பிரபஞ்சனின் மரி என்கிற ஆட்டுக்குட்டி
பிரபஞ்சனின் 'மரி என்கிற ஆட்டுக்குட்டி" கதையானது, மரி என்கிற பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் ஒரு பெண்ணின் வாயிலாக, குடும்பச் சூழல் சரியாக இல்லாத நிலையில் இருக்கும் பெண்ணின் மனநிலையும் இந்த சமூகத்தால் அவள் பார்க்கப்படுகின்ற விதமும் அவளின் கல்வியை எவ்வாறெல்லாம் பாதிக்கிறது என்பதைக் காட்டுவதாக மரி என்கிற ஆட்டுக்குட்டி கதை இருக்கிறது.
ஆசிரியர் என்பவர் மாணவர்களை நெறிப்படுத்தி நல்வழி காட்டுகின்ற நிலையில் இருக்க வேண்டுமென்றும், இன்றைய சமூகத்தில் இருக்கின்ற மாணவர்கள் இவ்வாறாக இல்லாமல் ஒழுக்க நெறியில் நடக்க வேண்டுமென்ற நோக்கத்தை உணர்த்தும் வகையில் இச்சிறுகதை உள்ளது.
-த.பவித்ரா
********
மரி என்கிற ஆட்டுக்குட்டி என்னும் கதை புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளரான பிரபஞ்சன் அவர்களால் எழுதப்பட்டு 2002 ஆம் ஆண்டு வெளிவந்தது. இக்கதை மரி என்னும் 18 வயது பெண்ணை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. தேர்வில் தோல்வியடைந்து தோல்வியடைந்து பத்தாம் வகுப்பைத் தாண்டாமல் 18 வயதிலும் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவியாக மரி காட்டப்படுகிறாள்.
இக்கதை பள்ளியில் தலைமையாசிரியர் தமிழாசிரியரிடம் மரியை பள்ளியை விட்டு நீக்கும் முடிவை சொல்வதாகத் தொடங்குகிறது. தன் வாதத்திற்கு வலுவாக தலைமையாசிரியர் கடந்த ஆறு மாதத்தில் மரி பன்னிரண்டு நாட்கள் மட்டுமே பள்ளிக்கு வந்துள்ளதையும், அவள் ஆடை அணியும் முறைகளை பற்றியும், அவள் எந்நேரமும் சூயிங்கம் மென்று கொண்டு திமிராக நடந்து கொள்வதையும் விளக்கி அவள் பி.டி ஆசிரியரையும் , வரலாற்று ஆசிரியரையும் மரியாதைக் குறைவாக பேசியதையும் குறிப்பிட்டு காட்டுகிறார். அதற்கு தமிழாசிரியர் நம் பள்ளியில் ஆடை கட்டுப்பாடு எதுவும் இல்லை என்று குறிப்பிட்டு மரி பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி என்பதால் இப்பொழுது அவளை பள்ளியை விட்டு நீக்கினால் அவள் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுத முடியாமல் போய்விடும் என்றும் கூறுகிறார். அதற்கு தலைமை ஆசிரியர் அவள் வீட்டிற்கு பலமுறை கடுதாசி போட்ட பின்பும் அவள் பள்ளிக்கு வரவில்லை என்பதால் அவளுக்கே இல்லாத அக்கறை நமக்கென்ன என்று கூறிவிட்டு சென்று விடுகிறார்.
எப்போதுமே நமக்கென்ன என்று எண்ண முடியாதவராகிய தமிழாசிரியர் தன் மனைவி சுமதியிடம் மரியைப்பற்றிக் கூறி அவரை சம்மதிக்க வைத்து, மரி வீட்டுக்கு சென்ற போது தான் மரியின் தாயும் தந்தையும் பிரிந்து இருப்பதையும் தந்தை அவர்களை விட்டுச்சென்று விட்டதாகவும் தாய் மறுமணம் புரிந்து கொண்டதாகவும், அவளது புதிய கணவனுக்கு மரியைப் பிடிக்கவில்லை என்பதால் மரியும் அவர்களை தொந்தரவு செய்யவில்லை என்றும் அவள் தாயை தண்டிப்பதற்காகவே அவள் இவ்வாறு இருப்பதாகவும் அன்புக்கு ஏங்கியவளாக இருப்பதையும் அறிந்து கொள்கிறார். அவள்பால் அன்பு கொண்ட இருவரும் தங்களுடன் அழைத்து சென்று இரவு உணவை வாங்கித்தருகிறார்கள். இவ்வாறு தொடங்கிய அவர்களது பழக்கம் மரி அவளது நாளின் பெரும் பகுதியை ஆசிரியர் வீட்டில் செலவழிப்பது, சுமதிக்கு சமையலில் உதவி செய்வது வரை நீள்கிறது. ஒரு நாள் மரி ஆசிரியர் சென்று நீங்கள் என்னை ஏன் பள்ளிக்கு வருமாறு அழைக்கவில்லை என்று கேட்கவும் அதற்கு ஆசிரியர் இதை நீயே கேட்க வேண்டும் என்பதற்காக நான் காத்திருந்தேன் , நாளையிலிருந்து பள்ளிக்கு செல்லலாம் என்று கூறுவதாகவும் இக்கதை முடிகிறது.
இக்கதையில் வரும் தலைமையாசிரியரின் வசனங்கள் அவர் மரியின் செயல்பாடுகளில் துளியும் விருப்பமில்லாதவர் என்பதை காட்டுகிறது. அன்புக்கு ஏங்கியவளாக அவள் அம்மாவை பழிவாங்கும் நோக்கத்துடன் தன் படிப்பில் ஆர்வம் இல்லாமல் சுற்றித்திரியும் ஒரு இளம்பெண்ணாக மரி உள்ளாள். பின்னர் தமிழாசிரியரும் அவர் மனைவியும் காட்டும் அன்பினால் மரி அன்பு காட்டுகிறவர்களுக்குத் தான் அதிகாரம் செலுத்தும் உரிமையும் உள்ளது என்பதை உணர்ந்து கொள்கிறாள். இக்கதையின் முக்கிய பாத்திரமாகத் திகழும் தமிழாசிரியர் தொடக்கத்தில் இருந்தே மிகவும் நல்ல சிந்தனை கொண்ட மனிதராக காட்டப்பட்டுள்ளார். நமக்கெதுக்கு என்று எதையும் விட்டுவிடாமல் ஒரு மாணவியின் படிப்பில் அக்கறை கொண்டு அவளின் குடும்ப சூழ்நிலையை அறிந்து கொண்டு அவள் மீது அன்பு செலுத்தி அவளை படிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அவர் பேசும் வசனங்களான,
‘எல்லாருமே ஒரு விதத்தில் பாவம் தான்.’
‘யாருமே கெட்டவங்க இல்ல’
‘ஒன்றும் முழுகிப்போய்விடவில்லை. இன்னைக்குப் புதுசா ஆரம்பிப்போம்’ போன்றவை அவரின் பாத்திரப்பண்பை விளக்குகின்றன. இக்கதையின் இறுதியில் தமிழாசிரியர் பேசும் வசனங்கள் கதையின் முடிவாக உள்ளது. இக்கதை, முடிவை வாசகனின் எண்ணத்திற்கு விடும் கதையாக இல்லாமல், ஆசிரியரே முடிவைக்கூறி முடிக்கும் கதையாக உள்ளது. இக்கதைக்கு மரி என்கிற ஆட்டுக்குட்டி என்று ஆட்டின் பெயரையும் இணைத்து பெயர் வைத்ததற்கான காரணத்தை அறிந்துகொள்ள முடியவில்லை. பிரபஞ்சன் இக்கதையின் மூலம் ஆசிரியருக்கான பண்புகளையும், மரி போன்ற பெண்களின் மனநிலையையும் விளக்க முற்பட்டுள்ளார் எனத் தெரிகிறது. இறுதியாக, இக்கதை பிரபஞ்சனின் படைப்புகளை விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய கதையாகும்.
-த.சத்தியப்பிரியா
*******
பிரபஞ்சனின் “மரி என்கிற ஆட்டுக்குட்டி” என்ற சிறுகதை பதினெட்டு வயதில் பத்தாம் வகுப்பு படிக்கக்கூடிய, தன் உடையாலும் நடத்தையாலும் ஆசிரியர்களுக்கு (ஆண்களுக்கு) உறுத்தலான தொந்தரவு தரக்கூடிய, இளம் வயதிலேயே தந்தையால் கைவிடப்பட்ட, தாயாலும் பெரிதாக கவனிக்கப்படாத, அன்புக்கு ஏங்கும் அதே சமயம் சமூகம் மீது தீராத பழியுணர்ச்சிக் கொண்ட அற்புத மரி என்ற பெண்ணின் கதையாகும்.
அற்புத மரி என்ற பெண்பால் கதாபாத்திரம் ஆட்டுக்குட்டியோடு ஒப்பீடு செய்திருப்பது ஏன்? எங்கள் ஊர்ப்பக்கம் ஆடு பற்றிய ஒரு சொலவடை உண்டு. “நஞ்சுலயும் நாலு வாய் வைக்கும் ஆடு” போலவே மரியும் பெண் என்ற மரபு கட்டமைப்பிற்குள் பொருந்தாதவளாக, தீயவை என அறிவுரைக்கப்பட்ட செயல் நிகழ்வுகளில் சோதனை செய்து பார்ப்பவளாக விளங்குகிறாள்.
இனி உளவியல் நோக்கில் மரியை கவனிக்க முயற்சி செய்யலாம். ஏன் தன் ஆசிரியர்களிடம் அவள் அவ்வளவு கறாராக நடந்து கொள்கிறாள்? ஆசிரியர்களேயானாலும் அடிப்படையில் அவர்கள் ஆண்கள். தன் சோட்டு பையன்களிடம் இயல்பாக நடந்து கொள்ளும் மரி ஏன் வயது மூத்த ஆண்களிடம் முகத்தலடித்தாற்போல் பேசுகிறாள்? இதற்கான பதிலை அவள் தந்தையிடமிருந்து தேடலாம். ஏன் அவள் தந்தை இளம் வயதில் விட்டுச் சென்றார் என்ற காரணத்தை கதையில் காணமுடியவில்லை. தாயின் அடுத்த கணவரையும் மரியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தந்தையால் ஏற்பட்டுவிட்ட பாதிப்பு அவளைப் பின்தொடர்கிறது. தன்னைக் கட்டுப்படுத்த நினைக்கும் ஹிஸ்டரி மகாதேவன் ஆசிரியரிடம் “உங்களுக்கு பொறாமையா இருக்கா சார் .ஸ்கூல் காம்பசுக்குள்ளே நடக்கிறதுக்குதான் நீங்க பொறுப்பு. வெளியிலே நடக்கிற விவகாரத்துக்கெல்லாம் நீங்க என்னைக் கட்டுப்படுத்த முடியாது சார்” என்று முகத்திலடித்தாற்போல் கேட்டுவிடுகிறாள், தன்னிடம் தவறாக சில்மிஷம் செய்யும் பி.டி ஆசிரியரிடம் “சார்… உங்க பொண்டாட்டியோட நீங்க படுக்கறது இல்லையா” என்று எல்லோர் முன்னிலையிலும் ஆசிரியரின் அந்தரங்க விடயத்தை கேட்டுவிடுகிறாள். ஏதோ ஒரு எதிர்வினையின் வழி ஆண் வர்க்கத்தை வென்றுவிடுவதாக உறுதியாக நம்புகிறாள். சமூகம் கட்டமைத்த உடை, நடத்தை சார் மரபுகளை மீறுவதன் வழி தனக்கு இப்படிப்பட்ட வாழ்க்கை கடவப்பட்டதன் ஆதங்கத்தைத் தீர்த்துக் கொள்கிறாள். கதைசொல்லி ஆசிரியர் மரியை பார்ப்பதற்குத் தன்னுடன் அழைத்துச் செல்வதும் கூட இங்கு கவனிக்கத்தக்கது. ஆசிரியர் தனியே சென்றிருந்தால் கதை நிச்சயம் நேர்மறையாக முடிந்திருக்காது. அவள் ஆரம்பத்தில் அலாதியாக நம்புவது கதைசொல்லியின் மனைவி சுமதியைத் தான். கடற்கரைக்கு சென்று திரும்பும் போது சுமதியின் விரல்களை பிடித்தபடி மரி கதை பேசிக்கொண்டு வருவதும், சுமதியை அக்கா என்று அழைத்து தனக்கு நெருக்கமான உறவாக மரி மாற்றிக் கொள்வதும் எடுத்துக்காட்டத்தக்கது. சுமதியின் அருகாமை தான் அவளை தினம்தினம் ஆசிரியரின் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறது. மெல்ல மெல்ல நெகிழ்வுறுகிறாள். சுமதியின் வழி தான் ஆணென்றாலும் கதைசொல்லி ஆசிரியரிடம் தார்மீக மரியாதையும் அன்பும் கொள்கிறாள். வெங்காயம் நறுக்கும் போது கண்ணீர் வருவதை த்ரில்லிங் நிகழ்வாகத் தான் குறிக்கிறாள். எந்தச் சூழலிலும் தான் பலவீனமுடைவள் என்பதை வெளிக்காட்ட விரும்பாதவளாக, உடைந்த தன்னை தானே தூக்கி நிறுத்திக் கொள்பவளாக உறுதித் தன்மையுடன் திகழ்கிறாள்.
எங்க அம்மாவை பழித்தீர்க்கனும் சார் என்று மரி சொல்வது, கணவன் விட்டுச்சென்றால் தனியாக தைரியமாக வாழ்ந்து காட்டாமல் இன்னொரு ஆணைத் திருமணம் செய்து கொண்ட தாய் மீது இனம் புரியாத விலகவும், கோபமும் உருவாகி இறுதியில் பழிதீர்க்கும் எண்ணமாக பரிணமித்திருப்பதாக தெளிவு கொள்ளலாம்.
கதைசொல்லி ஆசிரியர் தான் கதையின் அறங்கூறுபவராக திகழ்கிறார். தலைமை ஆசிரியர் மரியை பள்ளியிலிருந்து நீக்க வேண்டிய காரணங்களை அடுக்கிய போதும் அதற்கு ஒத்துழைக்காமல் மரியின் பக்கமே நிற்கிறார்.மரியின் உடை நடத்தையை தலைமையாசிரியர் சுட்டிக்காட்டி, இதையெல்லாம் நீங்கள் கண்டிக்காதிருப்பதற்கு நீங்களும் அதையெல்லாம் ரசித்தீர்கள் தானே என்று கேட்கும் போது அதற்கு பதிலுரையாது கதை நகர்கிறது. ஆணாக அவர் அதை ரசித்திருக்கவும் கூடும். அந்த இரசனை இச்சை சார்ந்தது அல்ல என்ற தெளிவை, மரியின் வீட்டில் அவள் உடை அலங்காரத்தைப் பார்த்து மனைவி முன்னிலையில் “ஸ்மார்ட்” என்று கதைசொல்லி ஆசிரியர் பாராட்டும் செயல் வாசகர்களுக்கு கொடுக்கிறது. சிறுவயதில் எந்தவிதமாகவோ ஆணால் பாதிக்கப்பட்டப் பெண் தன் வாழ்வில் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்களை அலசுவதாக இக்கதை அமைந்துள்ளது.
கதையில் சில முரண்களும் உள்ளன. அதில் முக்கியமானது சீருடை இல்லாத பள்ளிக்கூடம். அடுத்து வாழ்வில் யார் மீதும் நம்பிக்கை இல்லாத மரி கதைசொல்லி ஆசிரியர் குடும்பத்துடன் அத்தனை விரைவாக நெருக்கமாகி விடுவது. எப்படியாயினும் இக்கதையை வாசிக்கும் வாசகர் சிறு வயதில் பாதிக்கப்பட்டவராகவோ அல்லது ஏதோ பிரச்சனையில் உழன்று உளவியல் சிக்கலுக்கு ஆட்கொள்ளப்பட்டு எதிர் பாலினத்தவர் மீது வெறுப்புக் கொண்டவராக இருப்பின் நிச்சயம் வாழ்வு மீதான சுண்டுவிரலளவு நம்பிக்கையை அவருக்குத் தரும். மேலும் மாணவர்கள் செய்யும் ஒழுங்கீனங்களைக் காரணங்காட்டி அவர்களை சாடுவதைக் காட்டிலும், அவர்களின் உளம் புகுந்து உண்மை நோவைக் கண்டறிந்து தீர்ப்போமாயின் எம்மாணவரும் தன் வாழ்வை நேர்த்தியாக மாற்றக் கூடும் என்ற நல்விதையை இக்கதை தூவியிருக்கிறது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
-ஜெ. காமாட்சி காயத்ரி
*******
பெண்ணை மையமாக வைத்து, பிரபஞ்சன் அவர்கள் எழுதிய சிறுகதை என்னை அதிகம் சிந்திக்க வைத்தது. நானும் மரி போன்ற பெண்களை என் வாழ்வில் சந்தித்தது உண்டு. முதலில் மரி கதாபாத்திரத்தை படிக்கும் போதே எனக்கு பிடித்து விட்டது. காரணம் பொதுவாகவே இந்த உலகிலுள்ள அனைவரும் அவர்களுக்கு பிடித்தது போல வாழ உரிமை உண்டு. ஆனால் பெண்களுக்கு இந்த சமூகமும், உடனிருப்பவர்களும் அதற்கு தடையாகவே இருக்கின்றனர். அந்தத் தடையை மீறி தனக்குப் பிடித்தவாறு மரி துணிச்சலான பெண்ணாக வாழ்கிறாள். இந்த ஒற்றைக் காரணம் தான் அவளிடம் எனக்குப் பிடித்தது. ஆடை பற்றி பேசப்பட்டிருந்தது. ஆபாசமில்லாமல் போடக்கூடிய அரைக்கால் டவுசரும் பனியனும் எப்போதும் அழகு தான். இது எனது எண்ணம். அதே போல் ஆண்களுடன் சிரித்துப் பேசினால் அவள் தவறான பெண்ணாகத் தான் இருப்பாள் என்ற எண்ணம் எப்போது தான் மாறப்போகிறதோ?
இந்த உலகில் தவறு செய்யாத மனிதர்களும், மந்தையிலிருந்து விலகிப் போகாத ஆடுகளும் இல்லை. தக்க சமயத்தில் வழிகாட்டியாக ஒருவர் இருந்தால் போதும். கூட்டத்தில் இருந்து விலகி செல்கின்ற ஆட்டினை மேய்ப்பவன் தன் கையில் உள்ள கோலை வைத்து தட்டி வாயினால் ஹைக்ஹைக் என்ற சத்தத்துடன் மீண்டும் அந்தக் கூட்டத்தில் சேர்ப்பது போல. அப்படி ஒருவர் இருந்தால் இங்கு எவனும் பெண்களைக் குறை கூறும் தற்குறியாக இருக்க மாட்டான்.. பெற்றோர் இல்லா பெண்களும், பெற்றோர்களால் கைவிடப்பட்ட பெண்களும் சாதிப்பது இல்லையா? அவர்களை கை தூக்கி விட இந்த தமிழ் வாத்தியார் மாதிரி ஒருவர் இருந்தால் போதும். அவர்களாலும் இந்த சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழ முடியும். ஆட்டுக்குட்டி துருதுருவென்று எப்போதும் இருக்கும் அதை அனைவரும் விரும்புவர். அதேபோன்று துருதுருவென்று தனக்கே உரிய துள்ளல்களும், கள்ளம் கபடமில்லாப் பேச்சுடன் இருக்கும் மரியை எப்போது இந்த சமூகம் விரும்பும்? கேள்விக்கான பதில் கிடைக்குமா? காத்திருப்போம்.
இந்த உலகில் யாரும் கெட்டவர்கள் இல்லை. இந்த சமூகம் மற்றும் உடனிருப்பவர்களால் காதுகளில் கேட்கப்படும் வார்த்தைகளும் தான் அவர்களைத் தவறான பாதையை நோக்கிச் செல்ல வழிவகுக்கிறது.
-அகிலா சுப்பரமணி
*******
Comments
Post a Comment