எடுத்தாளப்பட்ட பகுதி
எடுத்தாளப்பட்ட பகுதி
கலையில் இலட்சியமும் வீரனும்
-நா.வானமாமலை
இலட்சியத்தால் வழிகாட்டப்பட்டுச் செயல்படும் வீரர்களைக் கலை படைத்துள்ளது. மக்களது சமூக உணர்வென்னும் நாடித் துடிப்பை உணர்ந்து சமூகப் பொறுப்போடு இலக்கியம் படைக்கும் படைப்பாளி காலத்தின் லட்சியத்தையும் காலத்தின் நடைமுறையையும் இணைக்கிறான். சமூக வரலாற்றின் நிகழ்காலத்தையும் அதன் வருங்காலத்தையும் இணைக்கும் இலட்சிய வீரர்கள் கலைப்படைப்பாக உருவாக்கப்படுகிறார்கள்.
இலட்சியம் சமூக யதார்த்தத்திலிருந்து தோன்றுகிறது. சங்க கால இலட்சியங்கள் வள்ளுவர் காலத்தில் மறைந்து போயின. வள்ளுவர் கால இலட்சியங்கள் கம்பன் காலத்தில் மறைந்த போயின. கம்பன் காலத்து இலட்சியங்கள் தற்காலத்தில் மறைந்து போய்விட்டன. இலட்சியங்கள் என்றைக்கும் நிலைத்து மாறாமல் இருக்கக்கூடியவை அல்ல; அவை நிறைவேற்றப்படும்பொழுது மனிதனுக்குத் திருப்தி தராமல் போய் அவற்றைவிடச் சிறந்த இலட்சியங்களை அவன் வகுத்துக் கொள்ளுகிறான்.
இலட்சியங்கள் ஒரு வரலாற்றுக் காலத்து வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பிரதிபலிப்பதில்லை. வாழ்க்கையின் அடிப்படையான மதிப்புகளும் விரும்பத்தக்க அம்சங்களும் ஒன்றுகூடி இலட்சியங்களாக உருவாகின்றன.
“மனித ஒழுக்கத்தின் சிறந்த கூறுகளே இலட்சியங்கள்" என்று லெனின் எழுதினார்.
மனிதனுக்கு இலட்சியம் தேவை. ஆனால் அது மனித இலட்சியமாக இருக்கவேண்டும். மனிதாதீதமான (Super natural) இலட்சியமாக இருக்கக்கூடாது என்று கூறினார்.
சோவியத் நாவல்களில் பாசிச எதிர்ப்புப் போர்க் காலத்திலும் சோஷலிச நிர்மாணக் காலத்திலும் படைக்கப்பட்ட இலட்சிய வீரர்கள், சாதாரண மனிதர்களே, சோவியத்மக்களின் நடைமுறை ஒழுக்கங்களிலிருந்து இலட்சிய வீரர்கள் படைக்கப்பட்டார்கள். யூரி ககாரின் அசாதாரணப் பிறவியன்று. சாதாரண சோவியத் குடிமகன்தான். சோவியத் மக்களின் இலட்சியங்களைத் தனது இலட்சியமாகக் கொண்டு, நடைமுறை உழைப்பின் காரணமாக உலக வரலாற்றில் ஓர் அருஞ்செயல் புரிந்தான். சோவியத் நாட்டு விஞ்ஞானிகள், எஞ்சினியர்கள், தொழிலாளிகளது சிறந்த பணிகளின் மூலம் உருவான விண்வெளிக்கலத்தை ஓட்டி உலகிலேயே முதன் முதலாகப் புவிக் கவர்ச்சியை மீறி விண்வெளியில் சென்று அசாதாரண சாதனை புரிந்தான். இங்கு ககாரின் மட்டும்அல்ல இலட்சிய வீரன். அவனுடைய விண்கலத்தை உருவாக்கிய அனைவருமே அவனுடைய இலட்சிய ஆர்வத்தில் பங்கு கொண்ட இலட்சிய வீரர்கள்.
பகற்கனவுகளைத் தோற்றுவிக்கிற இலட்சியங்கள் பயனற்றவை. வாழ்க்கையை மேன்மையும் சிறப்பும் உடையதாக மாற்றவல்ல குறிக்கோள்களே பயனுள்ளவை.
இலட்சியங்கள் தினசரி வாழ்க்கையின் மீது ஆதாரப்பட்டிருக்கவேண்டும். ஒரு வர்க்கத்தின் சாதாரணப் பிரச்சினையோடு இணைந்திராத எந்த மிக உயர்ந்த குறிக்கோளும் ஒரு செப்புக் காசின் மதிப்புக்கூடப் பெறுவதில்லை.(லெனின்)
மக்களின் ஆர்வங்களோடு தொடர்பு கொண்டுள்ள குறிக் கோள்களே வாழ்க்கையை மாற்றும் வல்லமை கொண்டவை. குறிக்கோள் என்பது தற்காலத்தின் உயர்ந்த சாதனைகளின் வருங்கால வளர்ச்சியைப் பற்றிய கற்பனை. இது கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் வருங்காலத்தோடு இணைக்கிற, நிறைவேற்றப்படவேண்டிய கற்பனையான திட்டம்.
இது வளர்ச்சி பெறும்பொழுது மக்களைக் கவருகிறது. கருத்தில் வளரும் குறிக்கோள், சமூகம், அரசியல், ஒழுக்கம், அழகியல் ஆகிய துறைகளைத் தழுவி வளர்ச்சியடைகிறது. உணர்வுமிக்க மக்களின் உள்ளத்தில்தான் இது இருக்கிறது. தத்துவ ஞானிகள், விஞ்ஞானிகளின் சிந்தனையிலும் கலைஞர்களது உள்ளத்திலும் இருக்கிற குறிக்கோள் முழுமை பெற்றுத் தத்துவமாகவும் விஞ்ஞானமாகவும் கலைப்படைப்பாகவும் வெளிப்படுகிறது.
முதலில் அகவயமாக இருந்த கற்பனை, வாழ்க்கையில் யதார்த்தமாகிறது
வாழ்க்கையின் மீது ஆதாரப்படாத கற்பனை பொய்க்கனவாய்ப் பயனின்றி மறைந்துவிடும்.
தாமஸ் மூர், கம்பன் போன்றவர்களின் கற்பனை, உடோபியாவாகவும் கோசலமாகவும் கலைப்படைப்பாக உருவாகி மக்களைக் கவர்ந்து சிறிதுகாலம் நற்கனவுகளை உண்டாக்கியது. பிறகு யதார்த்த வாழ்க்கையின் தாக்குதலால் செயல்படுத்தப்பட முடியாமல், புதிய குறிக்கோள்கள் தோன்றின. அவை பயனின்றிப் போயினும் அவை தோன்றிய காலத்தில் மக்களது வருங்காலம் பற்றிய நற்கனவுகளை அவை உண்டாக்கின. மணி தனுக்கு நல்வாழ்வு வேண்டும்; அதனை அவன் பெறலாம் என்ற நம்பிக்கையை ஊட்டியதில் யதார்த்தத்துக்குப் புறம்பான இக்கருத்துக்களுக்கு ஒரு பாத்திரம் உண்டு.
சோஷலிஸ்டு ரியலிசம் வாழ்க்கையை அதன் புரட்சிகரமான மாறுதல் கதியில் சித்திரிக்கிறது. பழமை மீது, புதுமை பெறும் வெற்றிகளைச் சுட்டிக்காட்டுகிறது. இவ்வெற்றிகள் கம்யூனிச சமுதாயமாக மலரும் என்று வருங்கால நிலைமையை, விஞ்ஞான முறையில் யூகம் செய்கிறது. இலட்சியத்தில் நம்பிக்கை கொண்டு போராடும் ஊக்கத்தை அளிக்கிறது.
மனித வாழ்க்கையின் வருங்காலத்தை முன்கூட்டியே அறி யக்கூடிய நெடிய பார்வை, படைப்பாளிக்கு உண்டு. மார்க்சிம் கார்க்கி இது பற்றி எழுதினார்:
நடப்பிலுள்ளதைச் சித்திரித்தால் மட்டும் போதாது. விரும்பத்தக்க வருங்காலத்தையும், அதனை அடையக்கூடிய வழியையும் எழுத்தாளன் சித்திரிக்க வேண்டும். சமூக நிகழ்ச்சிகளை வகைப்படுத்த வேண்டும். நடப்பில் காணப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இருந்து முக்கியமானவற்றைத் தேர்ந்தெடுத்து, அவற்றைப் பொருளாகக் கொண்டு இலக்கியம் படைப்பதே, படைப்பாளியின் பொறுப்பாகும்.
முதலாளித்துவ நாடுகளில் முரண்பட்ட வர்க்கங்கள் சமூக அரங்கில் செயல்படுகின்றன. இதில் எந்த வர்க்கத்தின் செயல்கள் வருங்காலத்திற்கு முக்கியமானது, எந்த வர்க்கத்தின் செயல்கள் வருங்காலத்திற்கு முக்கியமற்றது என்பதைக் கண்டு படைப்பாளி விளக்கவேண்டும். வளர்ச்சியைத் தடுக்கும் சத்திகளை இனம் காணவேண்டும். வளர்ச்சியை ஊக்குவிக்கும் சக்திகளை இனம் கண்டு ஆதரிக்கவேண்டும்.
யோகநாதன் சிறுகதையொன்றில் மீன் பிடிக்கும் தொழி லாளியின் வர்க்க உணர்ச்சியின் உதயம் சித்திரிக்கப்படுகிறது. புதிதாகத் திருமணமான மறுநாளே அவனை வேலைக்குப்போகச் சொல்லுகிறார் அவனுடைய முதலாளி. இதுவரை முதலாளி சொல் மீறாத தொழிலாளி வேலைக்குப் போகத் தயங்குகிறான். முதலாளி அவனைத் திட்டி, வீட்டைக் காலி செய்யச் சொல்லுகிறார். அவன் மீது அனுதாபங் கொண்ட தொழிலாளி ஒருவனும் ஒருத்தியும் அவனுக்கு முதலாளியை எதிர்த்து நிற்க ஊக்கமளிக்கின்றனர். முதன்முதலில் தொழிலாளி அடிமைத் தனத்தை உதறியெறிகிறான். வேறு தொழிலாளிகளோடு சேர்ந்து முதலாளியின் கட்டளையை மீறிக் கடற்கரைக்கு மீன் பிடிக்கப் போகிறான். அவனையும் போராடும் தொழிலாளரையும் அடக்கத் தொழிலாளர் சிலரையே அடியாட்களாக முதலாளி கொண்டு வருகிறார். தொழிலாளிகளிடையே போராடுவது பற்றி ஐயங்கள் உள்ளன. கருங்காலிகள் தொழிலாளரை வெட்ட முயலும்போது, உணர்ச்சிமிக்க தொழிலாளிகள் ஒன்றுகூடி எதிர்க்கின்றனர். தொழிலாளி வர்க்க ஒற்றுமை இவ்வாறு தோன்றுகிறது. சுரண்டலை உணர்ந்து, அதனை உதறியெறிய முற்படும் தொழிலாளர் தாங்கள் ஒரு வர்க்கம், முதலாளி சுரண்டும் வேறு வர்க்கம் என்னும் உண்மையை அறிகிறார்கள்.
முன்பு காணப்படாத ஒரு புதிய புரட்சித் தீ எப்படித் தோன்றிப் பரவுகிறது என்று இங்கு சித்திரிக்கப்பட்டுள்ளது. வர்க்க உணர்வு சில தொழிலாளிகளிடம் சுடர்விட்டுப் பின்பு எப்படித் தீயாகப் பரவுகிறது என்பது காட்டப்பட்டுள்ளது.
மனிதனது குணாம்ச மாறுதல் ஒன்றை இக்கதை சித்திரிக்கிறது. அடிமைத்தனத்தில் உழலும் தொழிலாளி, அன்பு காரணமாக, வாழ்க்கை உவப்பு காரணமாக, சுரண்டுகிற முதலாளிக்கு உழைக்க மறுக்கிறான். அதே உணர்வுடைய தொழிலாளிகள் ஆதரிக்கிறார்கள். பலர் முதலாளியின் பண பலம், ஆள் பலம், சட்டம், ஒழுங்கு இவற்றிற்குப் பயந்து 'நமக்கென்ன வந்தது?' என்ற உணர்வில் செயலற்றிருக்கின்றனர். தொழிலாளியின் பிழைப்புக்கு ஒரே வழியான மீன் பிடித்தலை முதலாளி தடுக்கும் பொழுது, அனைவரும் ஒன்று சேருகின்றனர். வர்க்க உணர்வு ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறது. வர்க்கப் போராட்டம் வெளிப்படையாகத் தோன்றுகிறது.
இங்கு முதலாளித்துவத்தின் ஈவிரக்கமற்ற தன்மை விமர்சிக்கப்படுகிறது. தொழிலாளி, முதலாளியின் லாபத்தைப் பெருக்கும் ஒரு கருவி என்ற மனப்பான்மை முதலாளிக்கு இருக்கிறது. அவரே மீன்பிடி குத்தகை எடுத்துக் கடற்கரை தன்னுடையது என்ற இறுமாப்பில் இருக்கிறார். கடற்கரையில் இறங்கவிடாமல் தடுத்தால், தொழிலாளி பட்டினி கிடந்து பின்னர் பணிவான் என்று முதலாளி எதிர்பார்க்கிறார். பிழைப்புப் போய்விடும் என்ற நினைப்பு வர்க்க உணர்வையும் வர்க்கப் போராட்டத்தையும் தோற்றுவிக்கிறது. முதலில் ஒன்றிருவர்தான் அடிமை மனப்பான்மையை உதறியெறிந்து போராட முன்வருகிறார்கள். அவர்கள் தான் வீரர்கள். அவர்கள் வீரம், தொழிலாளிகளிடையே பரவுகிறது. நீண்ட நெடியவர்க்கப் போராட்டம் உதயமாகிவிட்டது. இப்பொழுது அனைவரும் வீரர்கள் தானே.
இங்கு விமர்சன ரியலிசத்தில் தொடங்கி சோஷிலிச ரியலிசத்தில் முடிக்கிறார் ஆசிரியர். இது வர்க்கப் போராட்டத்தின் தொடக்கம்தான். ஆயினும் தன்னம்பிக்கையற்று அடிமைத் தனத்தில் உழன்ற தொழிலாளி தனது உழைப்பின் மதிப்பை உணர்ந்து அதை மதியாத சுரண்டல்காரனின் சுரண்டலைஅறிந்து தன் சுயமதிப்பைப் பாதுகாக்கப் போராட முன்வருவது ஓர் உணர்வு மாற்றமாகும்.
தனிமனித உணர்வு மாற்றங்களைச் சித்திரிப்பது மட்டுமல்லாமல், சமுதாயத்தை மாற்றவல்ல, சமுதாய உணர்வு மாற்றங் களைச் சித்திரிப்பதே சோஷிலிச ரியலிசத்தின் தொடக்கம். அதன் வளர்ச்சிப் போக்கை அழகியல் கற்பனையாகக் காட்டுவதே சோஷலிச ரியலிசத்தின் குறிக்கோள்.
குறிக்கோளற்ற கலைப்படைப்பு, மனித உணர்வை மாற்றாது. தீமையை வெளிப்படுத்தாத கலை, தீமையை எதிர்த்துப் போராடும் மக்களது வீரத்தைப் போற்றாத கலை, கலைப் படைப்பின் தத்துவ உள்ளடக்கத்தையும் கலைப்பாங்கான உள்ளடக்கத்தையும் வெறுமையாக்கிவிடுகிறது.
கலையுண்மை என்பது, இருப்பதைச் சித்திரிப்பதோடு, இருப்பது எப்படி வளர்ச்சிபெறும் என்பதைச் சித்தரிக்க வேண்டும். ஒரு முளையைக் காட்டுவதோடு நின்றுவிடாமல் அது எத்தகைய மரமாக வருங்காலத்தில் வளரும், அதுவரை அதன் தேவைகள் என்ன என்பதைக் கலை நுணுக்கத்தோடு எடுத்துக் காட்டவேண்டும். வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய அம்சங்களையும் அவற்றை மரம் சமாளித்து வளர நடத்தும் இயற்கையின் போராட்டத்தையும் காட்டவேண்டும்.
நடப்பியல் உலகைச் சித்திரிப்பதற்கு நிகழ் காலத்தில் காலூன்றி நின்று உலகை நோக்கவேண்டும். வருங்கால வளர்ச்சியைக் காட்ட மனித குலத்தின் கனவுகளில் இருந்தும் காட்சிகளில் இருந்தும், கலைக்கூறுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதனை நடப்பியலை விட்டு விலகுவதாகவோ, கற்பனை உலகில் சஞ்சரிப்பதாகவோ எண்ணக்கூடாது.
குறிக்கோள்கள் ஆகாயக்கோட்டைகள் அல்ல. இயற்கை வாதி, தரையைக் கிழித்துக்கொண்டு முளை தலைகாட்டும் பொழுது அதனை மட்டுமே காண்கிறான். அதன் வருங்கால வளர்ச்சியைக் கற்பனை செய்வதில்லை. ஆனால் கலைஞன் இச்சிறு முளையை அதன் கடந்த காலம், வருங்காலம் இவற்றோடு தொடர்புபடுத்தி அதன் வளர்ச்சியின் தன்மையை உணர்ந்து முளை மரமாகி வளரும் காட்சியைக் கலைப் படைப் பாக்குகின்றான். கலைஞன் வளர்ச்சி விதிகளை அறிந்தவனாக இருத்தல் வேண்டும். நிகழ்கால நடப்பியலையும் அதன் குறிக்கோள் வழிப்பட்ட வளர்ச்சிப் போக்கையும் ஒருங்கே காட்ட வல்ல கலைஞனே சிறந்த கலைஞனாவான்.
ஒரு கதையில் ஜெயகாந்தன், எப்பொழுதுமே அசிங்கமான எண்ணங்களில் ஆழ்ந்திருக்கும் ஓர் இளைஞன் திடீரென்று நிர்வாணமாய் நிற்கும் ஒரு பிச்சைக்காரியைக் கண்டதும், தன்னுடைய ஆடையினால் அவளது நிர்வாணத்தை மறைத்ததை எழுதுகிறார்.
இது சாத்தியமே இல்லை. அழுக்கிலும் அசிங்கத்திலும் புரண்டு கொண்டிருக்கும் மனம், எப்படித் திடீர் மாற்றம் பெறுகிறது? அதனுடைய மனத்தின் அழுக்கினுள், ஒரு சிறந்த மனித இயல்பு மறைந்து கிடக்க வேண்டும். அதன் வளர்ச்சியை ஆசிரியர் காட்டவில்லை. அதன் வளர்ச்சியைக் காட்டாமல் திடீரென்று பிச்சைக்காரியின் நிர்வாணம் இளைஞனது மனத்தை மாற்றியதாகக் கூறுவது அழகியல், இயக்கவியல் விதிகளுக்குப் பொருத்தமாக இல்லை.
ஒரு மாபெரும் வீரச்செயல், திடீர் நிகழ்ச்சியாக இராது. சமூகக் கல்வியும் சமூக உறவுகளும் வளர்க்கின்றன. தடைகளை மீறி, குறிக்கோளை உறுதியாகக் கடைப்பிடித்து, இடர் களைப் பொருட்படுத்தாமல் முன்னேறுகிற சாதாரண மனிதன் தான் வீரன்.
லெனின் வீரத்தின் இரண்டு அம்சங்களைக் குறிப்பிடுகிறார். ஒன்று இயல்பூக்கமானது; இரண்டாவது தினசரி வாழ்க்கையில் வெளிப்படுவது. லெனின் 'தினசரி' என்ற சொல்லிற்கு மிகுந்த அழுத்தம் கொடுக்கிறார். தினசரித் தொழில்கள் அனைத்தும் வீரத்தன்மை வாய்ந்தவை என்பது லெனினது கருத்து அல்ல. புரட்சிக் காலத்திலும் புரட்சிக்குப் பின்னர் நிருமாண காலத்திலும் மக்களது தினசரி வேலையின் முக்கியத்துவத்தையே, 'தினசரித் தொழிலின் வீரம்' என்று குறிப்பிடுகிறார். கம்யூனிசம், மனித குலத்தின் உன்னதமான குறிக்கோள். அக்குறிக்கோளை நிறைவேற்ற மக்கள் புரியும் சாதாரணச் செயல்கள்கூட வீரத்தன்மை கொண்டவையாகும். இராமன் அணை கட்டியபோது, அணில் புரிந்த அற்பமான செயலும் பாராட்டுப் பெற்றது போல.
சமூக இயக்கத்தின் வெள்ளப் போக்கால் அடிக்கப்பட்டு அதன் வழியே செல்லும் தனிமனிதன் வீரனல்ல. இயல்பூக்கமான வீரத்தாலும் சமூக உணர்வாலும் புரட்சி பற்றிய அறி வாலும் சமூக உணர்வென்னும் வெள்ளத்தை வழிப்படுத்து பவனே வீரன். தன்னைப்பற்றிய உணர்வில்லாமல், குறிக் கோளில் உறுதியும், அதனை நிறைவேற்றும் தினசரிப் பணிகளில் ஈடுபாடும் கொண்டு, மக்களுக்காகத் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிப்பவனே வீரன்.
எக்காலத்திற்கும் பொருத்தமான இலட்சியம் எதுவுமே கிடையாது. இலட்சியங்கள் வளர்ச்சியடைந்து மாறுகின்றன. கார்க்கி, ஓர் இலட்சியம், மற்றோர் இலட்சியத்தால் மாற்றப் படுவது குறித்துப் பின்வருமாறு கூறுகிறார்:
வாழ்க்கை ஒரு குறிக்கோளால் வழிகாட்டப்பட்டு முழு மையை நோக்கி முன்னேறுகிறது. குறிக்கோள் நடப்பாக இல்லை. இனி வருங்காலத்தில் நடப்பாகக் கூடியது என்ற நம்பிக்கையில் ஒரு குறிக்கோள் நிலைத்திருக்கிறது. அதனை மனிதன் அடைய முடியும் என்ற நம்பிக்கை, மனிதனைக் குறிக்கோளை அடையும் முயற்சியில் ஊக்குவிக்கிறது.
யதார்த்தம் என்பதே மனிதக் குறிக்கோள்களின் புறவய மான வெளிப்பாடுதான். நிகழ்கால நடப்பு, குறிக்கோளைப் பின்பற்றி மனிதன் செயல்படுவதால் மாற்றப்படுகிறது. மாற்றப்பட்ட நடப்பு நிலையில் குறிக்கோள் நமக்குத் திருப்தியளிக்காவிடில். குறிக்கோளையும் நாம் மாற்றிக்கொள்கிறோம். நடப்பு, கற்பனையை மாற்றுகிறது. இவ்வாறு குறிக்கோள்கள் வளர்ந்து மாறுகின்றன.
மாறாத, என்றும் உள்ள குறிக்கோள்கள், எல்லாக் காலத் திற்கும், எல்லா வர்க்கங்களுக்குமாக இருப்பதில்லை.
எழுத்தாளன் தனது வாழ்க்கையனுபவத்தில் இருந்து வீரனது அம்சங்களைத் தேர்ந்தெடுத்து வீரப்படிமத்தைப் படைக்கிறான். அப்படிமத்தின் உயிரின் சாரமாகக் குறிக் கோள் ஒளிர்கிறது. கார்க்கி எழுதுகிறார்:
மனிதனுக்கு ஒரு வீரன் மீது ஈடுபாடு தேவை. ஒவ்வொரு யுகத்திலும் அக்காலத்தின் சிறந்த பண்புகள், காலத்திற்குத் தேவையான நலன்கள் இவற்றின் உருவகமாக வீரர்கள் தோன்றியுள்ளார்கள். நடப்பியல் மக்களிடம் ஓரளவு காணப்படும் பண்பு நலன்கள், வீரனிடம் மிகைப்பட்டுக் காணப்படும். நம் காலத்தில் இருந்து வருங்காலத்திற்குச் செல்லுகிற பாதையில் ஒளி பாய்ச்சும் குறிக்கோளை நடப்பியலாக்கும் முயற்சியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்களே வீரர்கள்.
-மார்க்சிய அழகியல்,
நா.வானமாமலை,
ஆகஸ்ட், 1999, மக்கள் பதிப்பகம்
Comments
Post a Comment