2024 யுவ புரஸ்கார் விருதிற்கான இறுதிப்பட்டியலில் கவிஞர்கள் -அழகுராஜ் ராமமூர்த்தி
2024 யுவ புரஸ்கார் விருதிற்கான
இறுதிப்பட்டியலில் கவிஞர்கள் -அழகுராஜ் ராமமூர்த்தி
சாகித்திய
அகாதமியின் யுவ புரஸ்கார் விருதிற்கான இறுதிப்பட்டியலை கவிஞர்களே அதிகம்
ஆக்கிரமித்திருக்கின்றனர். இதில் சமீபத்தில் வெளியான கங்கு நாவல் மற்றும் ஈத்து
சிறுகதைத் தொகுப்புக்காக பட்டியலில் இடம்பெற்றுள்ள முத்துராசா குமார் மற்றும்
பறக்கும் பூந்தோட்டம் சிறுகதைத் தொகுப்புக்காக பட்டியலில் இடம்பெற்றுள்ள
கு.அ.தமிழ்மொழி ஆகியோர் கவிஞர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. இவர்கள் இருவரையும்
உள்ளடக்கி ஒன்பது கவிஞர்கள் சாகித்திய அகாதமி யுவ புரஸ்கார் இறுதிப்பட்டியலில்
இடம்பெற்றுள்ளனர். முத்துராசா குமாரின் பிடிமண் மற்றும் நீர்ச்சுழி கவிதைத்
தொகுப்புகளில் பிடிமண் தொகுப்பு எனக்குப் பிடித்தமானது.
இறுதிப்பட்டியலில்
இடம்பெற்றுள்ள வரிசையின் அடிப்படையில்,
அதிரூபனின் ‘மணற்புகை மரம்’
இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
நெகிழனின் ‘பொக்கை வாய்’
ஏழாம் இடத்தில் இருக்கிறது.
இரா. இராகுலனின் ‘பாதியில்
நிறுத்தப்பட்ட ஓவியம்’ எட்டாம் இடத்தில் இருக்கிறது.
றாம் சந்தோஷின்
‘சொல்வெளித் தவளைகள்’ பத்தாம் இடத்தில் இருக்கிறது (இறுதிப் பட்டியலில்
தொடர்ச்சியாக இடம்பெறும் நூல் என்பது குறிப்பிடத்தக்கது).
ஞா.சத்தீஸ்வரனின்
‘தனிமையின் மிடறுகளில் துயரேறிய சொற்கள்’ பதினொன்றாம் இடத்தில் இருக்கிறது.
வே.நி.சூர்யாவின்
‘அந்தியில் திகழ்வது’ பன்னிரண்டாம் இடத்தில் இருக்கிறது.
வினையனின் ‘எச்சிக்கொல்லி’ பதினான்காம் இடத்தில் இருக்கிறது.
இதில், வே.நி.சூர்யாவிற்கு விஷ்ணுபுரம் விருது
அறிவிக்கப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். பட்டியலில் இடம்பெற்றுள்ள
எல்லோருடைய கவிதைகளையும் தொகுப்பாக வாசிக்க முடியவில்லை என்றாலும் கூட தனிக் கவிதைகளாக அவ்வப்போது
வாசித்திருக்கிறேன். நெகிழன், றாம் சந்தோஷ்
உட்பட எனது வாசிப்பிற்குட்பட்டவரை அனைவரும் பல நல்ல கவிதைகளை எழுதியுள்ளனர்.
சொல்வெளித் தவளைகள் மற்றும் அந்தியில் திகழ்வது ஆகிய கவிதை நூல்களுக்கு விருது
பெறும் தகுதி உண்டு. நெகிழன், இரா. இராகுலன், அதிரூபன் ஆகியோர் தொடர்ந்து கவிதைகள்
எழுதுகிறார்கள். இந்த வருடம் இரா.இராகுலனின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு வருமென
எதிர்பார்க்கிறேன்.
கவிதைகள் என்பதைக் கடந்து
சமகால கவிதைப் போக்குகளை குறித்து கவனம் செலுத்துபவர்களாகவும் இவர்களில் பலர்
இருக்கின்றனர். விகடனில் மனுஷ்யபுத்திரனைப் பற்றிய கேலிப்பதிவு முகம் சுழிக்கும்
வகையில் இருந்ததை றாம் சந்தோஷ், அதிரூபன் ஆகியோர் கண்டித்துள்ளனர். பெரு.
விஷ்ணுகுமாரையும் இவர்களில் ஒருவராகவே கருத
வேண்டியுள்ளது. மேலும் இடைவெளி இரண்டாம் இதழைப் பற்றி நான் எழுதியபோது இந்தப்
பணியை “விரிவாக்கம் செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தேன். அதனை மீண்டொரு
முறை றாம் சந்தோஷ்க்கு இப்போது நினைவுபடுத்த வேண்டியுள்ளது. அப்படி
விரிவுபடுத்தும்போது அதில் அதிரூபன், இரா.இராகுலன், கு.அ.தமிழ்மொழி
முதலானவர்களையும் இணைக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்(வேறு சிலரும் உண்டு).
தமிழ்மணி முதலானவர்கள் இந்த வருடம் தற்போது எழுதிக்கொண்டிருக்கும் கவிஞர்களுக்கிடையே
கலந்துரையாடல் நிகழ்த்துவதற்கான ஏற்பாடுகளில் இருப்பதையும் அறிகிறேன். இப்படியாக
கவிதையை கவிஞர்களை மையமிட்டு குறிப்பிடத்தகுந்த பல்வேறு செயல்பாடுகள் நடந்துகொண்டே
இருக்கிறது. யாராவது ஒருவர் கவிதைகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் இதர
இலக்கிய வகைகளுக்கு ஏன் கொடுக்கப்படவில்லை என்று கேட்டால் மேற்கண்ட செயல்பாடுகள் கேள்விக்கான பதில் ஆகும்.
பட்டியலில் இடம்பெற்றுள்ள
சிறுகதைகள் மற்றும் நாவல்களில் த.ராஜனின் பழைய குருடி சிறுகதைத் தொகுப்பு
இடம்பெற்றுள்ளது. தற்போது பாண்டிச்சேரியில் இருக்கிறேன். இங்கு புதிதாக
தொடங்கப்பட்டுள்ள பனை அமைப்பு அந்த சிறுகதைத் தொகுப்பை வைத்து கலந்துரையாடல்
நிகழ்த்தியிருக்கின்றனர் (நிகழ்ச்சி குறித்த தகவல்கள் சரியான நேரத்தில்
கிடைக்காததால் கலந்துகொள்ள முடியவில்லை). பழைய குருடி நல்ல தொகுப்பு என்பதாகவே
கேள்விப்பட்டேன் (விருது பெற்றுள்ள லோகேஷ் ரகுராமனின் விஷ்ணு வந்தார் தொகுப்பும்
இதில் அடக்கம், அவருக்கு வாழ்த்துகள்). ஈத்து சிறுகதைத் தொகுப்பு பட்டியலில்
இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி. சிதைமுகம் மற்றும் பறக்கும் பூந்தோட்டம் பற்றி
இதுவரை கேள்விப்படாததால் எதுவும் சொல்ல முடியவில்லை. வேல் முருகன் இளங்கோவின்
மன்னார் பொழுதுகள் நாவல் இரண்டு வருடமாக வாசிக்க வேண்டியவை என்ற பட்டியலில்
அப்படியே இருக்கிறது. கங்கு நாவலையும் வாசிக்க வேண்டும்.
சாகித்திய அகாதமியின் பால
புரஸ்கார் விருதிற்காக தேர்வாகியுள்ள கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் என்று
பன்முக ஆளுமையாக விளங்கிக் கொண்டிருக்கும் யூமா வாசுகி (கசாக்கின் இதிகாசம்
மொழிபெயர்ப்புக்கு அவர் சாகித்திய அகாதமி விருது பெற்றிருக்கிறார்) அவர்களுக்கும்
வாழ்த்துகள்.
Comments
Post a Comment