வாசகர் பகுதி

 வாசகர் பகுதி 

அப்படியென்ன -அரம்பன்

     கூதிர் நான்காம் இதழில் வெளியான தீனன் கவிதைகள் மாய யதார்த்த வழியில் அமைந்திருக்கிறது. சொரூபம் கவிதை நெருக்கமான கவிதையாக எனக்கு பட்டது. ஜெயதே எழுதிய டி.கே டூ டி.எம் கட்டுரை சமகால அரசியல் பிரச்சனையோடு தடைகளைத் தாண்டி மேல்வந்து தேசிய அடையாளமான பெண்ணின் வாழ்வை இசைமயப்படுத்தி டி.எம்.கிருஷ்ணாவை முன்னிட்டு எழுந்த சர்ச்சையையும் தொட்டுப் பேசிய விதம் இக்கட்டுரை மீது கவனம் திரும்பச் செய்கிறது.

      புதுச்சேரியில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு இறந்த ஆர்த்தி என்ற சிறுமியைக் காப்பாற்ற யார் இருக்கிறார்கள்? இந்த தேசம் யாரால் நிரம்பியுள்ளது போன்ற அழுத்தமான கேள்விகளை முன்வைக்கிறது. பாலியல் வன்புணர்வுக்கு எதிராகத் தொடர்ந்து எழுதப்படும் கவிதைகளில் இந்த கவிதைக்கு ஓர்  முக்கிய இடம் இருக்கும். ராவணன், ராமன், கற்பு என போற்றுதலையும் தூற்றுதலையும் பற்றிய குழப்பம் வாழ்வை மையமிட்டு நிகழ்வதை கவனப்படுத்துவதாக கிருத்திகா கவிதை இருக்கிறது

       உளமொழியெனில் என்ற அழகுராஜ் கட்டுரை தி.கு‌.இரவிச்சந்திரனின் உளமொழி பெயர்ப்பியலும் மொழிபெயர்ப்பு உள்ளமும் கட்டுரைக்குள் செல்வதற்கான நுழைவுவாயில் என்றாலும்கூட இக்கட்டுரை தனித்துப் பார்க்கத்தக்க வகையில் சில மேற்கோள்களைக் கொண்டுள்ளது. மற்றொரு கட்டுரை சந்தோஷ் ஆங்கிலத்தில் எழுதி சத்தியப்பிரியா மொழிபெயர்த்த நீலம் பண்பாட்டு மையத்தின் செயல்பாடுகளைப் பற்றிய சித்திரம் ஆகும். மொழிபெயர்ப்பு கவிதைகளை வெளியிட்டு வந்த கூதிர் மின்னிதழ் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மீதும் கவனம் செலுத்துவது நல்ல அம்சம். அதேபோல 'கவனிக்க' என்ற பகுதியில் அழகுராஜ் ராமமூர்த்தி தன்னுடைய கருத்தை தானாகவே முன்வந்து மறுபரிசீலனை செய்திருப்பது கூதிர் இதழின் மேலுமோர் சிறப்பாக மாறியுள்ளது. 

    விசித்திரனின் சத்யா தொடர்கதை கல்லூரி, பயணம், தேர்வு என அடுத்தடுத்த நிலையை நோக்கி நகர்கிறது. பிரகதியின் மொழிபெயர்ப்பு கவிதையின் மூலம் இரண்டு கவிதைகளும் கவிஞர்களும் தமிழுக்கு அறிமுகமாகிறார்கள். தொடர்ந்து மொழிபெயர்ப்பு கவிதைகள் இதழில் இடம்பெற வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எனக்குண்டு.

     நவீனக் கவிதைகளில் தந்தைகள் என்ற பகுதியில் கவிதைகள் பற்றிய தெளிவான திறனாய்வை தமிழ்மணி முன்வைத்துள்ளார். தொகுப்பாசிரியர் பகுதியில் தொடர்ந்து நவீன கவிதைகள் குறித்த செய்திகள் இதழில் இடம்பெறும் என்பதாக சொல்லப்பட்டுள்ளது. அதனை வரக்கூடிய இதழ்களில் எதிர்பார்க்கிறேன். அரா கவிதைகள் குறித்து அரம்பன் இப்போதைக்கு பேசப்போவதில்லை. அயோத்திதாசரது சிந்தனைகளை வேறுபட்ட தலைப்புகளின் கீழ் தொகுத்தளித்திருப்பதால் அவரது பன்முகப் பார்வையை அறிமுகப்படுத்தும் நோக்கம் ஓரளவு நிறைவேறியுள்ளது.

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு