எடுத்தாளப்பட்ட பகுதி

 

எடுத்தாளப்பட்ட பகுதி

புதிய தமிழகம் -மா.ராசமாணிக்கனார்

வரலாறு உண்டாக்கிய நாட்டுப் பிரிவுகள் 

கடல்கோள்கள்

 மிகப் பழைய காலத்தில் தமிழகம் இன்றுள்ள இலங்கைத் தீவை தன்னகத்தே பெற்றிருந்த பெரு நிலப்பரப்பை குமரி முனைக்கு தென் பால் பெற்றிருந்தது என்றும் அப்பகுதி ஏழ்தெங்க நாடு, ஏழ்பனை நாடு முதலிய நாற்பத்தொன்பது நாடுகளை உடையதாக இருந்தது என்றும் அந்நிலப்பரப்பில் குமரிமலைத் தொடர் இருந்தது என்றும் அம்மலையிலிருந்து குடிரியாறு அப்பெரு நிலப்பரப்பில் பாய்த்தது என்றும் ஒரு பெருங்கடல்கோளால் அந்நாடுகளும் குமரிமலையும் கடலுள் ஆழ்ந்தன என்றும் பழைய தமிழ் நூல்கள் சொல்லுகின்றன. ஒரு பெரிய கடல்கோள் ஏறத்தாழ கி.மு. 2300ல் நிகழ்ந்தது என்றும் அப்பொழுது இலங்கை இந்தியாவினின்று பிரிந்தது என்றும் இலங்கை வரலாறு கூறுகிறது. அக்கடல்கோளே குமரி நாட்டை அழுத்தியிருக்கலாம்

   அக்கடல்கோளுக்குப் பிறகு குமரியாறும் அது பாயப்பெற்ற நிலப்பகுதியும் தமிழகத்தின் தெற்கெல்லையாகக் கூறப்பெற்றன. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இக்குமரியாறு பாயப்பெற்ற நிலப்பகுதியும் கடலுள் அமிழ்ந்தது. இலங்கையில் உண்டான இரண்டாம் கடல் கோள் கி மு 504ல் நிகழ்ந்தது என்றும் அக்கடல் கோளால் இலங்கையின் பெரும் பகுதி அழிந்தது என்றும் இலங்கை வரலாறு கூறுகிறது. குமரியாறு கடலால் கொள்ளப்படுவதற்கு முன் தொல்காப்பியம் செய்யப்பட்டது என்பது அறிஞர் கருத்து. இக்கடல்கோளால் இரண்டாம் தமிழ்ச் சங்கம் நிகழ்ந்த அலைவாய் (கபாடபுரம் என்னும் நகரம் அழிந்தது என்பது கூறப்படுகிறது

 இந்த இரண்டு கடல்கோள்களுக்குப் பிறகு மதுரை பாண்டியர் தலைநகரமாயிற்று. அப்பொழுது இன்றுள்ள குமரிமுனை தமிழகத்தின் தெற்கெல்லையாகக் கொள்ளப்பட்டது. இக்காலம் கடைச்சங்க காலம் என்று அறிஞர் கூறுவர். முதற் கடல்கோள் காலம் முதற் சங்க காலம் என்றும் இரண்டாம் க டல்கோள் காலம் இடைச்சங்க காலம் என்றும் கூறுவர்

புதிய மேற்கு எல்லை

  இம்மூன்று காலங்களிலும் வேங்கடமே தமிழகத்தின் வட எல்லையாகக் குறிக்கப்பட்டுள்ளது. கிழக்கிலும் மேற்கிலும் கடலே எல்லையாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் பன்னெடுங்கால முதலே தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே - வேங்கடம் தமிழகத்தின் வட எல்லையாகவும் கிழக்கிலும் மேற்கிலும் கடல் எல்லையாகவும் தெற்கே முதலில் நாடு இருந்தது - பின்பு கடல் எல்லையாக மாறியது என்னும் உண்மைகள் மேலே கூறப்பட்ட செய்திகளைக் கொண்டு தெளியலாம். இந்த நிலை ஏறத்தாழ கி.பி. 16-ஆம் நூற்றாண்டு வரையில் இருந்ததால் இதற்கிடையில் மலையாளத்தில் பேசப்பட்டு வந்த பழந்தமிழ், நில அமைப்பால் தனித்து வழங்கலாயிற்று. அங்குக் குடியேறிய ஆரியர்கள் ஆதிக்கத்தால் பழந்தமிழ் தன் செல்வாக்கை இழந்தது. படிப்படியாக வடமொழிக்கு அடிமையாகி கொடுந்தமிழ் என்று பிற தமிழ்நாட்டு மக்களால் பெயர் வழங்கப்பட்டது. தமிழும் வட மொழியும் கலந்த அக்கொடுந்தமிழே நாளடைவில் மலையாளம் என்ற பெயர் பெற்றது. மேற்கு மலைத் தொடர்ச்சியின் அமைப்பால் சோழ பாண்டிய நாட்டு மக்கள் சேரநாட்டு மக்களோடு நெருங்கிய தொடர்பு கொள்ள வழியில்லை. எனவே அந்நாடு தனித்து இயங்க வேண்டிய நிலையிலிருந்தது ஆசியச் செல்வாக்கால். அந்நாட்டு மொழி, பழக்க வழக்கங்கள் இன்ன பிறவும் முற்றிலும் மாறுபட்டுவிட்டன. எனவே கி.பி. 17ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழகத்தின் மேற்கு எல்லை மேற்குத் தொடர்ச்சி மலையெனவே கூற வேண்டியதாயிற்று.

வட எல்லையில் மாறுதல்

   விசயநகர ஆட்சிக் காலத்தில் கன்னடரும் தெலுங்கரும் முசுலிம்களின் படையெடுப்பால் தாக்குண்டு தெற்கு நோக்கி ஓடிவந்தனர்; திருப்பதி முதலிய தமிழகத்து வட பகுதிகளில் மிகுதியாகக் குடியேறினர். அக்குடியேற்றம் வரவர மிகுதிப்பட்டது. அதன் விளைவால் திருப்பதியைத் தன்னகத்தே கொண்ட சித்தூர் மாவட்டம் நெல்லூர் மாவட்டத்தின் தென்பகுதி, செங்கற்பட்டு மாவட்டத்தின் வட பகுதி வட ஆற்காடு மாவட்டத்தின் வடபகுதி என்பவை தெலுங்கும் கன்னடமும் பேசப்படும் மக்களை மிகுதியாகக் கொண்டுள்ள பகுதிகளாக மாறிவிட்டன. அண்மையில் மொழிவாரி மாகாணம் பிரிக்கவேண்டிய நிலைவந்தபொழுது பிறமொழி மக்களை மிகுதியாகப் பெற்ற இத்தமிழகப் பகுதிகள் தெலுங்கு நாட்டுடனும் கன்னட நாட்டுடனும் சேர்க்க வேண்டிய துன்பத்தைப் பெற்றன. இதன் காரணமாக இன்றைய தமிழகத்தின் வட எல்லை வேங்கடம் என்று கூற முடியவில்லை. வேங்கடம் 18ஆம் நூற்றாண்டு வரையில் தமிழ்நாட்டைச் சார்ந்தது என்று கல்வெட்டுக்களும் கூறுகின்றன.

தமிழ் வேந்தர் ஒழுக்கம்

  ஏறத்தாழ ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகம் தமிழ் மன்னரால் ஆளப்பட்டு வந்தது. சேர, சோழ, பாண்டியர் என்ற தமிழ் வேந்தர் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழிலும் வல்ல புலவர், பாணர், கூத்தர் என்போரை ஆதரித்தனர். வேந்தருட் சிலர் பாடும் ஆற்றலும் பெற்றிருந்தனர். அவர் தம் பாக்களும் புலவர்கள் தமிழ் முடி மன்னரையும் குறுநில மன்னரையும் பிற வள்ளல்களையும் பற்றிப் பாடிய பாக்களும் மிகப் பல. அவற்றுள் அழிந்தன போக எஞ்சிய பாக்கள் புறநானூறு என்னும் தலைப்பில் ஒரு நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

 இந்நூலிலுள்ள பாக்கள் பல நூற்றாண்டுகளில் பல புலவர்களால் பாடப்பெற்றவை: அப்புலவர்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் புறநானூற்றுப் பாடல்களால் பண்டைத் தமிழ்வேந்தர் செங்கோற் சிறப்பும் போர் முறையும் அவர்கள் புலவர்களைப் போற்றிய திறனும் தமிழ் மக்களுடைய பழக்க வழக்கங்களும் நாகரிகமும் நாகரிகத்தின் தலைமணியான பண்பாடும் நன்கறியலாம்

பூதப்பாண்டியன்

 இன்றைய மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி என்னும் மூன்று மாவட்டங்களும் பண்டைக் காலத்தில் பாண்டிய நாடு எனப் பெயர்பெற்றது. மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டிய நாட்டை ஆண்ட பாண்டிய மன்னருள் பூதப்பாண்டியன் என்பவன் ஒருவன். இப்பூதப்பாண்டியன் மீது பகையரசர் படையெடுக்கத் துணிந்தனர். அதனைக் கேள்வி புற்ற பாண்டியன் மிக்க சீற்றம் கொண்டான். அவ்வேந்தர் பெருமான் தனது அவைக்களத்தில் இருந்தோரைப் பார்த்து

 "பகை வேந்தர் ஒன்று சேர்ந்து என்ளேடு போர் புரிவதாகச் சொல்லுகின்றனர். அவர்கள் மிக்க படையையுடையவர்கள்: சிங்கம் போலச் சினந்து புறங் கொடாத மன வலிமையுடையவர்கள், கடும்போரில் நான் அவர்களை வெல்வேன். அங்ஙனம் நாள் அவர்களை வெல்லேனாயின், என் மனைவியைவிட்டு நான் பிரிந்தவனாவேன்; ஆகக் கடவேன். அறநெறி மாறுபடாத அறங்கூறவையத்தில் அறநெறி அறியாத ஒருவனை வைத்து நீதி பிழைக்கச் செய்த கொடியவன் ஆகுக. மாவன், ஆந்தை, அந்துவன், சாத்தன், ஆதன், அழிசி, இயக்கன் என்பவரும் பிறருமாகிய என் உயிர் நண்பரைவிட்டும், பல உயிர்களையும் பாதுகாக்கும் அரசர் குலத்தில் பிறவாதும் மாறிப்பிறப்பேனாகுக" என்று சூள் உரைத்தான்.

      இச்சூளுரையிலிருந்து நாம் பாண்டியனைப் பற்றி அறிவன யாவை?

1. இப்பெருமகள் தன் மனைவி மீது நீங்காத அன்புடையவன்-அவளை விட்டுப் பிரிய மனமில்லாதவன் என்பன நன்கு புலனாகின்றன.

2. அறங்கூறவையத்தில் அரநெறி தெரிந்த சான்றோரே இருந்து வழக்குகளை விசாரித்து முறை வழங்குதல் வேண்டும் - இதற்கு மாறாக, அறநெறி தெரியாத ஒருவனை நீதிபதியாக வைத்து நீதி வழங்கச்செய்தல் குடிமக்கட்குத் துரோகம் செய்வதாகும். அந்நிலையில் அரசன் கொடுங்கோலன் என்று கருதப்படுவான் என்பன காவலன் கருத்துக்கள் என்பது நன்கு விளங்குகின்றது.

3. உயிரொத்த சிறந்த நண்பர்களை விட்டுப் பிரிதலும் உயிர்களைப் பாதுகாக்கும் அரச பரம்பரையிலிருந்து ஒருவன் மாறிப் பிறந்தலும் கொடிய நிகழ்ச்சி என்பது பாண்டியன் கருத்தாதல் அறியலாம். இவ்வுண்மைகளை நோக்க (1) பாண்டியன் தன் மனைவியை நன்கு நேசித்து வந்தான் என்பதும் (2) அறநெறி உணர்ந்த சான்றோரையே அறங்கூற வையத்தில் நீதிபதியாக அமர்த்தி முறை வழங்கிவந்தான் என்பதும், (3) தன் நண்பர்களை விட்டுப் பிரிய மனமில்லாதவன் என்பதும் (4) உயிர்களைக் காக்கும் அரசகுடியிற் பிறத்தல் சிறந்தது என்ற கருத்துடையவள் என்பதும் நன்கு வெளியாகின்றன. இத்தகைய சீரிய ஒழுக்கமுடைய வேந்தனது ஆட்சி செங்கோலாட்சியாக இருந்திருத்தல் வேண்டும் என்பதில் ஐயமுண்டோ?

பாண்டியன் நெடுஞ்செழியன்

     "நெடுஞ்செழியன் வயதில் இளையவன்; சிறிய படையை உடையவன் எம்மிடம் நால்வகைப் படைகளும் நல்ல நிலையில் இருக்கின்றன. என்று பகைவர் கூறிக்கொண்டு" என் மீது போருக்கு வருகின்றனர். இங்ஙனம் வரும் பகைவரை யான் வெல்லேனாயின்

1. என் குடை நிழலில் வாழும் குடி மக்கள் நிற்க நிழல் காணாமல் ‘எங்கள் அரசன் கொடியவள்' என்று கூறிக் கண்ணீர் சிந்திப் பழி தூற்றும் கொடுங்கோல் மன்னன் ஆகக்கடவேன்

2. கல்வி, கேள்வி, ஒழுக்கம் இவற்றிற் சிறந்த மாங்குடி மருதனைத் தலைவனாகக் கொண்ட புலவர் கூட்டம் எனது பாண்டிய நாட்டைப் பாடாதொழிவதாக;

3. வறியவர்க்குக் கொடுக்க முடியாத நிலையில் யான் வறுமையை அடைவேனாக என்று மதுரை மன்னன் நெடுஞ்செழியன் சூள் உரைத்தான். இச்சூளுரையிலிருந்து நாம் அறியும் உண்மைகள் யாவை?

4. குடிகளுக்கு நிழலை அருளி அவர் மனம் மகிழ ஆட்சி புரிபவனே செங்கோல் அரசன்,

5. கல்வி, கேள்வி ஒழுக்கங்களிற் சிறந்த புலவர் பெருமக்களது பாராட்டுப்பெறுதலே காவலன் கடமை, (செங்கோல் அரசனையே ஒழுக்கம் மிகுந்த சான்றோர் பாராட்டுவர்)

6. "இல்லை" என்று இரப்பவர்க்கு இல்லை" என்று சொல்லாத செல்வ நிலையும் மன்நிலையும் அரசனுக்கு இருத்தல் வேண்டும்-என்னும் மூன்று உண்மைகளும் இச்சூளுரையிலிருந்து தெளிவாகத் தெரிகின்றன

சோழன் நலங்கிள்ளி

 இன்றைய தஞ்சை திருச்சி மாவட்டங்களும், தென்னாற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த சிதம்பரம் தாலுகாவும் சங்க காலத்தில் சோழ நாடாக இருந்தன. இதனை ஆண்ட முடிமன்னர் பலர் அவருள் கவி பாடும் ஆற்றல் பெற்ற காவலர் சிலரே. அச்சிலருள்ளும் போர்த்திறனினும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கியவன் நலங்கிள்ளி என்பவன் ஒருமுறை அவள்மீது பகைவர் படையெடுத்தனர் அதுகேட்டுச் சினந்த அப்பெருமகன்,

    "இப்பகைவர் என்னே வணங்கி, ‘எமக்கு நினது நாட்டைத் தர வேண்டும்’ என்று வேண்டுவாராயின், மனமகிழ்ச்சியோடு கொடுத்து விடுவேன். அங்ஙனம் பணிவோடு வராமல் படைச் செருக்குடன் வருவதால் இவர்களை எதிர்த்துப் பொருதலே முறை. இவர்களை நான் வெல்லேனாயின், பொதுப் பெண்டிரது சேர்க்கையில் எனது மாலை துவள்வதாக, என்று சூளுரை புகன்றான்.

     இச்சூளுரையால் இவனைப்பற்றி நாம் அறிவன யாவை? வலிமை மிகுந்த இப்பேரரசன் அடியவர்க்கு எளியவன்- பணிவாரிடம் பண்புடன் நடப்பவன் என்மதும்; பொதுமகளிரது சேர்க்கையை விரும்பாதவன் பொதுமகளிரைச்சேர்தல் வெறுக்கத்தக்கது என்ற கருத்துடையவன் என்பதும் நன்கு தெளிவாகின்றன.

முடிவுரை

   இம்மூன்று சூளுரைகளிலிருந்தும் - பழந்தமிழரசர் இல்லற வாழ்க்கையை இனிது நடத்தியவர்; பெண்டிர் சேர்க்கையை வெறுத்தவர்; சிறந்த நண்பர்களை விட்டுப் பிரியாதவர் குடிகள் வருத்தங் காணப் பெறாதவர்; சான்றோராகிய புலவர் பெருமக்கள் பாராட்டுதலை மதித்தவர்;வறியவர்க்கு வழங்கி மகிழ்ந்தவர்; ஆட்சிப் பொறுப்பை அணுவளவும் தவறவிடாதவர் என்னும் உண்மைகள் புலனாதல் காணலாம்

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு