ஆல்யன் கவிதைகள்

 ஆல்யன் கவிதைகள் 


பரிணாம வளர்ச்சியின் முன்னோடிகள் 

பலரின் கோஷம் பைத்தியமாய்

எதைக்கேட்டாலும்


அது குழந்தை பாவம் 

கால் வலிக்கும்

தூங்க வேண்டும்

வெய்யில் வேற


இனி அர்ச்சனை தட்டில்

கண் மை

டையப்பர்

ஜான்சன் பேபி பேக்


நல்லவேளை

கண்ணனுக்கு கோவில் கட்டவில்லை

கோபியர் கூட்டம் சன்னதி கேட்டு

டாஸ்மாக் வரிசையாய் நீண்டு இருக்கும்


வீட்டின் மூலையில் 

புன்னகைச் சிரிப்புடன் 

நான்கு மாதங்களாய் தூசு படிந்த புத்தர்


என்றைக்கு கைகூடுமோ

வில்லனுக்கு முதிர்ச்சி

*******


செந்நிற நாயின் இரைப்பையில் 

வருடும் நீர்

தீரா காதலென எண்ணியது

மனதால் வடிந்த சிலையும்

பெரு உளி நகர்வில்

சிதைந்த சித்திரமும்

இருள் கடலின் தேக்கத்தில்

து(தூ)க்கமின்றி தன்துணையாய்

*******


அரைவேக்காட்டு அதீத நம்பிக்கையில்

சிலர்

கூர்மையான

அரிவாளை விட

வார்த்தை ஜலத்தில்

ஆன் "அது எப்படி சாத்தியம்"

செத்துப்போன சில்லரை 

சித்தார்ந்தம் அது

சிவப்பு சட்டைகாரன் பதிலுக்கு


பசித்த மனிதனின் நெஞ்சுக்கூட்டில்

கனவு காணும் இதயம்

இதயத்தின் வேட்டைக்கு

சகமனித அக்கறை

"எல்லோருக்கும் எல்லாம்"

*******


போகும் வழியே பிரியர்களின் 

புகழ் பெற்ற இடம்

குருவிகள் கூட்டை திரும்பும் நேரம்

கூட்ட நெரிசலில் பலரின் குமுறல்கள்


பயணிகளுக்கு வில்லன்களாக தெரியும் இவர்கள்

ஜோக்கர் கார்டுகளை தேடிகொண்டு இருப்பர் 


சாகச வீரர்கள் இரண்டாம் படியில்

சட்டிக்குள் இருக்கும் நண்டுகளாய்


படியின்மேல் நீங்காத இடம் ஒருவனுக்கு 


திரவியத்திடம் நட்பு கொண்ட அவனின் 

கனிவான உள்ளத்தைக் கண்டோர் 

விலகிப்  போவார்கள் 


பாலாற்றில் குவியும்

திரவியப் பாட்டில்களில் 

மீன்களும் சற்று களிப்புடன் இருக்க

கடைசி சொட்டுகள் பாட்டிலில்


இவற்றின் முடிவுகள் அறியாமல் 

ஈசல் கூட்டத்தில் சிறகிட்டு 

வீட்டை அடைவேன்

*******


பற்றிக்கொள்ளுங்கள்

ஏதோ ஒன்றை இலவசமாக

காதல்

காமம்

தோழமை

உயித்தவுடனே முலைகளைப் பற்றினேன்

இனி

கோப்பையின் கடைசி வரை

கோட்டைத் தாண்டி முடிந்த பின்பும் சிகரெட்டை 

கோப்பில் மறைந்து கிடக்கும் புகைப்படம்

குறுஞ்செய்தி

மறைந்த குரலோசை

முறியும் நினைவுகள்

*******

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு