ஐந்தாவது முத்திரை - கி. தினேஷ்கண்ணன்
ஐந்தாவது முத்திரை
-கி. தினேஷ்கண்ணன்
“குற்றவுணர்வு மீட்சிக்கு அவசியம் ஆனால்
அவை
ஒருபோதும் மீட்சியோடு இணைந்ததல்ல”
- அல் குர் ஆன்
திரைப்படங்களைப் பற்றிய கட்டுரையில்
தன்னிலை ஊடாடுவதை மன்னிக்கவும் திரைப்படங்கள் என்பவை கதைகளை சுமக்கும் கலன்கள் அவ்வளவுதான்.
கதைகள் என்பது வாழ்க்கை நிறைந்தது, வாழ்க்கை என்பது தன்னிலை நோக்கியது, எனவே தன்னிலை
தவிர்க்கமுடியாததாகிறது. தன்னிலையின்
அறிதலே குற்றவுணர்வின் ஊற்றுக்கண். உணர்வுகள் செத்துப்போன ஒரு காலகட்டத்தின் வெளிப்பாட்டை
சினிமாவும் இலக்கியமும் வெளிப்படுத்தி நிற்பது அரிதினும் அரிதாகிப்போன விஷயமாகிவிட்டது.
அனைத்தும் அழிந்து, பொருட்கள் மட்டுமே மிஞ்சியுள்ள இந்த வெறுமையான உலகத்தில் உணர்வுகளைப்
பற்றிய தேடல் கொண்டிருக்கும் சொற்ப மனிதர்களுக்காக ஏற்பட்டிருக்கும் சுயமான சிந்தனைகளை
நடைகளாக பாவனை செய்யும் தனி வழிப் பாதையில் அலவலாவ வெளிப்பட்டு நிற்கும் எண்ணங்களையும்
உணர்வுகளையும் சொற்களின்
அர்த்த பேதங்களில் ஒளித்து வைத்துச் செல்கிறேன். உணர்வுகளே மனிதனை ஊடுருவக் கூடிய ஒரே
பொருண்மை. அதை கதைகளாக காட்சிகளாக வனைவது துணை செயல்களே. அனைவரும் பொருட்களாகிவிட்ட
போதும் உணர்வுகளின் எச்சங்களை இன்னும் சில படைப்புகள் அசைபோட்டபடி தான் இருக்கின்றது.
வெளிப்பாடடைவது மட்டுமே உணர்வுகள் அல்ல. உள்ளுக்குள் ஒரு பிரம்மாண்டமான ரசவாதத்தை கட்டி
எழுப்பும் உணர்வுகளுக்கு வெளிப்பாடு என்பது ஒரு வசதி மட்டுமே. அதன் உள்ளியக்கங்களை
எந்த படைப்புச் செயல்பாடுகளாலும் முழுதாய் உணர்த்தி நிற்க முடியாது. அனைத்தும் முயற்சிகள்
மட்டுமே. இந்த முயற்சிகளே இன்றைய தேவை. ஆனால் எது தேவை எது தேவையில்லை என்று கூறும்
அதிகாரம் நமக்கில்லாமலாகிவிட்டது. அதுவே இன்றைய நமது
ஊழின் மூல காரணம். மனித உணர்வுகளின் அந்திமக்காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
பூமியை வெறுமை சூழ்ந்த, வெறுமையை மாயை சூழ்ந்த காலம். மாயை நமக்குள் திணிக்கும் உணர்வுகளின்
வெற்றிடத்தை பொருட்களைக் கொண்டு நிரப்பி வைத்திருக்கும் பொதிகளாக மனிதர்கள் உலவிக்கொண்டிருக்கும்
காலம். பாக்கெட்டுகளுக்குள் அடைக்கப்பட்ட உணர்வுகள் இன்றைய மனிதனுக்கு போதுமானதாக உள்ளது.
உணர்வுகள் கதைகளின் எலும்புக்கூடுகளாக எஞ்சி நிற்கின்றது. அனைத்தும் சாரம் இழந்திருக்கின்றது.
இன்பம், துன்பம் எதற்கும் இனி அர்த்த வகைகள் இல்லை. நிர்வாணத்தை அவிழ்த்தெறிந்துவிட்டு
ஆடைகளை உடுத்தியாயிற்று. சிறைகளை வதிவிடமாய் அலங்கரித்தாயிற்று. உணர்ச்சிகளைப் பிழிந்தகற்றிவிட்டு
அதற்கான சொற்களை மட்டும் புத்தகங்களில் குறித்து வைத்தாயிற்று. போலித்தனத்தை தெய்வமாக
அறிவித்தாயிற்று.
உடல் உணர்ச்சிகள் அகவுணர்ச்சியை விருந்து கொள்கிறது. குற்ற உணர்ச்சியின்
மகத்துவம் இன்று வெறும் பேய்க்கதை. எது குற்றம் எது குற்றமில்லை என்று நாம் வகுத்து
வைக்கத் தொடங்கிய நாளிலிருந்து அதன் அழிவு தொடங்கிவிட்டது. குற்றவுணர்ச்சி என்பது இன்று
வெறும் சொல்லாடல், ஒரு நாள் வாசிப்பு, இரண்டு மணி நேர திரைப்படம், அவ்வளவே.
இந்த சாஸ்வதமான குற்ற உணர்விலேயே, மனிதம் என்ற ஒரு கூறு
உயிர்த்திருந்திருக்கின்றது. இனி மனிதர்களுக்கு குற்ற உணர்வு தேவைப்படப் போவதில்லை.
குற்றத்திலிருந்து மீள குற்றமற்றவர் என்ற கற்பிதமே
போதுமானது. உலகம் அதை நோக்கிப் பரிணமித்தாகிவிட்டது.
குற்றவுணர்வில் நான் தஞ்சமடைகிறேன்.
எனக்கான ஒரே ஆறுதல் அது
தான். குற்ற உணர்வே என் சன்னதி. உணர்வின்மையே என்னை
வதைக்கும் கீழ்மை. குற்றமின்மை போலி. வலி இல்லாத நோய். “இதுவரை மனிதனை
ஆட்டிப் படைத்த நோய்களில் படுமோசமானது குற்ற உணர்வே” என்று ஜெர்மானிய தத்துவ ஞானி பிரட்ரிக்
நீட்சே கூறுகிறான். அவன் சொல்வது உண்மையாக இருக்கலாம். ஆனால் அது மனிதனை மனிதனாக வைத்திருந்தது.
இன்றைய நிலையை அவன் அறியான். இன்று மனிதனை மனிதனாக வைப்பதற்கு ஒன்றும் இல்லாமல் ஆகிவிட்டது.
ஏனெனில் மனிதனை மனிதனாக வைக்க வேண்டிய தேவையே இல்லாமல் ஆகிவிட்டது.
தூக்கம்,
குற்ற உணர்வற்ற தூக்கம்
வெறிபிடித்த தூக்கம்
கீழ்மையை மறக்கச் செய்யும்
தூக்கம்
உயிர்க்கொல்லி நோயின்
ரணத்தை ஒத்த தூக்கம்
உணர்ச்சிகளை உறிஞ்சும்
சலனமற்ற தூக்கம்
மரணத்தின் விழிப்பு
நரகத்தின் பிரதி.
குற்றம்:
“குற்றம் புரிந்த கூட்டத்தை விட்டும்
நமது வேதனை நீக்கப்படாது”
–அல்குர்ஆன்
கொலை எளிது. இயந்திரத்தை
இயக்குவது போன்றது. அதன் இயக்கத்தில் எந்த உணர்வும் இருக்கப்போவதில்லை. அசைவுகளாலும்
நகர்வுகளாலும் இயங்கும் அதன் செயல்பாடே கொலைக்கான வரையரையும் கூட.
தெரிதலற்ற வேலை மற்றும் சட்டங்களின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட பதமே குற்றம். அது உணர்வோடு சேர வேண்டியதில்லை.
எல்லாம் இதிலிருந்துதான் தொடங்கியது. பணம் அன்னியமானது, அது எப்படி ஒருவரோடு இணைந்து
கொள்கிறது என்பது புரியவேயில்லை. எப்படி அது பைகளுக்குள் அமர்ந்து கொள்கிறது. காந்தி எந்த குற்றவுணர்வுமின்றி ரூபாய் தாளில் அசிங்கமாகச்
சிரிப்பார். அந்த பற்களிலிருந்து கோரமாக ரத்தம் வழிந்து கொண்டிருக்கும். அவனை எந்த உணர்வுமின்றி கொன்றேன். கொல்லும்போது
மனம் அமைதியாக இருந்தது. ஒரு நிறுவன வேலை நேரத்தில் கணினித் திரையை வெறித்திருப்பதுபோல்,
கடையில் காசு எண்ணுவதுபோல், கோயிலில் சாமி கும்பிடுவதுபோல் உணர்ந்தேன்.
குரல் உள்ளுக்கிழுத்தது.
நெஞ்சில் வெறுப்பு சுரந்தது.
அவளின் குதிங்கால்களை நக்கத்தோன்றியது.
யார் அவள்?
அவளென்று யாருமில்லை.
தோணலுக்கு அவள் தேவையில்லை.
சிரி,
அழுது சிரி.
மண்ணில் சம்மனமிட்டு அமர்.
ரத்தம் வேண்டாம்.
அதை அகற்று.
மேலெல்லாம் ரத்தம்.
அதைத் துடை.
ரத்தத்தை ரத்தத்தால் கழுவு.
எண்ணங்கள் குற்றமாகப்பட்டது.
அது என்னுடையதுதான்.
ஆனால் நான் உருவாக்கவில்லை.
மனது சொல்வதை கேட்காதே,
நான் சொல்வதைக் கேள்.
நான் என்பது மனதா? நானா?
முடிவுக்கு வராதே, அது முடிவு கிடையாது.
நீ சாகப்போகும் செல்
தணிந்து சிந்தி.
பசித்தவன் சோற்றைத் தட்டிவிடு.
அவன் குளிரில் சாகட்டும்.
கதவை இழுத்து அரை.
முழங்கால் உயரத்திற்கு தெருவோரத்தில் உட்கார்ந்து கிடக்கும் அவன் மீது
எச்சில் அளை.
நாயைப் போல் விரட்டு.
இழி,
பிறப்பின் இழி.
வாழ்க்கையின் கோணல்.
சன்னமான இரைச்சல்.
வலிகளை மலுப்பும் உஷ்ணம்.
உடலுக்குள் நெழியும் பூரான்.
தேவடியா முதலான எனது கெட்ட வார்த்தைகள்
அனைத்தும் அர்த்தமிழந்து நிற்கிறது. அதன் ஒலிக்குறிப்பில் மிஞ்சியுள்ள வசைதொனி தனது
அந்திமக்காலத்தில் இருப்பதாய் பட்டது.
சிவபெருமானையும் முட்கள் பதித்த சாட்டையால் அடித்திருக்க வேண்டும். இயேசுவிற்கு சூட்டியது
போல் அழகானதொரு முற்கிரீடத்தை அவனுக்கும் அவர்கள் சூட்டியிருக்க வேண்டும் என்று தோன்றியது.
பாவங்களை முதலில் அவன் தெளிவுபடுத்தட்டும். அனைத்தும் குழம்பிப்போய் உள்ளது. தூக்கத்தை
விழிப்பினோடும், விழிப்பை தூக்கத்தினோடும் குழப்பி விட்டான் அவன்.
சாவு விழிப்பு,
வாழ்வு தூக்கம்.
புணர்ச்சி தூக்கம்,
பசி விழிப்பு.
தனியான அனைத்தையும் வாழ்வு உண்ணட்டும்,
விக்கித்து சாவைப் பருகட்டும்.
கண்களை பிடுங்கி எறியட்டும்.
தவறு,
இதுவைனைத்தும் உண்மைகளின் தவறு.
அந்தத் தேவடியாள்,
வெறுப்பை வாழ்வாகவும்
அன்பை சாவாகவும்
மாற்றி வைத்துவிட்டாள்.
அவளை முத்தமிடுவதாக.
என் சித்தத்தின்
குறுகிய பாதையொன்றில்
அவள் காத்திருக்கிறாள்.
என்னை விடுங்கள்,
அவள் மடி
என்னை நிர்வாணமாக்கும்.
பைத்தியம் பிடித்த என் தலைக்கு
அவளே தாய்.
அவள் ஒழிக.
என் சித்தத்துக்குள்
அவளின் முனகல் சத்தம்
எதிரொலித்தபடி இருக்கிறது.
எனது ஓரே தேவையான அவள்
எனக்குத் தேவையில்லை.
நான் அழிந்துபடுகிறேன்.
அவள் சூனியம்.
எனது அவள்
சூனியம்.
நான் வெறும்
அவளது நான்.
மனிதத்தின் கருவை அவர்கள்
சிதைப்பதை வெறுமனே அவள் வேடிக்கை பார்க்கிறாள். அவர்கள் உருக்குலைத்த கருவில் இருந்து
அவர்களின் கைகளில் பச்சை ரத்தம் வலிந்திறங்குகிறது. அவர்கள் அதை புசிக்கிறார்கள். உணர்ச்சிகளை உரிஞ்சும் தாகம் எழுகிறது.
மனிதனின் கடைசி உணர்ச்சி வரை, கடைசி மனிதனின் கடைசி உணர்ச்சி வரை அவர்கள் உறிஞ்சித்
தீர்க்கிறார்கள். மிச்சமிருப்பது ஜடம். பொருட்களை பயன்படுத்தும் ஜடம். ஒம்மாள என்பது
ஜடம். பிறந்தநாள் வாழ்துக்கள் ஜடம். நல்லா இருக்கீங்களா ஜடம். ஐ லவ் யூ ஜடம்.
ஆன்மாவை அறுக்கும்
தொழிற்சாலையில் உணர்வுகளை உருக்கும் கொதிநிலையில்
அனைத்தும் உருக்குலைகிறது. குற்றவுணர்வு அனைவருக்குள்ளும் அரித்துக்கொண்டிருக்கிறது. இதை
துடைத்தெறிய ஓரே வழி அதைக் குற்றம் என்று நம்புவதை நிறுத்துவதே. இன்னும் வேண்டுமானால்
அதை வேலை எனவும் புனிதமானது எனவும் வைத்துக்கொள்ளலாம்.
யார் அந்த கவிஞன்? நம்மை கடுகுள்ளம்
படைத்த சிறு வீணரென்று அழைக்க. இன்னொருவனிருக்கிறான், விஷமி!
நாம் உண்டுறங்கி இடர் செய்து செத்திடும் வேடிக்கை மனிதர்களாம்!
அவன் செத்தான். வறுமை பிடுங்கித் தின்னச் செத்தான். நிலைகெட்ட மானிடப்
பூச்சிகளாம் நாம். கயவன்!
யார் அவனுக்கு நம்மை வசைபாட உரிமை கொடுத்தது?
நிலை என்றால் என்னவென்று தெரியுமா அவனுக்கு?
நல்லவேலை இவனைப் போன்றோர் செத்துத் தொலையவே நமது எஜமானர்கள் வறுமையை உருவாக்கி
வைத்திருக்கிறார்கள். மனசாட்சிக்கு இவன் விளக்கம்
எழுதுகிறான். நம்மை எந்த குத்தலும் இல்லாமல் வைத்துக்கொள்ள
நாம் ஏற்படுத்திக் கொண்டதே மனசாட்சி.
ஒழுங்காக நம்மைப்போல் வாழப் பழகி இருந்தால் இப்படி செத்திருப்பானா?
அவன் செத்திருக்கக்கூடாது. என்னை புலம்பவைத்துவிட்டான்.
இன்றுவரை துரத்துகிறான். மேன்மை
பொருந்திய எஜமானர்கள் அவனை கொன்றிருக்கக் கூடாது. ஆனால் வேறு வழியில்லை. அவனைப் போன்றோரைக்
கொன்று தான் ஆக வேண்டும். இல்லையெனில் அனைத்தையும் கலைத்துவிடுவார்கள். மனிதர்களுக்குள் மட்டுப்பட்டிருக்கும் உண்மையைக் கிளரிவிடுவார்கள். அவர்களை தூக்கிலேற்றுவதே முதல்
வேலை. குற்றவுணர்வின்மை விலை மதிப்பானது. விற்கப்படும்
பெருமதி வாய்ந்த பண்டம். நீங்கள் அதை வாங்கி விட்டீர்களானால் நீங்கள் உலகில் நடக்கும் அனைத்து குற்றங்களிலிருந்தும்
விடுவிக்கப்படுவீர்கள். உங்கள் ஆட்சியாளர்களை ஆகர்சிப்பீர்கள். சக மனிதன் என்ற பதத்தை,
அப்படியொரு பொருண்மை இருப்பதை மறந்து நிம்மதியாக எந்தக் குத்தலும் இல்லாமல் அடிமை செய்யலாம். நீங்கள் அடிமை என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ளத்
தேவையில்லை. உங்கள் அடிமைத்தனத்திற்கு சுதந்திரம் என்று பெயர் சூட்டிக் கொள்ளுங்கள்,
கச்சிதமாக இருக்கும். உங்களின் சக மனிதன் வாழ்ந்தழிவதை, அதாவது சக அடிமை துடித்திறப்பதை
நீங்கள் அறிந்திருக்க வேண்டிய தேவையில்லை. ஏனெனில் உங்களுக்கு சக மனிதன் என்பதோ, உங்களுக்கு
எஜமானர்கள் இருப்பது பற்றியோ தெரிந்திருக்காது. நிம்மதியாக தூங்குங்கள். இது உங்களின்
சிஃப்ட் அல்ல, அடுத்த சிஃப்ட்டாகவோ, இல்லை அதற்கடுத்த சிஃப்ட்டாகவோ இருக்கும். எதற்கும் உங்கள் எஜமானரின் அறிவிக்கையைப் பார்த்து
அலாரம் வைத்துக்கொள்ளுங்கள்.
என்ன சேர்த்து வைக்கிறீர்களா?
பங்குச் சந்தையில் முதலீடு செய்யுங்கள். இஸ்ரேல் போரில் இறங்கி உள்ளதாம். இன்றைய பங்குச்சந்தை
நிலவரத்தை கவனித்தீர்களா? காஸாவில் 30,000 பேர் இறந்துள்ளனராம். அதில் 10,000 குழந்தைகளாம்.
மன்னிக்கவும் தரவு மாறிவிட்டது, பெரும்பணக்காரரின் பங்குகள் 20 மடங்கு உயர்ந்துள்ளதாம்.
பெரும்பணக்காரரின் போட்டிப் பணக்காரரின் நிறுவன பங்குகள் உயர்ந்து இன்று மழலையர் பள்ளி
மீது குண்டுவீசியதில் குழந்தைகள் தாய்மார்கள் இருநூறு பேர் பரிதாபமாக இறந்துள்ளனராம்.
மன்னிக்கவும், இன்று பங்குச்சந்தை சென்சக்ஸ் புள்ளிகள் ஏற்றத்துடன் முடிந்துள்ளது.
பரிதாபமாக என்பது ஒரு கோர்வைக்காக பயன்படுத்தப்படுவது என்பதை முதலில் தெளிவுபடுத்திவிடுகிறேன்.
நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் எஜமானர், குழந்தைகளின் எலும்பு சவ்வைக் கடித்து இழுப்பதில் மும்முரமாக உள்ளார். இன்னும்
வளராத பிஞ்சு எலும்புகள் என்பதால் மாவாக இருப்பதாக அரசியல் தலைவர்கள் அபிப்ராயம் கூறியுள்ளனராம். நீங்கள் உங்களுக்கு கட்டளையிடப்பட்டதை செய்துகொண்டிருந்தால்
எந்த பிரச்சனையும் இருக்காது. என்ன பசிக்கிறதா? ஆன்லைன்
டெலிவரியில் அறுபது சதவீதம் ஆப்பர் போட்டிருக்கிறார்கள் பாருங்கள். மீண்டும் சலிப்பாக
இருக்கிறதா? பெரிய கதாநாயகனின் படம் வெளியாகியிருக்கிறது. அதில் அவர் புரட்சி செய்து மக்களை காப்பாற்றுகிறார். இரண்டரை மணி
நேரத்திற்கு ஓடுகிறதாம். பார்த்துவிட்டு வந்தால் அடுத்த படம் வரும்வரை தாங்கும் என்று
சக அடிமைகள் சமூக வலைதளங்களில் பேசிக்கொள்கிறார்கள். புத்தகம் படிக்க வேண்டுமா? சுய முன்னேற்றப் புத்தகங்கள் கழிவு விலையில் கிடைக்கிறது பாருங்கள்.
உலக நடப்புகளை தெரிந்துகொள்ள வேண்டுமா? அது எதற்கு? சரி விரும்புகிறீர்கள், இந்த ஊடங்கங்களில்
சுவாரஸ்யமான செய்திகள் வரும். என்ன உண்மையாக இருக்கிறதா
என்றா கேட்கிறீர்கள்? எதோ வேலை செய்ததுபோக மீதமுள்ள
சொற்ப நேரத்திற்கு சுவாரஸ்யம் போதும் உங்களுக்கு. உங்கள்
எஜமானன் உங்களுக்கு வழங்கும் ரொட்டித் துண்டில் அவனது கைகளில் ஒட்டியிருந்த குழந்தைகளின்
ரத்தம் பதிந்துள்ளது பாருங்கள். அந்தப் பாகத்தை மட்டும் பிய்த்து நீக்கிவிட்டு உண்ணுங்கள்.
மற்றபடி ரொட்டியின் சுவையிலும் தரத்திலும் குறையொன்றும் சொல்ல முடியாது. பக்கத்து அறையில்
பலாத்காரம் செய்யப்படும், மன்னிக்கவும் வன்புணர்வு செய்யப்படும் பெண்ணின் அழுகுரல்
கேட்கிறதா? இதற்குத்தான் சற்று விலை அதிகமுள்ள ஹெட்செட் வாங்க வேண்டும் என்று
சொல்வது. அது வெளியிலிருந்து எந்த சத்தமும் கேட்காதபடி பார்த்துக்கொள்ளும். கோயிலுக்குச் செல்லுங்கள்.
மனம் அமைதியடையும். உலகின் அனைத்து அநியாயங்களையும்
மறந்து நீங்கள் தெய்வீக நிலையை உணரலாம். அங்கு உள்ளவன் அனைத்தையும் இயக்குவதாக கூறப்படுகிறார்கள்.
எனவே சக மனிதர்களின் அனைத்து இழிநிலைக்கும் துன்பத்திற்கும் காரணமான அவனே எந்த குற்றவுணர்வுமின்றி இருக்கும்போது
நாம் எம்மாத்திரம் என்று தோன்றும். அவ்வாறு தோன்றச் செய்யவே அவனை அங்கே வைத்திருக்கிறார்கள்.
குற்றத்தைத் தொழு:
“குற்றம் மெதுமெதுவாக உண்ணத்துவங்கும்”
உணர்வு ஆபத்தான மனிதம்
உணர்ச்சியை வெட்டி எறி
சதையோடு சேர்த்து கிழித்து எறி
உணர்ச்சிகள், என் பாவ ரத்தத்தில் நனையட்டும்
மூழ்கியழியட்டும்.
திசைகளைக் குழை
உடலைப் புசி
உணர்வுகளைப் புசி
தீங்கைப் புசி
உன்னை உண்
உள்ளிழு
உனக்குள் மூடு
வடுக்களை சுவர்களில் மாட்டி வை
புண்களின் சீலை அரு
நெருக்கத்திற்கு விலை வை
நாட்கள் வீண்
நேரங்கள் விற்றுத் தீர்ந்தது
எனக்கு நான் கிடையாது
தவிப்பு,
ஆன்மாவின் பரிதவிப்பு.
பிரக்ஞை கருகி இறக்கிறது.
தூண்டில் முள், என் தலைக்குள் ஆழமாக ஊடுருவியுள்ளது.
அது மேலிழுக்க, வலி காதுகளுக்களுள் ஒலிக்கிறது.
ஆன்மா மரத்துவிட்டது.
தூக்கம்
குற்றவுணர்வற்ற தூக்கம்
வெறிபிடித்த தூக்கம்
கீழ்மையை மறக்கச் செய்யும் தூக்கம்
உயிர்க்கொல்லி நோயின்
ரணத்தை ஒத்த தூக்கம்
பிரக்ஞையை உறிஞ்சும்
சலனமற்ற தூக்கம்
மரணத்தின் விளிம்பு
நரகத்தின் பிரதி.
உயிர்க்கூட்டில் உலர்ந்து முடிந்த
மனசாட்சியின் புகை உரு.
தீங்கின் மடி.
அரவணைக்கும் விடம்.
குற்றவுணர்வு:
“அவர் ஐந்தாம் முத்திரையை
உடைத்தபோது,
தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும்
கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின் கீழே கண்டேன்” - வெளிப்படுத்தின
விசேஷம்
குற்றவுணர்வு சாசுவதமான சிறை
அறிவில் விழுந்த மழு
துடிப்பின் ஆலயம்
சரணாகதியின் முதல் வெளிச்சம்
ஆகிருதியின் திரை
ஆறுதலான சுமை
உணர்வின் சுனையில், மூழ்கிய ஆழம்
திண்ணப்படுதலின் இறைச்சியின்பம்
தன்னுணர்வே சதையைக் கிழித்து ஊடுருவும் தூண்டில்
மீட்சி நரகம்
மீட்சி கடவுள்
கடவுளே நரகம்
கடவுள் உலகம்
உலகமே நரகம்
உலகம் நான்
நானே நரகம்
உள்நினைவில் சுரக்கும் குற்றவுணர்வு,
நினைவுருக்களை ஆண்டு நடக்கிறது.
ஆன்மாவில் ஊரும் இந்த உணர்வின் பிசுபிசுப்பை
உயிர்ப்பொருளில் இறைக்கிறது.
வெறுப்பின் கூர்மையும், அன்பின் மலுவும்
உலகைப் பீடித்த கடவுள்.
பருப்பொருளின் ஆதி உண்மையில்
குற்றமென்று எதுவும் கிடையாது.
ஆதி உண்மை என்று
எதுவும் கிடையாது.
என் தண்டுவடத்தைக் கூனாக்கிய இந்த குற்றவுணர்வை
அனுபூதி என எண்ணிக் கொள்கிறேன்.
குற்றவுணர்வென்பது புனிதமானது,
ஆன்மீகமானது. அம்மணமானது.
குற்றவுணர்வின்மை என்பதே நம்மீது ஏற்றப்பட்ட சாபம். குற்றவுணர்வில்லாதவனுக்கு
எந்த உணர்வையும் துய்பதற்கான தகுதி இல்லை. எல்லாம் சரியாக நடக்கிறது என்பது ஒப்பனை.
அசிங்கத்தின் ஒப்பனை. அருவருப்பினை மட்டுப்படுத்துவதற்காக
நம்முன்னே நிறுத்தப்பட்ட அலங்காரம். அந்த அலங்காரத்தையும் அருவருக்கச் செய்யும் காத்திரமான மெய்மையே குற்ற உணர்வு. தீங்கை அருவரு.
அதை அருவருக்காமல் கடந்துசெல்வதே உலகின் அனைத்து தீங்குக்கும் காரணம். குற்றவுணர்வு,
எனது ஆன்மாவை இரண்டாக முறித்துப்போடட்டும். எனது
பக்கவாட்டுக் கண்களிலிருந்து குற்றவுணர்வின் கூசச் செய்யும் ஒளி, தெறிக்கின்றது. அமைதியை
நான் ஏற்றுக்கொள்வதாய் இல்லை. அது அமைதியே அல்ல. அது
மாயை, பொய் வெளி, அமைதியின் உருவப் பிரதி மட்டுமே. இப்போது நம்மிடையே புலங்கிவரும் இந்த அமைதி. ஆதி அமைதியை நாம் குழிதோண்டிப் புதைத்தாயிற்று. வேண்டுமானால் அந்த
ஆதியமைதியின் எச்சங்களாகிய மரங்களை கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். மீதமுள்ள சொற்ப இயற்கையை,
முட்டாள்தனத்தைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். முட்டாள்தனமே
கொண்டாடப்பட வேண்டிய கூறு. புத்தி, அறிவு எல்லாம் மயக்கம். புத்திசாலிகளாளோ அறிவாளிகளாளோ எந்தப் பிரயோஜனமும் இல்லை. நாம் அனைவரும் முட்டாளின் வழித்தோன்றல்கள்.அவனை வணங்குவோமாக. அவன்
உடலை விருந்துன்போமாக. அதிலிருந்தே நாம் நமது
முட்டாள்தனத்தை மீளப்பெற முடியும். குற்றங்கள் நாய்மகன்கள்.
வேசியான நமது தாயிடம் வரும் கோரமான சிரிப்பையுடைய பணம் படைத்த
கிழவன்கள். அவர்கள் தருவதிலேயே வயிறு வாழ்கிறது.
மனிதன் வாழ்கிறான். தனது தாயை வன்புணர்வு செய்கிறான் ஒரு ராணுவ வீரன். அது அவனது தாய்
என்று தெரியாதவரை அவனுக்கு எந்த குற்றவுணர்வும் இருக்கப்போவதில்லை. அவனது குழந்தைகளை அவனது தாய் ஈனுகிறாள். இயற்கையின் அசட்டுத்தனம்.
தனது மகளை ஒரு தகப்பன் கூடுகிறான். அவள் தனது மகள் என்ற
தெரிதலின் குற்றுணர்வோடு அவனது வாழ்நாளை கூன் விழுந்த தனது ஆன்மாவின் முதுகில் சுமந்தபடி
கடக்க முற்படுகிறான். இன்பம் ஒரு அழகான தேவடியாள்.
சுயத்தை மறுப்பது கோழைத்தனம்.
எண்ணங்கள் தரிசிக்கப்பட வேண்டியவை
சுயத்திலிருந்து
பிறப்பவை எண்ணங்கள்.
தனிகளின்
மனவோடையில் பிரவாகமாகும்
உணர்வுகளின்
சலனங்களில் பிறப்பவை.
அவை
வரம்
அவை
சாபம்
அவை
புன்னகை
அவை
அழுகை
அவை
கலவி
அவை
சித்திரவதை
அவை
வியர்வையைப் போன்று நெருக்கமாவை.
ஆன்மாவை
வேகவைக்கும் உஷ்ணம்.
பிரக்ஞையின்
கொதிநிலை.
அனைத்தையும்
எரித்துத்தீர்கும்
பெருங்
கோபத்தை உள்ளடக்கியவை.
எண்ணங்கள்
சயனைட்.
நமக்குள்
சுரக்கும்
விஷம்.
இறந்துதிரியும்
சுயத்திற்கு
உயிரூட்டும்
விஷம்.
ஜீவகாயங்களில்
தடவும் மருந்து.
மூலிகையை
ஒத்த துய்ப்பு.
அடைந்துகிடக்கும்
உயிர்ப்பில்
மங்கிக்கொண்டிருக்கும்
இறுதிப் பொறியை
அணையாது வைத்திருக்கும் தகிப்பு.
ஒப்புக் கொள்ளுதல் - மீட்சி
“நான்கு வீதிகளும் சந்திக்கும்
அந்த நாற்சந்தியில், சதுக்கத்தின் மத்தியிலே சென்று நின்று, மனிதர்களுக்கு முன்னால்
மண்டியிட்டு மண்ணைக் களங்கபப்டுத்திவிட்ட நான், அதை முத்தமிடுகிறேன். இந்த உலகம் முழுக்கக்
கேட்கும் வண்ணம் ‘நான் ஒரு கொலைகாரன்! நான் ஒரு கொலைகாரன்! “என்று உரத்து அழுகிறேன்”
- குற்றமும் தண்டனையும்
யாரிடம் குற்றத்தை ஒப்புக் கொள்வது?
மனிதர்கள் ஏற்படுத்திய சட்டங்களிடமா?
கடவுளிடமா?
குற்றத்திற்கு தூண்டியது யார்?
குற்றவுணர்வு துரத்துகிறது
தூக்கத்தைக் கவ்வுகிறது.
இதற்கு இருக்கும் ஓரே வழி
ஒப்புக் கொள்ளுதல்.
குற்றத்திற்கு காரணமானவர்களிடமே
ஒப்புக் கொள்ளுதல்.
குற்றுணர்வு நொய்மை.
நான் அடக்கி வைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.
பாவங்களின் இரத்தச் சிவப்பு
ஒருபோதும் பனிபோல் வெண்மயமாவதில்லை. பாவங்கள் சுத்தப்படுவதில்லை.
உடைந்த நொறுங்கிய
நெஞ்சமும் தனது பழுதுகளோடே இயங்கியாக வேண்டும். குற்றவுணர்வு
மீட்சிக்கு அவசியம் ஆனால் அது ஒருபோதும் மீட்சியோடு இணைந்ததல்ல. அனைவருக்கும் வேண்டியது ஒரு சாதாரணமான மிகவும் எளிய வெளிப்படையான
வாழ்க்கை. அதை தடுப்பது எது? இந்த பூமியின் உயிரை உறிஞ்சிக் குடிப்பது எது?
மனிதர்களின் தலைக்குள் புகுந்த வெறி எது? எதனால் நாம் கட்டப்பட்டுள்ளோம்? நான் என் கண்களை இறுக மூடிக் கொள்கிறேன். எனக்காக ஏற்படுத்தப்பட்ட சைத்தான் எனது உயிரினோடு நட்பு பாராட்டுகிறான்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல; வாழ்வும் எதற்கும் தீர்வல்ல;
எதுவும் எதற்கும் தீர்வாக முடியாது. தீர்வு என்பது மாயை, ஆற்றுப்படுத்தும்
மாயை. மாயையை வணங்குகிறேன் அது கடவுளைப் போல் நம்மைக் கை விடுவதில்லை.
செய்வது சரி என்ற மாயை, செய்வது தவறு என்ற மாயை, செய்தாக வேண்டும் என்ற
மாயை, செயலைத் தவிர அனைத்தும் மாயை. அது எனது செயலல்ல, மாயையின் செயல்.
“அந்த ஷைத்தான்கள் அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விடுகின்றான்.
ஆனால், தாங்கள் நேரான பாதையில் செலுத்தப்படுவதாகவே அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள்”
–அல்குர்ஆன்
நான் குருடனாக எழுந்து கொள்ள
விரும்புகிறேன். இந்த மனிதர்களைப் போல் எனது உணர்வுகளும் குருடாக இருந்தால் சற்று மூச்சு
விட்டுக் கொள்ள முடியும்.குற்றவுணர்வனை அவன் கூர்மையாக்குவானாக.
தனது உபதேசங்களையும் வசனங்களையும் போதனைகளையும் அவனே மறந்ததால்
தான் இத்தனை இழிநிலை உலகை சூழ இறுக்குகிறது. மாறாக அவனை தன்னை மன்னிக்கும் பணியாளாக
இந்த மனிதர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். தங்களின் குற்றவுணர்வுகளை துடைத்துவிடும் தாதியாக
பாவிக்கின்றனர். அவன் உண்மையானவன் என்றால் இவர்களை என்ன செய்யப் போகிறான்? இவர்கள்
மறந்துகொண்டிருக்கும் தங்களின் கொலைகளுக்கு பதிலளிப்பவனாய்,
பொறுப்புடையவனாய் அவன் இருப்பானா? அல்லது இவர்களின் மூலம் இன்னும் பூமியில் அழுகையை
விதைத்தபடி இருப்பானா? அவன் எதுவாகவும் இருக்க போவதில்லை.
ஏனெனில் அவன் இல்லவே இல்லை.
ஆன்மாவில் கவியும் சோகம்
தீயுணர்வின் ரேகைகள்
என் மௌனத்தில் பதிந்திருக்கிறது.
என் பிதற்றல்களின் உயிர் உரு
சுனக்கங்களில் கருவாகிறது.
அனைத்தையும் உட்கொள்ளும்
தீ
கன்னங்களிலின்
தமதமப்பு.
மஜ்ஜையில் ஒட்டியுள்ள ஒரு துளி உயிர்
ஏற்படுத்தும் கதகதப்பு.
என் குற்றவுணர்வின்
ஒரு இழை
ஒரு சரடின்
கன்றிய வலி
ஏற்படுத்தும் குத்தல்.
சிறை,
எனக்குள் எனைப் பூட்டும் சிறை
நானே எனது சிறை
நானே எனது விடுதலை
உயிர் மலத்தின்
கொச்சை ஈஈஈஈஈஈஈஈ
வெறும் ஈஈஈஈஈஈஈ.
தெய்வத்தின் மலம்.
ஒரு பக்கம் உடைந்த சிறகு.
நீண்ட வலியில்
நிகழும் காத்திருப்பு.
ஆன்மாவின் குட்டையில்
தேங்கும் வலி.
சுய ரணம்.
ஆன்மாவை சுக்குநூராக்கும்
லஜ்யை.
குற்ற நரகம்.
உணர்வைக் கவ்வி உரிஞ்சும் இழி.
உணர்ச்சிகள் மரத்துப் போகும் மயக்கம்.
ஆன்மாவின் மதமதப்பு.
உணர்வுகள் ஊசியாகிக் குத்தும் விழிப்பு.
உணர்வுகளின் மேல் படரும் தூக்கம்
உணர்வுகளின் மரணம்
எண்ணங்களின் ரோதனை
செயல்களின் மேல் ஊரும் சலிப்பு
மொளனத்தை உருக்கும்
புற்றடைக்கும் சிந்தனைகள்
குற்றுணர்வின் குத்தல்
சாதலில் உள்ள உயிர்பு
வாழ்வில் இல்லை.
சாதல் உயிரோட்டம் நிறைந்தது
சாவை வாழ்ந்து பார்க்க மனம் இச்சிக்கிறது.
எனது உயிர் கோணலானது.
என்னைக் கொள்ள
கோணலான கத்தியொன்றை எடுத்து வா
இதிலென்ன இருக்கிறது
உன்னை நான் கொன்றாலென்ன
என்னை நீ கொன்றாலென்ன
எல்லாம்
கலங்கிய சித்தத்தின் அலங்கல்
பூதம்
அனைத்தும் பூதம்
ஓக்க.
குற்றவுணர்வை மையக்கருவாகக்
கொண்ட சில திரைப்படங்கள்:
*Waltz with Bashir (2008) -Israel
*The Fifth seal (1976)
-Hungary
*In Bruges(2008) -England
*Takva A man's fear of God (2006) -Turkish
*About Elly (2009) -
Comments
Post a Comment