைக் கற்பதே சூழலியல் திறனாய்வு.
-செரல்கிலாட்ஃபெல்டி
சூழலியல் திறனாய்வு என்பது மனிதனுக்கும், பிற உயிரினங்களுக்கும் இடையே உள்ள உறவுகளையும், இடையீடுகளையும் குறித்து ஆராய்வது
-பேட்ரிக்டிமர்ஃபி
சூழலியல் பிரச்சினைகளை மையமிட்ட எந்தவொரு சமூக மெய்மைகளையும் ஆராய்கிற கோட்பாட்டைச் சூழலியல் திறனாய்வு எனலாம்.
–கிலன் எ.லவ்
ஒரு இலக்கியப் பிரதியில் மனித மற்றும் அல் மனித உயிர்களின் வாழ்க்கை எவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளது, சுற்றுச்சூழல் அழிவிற்கு எதிராக கருத்துக்கள் எவ்வாறு பேசப்பட்டுள்ளது என்பதை ஆராய்வதே சூழலியல் திறனாய்வு.
-லாரன்ஸ் கூப்பன்
தமிழில்சூழலியல்திறனாய்வு
தமிழ்மொழியின் பெருமைகளை நிலைநிறுத்தும் செவ்வியல் இலக்கியங்கள் யாவும் சூழலியலுக்கு நெருக்கமானவை என்றால் அது மிகையல்ல. தமிழின் தொன்மை நூலான தொல்காப்பியம் சூழலியல் திறனாய்வுக்குரிய அடிப்படைக் கட்டமைப்புகளை அளித்துள்ளதை பின்வரும் நூற்பாக்களைக் கொண்டு நிறுவலாம்.
“முதல் எனப்படுவது நிலம் பொழுதிரண்டின்
இயல்பென மொழி இயல்புணர்ந்தோரே”
(தொல்.நூற். 4)
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்த லெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.”
(தொல்.நூற்பா-
5)
தெய்வம் உணவே மாமரம் புட் பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப
(தொல்.நூற்பா
-20)
மேற்கூறியது தவிர தமிழ் இலக்கியப்பரப்பு முழுவதும் சூழலியலுக்கான சிந்தனைகள் இடம்பெற்றுள்ளன.
சூழலியல் திறனாய்வின் வெவ்வேறு அர்த்தங்களை பின்வருமாறு நம்மால் அறியமுடிகிறது.
சுரேஷ்பிரெட்ரிக் ‘சூழ்நிலைதிறனாய்வு’
என்கிற பதத்தை பயன்படுத்தியுள்ளார். புதிதாக வளர்ந்து வரும் திறனாய்வு என்ற பொருளை உணர்த்தும் விதமாக 'புதுக்கொழுந்துத் திறனாய்வு’
என்பார் மது.சு.விமலானந்தம்.
ஆனால், இத்திறனாய்வு முழுக்க முழுக்க இயற்கையை(பசுமையை)
ஆராய்ந்தால் இதனை 'பச்சைத்திறனாய்வு’
என அழைப்பது பொருந்தும் என்பது முனைவர் இரா. ஸ்ரீவித்யா அவர்களின் கருத்தாகும்.
சூழலியல் திறனாய்வு நோக்கில் அகநானூறு (சதிஷ்.சு;2017; ப.எ – 4).
செரில் கிலாட்ஃபெல்டி
சூழலியல் திறனாய்வின் வளர்ச்சி படிநிலைகளை செரில் கிலாட்ஃபெல்டி மூன்று கட்டங்களாக சில சிந்தனைகளைக் கொண்டு நிறுவியுள்ளார்.
- ஒரு இலக்கியத்தில் இயற்கை எவ்வாறு சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்பதை ஆராய்தல், ஒரே மாதிரியான சித்தரிப்புக்களை வெளிக்கொணர்தல்.
- இயற்கை சார்ந்த எழுத்துக்களுக்கு புத்துயிர்ப்பு அளித்தல்.
- உயிரினங்கள் குறித்த குறியீட்டுக் கட்டமைப்பை ஆராய்தல். ஒரு சொல்லாடல் எவ்வாறு பாலினம் குறித்த பார்வையைக் கட்டமைக்கிறது, மனிதனல்லாத பிற உயிரினங்கள் குறித்த பதிவை உண்டாக்குகிறது என்பதன் மூலம் ஒரு இலக்கியப்பிரதியை வாசிப்பதற்குரிய கோட்பாட்டு சட்டகத்தை வளர்த்தெடுத்தல். (சதிஷ். சு; 2017; பக்.10-11)
இதில் கூறப்பட்டுள்ள கருத்தாக்கங்கள் யாவும் கானகன் நாவலில் குறுக்கும் நெடுக்குமாகப் பயணித்துள்ளது. இதன் காரணமாக சூழலியல் திறனாய்வு நோக்கில் கானகன் நாவலை இக்கட்டுரையின் மூலம் அணுகுகிறேன்.
சூழலியல் திறனாய்வின் வகைமைகள்
ஆரம்பகால மனிதவாழ்க்கை என்பது இரண்டறக் கலந்த இயற்கை வாழ்க்கையாகும். மனிதகுலம் பண்பட்டதாகவும், நாகரீகம் அடைந்ததாகவும் வளர வளர இயற்கையின் மீதான மனித சிந்தனை மாற்றம் பெற்று வந்துள்ளது. அதிலும் குறிப்பாக, கடந்த சில நூற்றாண்டுகளில் புவிப்பரப்பில் உள்ள இயற்கை வாழிடங்கள் மீது மனிதகுலத்தால் நிகழ்த்தப்பட்டுள்ள வன்முறைகளும் அத்மீறல்களும் புவியின் இருப்பிற்கும் பல்லுயிரின பெருக்கத்திற்கும் இதுவரை காணாத அளவிலான அபாயத்தையும், அழிவினையும் தருவதாக உள்ளது.
இயற்கையின் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்கள் யாவும் சமூகம், பொருளாதாரம், பண்பாடு, கலாச்சாரம், மொழி, அரசியல் என அனைத்து துறைகளின் மீதும் தாக்கத்தைச் செலுத்துகின்றது. அவ்வகையில், சூழலியல் திறனாய்வு பரந்து விரிந்த தளத்தில் இலக்கியங்களை நுணுக்கமாக ஆராய முயல்கிறது. சூழலியல் பெண்ணியம்
(Ecofeminism), சூழல் மொழியியல்(Ecolinguistics),
சூழல் மார்க்சியம்
(Ecomarxnism), சமூகவியற்சூழலியம்
(Social Ecology), சூழல் குறியியல்
(Eco semiotics), பிற்காலச் சூழலியல் (Post colonial Ecocriticism), சூழல் மெய்யியல்
(Ecophilophy), சூழல் மானுடவியல்
(Eco Anthropology), சூழல் உளவியல்
(Eco psychology), மூன்றாம் உலகநாட்டுச் சுற்றுசூழலியம்,
பொருள் முதல்வாத சமூகவியல் சூழல் பெண்ணியம்
(Materialist/ Socialist Ecofeminism), என இத்திறனாய்வின் கிளைகள் பல்கிப் பெருகியுள்ளன. இக்கட்டுரையின் அடுத்தடுத்த பகுதிகளில் இத்திறனாய்வு வகைகளை, கானகன் நாவலோடு பொருந்தி விளக்க காண்போம்.
ஆழ்நிலை
சூழலியல்
நார்வே நாட்டு தத்துவவாதி ஆர்னேநாஸ்(ArneNaess)
என்பவரால் முதன்முதலாக(1972) இச்சொல்(deepecology) கையாளப்பட்டது. மனிதனுக்குப்
பயன்படுகிற இயற்கை மனிதனுக்குப் பயன்படாத
இயற்கை என்கிற தளத்திற்கு அப்பாற்பட்டு இயற்கையை அதன் உள்ளார்ந்த நிலையில்
மதிப்பிடுகின்ற தன்மையே
சூழ்நிலை சூழலியல் (DeepEcology) ஆகும். (சதிஷ்.சு.:2017;
ப.11)
சடையன் காட்டில் வாழும் விலங்குகளைக் காட்டின் ஆன்மாவாக
பார்த்தான். விலங்குகளோடு அவன் கொண்ட பிணைப்பு
உணர்வுப் பூர்வமானது.
அவ்விலங்கினங்களின் இணக்கத்தினைக் கொண்டே குடிலையும் அதன் வாழ்வையும்
நிலைநிறுத்த முடியும் என்பதை உணர்ந்து செயல்படுகிறான்.ஒரு கட்டத்தில் தனது உடலை
அங்குள்ள விலங்குகளுக்கு இறந்த பின்னர் அளிக்க விரும்புகிறான். அதன் மூலம் தனது
இருப்பைக் காட்டுக்குள் நிலைநிறுத்த முடியும் என்பதாக நினைக்கிறான். வாசியும் பூசணியும் பேசிக்கொள்ளும்பொழுது
சடையனின் இன்றியமையாமையும் பின்வருமாறு வெளிப்படுகிறது. (சதிஷ்.சு.:2017,
பக்.134-137)
(பாட்டா...
அய்யா ஏன் இப்பிடியே சுத்திக்கிருக்கு...
எல்லாரும் அதுக்கு புத்திசுவாதினம் இல்லைன்னு சொல்றாக.... புத்திசுவாதினம் இல்லாதவன் எப்பிடி சீவராசிக கூட எல்லாம் பேச முடியும்...?
பூசணி சிரித்தார்.
"மனுசனத்
தவிர யார்கிட்டப் பேசினாலும் புத்தி சுவாதினம்
இல்லாதவன்னு தான் மனுஷங்க நெனைக்கிறாங்க... உங்க அய்யா ஞானம் உள்ளவன். இந்தப் பளியக்குடிக்கு அவந்தாண்டா இன்னைக்கு வழிகாட்டி...”
"அப்பறம்
ஏன் யாரும் அவர இங்கயே
தங்க வைக்க மாட்டேங்கறீங்க?...”
பூசணி
அவனைக் கவனமாக பார்த்தார்.
‘குடிசைல ஒடுங்கிப் படுக்கற ஆளாடா சடையன். அவன் உடம்புக்குள்ள இந்தக் காடு இருக்கு... அவன் தூங்கினா காடும் தூங்கிடும்....”
பளியன் குடிசைக்குள்ளயே ஒடுங்கிக் கிடந்தா
காடு கைய விட்டுப் போயிரும். இந்தக் காட்ட சுத்திக்கிட்டே இருக்கனும். அது கூட பேசிக்கிட்டே இருக்கனும். இந்தத் தலமுறைல அப்பிடி காட்டோட பேசிக்கிட்டு
இருக்க பளிச்சியா பாத்து அனுப்புனது உங்க அப்பன..”
-
கானகன், லட்சுமி சரவணக்குமார்; ப.134)
சடையன் அவனுக்கு எதுவுமே கொடுத்ததில்லை. தனக்கிருக்கும் தவிப்பு அவனுக்கும்
இருக்கிறது என்பது தெரிந்திருந்தாலும் அவனை நெருங்கத் தயங்கினான். தனது அருகாமை வாசியையும் அலைக்கழித்து விடுமோ என்கிற அச்சம். சாதாரண ஒரு பளியனாய் சந்தோசமாக அவன் வாழ வேண்டும் என்பதைத்தான்
விரும்பினான். இந்த அகமலைக் காடு இருக்கும் காலம் வரையிலும் சடையனின் ஆன்மா
இருக்கும். இறந்த பின் தன்னுடலை பறவைகளுக்கு
இல்லாமல் மிருகங்களே திண்ண வேண்டுமென விரும்பினான். பறவைகள் ஒரு வகையில்
நாடோடிகள். அவர்களுக்கு நிரந்தரமான இடமில்லை. இந்தக்காட்டைச் சேராத ஒருவருக்கு
தன்னுடலைத் தர அவன் விரும்பவில்லை. அவனைத் திண்ணும் மிருகம் இந்தக் காட்டில் வாழ வேண்டும். அந்த
மிருகத்தின் உடலில் புகுந்து கொண்ட பின்னும்
தன் ஆன்மா இந்தக் காட்டையே சுற்றிக்கொண்டிருக்க வேண்டுமென விரும்பினான்.
-கானகன், லட்சுமி சரவணக்குமார்; பக்.136-137
ஆழ்நிலை சூழலியல் என்பது மனித மையப்போக்கை விட்டு விலகி புவிமையப்போக்கை
நிலை நிறுத்துவதாகும். இப்புவிக்கோளத்தில் மனிதனும் ஒரு உயிர் அவ்வளவு
தான்மனிதனல்லாத மற்ற உயிரினங்கள் தான் பல்லுயிர் பெருக்கத்தை இப்புவிக்கோளத்தில்
நிலைநிறுத்துகின்றன.
சடையன் செல்லாயியை
விட்டுப் பிரிந்த பின்னர் தன் வாழ்வை முழுவதும் காட்டோடு பிணைத்துக்கொள்கிறான். ஒரு
கட்டத்தில் விலங்கு மற்றும் பறவையின் மொழிகளை அறிந்து அவைகளுக்கு நிகழ இருக்கும் ஆபத்துகளை
அவைகளின் மொழியில் தெரிவிக்கிறான். மற்றவர்களால் காட்டில் நிகழ்த்தப்படும் அத்துமீறல்களுக்கு
காட்டுவிலங்குகளைக் கொண்டு எச்சரிக்கை செய்வதும் சில நேரங்களில் நாசங்களை ஏற்படுத்துவதன்
மூலம் அக்காடானது விலங்குகளுக்குச் சொந்தமானதை நிலைநிறுத்துகிறான் . வாசி என்னும் பாத்திரமும்
விலங்குகளோடு உணர்வுப்பூர்வமாக பிணைந்தவனாகக் காட்டப்படுகிறான். தகப்பனோடு முதலில்
வேட்டைக்குச் செல்லும்போது அங்கு தகப்பனால் ஒரு குட்டி சருகுமான் சுடப்படுகிறது. அதனைக்
கண்ட வாசி இரக்கப்பட்டு தன் கண்ணீரைச் சிந்துகிறான். அடுத்தக்கட்டமாக மற்றொரு இடத்திலும்
விலங்கினங்களை சக உயிரியாக மதித்து வளர்க்கவும் காக்கவும் முயல்கிறான். ஜமீன் ஒருவர்
பொழுதுபோக்கிற்காகவும் தனது அதிகாரத்திற்காகவும் புகழை நிலைநிறுத்துவதற்காகவும் வேட்டைக்கு
வருகிறார். அங்கு குட்டி போடத் தயாராக இருந்த மானைச் சுட்டார். அப்பொழுது அங்கு இருப்பவர்களைப்
பார்த்து வாசி காரி துப்பிவிட்டு இறந்தமானின் வயிற்றைக் கிழித்து அக்குட்டியை எடுத்துச்
சென்று வளர்க்கிறான். இவ்வறாக மற்ற உயிரினங்களுக்கும் அவற்றின் இருப்பிற்கும் உற்ற
துணையாக இருக்கும் வாசியை ஆழ்நிலைச் சூழலியலோடு பொருத்திக் காண்பது ஏற்புடையதாகும்.
முடிவுரை
கல், மண், மரம் போன்றவை உருவாகுவதற்கு பல காலம்
ஆகிறது. ஆனால், அவற்றை உருமாற்றம் செய்வதோ அழிப்பதோ சில மணித்துளிகளில் நிகழ்ந்துவிடுகிறது.
இயற்கையைப் பயன்படுத்தும் மனிதன் இப்புவிக்கோளமானது எல்லா உயிர்களுக்கும் உரித்தானது
என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். நாம் சந்திக்கும் இயற்கை இடர்பாடுகள் யாவும்
நமது செயல்பாடுகளினாலும் அறிவியல் தொழில்நுட்பத்தினாலும் ஏற்படுகிறது.என்பதனை உணர்ந்து
எதிர்கால சந்ததியினரைக் கருத்தில் கொண்டு இந்த புவிப்பரப்பையும் அதில் வாழும் பல்லுயிரிகளையும்
பாதுகாப்பை வலியுறுத்த சூழலியல் திறனாய்வை கானகன் நாவல் வழிநின்று வெளிப்படுத்த முடிகிறது.
Comments
Post a Comment