வரலாற்றின் ஒலி வல்லிசை

                                                   வரலாற்றின் ஒலி வல்லிசை 

                                                                                   - அழகுராஜ் ராமமூர்த்தி

 



       எழுத்தில் பதிவு செய்யப்படாத அதிகம் வெளியில் பேசப்படாத விடுதலை இயக்கச் செயல்பாட்டின் வரலாற்று ஆவணம் வல்லிசை. வல்லிசை நாவல் முழுவதும் ஒடுக்கப்பட்டவர்களின் தீவிரமான விடுதலை  இயக்கச் செயல்பாட்டை வரலாற்றுத் தரவுகளுடன் பதிவு செய்துள்ளார் அழகியபெரியவன். மூன்று பகுதிகளாக பகுக்கப்பட்டுள்ள நாவலுக்குள் மூன்று தலைமுறை வாழ்வியல் விளைவுகள் பேசுபொருளாக்கப்பட்டுள்ளது. முழவு எனும் பகுதியில் இராவணேசனும் துடி பகுதியில் இராவணேசனின் மகன் திருவேங்கடமும் தண்ணுமை பகுதியில் திருவேங்கடத்தின் மகன் சமநீதியரசும் முதன்மைப் பாத்திரங்களாக வருகின்றனர். இவர்கள் மூவரோடு மூன்று காலகட்ட கூட்டமைப்பு இயக்க மேடுபள்ளங்களும் இணைந்து கதையாக்கப்பட்டுள்ளது. முழவினை தோற்கருவிகளில் முரசுக்கு அடுத்தப்படியான பெரிய கருவியாக கருதலாம். இராவணேசன் முழவு போன்றவர். ஒடுக்கப்பட்டவருக்கு பிரச்சினைகள் வரும்போது தடாலடியாக களத்தில் இறங்கி அடிப்பவர். இராவணேசனின் இறப்பும் கூட அவர் தாக்கப்பட்டதன் விளைவு என்பதை கவனிக்க வேண்டியுள்ளது. துடியானது தேவைப்படும் நேரங்களில் வீச்சுடன் அடிக்கப்படக்கூடிய இசைக்கருவி என்று கொள்ளலாம். பொன்னரசு உடனான சேர்க்கை திருவேங்கடத்தைப் புரட்டிப் போட்டு இராவணேசனின் குணங்களை அவனுக்குள் கொண்டு வருவதை துடியுடன் இணைத்துப் பார்க்கலாம். தண்ணுமை நாகரிகப்பட்ட தோற்கருவியாகக் கருதப்படுகிறது. சமநீதியரசு அவரது அப்பா, தாத்தா ஆகியோரிடமிருந்து மாறுபட்டு பறையொழிப்பை பிரதானம் ஆக்காமல் பறையை அனைத்து சாதியினருக்கிடையேயும் உட்புகுத்த முயலும் இடமாக நாவலின் தண்ணுமை பகுதி அமைகிறது. 


  முடியரசு ஆட்சிமுறை இலக்கியமாக்கப்பட்ட காலம் இருந்தது போல குடிமக்கள் இலக்கியம் என்ற பெயரில் செல்வந்தர்கள், நடுத்தர வகுப்பினர், ஒடுக்கப்பட்ட மக்கள், பெண்கள் என பலவகைப்பட்ட பொருண்மைகளில் ஒவ்வொரு காலத்திலும் இலக்கியங்கள் வெளியாகியுள்ளன. இதில் ஒடுக்கப்பட்டோர் இலக்கியமானது ஏதேனும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தைச் சுற்றி நடக்கும் சமூகக் கொடுமைகளைச் சொல்லும் வகைமையே அதிகம் கையாளப்பட்டுள்ளது. வரலாற்று இலக்கியங்களில் அரசர்களைப் பற்றிய புனைவுகள், இந்திய சுதந்திரப் போராட்டங்கள், இயக்க வரலாறுகள் ஆகியன எழுதப்பட்டுள்ளன. தொ.மு.சி ரகுநாதனின் “பஞ்சும் பசியும்” நாவல் இயக்கச் செயல்பாட்டோடு வரலாற்றைப் பேசும் இலக்கியத்திற்கு தக்க சான்றாகும். அந்த வரிசையில் பலர் கவனிக்கத் தவறிய பட்டியலின கூட்டமைப்பின் வரலாற்றை பல்வேறு நிலைகளில் நின்று தீவிரமாக முன்வைக்கும் நாவலாக “வல்லிசை”யைக் குறிப்பிடலாம். மேலும் பஞ்சும் பசியும் நாவலில் வரும் மணியையயும் வல்லிசையில் வரும் திருவேங்கடத்தையும் ஒப்பிடக்கூடிய இடமாக ‘தந்தையின் இறப்பு’ என்கிற சம்பவம் வருகிறது. இரண்டு கதாபாத்திரங்களின் போக்கையும் தீவிரத்தன்மையுடன் முடுக்கிவிடக்கூடிய இடமாக அப்பாவின் இறப்பு அமைகிறது. ஊருக்குள்ளே பத்திரிகைகள் மூலம் பகுத்தறிவாளன் ஒருவன் உதித்து தன்னைச் சுற்றி நடக்கும் இழிவானச் செயல்களைத் தடுத்து நிறுத்தும் போக்கு இந்நாவலில் உண்டு. இப்படியானதொரு செயல்முறையை இன்றைய சூழலில் முன்னெடுக்க முடியாது. ஒவ்வொரு பகுதியிலும் அன்றைய ஆட்சியமைப்பு மக்களின் நிலை அதனோடு ஒத்த போராட்ட வடிவம் நெகிழ்வடைய வேண்டிய சூழல் முதலானவற்றின் மீது கவனம் ஏற்படுத்தும் விசை கதைக்குள் இருக்கிறது.


    கற்பி ஒன்றுசேர் புரட்சி செய் என்ற அம்பேத்கரின் புகழ்பெற்ற வாசகத்தின் முதல் கருத்துநிலையான கற்பி என்பதன் மீது அதிக கவனத்தை செலுத்த வேண்டிய தேவை இருக்கிறது. டி.எம்.கிருஷ்ணாவிற்கு சங்கீத கலாநிதி விருது அறிவித்த போது அதனை எதிர்த்தவர்கள் சொன்ன காரணம் இவர் பெரியாரைப் பாடியுள்ளார் என்பது தான். ஏன் அம்பேத்கரைப் பாடியதை அவர்கள் சொல்லவில்லை. தொடர்ந்து “சிந்திக்கச் சொன்னவர் பெரியார்” என்ற பாடலை சமூக வலைதளங்களில் ஒலிக்கவிட்டவர்கள் ஏன் மறந்தும்கூட அம்பேத்கர் பற்றிய பாடலைக் குறித்துப் பேசவில்லை. இதற்குள் அம்பேத்கரை குறித்த மாற்றுக்கற்பிதங்களை நிகழ்த்த வேண்டும் என்கிற அரசியல் ஒளிந்துள்ளது. அம்பேத்கரிய கருத்துகளை சரியாகக் கற்பிக்க வேண்டிய தேவை இன்றுள்ளது. அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் ஆகியோரின் கொள்கைகள் வரலாற்றுத்தரவுகளோடு எழுத்திலும் பேச்சிலும் தொடர்ந்து பதிவு செய்து வருபவராக அழகிய பெரியவன் இருக்கிறார். இவரது தகப்பன் கொடி, வல்லிசை, யாம் சில அரிசி வேண்டிணோம், சின்னக்குடை ஆகிய நாவல்களுக்குள் பிரச்சினைகளும் வரலாறும் தத்துவார்த்தத் தொடர்கண்ணியாக வருகிறது. இதில் வல்லிசை இயக்கவாத வரலாற்றைத் தீவிரத்தன்மையுடன் அழகியல் பூர்வமாக பேசுகிறது.


வரலாறு:


       பொதுமையாகப் பார்த்தால் இந்தியா வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த நாட்களில் இருந்து எம்.ஜி.ஆர்(வாத்தியார்) தனிக்கட்சி தொடங்கிய காலம் வரையிலான கதை இது. நாவலுக்குள் வரலாறாக அன்றைய புழங்கு பொருட்களும் சமூக நிகழ்முறையும் அத்துடன் இந்திய நிலப்பரப்பில் நிகழ்ந்த முக்கியமான மாற்றங்களும் இடம்பெறுகிறது.


 நிலக்கரியால் பேருந்துகள் ஓடியதிலிருந்து மின்விளக்கு, டிராம், தொலைபேசி, சினிமா என அனைத்து புழங்குபொருட்களும் கதைக்குள் பதிவாகியுள்ளது. உதாரணமாக,

“பட்டணத்துக்கு மின்விளக்கு வந்தது பதினாலில், டிராம் ஓடத்தொடங்கியது எண்ணூற்றுத் தொண்ணூத்தஞ்சில், தொலைபேசி வந்தது எண்ணூற்று எண்பத்தொன்றில், சினிமா தொள்ளாயிரத்தில்” (பக்-68) என்கிற வரிகளையும் “சாலையின் முக்கியமான இடங்களில் நிற்கும் காவலர்கள், மிதிவண்டியில் விளக்கு இல்லை என்பதற்காகப் பிடித்துக் கொள்வார்களே என்று பயந்தான்” (பக்-69) என்கிற வரியையும் எடுத்துக் கொள்ளலாம். (பதினெட்டாவது அச்சக்கோடு நாவலில் அசோகமித்திரன் இதே செய்தியை சந்திரசேகரன் மூலம் பதிவு செய்திருப்பார்.)


      1886- ஜான் ரத்னம் நடத்திய பள்ளிக்கூடம், 1891ல் பெரியசாமி புலவர் நடத்திய சாதியொழிப்பு பொதுக்கூட்டங்கள், 1909ல் செல்லப்பா நடத்திய பள்ளிக்கூடம், 1921ல் எம்.சி.ராஜா மற்றும் பழனிச்சாமி கொண்டு வந்த விடுதி, 1926 மயிலப்பட்டி மாநாடு, 1931 பெரியபேட்டை மாநாடு, 1968ல் நாற்பத்து நான்கு தலித் மக்கள் தீக்கிரையாக்கப்பட்ட செய்தி, கீழவெண்மணி படுகொலை, முதுகுளத்தூர் கலவரம்,1976ல் வந்த பி.சி.ஆர் வழக்கு, சென்னையில் அம்பேத்கர் கலந்து கொண்ட கூட்டங்கள், ரெட்டைமலை சீனிவாசன் மறைவு எனப் பல்வேறுபட்ட தகவல்கள் கதையுடன் கதையாகவும் கேள்விகளாகவும் வருகிறது. 


     குடியுரிமை பாதுகாப்பு சட்டம் 1976- குற்றம் நிரூபிக்கப்பட்டால் சமரசத்திற்கு இடமில்லை. தேர்தலில் நிற்க முடியாது. தீர்த்தமலை மீது பி.சி.ஆர் வழக்கைப் பதிவு செய்கிறார் திருவேங்கடம். நாவல் அந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் குடியுரிமை பாதுகாப்பு வழக்காக இதுவே இருக்கும் என்கிறது. 


மேலும் உதாரணமாக,


[“நம்ம ஜில்லா திருப்பத்தூர் பெரியசாமிப்புலவரை எடுத்துங்கேன். எத்தினி மாநாடு? எத்தினி பொதுக்கூட்டம்? 1891லேர்ந்தே பௌத்தம், சாதியொழிப்புன்னு நடத்தினு வந்திருக்காப்பில. உங்க ஊர் பெரிய பேட்டையில 1931லேயும், உங்க பக்கத்து ஊர் மயிலப்பட்டியில 1926லேயும் ஆதிதிராவிடர் மாநாடுங்க நடந்துருக்குது.” பக் -28


“இது என்ன வருஷம்? 1945தானே? 1886லேயே ஜான் ரத்னம் என்பவரு மெட்ராஸ் ஆயிரம் விளக்குப் பகுதியில வெஸ்லி மிஷன் பள்ளியை நடத்தினாரு. நான் இன்டர்மீடியட் படிச்சது அங்க தான். நீ கூட அங்க படிக்கலாம். இவ்வளவு ஏன் நம்ம புதுக்குடியிலர்ந்து கோலார் தங்க வயலுக்குச் சுரங்க மேஸ்திரியா போன செல்லப்பா கோலாரில் ஒரு பள்ளிக்கூடத்தை 1909லயே தொடங்கியிருக்கிறாரு.” பக்-29


“நல்லது, பச்சையப்பன்ல இந்து தவிர்த்து வேறு யாருக்கும் எடந்தர்றதில்ல. இப்ப நெலம பரவாயில்ல. 1927 வரைக்கும் கூட அங்க தாழ்த்தப்பட்ட பையன்களுக்குப் படிக்க எடங்கெடையாது. தலைவர் எம்.சி.ராஜாவோட முயற்சியால தான் தாழ்த்தப்பட்ட மாணவர்களையும் சேத்துக்கிட்டாங்க.” பக்- 36 


“நான் அம்பேத்கரையே நேர்ல பார்த்தவன்டா திருவேங்கடம். தெரியுமா உனுக்கு.”


“போன வருசம் செப்டம்பர் மாசம். இருவத்தி மூனாந்தேதி அம்பேத்கர் மெட்ராசுக்கு வந்தாரு. மொத நாளு கன்னிமாரா ஓட்டல்ல பேசியிருக்கிறாரு. ஒரு பத்திரிகை ஆசிரியரு அவருக்கு விருந்து தந்திருக்கிறாரு. மறுநாளு மூணு எடத்துல மீட்டிங். காலையில ரிப்பன் பில்டிங், அதுக்கப்புறமா பார்க்டவுன் மெமோரியல் ஹால்ல, பிராட்வே பிரபாத் டாக்கீஸ்சில. பார்க்டவுன் மெமோரியல் ஹால்ல நடந்த கூட்டத்துல நான் வரைஞ்சு வச்சிருந்த புத்தரோட ஓவியத்தை அவருக்குப் பரிசா குடுத்தேன்.” பக்-48


“நம்ம ரெட்டைமலை சீனிவாசன் இந்த செப்டம்பர்ல தான் காலமாயிட்டாரு.” பக்-49


“இருவது வருசத்துக்கு மின்னாடி மயிலாப்பூர்லயெல்லாம் தெருவுல நடந்து போவ முடியாது. நம்ம சீனிவாசன் தலைவரு தான் அத்த எதிர்ச்சி சட்டசபையில பேசி சட்டம் கொண்டாந்தாரு.” பக்-78


“68இல் என்ன நடந்தது? நாப்பத்திநாலு தாழ்த்தப்பட்ட மக்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டார்களே? அதுக்குக் காரணமானவன் தண்டிக்கப்பட்டனா? சாதிக்காகப் போராடினவனெல்லாம் தண்டனை தண்டனை பெறாதபோது சமத்துவத்துக்காகப் போராடும் நான் ஏன் தண்டனை பெறணும்? சொல்லு தம்பி. நாம் செய்யறது ஒருவகையான சோதனை.” பக்-290


“வெண்மணி படுகொலையைக் கண்டித்து ஊர்வலம் போனது, முதுகுளத்தூர் கலவரத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தது என அவரின் பேச்சு நினைவுகளின் கரையினில் போய் ஒதுங்கும்.” பக்-290]


      படிவரிசை முறையில் அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடம் அதிலிருக்கும் மேசைகள் பள்ளத்திலிருந்து பாடம் நடத்தும் ஆசிரியர் ஆகியோரைப் பார்த்து மிரட்சி அடைகிறான் திருவேங்கடம். போதாக்குறைக்கு  விடுதிச் சூழலில் ஆதிக்க சாதியினர் ஆதிக்கம் அதிகமிருக்கிறது. அதையெல்லாம் கையாளக் கற்றுத்தருவதோடு  திருவல்லிக்கேணி சாலையில் பல்கலைக்கழக கோபுரங்கள், மாநிலக் கல்லூரி, விளையாட்டு மைதானம், தெற்கே கலங்கரை விளக்கம், சாந்தோம் தேவாலயம், வடக்கே கூவம் பாலம் தாண்டினால் ஜார்ஜ் கோட்டை, துறைமுகம், இந்த ஏரியாவில் ஐஸ் அவுசு, மயிலாப்பூர் கோயில் என அன்றைய சென்னையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தையும் திருவேங்கடத்திற்கு அறிமுகப்படுத்துகிறான் பொன்னரசு.

உதாரணமாக,


[“வெள்ளக்காரன் வெளிநாட்லர்ந்து கொண்டாந்து நட்ட மரங்களாம். எங்க புரபசர் சொன்னாரு.” பக்-40


“பிரம்மாண்டமான கட்டடத்துடனும், மரங்களுடனும் நின்றது லயோலா.” பக்-41]


     மேலும் இரண்டாம் உலகப்போரின் போது உடல் தகுதியின்றி அடிமை போல இந்தியர்களை அள்ளிக் கொண்டு போய் சாராயத்திற்கு பழக்கப்படுத்திய செய்தி பொன்னரசு தந்தை மூலம் சொல்லப்படுகிறது . கடும் பஞ்சகாலம் நிலவிய செய்தியையும் அப்போது “கீரை, கிழங்கு என்று எதையெதையோ சாப்பிட்டார்கள்.” முதலிய தகவல்கள் ஒருபுறமும் சென்ட்ரல் ஸ்டேஷனில் பிராமணர்கள் மட்டும் ஹோட்டலில் சாப்பிடுவதற்கென போர்டு மாட்டிய செய்தியோடு அம்பேத்கர் நீண்ட மேலங்கியும் வெள்ளைக்கார பிரபுக்கள் அணியும் வட்டத் தொப்பியும் தோல் பையும் அணிந்தவாறு வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டதை மறுபுறமும் நாவல் பேசுகிறது.


      கூட்டமைப்பு இயக்க நடவடிக்கைகள் இந்நாவலின் பிரதான பகுதியாகும். அம்பேத்கரின் சுதந்திரத் தொழிலாளர் கட்சி 1937ல் நடந்த தேர்தலில் 15 தொகுதிகளில் போட்டியிட்டு 12தொகுதிகளில் வெற்றி பெறுகிறது. SCF 1946ல் பம்பாயில் 70சதவீத வாக்கு பெறுகிறது. சென்னை மாகாணத்தில் 27,138 வாக்குகளை காங்கிரசும் 30,199 வாக்குகளை பட்டியலினக் கூட்டமைப்பு பெறுகிறது முதலான தகவல்களை பூ. கொ. சரவணன் விரிவும் ஆழமும் தேடி 15.04.2023ல் நடத்திய நிகழ்ச்சியில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஒரு பன்முகப் பார்வை என்ற தலைப்பின் கீழான உரையில் பகிர்ந்து கொண்டார். இத்தகைய வரலாறுகள் இந்நிலத்தில் பேசுபொருளாகவில்லை. அந்த வரலாற்றை நோக்கி நம்மைத் திருப்பி தமிழ் நிலத்தில் நிகழ்ந்த பட்டியலினக் கூட்டமைப்பு செய்த புரட்சிகர வேலைகளை சொல்வதாக வல்லிசை விளங்குகிறது.


     கூட்டமைப்பு இயக்கக் கருத்துகளை எதிர்ப்புணர்வு மற்றும் வலியுறுத்துதல் என்று இரண்டு வகைகளில் பார்க்கலாம். பறையொழிப்பு, செத்த மாடுகளை உண்ணக்கூடாது, சாவு சொல்வதற்கு போகக்கூடாது, இரட்டைக் குவளை முறையை ஏற்கக்கூடாது, இழிவாகப் பேசுவதை அனுமதிக்கக்கூடாது முதலானவை எதிர்ப்புணர்வு வகைப்பட்டவை. நேர்த்தியாக முடி வெட்ட வேண்டும், நல்ல உடை உடுத்த வேண்டும். கல்வி கற்க வேண்டும், மீசையை ஒழுங்குபடுத்தி வளர்க்க வேண்டும். செருப்புப் போட்டுச் செல்ல வேண்டும். பஞ்சமி நிலங்களை பெறுவதற்கு போராட வேண்டும். ஹோட்டலில் சமமாக அமர்ந்துண்ண அனுமதி வழங்க வேண்டும். ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்துக் கேள்வி கேட்க வேண்டும் முதலானவை வலியுறுத்தல் வகைப்பட்டவை.


ஒடுக்கப்படும் நிலை 


      குறவனை அழைத்து சாப்பாடு போட முடியாத அளவிற்கு சாதியால் மக்கள் தாழ்த்தப்பட்டிருந்த நாட்களுக்குள் கதையின் காலம் அமைகிறது. ஹோட்டலில் சாப்பிட முடியாத, தண்ணீரையும் டீயையும் டம்ளரில் குடிக்க முடியாத, சமாந்தரமான கல்வி மறுக்கப்பட்ட காலத்தின் நிகழ்வுகளும் அதை எதிர்த்து பட்டியலினக் கூட்டமைப்பு வீறுகொண்டு போராடியதும் கதையின் பகுதிகளாக உள்ளது. உணவு விசயத்தில் செத்த மாட்டைத் திண்பதைத் தடுக்கும் செயல்பாடுகளை கூட்டமைப்பு செய்திருக்கிறது. செத்த மாட்டை அறுக்கும்போது அதில் மண்ணள்ளி போடுவது, சிறுநீர் கழிப்பது, பெட்ரோல், மண்ணெண்ணெய் ஊற்றுவது முதலான செயல்பாடுகளில் தீவிரத்தோடு செயல்பட்டிருக்கின்றனர். இதற்காக வழக்கை சந்தித்த இடங்களும் கூட நாவலில் வருகிறது.


 அரசாங்க அதிகாரியின் மிதிவண்டியைத் தொட்டதற்கு தாக்கப்பட்ட செய்திகளும் நிலக்கரி, எண்ணெயில் ஓடும் பேருந்துகளில் ஹோட்டல்களில் பணம் இருந்தும் சாதி காரணமாக ஒடுக்கப்படும் அவல நிலை இருந்ததை கதை பேசுகிறது. அம்பேத்கர் வண்டியில் செல்வதற்கு தண்ணீர் குடிப்பதற்கு சந்தித்த பிரச்சினைகளை நாம் அதிக சமயம் மீண்டும் மீண்டுமாக பேசியிருப்பதாலோ என்னவோ அவையெல்லாம் நினைவுக்கு வரும் இடங்களாக இப்படியான பகுதிகள் இருக்கிறது. அம்பேத்கர் சந்தித்த பிரச்சினைகள் எல்லாம் தனிமனிதன் சந்தித்த பிரச்சினைகள் மட்டுமல்ல. ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்கள் சந்தித்த பிரச்சினைகள் என்பதையும் இந்த இடத்தில் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.


உதாரணமாக,


      “என்ன மயிருக்குத் துட்டுவாங்கற? கட நடத்துற? பேதம் பாக்கக்கூடாதுனு வெள்ளக்காரன் சட்டம் போட்டுருக்கான். காலம்மாறினு வருது, நீங்க மாறமிட்டேன்றிங்களேடா. எங்கள பாத்தா உனுக்கு எப்பிடிடா தெரியுது? எம்புள்ள என்ன படிச்சிருக்கான்னு தெரியுமா? நானு யாரு, எத்தினி ஊரு சுத்தியிருக்கேன்னு தெரியுமா?” பக்-22 (ஹோட்டலில்)


     “தண்ணீர் குடிக்கப்போனால், “டேய், பறப்பசங்களெல்லாம் அந்தப் பானையில குடிங்க” என்று கடைக்காரனிடமிருந்து குரல் வரும்.” பக் -23


 “நாந்தான் படிக்கப்போகாம மோளமடிக்க வந்துட்டேன். நீ மாடா மாப்ள. எங்கவோண்ணாலும் போயி படிச்சுட்டு வா. இங்கியே இருந்தியானா என்னாக்கீது சொல்லு? பயிர் வேல, தோல் வேல, ஆண்ட வேல, பீடி வேல, உன்னும் என்னா சொல்லு?” பக்-35


        “ஒரு பக்கம் பாத்தா சமுதாயத்துல நம்பள மனுசனாவே மதிக்கமாட்டேன்றான். இன்னொரு பக்கம் வீட்டு நெலமையோ கொடும. இது எல்லாத்தையும் மெறிச்சி ஏறிவந்தா தாண்டா திரு. நாம ஒரு ஆளு..” பக்-64


  “விலக்கப்பட்டவனின் துக்கம் கொடியது. துரத்தப்பட்டவர்களின் அனாதரவான உணர்வு வன்மமாக, பயமாக, கோபமாக, தான்தோன்றித்தனமாக உருவெடுக்கிறது.” பக்-154


  “புது ஆளை, பரதேசியை, விருந்தாளியை அதிதிம்பாங்க. அதிதி தேவோ பவன்றாங்க. நாம தேவர்களில்லையா? வெறும் வாயால இப்படியெல்லாம் சொல்லிட்டு, அதுக்கு நேரெதிராயில்ல நடந்துக்கிறாங்க? அதிதி பிரம்மாவின் மனைவிகளிலொருத்தி. அவள் தேவர்களை ஈன்றவள்னு அவங்க படிக்குற புராணம் சொல்லுது. அப்படிப் பார்த்தா நமக்கு எவ்ளோ மரியாதையைத் தந்திருக்கணும்?” பக் -159


   “இவங்க வாயில பத்துத் தடவையாவது பறையன்னு வரும். மாலான்னு வரும். மாதிகோடுன்னு வரும்.” பக் -280


            “சாமானத்தை எலி தள்ளினா அது பற எலி. எறும்பு கடிச்சா பற எறும்பு. பாம்பு பறப்பாம்பு. காக்கா பறக்காக்கா. நாயி பறநாயி.” பக்- 281


கல்வி:


      கிறிஸ்தவ மிஷன் பள்ளிக்கூடம் தவிர மற்ற இடங்களில் சேரிப்பிள்ளைகள் தனியாக உட்காரவைக்கப்பட்டதுதான் அன்றைய கல்விச் சூழல். 


   தனராஜ் மூலம் தாழ்த்தப்பட்ட சிறுவர்களுக்கு முடிவெட்டப்படுகிறது. திருவேங்கடம் படிப்பு முடித்து வந்ததை ஊரார் ஊர்வலம், மேளம் எனக் கொண்டாடுகின்றனர். 


   இயக்க வேலைகளுக்கு இராவணேசன் சென்று அடிபட்டு மரணித்ததால் திருவேங்கடத்தின் கல்வி தடைபடுகிறது. திருவேங்கடம் மீது குற்றப்பதிவு செய்யப்பட்டதால் சமநீதியரசு கல்வி தடைபடுகிறது. இயக்கத்தின் செயல்பாடே கல்வி என்றிருக்க, இயக்கத்தவரின் குழந்தைகளுக்கு கல்வி தடையாகும் அம்சம் நாவலுக்குள் இருக்கிறது.


    “தலைவர் சிவமலை அம்பேத்கர் என்றும், சீனிவாசனென்றும், ராஜாவென்றும், பண்டிதரென்றும் பேச்சுக்குப் பேச்சு சொல்வாரே? இந்த நாட்டின் தலைவர்களெல்லாம், வெள்ளையதிகாரிகளெல்லாம் இவர்களின் குரலுக்குச் செவிசாய்க்கும்படி செய்தது எது? அவர்கள் பெற்ற கல்வி தானே…?” பக்-24

    

     “நல்ல புத்திப்பூர்வமான மக்கள் தான் நம்ம மக்கள். வள்ளுவர் ஒருத்தர் உதாரணத்துக்குப் போதாதா? எவ்வளவு ஞானமா யோசித்திருக்காப்பில? ஆனா தொடர்ந்து நம்மை ஆதிக்க ஜாதி ஆட்கள் படிக்க உடல. மாடு மேய்க்கவும், பயிர் செய்யவும், எடுபிடியாயிருக்கவும் வெச்சிட்டாங்க. அவங்க அடக்குறாங்கன்றதுக்காக நாம அப்படியே இருந்துட ஆகுமா? மெறிச்சி ஏறி வரணுமில்ல? அப்படி வந்தவுங்க தான் நம்ம தலைவருங்க.” பக்-28


 “நீ உன்னைத் தனியாள்னு நினைக்காத. இந்த சமூகத்தை, சாதி அமைப்பை, அதன் மர்மங்களைப் புரிந்துகொள்ள படிச்சி வரும் தாழ்த்தப்பட்ட கல்விமான்களின் சங்கிலியில் இணையப்போகும் ஒரு கண்ணி நீ. சாதிக்கொடுமை என்னும் பாழும் கிணத்திலிருந்து நம்ம மக்கள் அந்தச் சங்கிலியைப் பிடிச்சிட்டுதான் மேல ஏறி வரணும். நீ இந்த வாய்ப்பைச் சரியா உபயோகப்படுத்திக்கிலன்னா சங்கிலி அறுபடும்.” பக்-29


“இப்ப எனக்குக் காதலிக்கிறதும், படிக்கிறதும் ஒண்ணுதான்டா. சொல்லப்போனா. காதலைவிடப் படிக்கிறது இன்பமானது!” பக் -85


போராட்டம்:


    ஜாதியைப் பற்றிப் பேசுவதைக் கேட்டு பல சாதியைச் சார்ந்தவர்கள் சமத்துவம் பக்கம் திரும்பியதுண்டு. மறுபுறம் செருப்பு வீச்சு, கல்வீச்சு முதலியவற்றை ஆதிக்க சாதியினர் மூலம் சந்திக்க வேண்டிய சூழல். உதாரணமாக, இராமகுப்பம் ஆந்திர எல்லையோரம் சித்தூர் போகும் வழியில் உள்ளது. அங்கு நடந்த சாதி பிரச்சினைக்கு இராவணேசன் செல்கிறார். அங்கு நடந்த அடிதடியின் வலியிலேயே அவர் இறந்து போகிறார்.


போராட்டம் குறித்த சில செய்திகள்:


      கூட்டமைப்பு நடத்தும் மாநாடுகளுக்கு வாயில்களின் பெயரை புத்தர் நுழைவாயில், அம்பேத்கர் நுழைவாயில், ஜோதிபா புலே நுழைவாயில் எனப் பெயரிட்டுள்ளனர். ஆயிரம் பறைகள் சிவமலை தலைமையில் வட ஆற்காடு ஜில்லாவில் கொளுத்தப்பட்டிருக்கிறது. பறையொழிப்பில் மிகத் தீவிரமாக செயல்பட்ட திருவேங்கடத்தின் மகன் சமநீதியரசு பறையை நவீனப்படுத்தி ஒலிக்கவிடும் இடத்தில் நாவல் முடிகிறது.


சான்றாக,

 

“எல்லாரும் அன்னாடங்காச்சிங்க. என்னமாதிரி ஒண்ணு ரெண்டுபேருதான் வெளியே வர்றான். மத்தவங்க வரறதில்ல. ஜாதிக்காரங்க மேல பயம். எதிர்த்தா வேல கெடைக்காது. கொன்னே போட்டுடுவாங்க. வெள்ளக்காரன எதுத்துகூடப் போராடிடலாம். ஜாதியொழிப்புப் போராட்டம் நடத்துறது மகா சிரமம்.” பக் -32


ஜார்ஜ்டவுன் கலவரம் -பக் 45


“ஒரே சட்டத்துல சாதிய ஒழிச்சிட முடியுமான்னு தெரியில. அது புனிதப்படுத்தப்பட்ட அசிங்கம். ஒரு சுரண்டல்முறை, தனக்குக் கீழ இருக்கிறவனோட உழைப்பை, உடைமையை, சுயமரியாதையைச் சுரண்டுவது. தனக்குக் கீழ ஒரு அடிமை இருக்கிறது யாருமே விரும்புவாங்கதானே? இந்த ஆண்டை அதிகாரத்தை இழந்திடக்கூடாதுன்னுதான் இத மதத்தோடவும், பிறப்போடவும் இணைச்சி வச்சிருக்கான். இது ஒழிக்கப்படணும். ஆனா இங்க போராடுற தலைவர்களுக்குச் சுதந்திர இந்தியாவைப் பற்றிய உறுதியான எந்தக் கருத்துகளும் இல்ல.சிலர் இதை இந்து நாடாக்கணும்னு நெனைக்கிறாங்க. பாகிஸ்தான் பிரிவினையை எதிர்க்கிறாங்க. காந்தியாரோ பழமையைப் போற்றுறார். அதுல சாதியும் அடக்கம். கல்வியின்மை, வறுமை, சாதி, பெண்நிலை, மருத்துவம் எதைப் பற்றியும் தெளிவான பார்வையில்ல. இவங்க நினைப்புதான் என்ன? சுதந்திரம் வந்துட்டா எல்லாம் சரியாயிடும். இது விபரீதமானதொரு கற்பனை. இந்தத் தருணத்துல அம்பேத்கர் கிட்டயும், ஈ.வெ.ரா கிட்டயும் மட்டுந்தான் இதுங்களைப் பற்றிய சில தெளிவான திட்டங்கள் இருக்கு, சாதிதான் தேசியப்பிரச்சின. ஆனா அதைப்பற்றி இவங்க ரெண்டுபேரைத் தவிர யாருமே பேசலியே? நாள்தோறும் ஜாதிக் கொடுமை சேரியே ஒரு திறந்தவெளி கூண்டுதான். நாளைக்கே சுதந்திரம் வந்தாலும் தாழ்த்தப்பட்ட ஒருவன் சாதியிந்துவோட அடிமைதானே? அப்ப யாருக்கு இந்தச் சுதந்திரம்? சாதிய ஒழிச் சுட்டோம்னு சட்டம் போடறது பெருசில்ல. சாதியாளுங்க மனசுல மாற்றம் வரணுமே. அதுக்கான வேலை இங்க என்ன நடந்திருக்கு?” பக்.111(சிவமலை பேச்சு)


“அன்பைவிடக் கொடிய நஞ்சுமில்லை; அன்பைவிட நல்ல மருந்துமில்லை. நீ இழப்புகளின் கரையிலிருந்து பேசுற. அது நியாயமானது. இதுதான் அறச்சீற்றம். ஆனால், உண்மை வேறு. படிப்பறி வில்லாத, சோற்றுக்கு வழியற்ற, அதிகார பலமேயில்லாத நம் மக்களின் கோபம் அவர்களையே எரிச்சிடும். காரண காரியங்களுடன் சிந்தித்துப்பார். உனக்கே புரியும். சாதியொழிப்புல உணர்ச்சியைவிட அறிவு முக்கியம்ன்றத அம்பேத்கர் வலியுறுத்திச் சொல்றார்.”பக்-113


"நம்ம தம்பி அம்பேத்கரைச் சந்தித்தவர்களைப் பார்த்தவர். தலைவர் சிவராஜ் அவர்களைச் சந்தித்தவர். சென்னைப் பட்டணத்தில், புகழ்பெற்ற கல்லூரியான பச்சையப்பனிலே இன்டர்மீடியட் படித்தவர். எல்லாத்துக்கும்மேல சாதியொழிப்புக்காக உயிரையே விட்ட நம்ம கூட்டமைப்பின் செயல்வீரர் இராவணேசனுடைய புதல்வர்." முதலில் தடுமாறி, பின் நிலைப்படுத்திக்கொள்ளும் திருவேங்கடத்துக்கு, பேச்சின் போக்கிலே கோபம் உயர்ந்து கொண்டே போகும். வெடித்துத் தெறிக்க சமயம் பார்த்திருப்பவனாய் மாறிவிட்டிருந்தான் திருவேங்கடம்.” பக்-116


“இதே வேகத்தோட எஸ்.சி.எப் கிளைகளைச் சுத்துப்பக்க ஊர்கள்ளயும் தொடங்கணும். நட்சத்திரக் கொடியை ஏத்தணும். தொடர்ச்சியா கூட்டம் போட்டுட்டே இருக்கணும். நாம இடைவெளி விட்டா அங்க மூடக்கருத்தியல் நொழஞ்சிடும், அப்புறம் அந்தத் தோழனும் சோர்ந்து போயிடுவான். இடையறாத கருத்தியல் பிரச்சாரம் முக்கியம்.” பக்-170


“பழம்பெருமைகள் வெறும் நினைவுகள் மட்டுமே. அவை உரிமைகளாகாது.” பக் -193


“நாங்க கலைக்கு எதிரியில்ல, இது எங்களை இழிவுபடுத்தது. ஒழிக்க நினைக்கிறோம். கலைன்னு நினைச்சா நீங்க அத வாங்கி அடிங்க.” பக்-201


கிராம மதமாற்றம் அறிவிப்பு பக்- 259

(திருவேங்கடம் கௌதமன்) [நான் ஓர் இந்துவாக சாகமாட்டேன் என்கிற அறிவிப்பை 1935ல் அம்பேத்கர் நான் ஓர் இந்துவாக சாகமாட்டேன் என அறிவிக்கிறார். அம்பேத்கர் 3,65,000 மக்களோடு 1956ல் புத்த மதத்தைத் தழுவுகிறார். இடைப்பட்ட 20 ஆண்டுகளில் அவர் சமயம் குறித்து நிகழ்த்திய உரைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.]


பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்கள்: 


     பொறிவிளங்காய் உருண்டைகள், வறுத்த அரிசி, அதிரசம், வேர்க்கடலை, மக்காச்சோள மாவு அல்லது மஞ்சள் சோளமாவு வைத்து போண்டா வடை, முறுக்கு, மொச்சை, வள்ளிக்கிழங்குகள், இரத்தப்புளி, பயிர் உருண்டைப் பலகாரம் முதலிய உணவுப் பொருட்களும் நொண்டிப்பட்டம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளும் உணவு மற்றும் பொழுதுபோக்கு பற்றிய செய்திகளாக உள்ளது. திருவிழாவில் பச்சையோலப் பந்தல் போட்டு பெட்ரோமாக்ஸ் லைட் வைத்து முத்துசாமியை அம்பேத்கர் பாடல்கள் பாட வைத்துக் கேட்டுள்ளனர். 


    காமன் கூத்து, மாரியம்மன் பண்டிகை, தெருக்கூத்து, சாமன் தாத்தா பங்காருவின் கதை, கூட்டமைப்பு நடத்தி வைத்த திருமணங்கள், நடுகாட்டுக் கதை, தோட்டியின் செயல்பாடுகள் முதலியன பழக்க வழக்கங்கள் சார்ந்து கவனிக்கத்தக்க பகுதிகளாகும்.

       

தோட்டி:


      ஊர்த்தோட்டியின் பொறுப்புகளைப் பற்றிய செய்திகள் விரிவாக நாவலின் கதையோடு பொருந்தியவண்ணம் இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களில் தோட்டி என்பது ஒரு முக்கியமான படிநிலைப் பதவியாக அமைவதை சாமன், இளங்காளை போன்றோர் மூலம் அறிய முடிகிறது.


     “சாமனுக்கு தோட்டிப் பொறுப்பின்மீது பெருமிதம் அந்தச் சேரியையே கட்டிக்காப்பதுபோல எண்ணம் ஊர்த்தோட்டித்தனத்தோடு அரசாங்கத் தோட்டியும் வேறு. கேட்கவா வேண்டும். அவன் கம்பீரத்துக்கு அளவில்லை. தோட்டிப்பொறுப்பென்றால் லேசில்லை. அவன் ஊரிலே நாட்டாண்மை மாதிரி, அவனுக்குத் தான் போலீஸ் தெரியும். மணியக்காரனைத் தெரியும் ஊரில் அவன் இல்லாமல் நல்லது பொல்லது எதுவும் நடப்பதில்லை. ஏரிக்காவல் இருக்கவேண்டும். ஏரிப்பாய்ச்சலை முறைப்படுத்திப் பாயவைப்பதும் தோட்டிதான். ஊரில் எது நடந்தாலும் தோட்டியின் கவனத்துக்கு முதலில் வந்துவிடும். அவன்தான் ஊர்சாற்ற வேண்டும். தெருத்தெருவாய்ப் போய் நின்று பெருங்குரலெடுத்துக் கத்தவேண்டும்.” பக்-127


   “ஊர் சாற்றும்போது தோட்டிதான் தெய்வம். அந்த ஒரு தருணத்தில் உலகமே அவனின் ஒருசொல் பிறப்புக்காகக் காத்து நிற்கிறது.” பக்-127


  காப்பு கட்டிய ஊர்த்தோட்டி இளங்காளைக்கு மேலூரில் இருந்து திருவிழாவின் போது மட்டும் உணவு வருகிறது.


திருமணம்:


      பத்திரிகை அச்சிட்டு பௌத்த முறைப்படி திருமணம் நடந்த செய்தியை வரலாறாக நாவல் பதிவு செய்கிறது. பாரதியாரின் படைப்புகளில் பிரம்ம சமாஜ முறைப்படி நிகழும் திருமணங்கள் பற்றிய செய்திகள் அதிகம் உண்டு. இவையெல்லாம் மாற்றுத் திருமண முறைகள் தமிழ்நாட்டில் நிகழ்ந்ததற்கான சான்றாகும்.


   “நமது மக்கள் திருமணம் அறவழிப்பட்டது. நமது பாட்டன் வள்ளுவன், அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன் பழிப்பதில்லாயின் நன்று' என்கிறான். திருமணமும் குடும்பமும் சமூக ஒழுக்கம். குடும்பம் ஜனநாயகபூர்வமானதாக விளங்கிட வேண்டும். திருவேங்கடம் குப்பி என்கிற சிவகாமியை மதித்து அவரின் உரிமைகளை ஏற்கவேண்டும். சிவலிங்கமும் தன் மனைவி யாகும் மங்கம்மாவிடம் அதுபோன்றே நடந்துகொள்ளவேண்டும். மணப்பெண்கள் தத்தமது கணவரின் சமூகப்பணிக்குத் துணை நிற்க வேண்டும். திருவேங்கடம் என்னுடன் கூட்டமைப்பு பணியிலே ஈடுபடும் இளைஞன். அவருக்குச் சொல்லவேண்டியதில்லை. சிவ விங்கமும் மங்காவும் பணம் சேர்த்து மதகாரியங்களுக்குச் செலவிட வேண்டாம். சிவலிங்கத்துக்கு நாளைக்கு ஒரு சிக்கல் என்றால் இந்த சிவமலைதான் உதவிக்கு வருவாரேயொழிய வேறு எந்த மலைகளும் வரப்போவதில்லை!”  பக்-185


கூத்தும் கதைகளும் கதைப்பாடல்களும்:


      கதைகளையும் கருத்துகளையும் பாடல்கள் வழிக் கடத்தியுள்ளனர் என்பதற்கு சாட்சியாக நாவலில் பாடல்களும் பாடல்களுக்கான வட்டார வியாக்கியானங்களும் இடம் பெற்றுள்ளது. நடுகாட்டுக்கதை மற்றும் வீரசாம்புகன் கதை ஆகியன இவற்றில் முக்கியப் பகுதிகளாகும். அம்பேத்கர் பற்றிய பாடல்கள், நாடகங்களின் பெயர்களும் நாவலுக்குள் உண்டு.


    முத்துசாமியின் அம்பேத்கர் பாடல்கள் மற்றும் மாரியம்மாள் ஒரு புத்தத்துறவி. அவளது பெயர் சிந்தாதேவி. புத்த போதனை வழியிலான சிகிச்சை முறையில் மாவு, வேப்பிலை, மஞ்சள் முதலானவற்றை முதன்மையான சிகிச்சைப் மருந்துகளாக வைத்தாள் முதலான செய்திகளோடு திருவிழா குறித்த நம்பிக்கைகள், வழக்கங்கள், கதைப்பாடல்கள் நாவலுக்குள் வருகிறது. பழக்க வழக்கங்களின் வட்டார மாறுபாடுகளோடு விமர்சனப்பூர்வமான கேள்விகளையும் நாவல் முன்வைக்கிறது.


சான்றாக, 


“தைமுடிஞ்சி மாசி தொடங்கிடுச்சி. பங்குனி பதினெட்டுல காமங்கூத்தை நடத்திப்புடணுமே! மளமாரி பெய்யும், மாடுங்களுக்கு நோய்நொடிவராது. ஊர் வளம் பெறும்.” பக் -137


மங்கம்மாள் கெங்கையம்மன் திருவிழாக் கதை பக்-205


     நடுகாட்டுக்கதையில் வீரசாம்புகன் காராம்பசுவின் தோல், கால், வால், கண் ஆகியன கூறு போடப்படுகிறது. இரண்டு வகைகளில் சொல்லப்படும் இக்கதைகளில் கம்மாளர்கள் முக்கிய இடம் பெறுகின்றனர். பூணூல் அணிவது குறித்த செய்திகள் இக்கதைக்குள் இடம்பெறுகிறது. ஏன் வீரசாம்புகன் சமமாக மதிக்கப்படவில்லை என்ற கேள்வியை நாவல் தர்க்கப்பூர்வமாக எழுப்புகிறது. பக்-240


பறை:

  

       பறையடிக்கமாட்டேன் எனச் சொன்னதற்கு கட்டைவிரலை வெட்டிய சம்பவம் இங்கு நடந்துள்ளது. இதையெல்லாம் எதிர்த்து பறையடிப்பதை தடுத்து பறையைக் கிழிப்பதும், எரிப்பதுமான நடவடிக்கைகளை ஒரு இயக்கமாகக் கட்டமைத்த காலம் இருந்துள்ளது. இன்றுகூட திருவிழா முதலான உற்சவங்கள், கலைப்போட்டிகள் முதலானவற்றில் மட்டுமே பிறசாதியினர் பறை அடிக்கின்றனர். இந்த மாற்றம் கூட பிற்காலத்தில் வந்ததே. நாவலில் சமநீதியரசு செய்யும் செயல்பாடுகள் இவ்வகைப்பட்டவை.


     மேளக்குழு - தப்பு, டோலக், சட்டி ஓசைகள் மற்றும் செய்முறை பற்றிய குறிப்புகள் பத்திகளாக இந்நாவலில் வருகிறது. மிருதங்கம் செய்யும் முறையை டி.எம்.கிருஷ்ணாவின் செபாஸ்டியனின் குடும்பக்கலை நூலின் வழி விரிவாக அறியலாம். பறைதான் முதலில் தோன்றிய கருவி என்பதை அதன் வடிவம் கொண்டு அறியலாம்

அதன் படிநிலை வளர்ச்சிகளே பிற தோல் கருவிகள் என்பதற்கு மரக்கூடுகளின் வடிவமே சாட்சியாகிறது. பறைக்கு மாற்றாக ஆர்மோனியம், தபலா, டோலக் வாங்கப்பட்டதாக நாவல் கூறுகிறது.


நாவலில் இருந்து 


      “நாற்பதுகளிலேயே பறை மேளமடிக்கிறத நம்ம முன்னோர்கள் பல ஊர்கள்ல ஒழிச்சாங்க” மீண்டும் பறை திருவேங்கடத்துக்கு கோபம் -244 (சிவலிங்கம் மகன் சூரவேல் பறை இசைப்பவன் ஆனான்)


 பஞ்சமரபு தமிழிசை நூல்ல பேரிகை, படகம், இடக்கை முப்பதுக்கு மேல தோல்கருவிகளாகச் சொல்றாங்க. அந்தப் பட்டியல்ல வரும் பறை மட்டும் எப்படித் தீண்டத்தகாததாச்சி! இன்னிக்கி மிருதங்கத்துக்கோ, தவிலுக்கோ, பம்பைக்கோ தரப்படும் மரியாதை மிகத் தொன்மையான பறைக்கு இருக்குதா? அப்போ இங்க கருவி முக்கியமில்ல. யார் அத வாசிக்கிறானோ அத வச்சி தானே அதுக்கு மதிப்பு இருக்கு?” பக்-294


“ஊழிக்காலத்துல சிவன் தாண்டவமாடியபோது தன் கையிலிருந்த மேளத்தை அடிச்சாராம், அந்த ஒலியிலிருந்து உருவானதுதான் உலக உயிர்கள் புராணம் இதைச்சொல்லுது. உடலே இசையாலானது பழைய தமிழிலக்கியங்களில் பறையப் பத்தி குறிப்பிடாத நூல்களே இல்லை, அரசாங்கத்தோட செய்தி களை அறிவிக்கும் உயர்ந்த சிறப்பு பெற்றிருந்தானாம் பறையடிக கிறவன். இதைப் பெருங்கதைப்பாட்டு சொல்லுது இவ்ளோ சிறப்பு கொண்டதாம் இந்த மேளம். இதுல இழிவு எங்க வந்துச்சி! பறை தம்ம தமிழ் மரபுல தொன்மையானதொரு கருவி, தாம் அக் கருவிமேல இருக்கிற கறையத்தானே போக்கணும்? எதுக்கு அத ஒழிக்கணும்?"


    'துடியெறியும் புலைய'ன்னெல்லாம் ஏன் சொன் னாங்க? அரசாங்கச் செய்திகள அறிவிச்சவன் இன்னைக்கு ஏன் இழிவா மதிக்கப்படறான்? பழம்பெரும பேசி என்ன பிரயோஜனம்? இப்ப இருக்கிற இழிவ போக்கிக்கிறதபத்தி யோசி. அதுதானே யதார்த்தம்!" பக் -294


தனிப்பட்ட வாழ்க்கையும் கதாபாத்திரங்களும்:


தனது உண்மையான செயல்பாணுகள் மூலம் காதர் பாயிடம் காமிஸ்காரராகிறார் (கண்காணிப்பாளர்) இராவணேசன். திருவேங்கடத்தின் படிப்புச் செலவை ஏற்றுக்கொண்டதோடு மிதிவண்டியும் வாங்கி தரும் காதர் பாய் இராவணேசனின் இறப்பிற்குப் பின் திருவேங்கடத்திற்கு வேலையும் நிலமும் தரக்கூடிய பகுதி முக்கியமானது.


சிவலிங்கம் மற்றும் திருவேங்கடத்திற்கு இடையிலான நட்பும் முறிவும் நாவலுக்குள் ஒரு பகுதியாக ஓடுகிறது. 


சிவலிங்கம் மற்றும் அவன் மகன் சூரவேல் ஆகியோரிடம் பிழைப்பைத் தாண்டிய கலையுணர்வு ஊறியுள்ளதை இழையோடவிட்டிருக்கிறார் அழகியபெரியவன். 


பொன்னரசு, இராவணேசன், சிவமலை ஆகிய மூவரும் திருவேங்கடம் மீது செலுத்திய தாக்கத்தை ஒவ்வொரு பக்கங்களிலும் பார்க்கலாம்.


     மற்றொரு பக்கம் புது இடத்திற்கு சென்று தனிமையைச் சந்திக்கும் போது காதலியைத் தேடி மனம் அலைவதை கலைப்பூர்வத்துடன் இந்நாவல் முன்வைக்கிறது. ஊடகம் பல பரிணாமமாக வளர்ச்சியடைந்த இந்த காலத்தில் கூட பிரிவும் தனிமையும் வாட்டும் சூழல் இருக்க ஊடகம் அதிகம் செயல்படாத அந்தக் காலத்தில் எப்படியான மனநிலை இருந்திருக்கும் என்பதை இந்நாவல் மூலம் அறியலாம். 


இராவணேசன் திருவேங்கடத்திற்கு கல்வி கொடுக்க நினைத்தார். அது முழுமையாக முடியவில்லை. திருவேங்கடம் தனது பிள்ளைகளுக்கு கல்வி கொடுக்க நினைத்தார். அதில் சமநீதியரசுக்கு மட்டும் முழுமையாக கல்வி அளிக்க முடியவில்லை. கல்வி பெற முடியாத சூழல் வரும் இடங்களிலெல்லாம் இயக்கப்பணியும் சேர்ந்தே வருகிறது. 


இராவணேசன்- தவமணி 

சாமன்- முனியம்மாள்

தலைவர் சிவராஜ் - மீனாம்பாள் (SCF தலைவர்களாக அரசியலில் களம் கண்டவர்கள்)

சிவலிங்கம் -மங்கா குழந்தைகள் 

நீலமேகம், பீமாராவ், எல்லையம்மாள், சூரவேல்

திருவேங்கடம் -குப்பி குழந்தைகள் 

சித்தார்த்தன், மீனாம்பாள், ஜோதிபா, சமநீதியரசு

காதர்பாய், சிவமலை, பொன்னரசு, முருகப்பன், பேரானந்தம் பெயர் மட்டுமே அறிமுகமான செல்வம், தீர்த்தமலை, நாய்க்கர்.

       கதாபாத்திரங்களின் பெயர்களில் திருவேங்கடம், குப்பி குழந்தைகளின் பெயரும் சிவலிங்கம், மங்கா குழந்தைகளின் பெயரும் குழந்தைப் பெறும் போது அவர்கள் எப்படியான நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. சிவலிங்கத்தின் முதல் இரண்டு குழந்தைகள் பிறந்த போது அவன் திருவேங்கடத்துடன் இருந்தான். அடுத்த இரண்டு குழந்தைகள் மங்காவின் ஊரில் பிறந்தன. சிவலிங்கத்தின் குழந்தைகளின் பெயர்கள் அவனது  நிலைப்பாடுகளைக் காண்பதற்கான சாட்சியாகிறது.


நாவலிலிருந்து,


“சொற்கள் சாரம் இழந்து போனால் செயலால் அவற்றை நிரப்பணும்‌.” பக்-30


“இரயிலின் நீண்ட ஊதல் எதையோ பேச முற்பட்டது. திருவேங்கடத்துக்கு இயந்திரத்தின் மொழி புரியவில்ல.” பக்-35


“ஒவ்வொருவரும் கையளித்துப்போன எந்தச் சொற்களும் இப்போது அவனிடமில்லை. அச்சொற்களை வாங்கிக்கொண்டு வெறுமையைப் பரிசளித்துவிட்டது இத்தனிமை.” பக்-37


“ஓர் உடல் அசைவின் மூலமோ, ஒரு பாவனையின் வழியோ, ஒரு சொல்லின் ஊடாகவோ அப்படி மனிதர்கள் அறிமுகமாகிவிடுகிறார்கள். அபூர்வமாய் அது நடந்தும்விடுகிறது.” பக் -43


“சில மௌனங்களை மறக்கமுடிவதில்லை. அவை வாழ்க்கை முழுவதும் துரத்தும் வல்லமை கொண்டவை.” பக் -99


விடுதி வாழ்க்கை:


      விடுதிவாழ்க்கையின் ஆரம்பமும் முடிவும் எப்படியானவை என்பதை நாவல் அச்சிட்டுக் காட்டியுள்ளது. விடுதியிலுள்ள மாணவர்களது மனநிலையும் செயல்பாடுகளும் சிறு துணுக்காக நாவலுக்குள் வந்து போகிறது.


“விடுமுறை நாளை விடுதியில் கழிப்பது போன்றதொரு கொடுமை ஏதுமில்லை எனும் முடிவுக்கு இப்போது திருவேங்கடம் வந்துவிட்டிருந்தான். அந்த நாள் அனுபவம் கொஞ்சமாய் சிறை வாழ்க்கையோடு ஒத்தது. கையில் காசிருந்தால் அந்த நாட்களின் பெறுமதியே வேறு.” பக் -42


“விடுதியில் படிப்பவர்களில் முக்கால் பாகத்தினர் தாழ்த்தப்பட்டவர்கள். கால் பாகத்தினர் பிறர். இந்த எண்ணிக்கை விகிதமெல்லாம் ஒன்றுக்கும் உதவுவதில்லை. ஆதிக்கச்சாதி மாணவர்கள் வைப்பதே அங்கு சட்டம்.” பக்-44


“பட்டணத்திற்கு முதலில் வந்தபோது வெறுப்புணர்வு தோன்றியது. உடனே ஓடிவிடலாமா என்றே விரும்பியது அவன் மனம். பேடிசன் விடுதி அறையில் வீசிய புழுங்கல் வாடை அங்கு போடும் உணவிலும் வீசியது. இப்போதெல்லாம் அவை பிரியத்திற்குரிய நினைவுகள்.” பக்-80


கடல்:


      ஆற்றைப் பார்த்து பழக்கப்பட்டவன் கடலைக் கண்டு வியந்து தன்னிலையை கைவிட்டு நிர்வாண மனதுடன் கடலுக்குள் முன் நிற்கும் சாத்தியங்களை கடலே ஏற்படுத்தும் என்பதற்கு ஆதரவான பகுதிகள் நாவலுக்குள் இருக்கிறது.


“கடலோடு அறிமுகம் செய்து வைத்தான் பொன்னரசு. அது புரண்டுபுரண்டுவந்து திருவேங்கடத்தின் காலடியில் குழைந்தது. மூர்க்கம்கொண்டு நொடிக்கொருதரம் சீறியது. கடல் கொடுத்த வியப்பு அடங்கிட சிறிது நேரமானது. அத்தனைபெரிய நீர்ப்பரப்பை அவனால் முதலில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.” பக்-46


“கண்பறந்து ஓயும் தொலைவு வரை நீர்தான். அந்தப் பெரும் ஆகிருதியைப் பார்த்தவுடன் உலகின் உண்மையொன்று அவனுக்குள் பிடிபட்டுவிட்டது போலத் தோன்றியது.” பக்-47


‌  “பாட்டி ஊருக்குப் போனால் பாலாற்றில் தான் ஆட்டம்.” பக்-54


காதல்:


      தனிமையின் பிரிவில் காதலியின் நினைவாட்டம் இம்சிக்கும் அவஸ்தையை விடுதியில் குப்பியின் நினைவிலிருந்த திருவேங்கடம் மூலம் அழகியபெரியவன் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார். சிவலிங்கம், மங்காவின் பார்த்தவுடனே வந்த காதலும் கதைய சோர்வின்றி நகர்த்துவதாக அமைந்துள்ளது.


“குப்பியைத் தன் கனவுகளுக்குள் இடம்மாற்றி சிறைப்படுத்திக் கொண்டான் திருவேங்கடம்.” பக்-54


“தனிமை ஒரு உளவாளியைப்போல் அவன் அறையில் மௌனமாய் அமர்ந்து வேவு பார்த்தது.” பக்-57


“உன் முடிவு என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், நீ இல்லாமல் வாழ்வில்லை என்றாளே? திருவேங்கடம் கேள்விகளை எழுப்பியெழுப்பிச் சோர்ந்துபோனான்.” பக்-144


பறையே அவளை அளித்தது. (மங்கா- சிவலிங்கம்)


“சிவலிங்கம் புருவ மையத்தில் விரலை வைத்து அழுத்தி அவள் வரவேண்டும் என மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டான். அப்படி நாலைந்து முறை நினைத்துக் கொண்டால் நடந்து விடுகிறது என்று நம்பினான் அவன்”  பக்-118


சீர்திருத்தச் செயல்பாடுகளில்


“சீர்திருத்தக் கருத்துக்களை அவனுள் தூண்டிய ‘திரும்பிப் பார்’ நாடகம், காதல் உணர்வையும் சேர்த்தே தூண்டிவிட்டது.” பக்-59


“எதுக்கும் பயிப்பிடாத திரு. பயம் ஒரு நோய் மாதிரி. அத இந்த வயசிலேயே கிள்ளிப்போடலன்னா பொறையோடிடும். தயங்காத. மனசுல பட்டத பேசு. வார்த்தை மூலமாதானடா நாம நெனைக்கிறத சொல்ல முடியும்? அமைதியா இருந்தா உன் மனசுல இருக்கிறது எதிராளிக்கு எப்படித் தெரியும்? மனச படிக்கிறவன் இந்த உலகத்துலயே கெடையாது. அப்பிடி இருந்தா மொழியே தேவைப்படாது.” பக்-75 (பொன்னரசு)


“பேரானந்தமும் திருவேங்கடமும் பொன்னரசும் சேர்ந்து ‘புராணக் குப்பையில் புரளாதிரு’ என்ற நாடகத்தை நடத்தினார்கள்.” பக் -81 (விடுதி ஆண்டு விழா)


பொன்னரசு வரைந்த அம்பேத்கர் ஓவியம் குறித்து பேரானந்தம் திருவேங்கடம் பேசும் பேச்சின் முடிவில் “அதுபேரு தான் தோழமை” என்கிறான் திருவேங்கடம். என்ன பேசினார்கள் என்பதை 82ஆம் பக்கத்தில் வாசித்துத் தெரிந்துகொள்ளவும். 


“அந்தப் புளியப் போலத்தான் நம்ம சமுதாயம் இருக்குதுடா சிவலிங்கம். மேல பச்சையா இருக்குது. உள்ள ரத்தக்களரி.” பக்-86


“ஒரு காலத்தில் அவரை அச்சாக்கக்கொண்டு சுழன்ற பூங்குளத்தின் தற்போதைய அலட்சியத்தை அவரால் செரிக்க முடியவில்லை.” பக்-289


பெரியார் மார்க்ஸ் அம்பேத்கர்:


    “உலகம் சில புள்ளிகளை அச்சாக்கக்கொண்டு இயங்குகிறது. ஆண் பெண் ஈர்ப்பு, பொருள் சார்பு, மதம், மொழி, அதிகாரம், ஜாதி. இவற்றையே நான் அந்த இயங்குபுள்ளிகளாக நினைக்கிறேன் இந்த அச்சுகளைப் பற்றிச் சுழலும் உலகம் இவற்றிலிருந்து பிரியும் செயல் அடுக்குகள் மூலமாக தன்னை ஸ்தாபித்துக்கொள்கிறது. பால் ஈர்ப்பு, மொழி, பொருள் சார்பு போன்றவை பழைய அச்சுகள். அதிகாரம், மதம், ஜாதி போன்றவை புதிய அச்சுகள். இந்த அச்சுகள் கூடப் பிற்காலத்துல மாறலாம்.” பக்-142  என்கிற வரி நாவலில் வருகிறது. 


   வருடக்கூலி, மாதக்கூலி, கமலை இறைத்தல், பயிர் நடுதல், களையெடுத்தல், அறுவடை. தகரத்தில் அல்லது பூசணி இலையில் கூழ், களி, அல்லது பழைய உணவு. வயது வரைமுறையின்றி வாடா போடா விளிப்பு அவர்களை பெரியாண்ட, சின்னான்ட என அழைக்கத்தவறினால் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலையில் இருந்த மக்களுக்கு நாவலில் குறிப்பிடப்படும் புதிய அச்சுகளை எதிர்க்கும் வழிமுறைகளாக மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் இருக்கிறது. அந்த மூன்று தத்துவங்களும் ஒன்றிணையும் புள்ளி இந்த நாவலில் உள்ளது. தொழிலாளர் கட்சி நடத்தியவர் அம்பேத்கர், புரட்சி நிகழ்ந்த நாடுகளுக்குப் பயணம் செய்தவர் பெரியார். இந்தியாவில் நிகழும் சாதிய அமைப்புகள் குறித்து கருத்து தெரிவித்தவர் மார்க்ஸ். அம்பேத்கரின் செயல்பாடுகளை குடியரசு இதழில் பாராட்டியவர் பெரியார். குறிப்பாக நான் ஓர் இந்துவாக சாகமாட்டேன் என்கிற அம்பேத்கரின் அறிவிப்பிற்கு வரவேற்பளித்தவர் பெரியார். பெரியாரின் கடிதங்களுக்கு செவிமடுத்தவர் அம்பேத்கர் என்கிற தகவல்களை மறைத்து கருத்தியலுக்குள் இருக்கும் முரண்களை மட்டுமே ஊதிப் பெரிதாக்கி அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் ஆகியோரை பிரிக்கும் போக்கு நிலவிவரும் சூழலில் ஒரு புனைவிலக்கியம் மூன்று தத்துவங்களையும் இணைத்துத் தந்திருப்பது நல்லதொரு அம்சம்.


      குப்புசாமி என்பவர் (இராணுவ வீரர், பண்டிதர் தொடர்பு, பெங்களூரில் வசித்தவர்) சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் உள்ள அக்கம்பாக்கம் வந்து சாதிய அடக்குமுறையை எதிர்த்து பள்ளிக்கூடம் கட்டுதல், புறம்போக்கு நிலத்தில் விவசாயம் செய்தல், கூட்டுறவு சங்கம், பண உதவி, சாராய எதிர்ப்புப் பிரச்சாரம் செய்தல் என சீர்திருத்த பணியில் ஈடுபட்ட தகவல் மற்றும் அம்பேத்கர், ஈ.வெ.ரா, காந்தி என்று  விடுதி ஆண்டு விழாவில் விடுதி அதிகாரி பேசியது முதலானவை குறிப்பிடத்தக்க செய்திகள் ஆகும்.


நாவலில் இருந்து சில பகுதிகள்:


   “அடுத்த வேளை சோத்துக்குக் கவலையில்லாதவனுக்குத் தான் சாமி, பக்தி, ஆட்டம் எல்லாம். நமக்கு ஒழைப்புதான் கடவுள்.” பக்-44


     “சொற்பக் கூலியைப் பெறுவதற்கான உழைப்பு, பெரும் உழைப்பு. ஒரு வாழ்வையே வாங்கிச் செறித்துக்கொண்டு பாறையாய் இறுகி நிற்கும் உழைப்பு. வயதையும் சிந்தனையையும் களிப்பையும் ஆரோக்கியத்தையும் காலத்தையும் பிடுங்கிக் கொள்ளும் உழைப்பு, பேருழைப்பு, சிறுகூலி என்பது இங்கு தந்திரமாய் செய்யப்பட்டிருக்கும் சமூகச்சதி. அதிலும் குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே அதைப் பொருந்திடும்படி செய்திருப்பது கயமை.” பக்-50


“கெயொளச்சா கஞ்சி. இதுல ஜாதியென்னா வாளுது?” பக்-129 (முனியம்மாள் சாமனிடம் சொல்வது)


“இன்னும் கொஞ்ச வருசத்துல நம்ம நாடு சொதந்தரம் வாங்கிடுமுன்னு சொல்றாங்கடா திரு. ஆனா இங்க வறும ஒழியில. சாதி ஒழியில. மடத்தனங்கள் போகல. சுதந்திரம் வந்து என்னா ஆகப்போது? அம்பேத்கர், ஈ.வெ.ரான்னு பல தலைவர்ங்க பேசினும் எழுதினும் கீறாங்க. அதுலேர்ந்து எதனா தீர்வு கெடைக்குமான்னு தெரிஞ்சுக்கத்தான் நான் இப்பிடிப் புத்தகங்களப் படிக்கிறேன்.” பக்-77


      தாழ்த்தப்பட்டோர் விடுதலை புத்தர் காலத்தில் தொடங்குகிறது. அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, ஈ.வெ.ரா, அம்பேத்கர். ஈ.வெ.ரா மூலம் தீவிரமும் அம்பேத்கர் மூலம் சர்வதேச அடையாளமும் கிடைத்துள்ளது. ஹோட்டலில் இருந்த பிராமணர் போர்டை எடுத்தது பெரியார் போராட்டத்தால் என்கிற வரி சீர்திருத்தவாதிகளை ஒன்றிணைக்கும் செயல்பாடு ஆகும்.


“தீண்டப்படாதவர்கள் கண்டுபிடித்தது தான் அகிம்சையெனும் தத்துவம். அது புத்தரிடமிருந்து அவர்கள் பெற்றது.” பக் - 113


“வாயைத் திறந்தால் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ். தடாலடியாகப் பேசிவிடுகிறான்.” பக்-118(திருவேங்கடம் குறித்து சிவலிங்கம்)


“ ‘யாருக்கு சுதந்திரம்’ என்ற தலைப்பில் பேசிய சிவமலையின் பேச்சு அன்று அற்புதமாக இருந்தது. தன் உரையில் அவர் புத்தரையும் அம்பேத்கரையும் ஈ.வெ.ராவையும்வெகுவாகப் புகழ்ந்தார். திராவிடர் கழகம் தொடங்கியிருக்கிற ஈ.வெ.ராவையும் அவரின் பகுத்தறிவுக் கருத்துகளையும் சிலாகித்துப் பேசினார் சிவமலை. பேச்சின் முடிவில் தான் கொண்டுவரும் ‘சமத்துவ முழக்கம்’ பத்திரிகையை வாங்கிப் படிக்கச் சொல்லி வேண்டுகோள் வைத்திடவும் அவர் மறக்கவில்லை. பக்-141


“புதுக்குடி ஆற்றங்கரையில் நடந்த நிகழ்ச்சிக்கு பொதுவுடைமை இயக்கத் தோழர்களும் திராவிடர் கழகத் தோழர்களும் பெருவாரியாக வந்திருந்தனர்.” பக்-144


   அம்பேத்கரும், தந்தை பெரியாரும் மதப்புரட்டுகளைப்பற்றி அதிகளவிலே பேசியும் எழுதியும் வருகின்றனர். "நம்மையும், நமது அமைப்புகளையும், நமது அரசியல் செயல்பாடுகளையும் எதிர்க்கிறவர்கள் இங்கே அனேகம் பேர் இருக்கிறார்கள். நம் மக்களையே பிரித்து, அவர்களை 'தேசிய அரிஜனங்களாக்கி' நமக்கு எதிராகவும் திருப்பிவிடுகிறார்கள். அவர்கள் அகிம்சையில் நம்பிக்கை கொண்டவர்கள்! அம்பேத்கர் சொன்ன பதிலைத்தான் அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அகிம்சை என்பது வேறு; பணிதல் என்பது வேறு. அகிம்சை

என்பதற்கான பொருளைத் தவறாகப் புரிந்துகொண்டு செயல்பட்டு வருகிற அவர்கள்மீது பரிதாபமாக இருக்கிறது!


 அகிம்சையில் இரண்டு பிரிவுகள் உள்ளன. அனைத்து உயிர்களுக்கும் அன்புகாட்ட வேண்டும். கேடு செய்கிறவர்களை எதிர்த்துப் போரிட வேண்டும் என்பனவே அவ்விரண்டு பிரிவுகள், இவ்விரண்டு பிரிவுகளை ஞானி துக்காராம் சொன்னதாக அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.” பக்-191 (அகிம்சை= அன்பு+போராட்டம் (சிவமலை, அகிம்சை= சேவை+போராட்டம் பொன்னரசு)


 1948முதல் 1952வரை இந்திய கம்யூனிஸ்டு கட்சி தடை செய்யப்படுகிறது. அப்போது திருவேங்கடம் சிவலிங்கத்திடம் கம்யூனிஸ்ட் ஊழியர் ஒருவரை அனுப்புவிக்கிறான். அவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையிலான உரையாடல் குடும்பம் குறித்து வருகிறது. குடும்பம் மீது ஆதிக்கம் செலுத்துபவர்களாக நாம் மாறும் இடம் அக்கறை, பொறுப்பு வழியாகவே அமைகிறது என்பதற்கான தொடக்க சிந்தனையாக அந்த உரையாடலை பார்க்கலாம். மனைவி, குழந்தைகள் அனைவரும் தனித்தனி உயிர்கள் அவர்களுக்கென குறைந்தபட்ச வசதிகளை செய்து வைத்தாலே போதும் என்ற கருத்துக்கு எடுத்துக்காட்டாக சிவமலை, அம்பேத்கர், காந்தி முதலானவர்களை அவர் குறிப்பிடுகிறார். 


பத்திரிகைகள்:

  

     களப்போராட்டம், பத்திரிகை மூலம் கருத்துப் பிரச்சாரம். இரண்டும் சமாந்தரமாக நடந்துள்ளது. சித்தார்த்தர் வாசகசாலை போன்ற வாசகசாலைகள் ஊருக்கு ஊர் ஏற்படுத்தப்பட்டு கருத்துப் பிரச்சாரங்களைத் தொடர்ந்து நடத்தியிருக்கின்றனர். தாஸ் நடத்திய உதயசூரியன் பத்திரிகை, அயோத்திதாசரின் தமிழன் பத்திரிகை ஆகியன கதையோடு இணைந்து வருகிறது. (1907ல் “ஒரு பைசாத் தமிழன்” எனத் தொடங்கப்பட்டு, 1908ல் “தமிழன்” எனப் பெயர் மாற்றம் கொள்கிறது.


நூலகங்களில், 


இந்து, மெயில் -ஆங்கில ஏடுகள் 

ஆனந்த விகடன், சுதேசமித்திரன், நவசக்தி, கலைமகள் 


பொன்னரசு வீட்டில்,

 

குடியரசு, திராவிட நாடு, பகுத்தறிவு, சமதர்மம் (ஜோலார்பேட்டை), ரிவோல்ட், விடுதலை, தொண்டன், திராவிடன், தமிழன், பறையன்(இராயப்பேட்டையில் வயசான பெரியவரிடமிருந்து வாங்கியது. இதழ் நின்றுவிட்டது), உதயசூரியன்(புதுக்குடி) 


“கம்யூனிஸ்ட் அறிக்கை, லெனினும் மதமும், சாதியை ஒழிக்க வழி, ஞானசூரியன், தீண்டாதவர்கள் யார்? அவர்கள் ஏன் தீண்டாதவர்கள் ஆனார்கள்? ஜீவிய சரித்திர சுருக்கம், எல்லா நூல்களுமே குடியரசுப் பத்திரிகையின் வெளியீடுகள்.” பக்-76


திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் - ஜீவிய சரித்திர சுருக்கம், ஆங்கில பதிப்பகம் 


குப்பிக்கு கொடுத்த புத்தகங்கள் ஆனந்த விகடன், கலைமகள், பஞ்சதந்திரக் கதைகள், கதாமஞ்சரி, புத்தமார்க்க வினாவிடை. (நான் குடுத்துட்டுப் போனேன்னு சொல்லு.)


ராகுல சாங்கிருத்தியாயன்- வால்காவிலிருந்து கங்கைவரை, 

அம்பேத்கரின் நூல்கள்,

பெரியாரின் நூல்கள்,

இன்குலாப் கவிதைகள்,

சிலந்தியும் ஈயும்,

சோஷலிஸ்ட் புரட்சி,

சேகுவேரா- சோஷலிசமும் மனிதனும்


நாவலிலிருந்து


“உம்பேரே உன்னைப் பத்தி சொல்லுது. இந்தப் பத்திரிகைகளைப் படி. உன்னோடு இருப்பவர்களை அடிமைத்தளைகளிலிருந்து மீட்டெடு!” பக்- 51


“கதை, கவிதைங்கள படிக்கிணும். மொழியையும் மனிதர்களையும் அதுங்கள்ளேர்ந்து தெரிஞ்சிக்கலாம். மனசு பண்படும். அரசியல் படிக்கணும். அது உன் சமூகத்தை உனுக்குத் தோலுரிச்சி காட்டும். நீ தெளிவடையலாம்.” பக்-75 (பொன்னரசு)


“பொன்னகரம்னு ஒரு கத. முப்பத்தி நால்லியே மணிக்கொடி பத்திரிகையில புதுமைப்பித்தன்னு ஒர்த்தர் எழுதியிருக்கிறாரு. சேரி வாழ்க்கையை. அதுல அம்மாளு செஞ்சதா சொல்றது எனுக்குப் புடிக்கல. ஆனா அந்தக் கதையில வருதே வாழ்க்க, அது உண்ம.” பக்-78


நிறைவாக,


      இக்கட்டுரை நாவலின் பகுதிகளை மேற்கோளாகக் கொண்டு சாராம்சத்தைக் கட்டத்தும் வகையில் எழுதுப்பட்டிருக்கிறது. தொடர்ந்து வரலாறு மறக்கப்படுவதும் மறுக்கப்படுவுதும் மறைக்கப்படுவதும் மாற்றப்படுவதும் தொடர் செயல்பாடுகளாக இருக்கும் காலத்தில் வல்லிசை போன்ற நூல்கள் அதிகம் வெளிவர வேண்டிய தேவை இருக்கிறது. இந்தியாவின் ஒரு பகுதி காணாமல் போய்வரும் சமயத்தில் தேடுதலுக்கான தொடக்கமாக வல்லிசை போன்ற நாவல்களை நாம் கூறலாம். சுதந்திரப் போராட்ட வரலாறுகளை அதிகம் பதிவு செய்த புனைவெழுத்துகள், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைப் போராட்டத்தை முன்வைக்கத் தவறிவிட்டது என்பதை அழுத்தமாக தமிழ் இலக்கியப் பரப்பிற்குச் சுட்டிக் காட்டும் வேலையை வல்லிசை செயதுள்ளது. எதிர் காலத்தில் வரலாற்று நாவல் என்கிற வரிசையில் வல்லிசை மீதான கவனமும் வாசிப்பும் ஆய்வும் நிகழ்த்தப்பட வேண்டும்.


      

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு