சிரஞ்சீவி - விசித்திரன்

சிரஞ்சீவி -விசித்திரன்

     திரேதா யுகம் முடிவுறும் தருவாய். இராமர் பதிமூன்று ஆண்டுகள் அயோத்தியில் “இராமர் ஆட்சி நல்லாட்சி” என்று சொல்லும் வண்ணம் ஆண்டு முடித்து விட்டு சராயு நதியில் மூழ்கி எழுந்து வைகுண்டம் போய் சேர்ந்தார்.

     இராமராஜ்ஜியம் ஹே… . இராமராஜ்ஜியம் ஹே….கோஷசமெல்லாம் மெல்லென ஒலிக்க தொடங்கியது. இராமாயணத்தை நேரில் கண்டவர்கள் வயது மூப்பால் மறைந்து வர எஞ்சிய சொற்ப நபர்கள் கதைகளின் வழி இராமரை உயிர்ப்போடு இருத்தி வைத்திருந்த காலம் அது.

      அசோக வனத்தை அனுமன் தன் வாலினால் தீயிட்ட சுவடுகள் எல்லாம் மறைந்து மீண்டும் எழில்மிகு அழகை பெற்றது இலங்காபுரி. மான்கள் உலாவ,மலர்கள் மகரந்தம் சிந்த, ரம்மியமான காட்சியை மீட்டுருவாக்கம் செய்து கொண்டது அந்த நகரம். அது இலங்கைக்குண்டான சிறப்பென்று சொல்வதில் தவறேதும் இருக்காது. இராவணை வீழ்த்த வீடணன் உதவி புரிந்ததற்கு கைம்மாறு செய்யும் விதமாய் இராமன் இலங்கை அரசாட்சி அவனுக்கு பெற்று தந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது. இன்றும் அதே தொடர்கிறது. 

      தேவர்கள் வாழ்த்தும் வண்ணம் சிறப்புற நல்லாட்சியினை நடத்தி வந்தான் வீடணன். மக்கள் அனைவரும் நிம்மதியான வாழ்க்கை வாழ ஆரம்பித்தனர். இலங்கை அமைதிப் பூக்காடாய் மிளிரத் தொடங்கியது. ஆயினும் மன்னன் வீடணன் இதயத்திற்கு அமைதி கிட்டவில்லை. தீவின் எல்லா மூலைகளிலும் புயல் சின்னம் மூண்டது போல் ஆராத துயரில் அழுத்தி இருந்தான் வீடணன். அன்றொரு நாள் அரசவையில் தனிமையில் அமர்ந்திருந்த வீடணனை அமைச்சர் மாலியவான் காண்கிறார்.

    “வீடணா! என்ன கலக்கம் உடல்நிலை சரியில்லையா?”என்ற மாலியவானின் கேள்விக்கு வீடணன் கண்களாலே பதில் கொடுத்தான். மெளனம் சற்று நேரத்திற்கு சரியான மொழியாக இருந்தது போல. பின்னர் வீடணன் மாலியவானை நோக்கி, “தாத்தா, தாங்கள் அறியாததது ஒன்றுமில்லை. நான் ஏன்? கலக்கமுற்று இருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்”. என்று தூணைப் பிடித்தபடி நிலைதளர்ந்து கூறினான். மாலியவான் வீடணனை பார்த்தப்படி, “புரிகிறது வீடணா! உன் அண்ணன் இராவணனின் மறைவை எண்ணி வருந்துகிறாய் சரிதானே” என்றார். மேலும் துயரம் நிறைந்த வீடணனைத் தேற்ற அவன் அருகே சென்ற மாலியவான் “நீ அறத்தை நன்கு அறிந்தவன், உன் சகோதரர்களில் அறத்தை பேணிக் காத்தவன் நீ மட்டும் தான் ஆகையினால் கவலை கொள்ள தேவையில்லை” என்றார். மாலியவானின் வார்த்தைகளை கேட்ட வீடணன் அவரை நோக்கி, “தாத்தா, தாங்கள் சொல்வது சரிதான் ஆயினும் நான் செய்தது அறமா? என்பது போல் நினைக்க வைக்கிறது இப்போதைய சூழல்” என்றான் வீடணன்

     இதற்கு காரணம் வீடணன் அவன் கனவில் கண்ட காட்சியின் தாக்கம். அதை மாலியவானிடம் வலு குறைந்த குரலில் சொல்லத் தொடங்கினான் வீடணன். “தாத்தா, நான் கடந்த சில நாட்களாக ஒரே கனவினை பலமுறைக் கண்டேன். அதில் அழகொழுகும் திருமுகத்துடன் கருணை வடிவாய் அண்ணி மண்டோதரி காட்சி தருகின்றார். மேலும் அவர்களின் அழகிய காற்சிலம்பில் ஒரு கயிறு ஒன்று கட்டப்பட்டு அது அண்ணன் இராவணனின் இடையில் பிணைக்கப்பட்டு இருந்தது. இதே உரு பல முறை தோன்றி மறைகின்றது. நான் அவர்களிடம் பேச முயற்சித்தும் பதில்கள் வரவில்லை. இருவரும் இணைந்த படியே அந்த உரு தெரிகிறது” என்றவுடன் மாலியவான் முகத்தில் கவலைத்தொற்றிக் கொண்டது. வீடணனின் கேள்விக்கனைகளை எதிர்கொள்ள முடியாமல் போர்க் களத்தில் ஆயுதமின்றி கிடக்கும் நிராயுதபாணியை இருந்தார் மாலியவான்.

       நிசப்தமாய் இருவரும் இருக்க அரண்மனையின் சன்னல்கள் வழியாய் காற்று நுழைகிறது. அது ஒருவித சலசலப்பை ஏற்படுத்தியது.அதனை பொருட்படுத்தாது தொடர்ந்து வீடணனின் நினைவலைகள் அந்த போர் பற்றியும் அதன்பின் நடந்தவைகளை பற்றியுமே வட்ட மடித்து இருந்தது. போர் முடிவின் முந்தைய நாள் தன் அண்ணன் மகன் இந்திரஜித்திடம் இருந்து துரோகி என்ற பட்டம் பெற்றதைப் பற்றி சற்றும் பொருட்படுத்தவில்லை.மேலும் இறுதி நாளான அன்று தன் அண்ணனை வீழ்த்த்தும் வரையிலும் எவ்வித சலனமும் இன்றி இருந்தான் வீடணன். போரில் வென்ற பின்னர் இராமன் அனைவருக்கும் பரிசுகளை வழங்கி முடித்து அயோத்தி சென்று சேர்ந்தார். வீடணன் மகிழ்ச்சிக்கு அளவில்லை அன்றிரவு. 

      அறத்தின் திருவுருவமாய் நின்ற இராமன் என்றைக்கு சீதையின் கற்பினை சந்தேகமுற்றானோ! அன்றே வீடணனின் தூக்கம் கலைந்தது. போரில் ஈடுபட்ட அனைவருக்கும் சமமாய் பரிசளித்த இராமன் . அவனுடைய பாவத்திலும் பங்கினை பகிர்ந்தளித்தான். இலக்குவனை அழைத்து சீதையை காட்டில் நிற்கதியாய் விட்டு வரும்படி சொன்னது. இராமனை மேலும் எல்லாவற்றிலும் சமரசம் காண்பிக்கும் தயாபரனாய் காண்பித்தது போலும். இவற்றையெல்லாம் எண்ணி புழுங்கி கொண்டிருந்த வீடணனின் மன நிலையை முகக்குறிப்பால் உணர்ந்தார் மாலியவான். 

      வீடணன் மீண்டும் மாலியவானை நோக்கி, “நாம் எதற்காக உதவினோம் தாத்தா! நீங்கள் கூட அண்ணனிடம் சீதையை விடுவிக்க சொல்லியது எதற்கு? இராமன் சேர்ந்து வாழ்வதற்கும், மாற்றான் மனைவியை சேர்தல் அறமில்லை என்பதினால் தானே! அதன் காரணமாகவே இராமனிடம் சேர்ப்பித்தோம். ஆனால் நடந்தது, இராமன் அறத்தின் வழி நின்றானா? கண்ணிருந்தும் குருடனாய் மாறி சீதையெனும் மாணிக்கத்தை பூமாதேவியிடம் தாரைவார்த்து விட்டான்.”

       உடனே பேச்சினை மாலியவான் இடைமறித்து, “என்ன வீடணா நீயும் உன் பங்குக்கு திட்டித்தீர்க்க போகிறாயா? இல்லையேல் தண்டனை வழங்க முடிவு செய்துள்ளாயா?” என்றவுடன் வீடணன் நான் தண்டனை வழங்குவதா! அன்னை சீதாதேவியே அவருக்கு தண்டனை வழங்கி விட்டார். இராமன் அவர்களை வேண்டிய போது அவரை புறந்தள்ளி மறைந்து விட்டார்.அதுவல்ல என் கவலை எனக்கு வழங்கிய தண்டனையை நான் என்ன செய்து தீர்க்க போகிறேன் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன் என்று தன்னையே நொந்துக் கொண்டான் வீடணன். 

      இவ்வளவு நேரம் வீடணனின் உளக்குறிப்பை அறிந்த மாலியவான் தற்போது வீடணனின் பேச்சைக் கேட்டு அதிர்ந்து போனார். மாலியவான் வீடணனை நோக்கி, “என்ன புத்தி பேதலித்து விட்டதா? இராமன் உனக்கு தண்டனை வழங்கினாரா? வீடணா! போரின் இறுதி நாளில் இராமன் கூறியது உனக்கு நினைவில்லையா இந்த இராவண வதத்திற்கு முக்கியமான காரணியாக இருந்தவர் இலக்குவனும் இல்லை அனுமன் இல்லை என்று கூறி வீடணனாகிய உன்னையே முதன்மை காரணியாக முன்னிலை படுத்தினார். அதன் பிரதிபலனாகவே இலங்கை அரசாட்சியையும் இறவா சிரஞ்சீவி வரமும் நீ பெற்றாய்.”என்றார் மாலியவான்

       வீடணன் வலி கலந்த புன்னகையுடன், “வரமா இது? ” என்று கூறி விட்டு கடற்கரையை வந்தடைந்தான். இரவின் இருளில் பொங்கிவரும் கடலைகளை பார்த்தபடி நின்றிருந்தான் .கண்களில் வேதனை தாண்டவம் ஆடியது அதன் விளைபொருளாய் கண்ணீர்……… குற்றவுணர்வு அவனை விடாது கொன்று வந்தது. மாலியவான் வீடணா! வீடணா! என்று அவனை அழைத்தப் படி கடற்கரை விரைந்தார். 

      ஆறாத மனவலி,தாங்க முடியாமல் சித்தம் கலங்கியவனைப் போல் மாறினான். தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து ஆழ்கடலில் குதித்தான் வீடணன். மாலியவான் எல்லாவற்றையும் பார்த்தப்படி அவனை தடுத்திராமல் அமைதியாய் இருந்தார். 

      வீடணன் கடல்நீரை அளவுக்கு அதிகமாய் குடித்தான். மூச்சு மூட்டி மூர்ச்சையற்று போனான். சிறிது நேரத்தில் மிதக்க தொடங்கினான். கரையை சேர்ந்தான். கண நேரத்தில் கண்விழித்தான்… 

      பாவம்! அவன் சிரஞ்சீவி என்பதை மறந்தான் போல… … … 

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு