அரா கவிதைகள்
அரா கவிதைகள்
உடைந்த குடத்தில்
கரம்பை மண்ணெடுத்து
சேர்த்த விதைகளை குழியிலிட்டு
நாட்கணக்கில் இன்ச் அளவில்
வளர்ந்து நின்ற தளிர்களை
நினைவின்றி
கண் இமைக்காது
பார்த்து திரும்பிய
இரட்டை நொடியில்
தொப் தொப்பெனும் குற்றோசை ஒலிக்க
மீண்டும் ஆவலுடன்
விழி திரும்ப
கொடியிலேறிய துணியில்
ஈரம் பெய்ய
குடத்தில் வசித்த தளிர்
நுரை எழும்ப குளித்தது
*******
கித்தாரென நினைத்து
கம்பிகளை வருடினேன்.
டிக் டிக் என்றொரு சப்தம்
எங்கேயென காது தேட
கண்ணில் பட்டது கடிகாரம்.
ஓடி சுழன்ற கடிகார முட்களின்
நேரத்தைத் கண்டு வெகுண்டு
எழுந்தோடினேன்
எதிரில் ஒரு மணிக்கூண்டு
முட்களைச் சுற்றிவிட்டு
வண்டிகளை விளக்கடித்து விரட்ட
கிறுகிறுத்துக் கீழே
சாய்ந்து விழுந்து
பால் வடிக்கும்
பனைமரம் முழுக்க
சூட்டின் ஓலி
********
ஊசியைக் குத்தி உரமிடாது
ஊரைக் கூட்டி அடிக்கல் நாட்டி
செடிகளை ஒடித்து போட்டு
தீயை ஒருபுறம் வளர்த்தால்
இரும்புக் குழாயில் புகை..
அந்த புகை மண்டிய வைகறையில்
கண்ணைத் திறக்காத நாய்க்குட்டியின்
தோளில் இரண்டு கோடுகள்
வடக்கே இருந்து இனாமாக
மூன்று புத்தகங்களை ஏற்றினார்களாம்..
********
உன் ஆவியோடு
பறந்து போன அந்த வண்டின்
படைப்பே இசை
கிர் கிர் என்ற அதிர்வை
கேட்டாயே..
அது வெறும் அதிர்வல்ல
அந்த குழலின் ஓட்டை
மூங்கில் குழலின் இசையில்
மூழ்கி மயங்கி
மூச்சிறைக்க மரித்தாயே..
அந்த மரணிக்கும் மாய இசையை
மடலேற்றி விட்டது
மூங்கில் தோட்ட வண்டு
*******
ஏன் சோகமாய் இருக்கிறேன்
எனக் கேட்கிறார்கள்
படுப்பதற்கு பாயும் போர்வையும்
கொடுக்கப்படுகிறது.
எனது படுக்கையாக
நைந்து போன
கைலி வேட்டி இருக்கிறது.
அதன் ஓட்டைகளை
பிதுக்கி அடைக்கும் முயற்சியில்
தோற்றுக் கொண்டேயிருக்கிறேன்
ஊசியைக் குத்தும்
நேரங்களில் நோயாளியின்
கதறல் வயிற்றில் கேட்பதை
நிறுத்த முடியவில்லை
கதறல் ஓசை லப் டப்பை
நெருங்கி வருவதை
தடுக்க மாட்டாது
துடிக்கிறேன் சிரிக்கிறேன்
அழுகிறேன் கடைசியாக
கையை அகல விரித்து
பெருமூச்சு விடுகிறேன்
மூச்சு பெருமூச்சாகும்
சுருக்கு வலி
எனது கைலியைத்
தைக்கிறது.
பாயும் போர்வையும் அப்படியே
கிடக்கிறது.
********
Comments
Post a Comment