இராகுலன் கவிதைகள்
இரா. இராகுலன் கவிதைகள்
இப்பொழுது இப்படித்தான் இருக்கும்
இந்தப் பகல் கடக்கட்டும் சிலமணி நேரம் தூங்கி எழலாம்
குளியலறையில் சுடுநீரில்
நீண்ட நேரம் குளித்துவரலாம்
கிளையில் காத்திருக்கும் பறவையின்
தவிப்பைக் கவனித்துக்கொண்டிருக்கலாம்
ஆடு கடித்துவிட்டுப்போன கொடிக்கு நீரூற்றலாம்
இந்த இரவு கடக்கட்டும்
குரைக்கும் நாயின் மொழியைக் கவனிக்கலாம்
பத்து மணிக்கு முன்னதாகவே தூங்கலாம்
அல்லது
விடியற்காலைவரை விழித்திருக்கலாம்
இரவும் பகலும் இன்னும் சிலநாட்களும்
இப்படியே கடந்துபோகட்டும்
எல்லாம் சரி ஆகிவிடும்
*******
ஓ நண்பா எங்கிருக்கிறாய்
போகும் வழியும்
எங்கு இறங்கி எந்தப் பேருந்தில்
தொடர்வண்டியில் ஏற வேண்டும்
ஒருவரிடம் எப்படிப் பேசுவது
கூர்ந்து கவனித்து எடையிடுவது
கேள்வி எழுப்புவது
பதிலளிப்பது
என் நன்மைக்குப் பொய் பேசுவது
முகத்திற்கு நேரே முகங்கடுப்பது
மிகத் தீர்க்கமாய் மறுக்க ஏற்கச் செய்வது
எதிரிலிருப்பவனின் நெஞ்சைப் பிளப்பது
தெரியவில்லை
மனிதர்களையும்
வாழ்க்கையையும் நினைத்து
நிறைய பயமாக இருக்கிறது
உடன் யாரும் இல்லாததாக உணர்கிறேன்
எனக்கு முன்பாக நின்று சண்டையிடு
நிறைய மறந்துவிடுகிறேன் உன்னையும்
நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டு்ம்
எதை விட்டுவிட்டு எதை எடுத்து வரவேண்டும் எங்குப் போக வேண்டும்
எங்கிருந்தாலும் வந்தென் முன் நடந்துசெல்
வழி தெரியாமல் திரிந்துகொண்டிருக்கிறேன்
நினைவுகள் இடையறுந்து
*******
என் மௌனம் கலைப்பவர்கள்
செவிடாகிக் கடவதாக
என்னைச் சந்தேகிப்பவர்களின் கண்களை
மரங்கொத்தி கொத்த கடவதாக
என்னை எடையிட்டுப் பார்ப்பவர்கள்
நோய்பட்டுக் கிடக்கக் கடவாதக
என்னை இடறிவிழ நினைப்பவர்கள்
முடக்குவாதம் பெறுவதாக
என்னைச் சொற்களால் துளையிடுபவர்கள்
ஞானமற்றுப் போவதாக
என்னை மறைவாக நின்று பார்ப்பவர்களின்
தலைமேல் மலைகள் சரிவதாகுக
என்னை அழவைப்பவர்களின்
இளமை குன்றுவதாக
இதற்குமேலும் நின்பாதைகள் மறந்து
நின்ற இடம் நின்று கிடந்து
எனக்காகக் காத்திருக்கக் கடவதாக
*******
யாரையோ குறிப்பிடுகிறேன்
என்னைத்தான்
எதையோ பேசுகிறேன்
இதைத்தான்
எங்கோ பார்க்கிறேன்
இங்குதான்
இல்லையென்கிறேன்
ஆமாம்
இப்படியில்லையென்கிறேன்
இப்படித்தான் என
வரிந்து கட்டிக்கொண்டு
நெருங்கிவிடுகிறீர்கள்
அல்லது
விலகிவிடுகிறீர்கள்
*******
Comments
Post a Comment