திராவிடக் கவிஞரின் பொதுவுடைமை - திரமிளன்
திராவிடக் கவிஞரின் பொதுவுடைமை - திரமிளன்
திராவிடத்திற்கும் பொதுவுடமைக்கும்
இடையே சில ஒப்புமைப் பண்புகள் உண்டு. இவை ஒன்றோடொன்று தொடர்புடையவை. திராவிடத்திற்கு
அடிப்படை பகுத்தறிவே. பகுத்தறிவு என்றால் கடவுள் மறுப்பு என்று அர்த்தமில்லை. எந்தவோர்
செய்தியையும் யாரோ ஒருவர் சொன்னார் என்பதற்காக அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் பகுத்தாராய்ந்து
அறிந்து ஏற்றுக் கொள்வதே பகுத்தறிவு ஆகும். சுருங்கச் சொன்னால் உள்ளதை உள்ளவாறு அறிய
வேண்டும் என்னும் வேட்கை ஆகும். இதற்கு பெருந்தடையாக இருப்பது குருட்டு நம்பிக்கை,
மூடப்பழக்கவழக்கங்கள் போன்றவை ஆகும். இவற்றிற்கு காரணம் புராணங்கள்; அதற்கு அடைக்கலம்
தருபவை மதங்கள்; இந்த மதங்களுக்கு மூலாதாரம் கடவுளே. ஆகையால் பகுத்தறிவுப் பாதையில்
செல்லும் மக்கள் கடவுளையும் அதனை உருவாக்கியவர்களையும் கண்டிக்கின்றனர். மனிதனை மனிதன் மதி என்பதே அவர்களின் ஆயுதமாக
செயல்படுகிறது. அப்படியே பொதுவுடமையின் பக்கம் சென்றால் பெரிதும்
வேறுபாடில்லை மகேசனைத் தேடாமல் மக்களை சிந்தி
என்பதே பொதுவுடைமையாகும்.
பகுத்தறிவு என்னும் விதையை
விதைக்க முயன்ற குழுவினை தலைமைத் தாங்கியவர் பெரியார்
என்றால் அதற்கு தளபதியாக செயல்பட்டவர் பாவேந்தர்.
அதனை,
"நீரைப் போல் அண்ணாவும் திண்மை கொண்ட
நிலத்தைப் போல் பெரியாரும் கரிகாற் சோழன்
தேரைப்போல் அழகிரியும் இருந்த நாளில்
தீயைப் போல் பாவேந்தர் இருந்து வந்தார்"
என்று உவமைக் கவிஞர் பாடுகிறார்.
இருபதாம் நூற்றாண்டில் பொதுவுடமைக்
கொள்கைகளை மிகுதியாகவும் ஆழமாகவும் அழுத்தமாகவும் தமிழ் இலக்கிய உலகில் வேறு கவிஞர்
பாடியது அரிதே. ஆனால் இன்றைய பொதுவுடமைக் கவிஞர்கள் இவரை பெரிதும் ஆமோதிக்காமால் திராவிட
கவிஞராகவே பார்க்கின்றனர். எவ்வளவு தான் இளம்பரிதியை அந்த மேகக் கூட்டங்கள் மறைத்தாலும்
நண்பகலில் அது உலா வரும் நேரத்தில் எவராலும் தடுக்க இயலாது. அந்த சுடர் ஒளி ஞாயிற்றின்
பொதுவுடமையைக் காண்போம். பாவேந்தர் பொதுவுடமையை புனிதமாகவும், உயிராகவும் பார்த்தார்.
அதனை,
"பொதுவுடமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோ டதைஎங்கள் உயிரென்று காப்போம்"
என்னும் வரிகள் பறைசாற்றுகின்றன.
இப்பொழுது வணிகத்திற்காக எழுதும்
எழுத்தாளர்களுக்கு சிம்ம சொப்பனமானவர் பாரதிதாசன். பொதுவுடைமைக் கொள்கைகளைப் பொருளுக்காகவோ
புகழுக்காகவோ பாடும் எழுத்தாளர்கள் மத்தியில் தம் இனத்திற்காகவும் மக்கள் எழுச்சிக்காகவும்
இவர் பாடியுள்ளார். பொதுவுடைமைக் கொள்கைகள் வருதல் வேண்டும் என்பதில் அவருக்கு இருந்த
விருப்பம் அளவு கடந்ததாகும்.
"ஒரு மனிதன் தேவைக்கே இந்தத் தேசம்
உண்டென்றால், அத் தேசம் செத்தொழிதல் நன்றாம்"என்று
இன்றைய சமுதாயப் போக்கினை அன்றைக்கே கூறிய தீர்க்கதசி
அவர். மக்களாட்சி என்று கூறி மக்களின் உயிரினைப் பறிக்கும் பாசிச கும்பல்களுக்கு எனது
கவிஞர் அன்றே "புரட்சிக்கவி, வீரத்தாய்"
என்ற இரண்டு நூல்களின் மூலம் மக்களாட்சி தத்துவத்தினை அழகுற சித்தரித்துள்ளார். பொதுவுடமைக்
கொள்கைகள் இந்த நாட்டில் நிலைக் கொள்ளாமல் போனதற்கு காரணம் மதங்களின் புராணங்களும்
இதிகாசங்களும் என்பதனை
"பேதம் வளர்க்கப் பெரும் பெரும் புராணங்கள்
சாதிச்சண்டை வளர்க்கத் தக்க இதிகாசங்கள்
கட்டிச் சமூகத்தின் கண்ணவித்துத் தாமுண்ணக்
கொட்டி அளக்கும் குருக்கள் கணக்கற்றார்" என்றார்.
இருட்டறையில் உலகம் உள்ளதை உணர்த்துகிறார். உணர்த்துவதோடு
நிறுத்தியிருந்தால் அவர் ஒரு கவிஞராக மட்டுமே இருந்திருக்கக் கூடும். ஆனால் அவ்வாறு
கூறி அதற்கான தீர்வைக் கூறுவதாலேயே அவர் புரட்சிக்கவியாகத்
திகழ்கிறார்.
"வலிமையுள்ளவையே வாழும்" என்னும் இயற்கை அறத்தை உணர்ந்த
கவிஞர் பொதுவுடமை என்பது புரட்சியாகவும், புதுமையாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினார்.
பொதுவுடமைக் கொள்கை வெற்றி பெற வேண்டுமானால் அறியாமை என்னும் இருள் அகல வேண்டும். சுடர்
ஒளியாக பொதுவுடமைக் கொள்கை இருந்தாலும் மக்களின் கண்முன்னே அந்த ஒளியை திரைப்போல் மறைக்க
பார்க்கின்றன மதங்கள் என்று கூறுகின்றார். பொதுவுடமைக் கொள்கை நிலை பெற வேண்டுமானால்
தொழிலாளிகள் ஒன்றுபட வேண்டும். அவ்வாறு ஒன்றுபட்டால் எவராலும் நம்மை ஏமாற்ற முடியாது.
அப்படி ஏமாற்ற முற்படும் முதலாளிகளை,
"செப்புதல் கேட்பீர்!-இந்தச்
செகத்தொழி லாளர்கள் மிகப் பலர் ஆதலின்,
கப்பல்களாக-இனித்
தொழும்பர்களாக மதித்திட வேண்டாம்!
இப்பொழுதே நீர்-பொது
இன்பம் விளைந்திட உங்களின் சொத்தை
ஒப்படைப் பீரே -எங்கள்
உடலில் இரத்தம் கொதிப்பேறு முன்பே!”
என்று எச்சரித்தார்.
எல்லாம்
அவன் செயல் என்று தலையெழுத்தை நம்பி இருந்தால் நம் வாழ்க்கை மாறாது. மாற வேண்டும் என்றால்
அறியாமை இருளில் இருந்து விலகி ஏழைகளாக இருக்கும் தொழிலாளிகள் உரத்தக் குரல் கொடுத்து
உதையப்பராக வேண்டும். அவ்வாறு ஆகிவிட்டால் அனைவரும் சமமாக வாழ முடியும் என்பதை
"ஓடப்ப ராயிருக்கும்
ஏழையப்பர்
உதையப்ப ராகிவிட்டால், ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம்
மாறி
ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ!”
என்று அழுத்தமாக உரைக்கிறார்.
வந்தேறிகளின் சூழ்ச்சியால்
ஆண்ட இனம் அடிமைப்பட்டு கிடைக்கிறது. அறியாமை சூழ்ந்து விட்டது. அதனை கண்டு கொதித்தெழுந்த
கவிஞர் அமைதியைவிட ஆயுதமே பொதுவுடமையைப் பாதுகாக்கும் என்று நம்பி பொதுவுடைமை என்னும்
பயிரை வளர விடாமல் தடுப்பவரை ஒதுக்க வேண்டும் என்பதை,
"கொலைவாளினை எடடா-மிகு
கொடியோர் செயல் அறவே"
என்று கூறுகிறார்.
பொதுவுடமைக் கருத்துக்களையும்
மக்களாட்சி மாண்பினையும் புலப்படுத்திய பாவேந்தர்,
"எல்லார்க்கும் தேசம், எல்லார்க்கும் உடைமை எல்லாம்
எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே
எல்லார்க்கும் கல்வி சுகாதாரம் வாய்ந்திடுக
எல்லார்க்கும் நல்ல இதயம் பொருந்திடுக"
என்று பொதுவுடமையைப் போற்றுகின்றார். இந்த உலகில்
தனக்கென்று ஓர் இடத்தைப் பெற்றிருந்தாலும் திராவிடக் கவிஞர் என்று சித்தரிக்கப்படும்
பாவேந்தர் தம் பாடல் வரிகளால் பொதுவுடமைக் கொள்கையை திசையெட்டும் பரப்பியவர் என்பதில்
ஐயமேதும் இல்லை. ஆகையால் பாவேந்தர் திராவிடக் கவிஞராக இருந்தாலும் அவரின் சிந்தனைகள்
யாவும் பொதுவுடைமை சார்ந்ததே.
Comments
Post a Comment