நேசி! -இளவெயினி

 நேசி!

                                             -இளவெயினி


இன்னும் எத்தனை நாட்களுக்கு 

இத்தனிமை நெடுந்தீயில்

என்னை வாட்டித் தோலுரிக்க 

முடிவேற்றிருக்கிறாய்?


உன் நினைவு உண்ணிகளை 

எத்தனை முறைதான்

குத்திக் கொல்வது?

ஒன்றழிக்க ஒன்றுக்கிரண்டாய்

பெருகி பெருகி

பிணம் மொய்க்கும் புழுக்களென

என் மூளையைத் தின்னுகின்றன

ஈதென்ன தின்பண்டமா?


உடலின் ஒவ்வோர் திசுவும்

உன் பேர் சொல்லி செபம் செய்ய

சில்லுசில்லாய் உடைந்து நொறுங்கி

அழுது அழிந்து செத்துப் போக

அடியேளுக்குச் சம்மதமே!


எனினும் நீ; நினைவு கொள்!

"உனக்காகத் தான்

உயிர் வைத்திருக்கிறேன்" என்றெனக்கு

போலியாய் வேடம் கட்டி

மேலுக்குக் குழைய வராது…

இப்பேரண்டத்தின்

பேரன்புச் சாரம் நான்!

பிரபஞ்சம் சிருஷ்டித்த

ஆதிப்பரம்பொருள் நான்!

உன் நினைவுகளை மட்டுமே

தின்று தின்று பெருத்த

விசுவரூபக் காட்சியின் திருவுரு நான்!


அதிதூய்மையாக உன்னை

அன்பு செய்தவர் பட்டியலை

நீ எழுதத் துணிந்தால் 

உன்னைச் சிந்தனையில் 

சேகரம் செய்திருக்கும் 

என்னைத் தான் எழுதும்

உன் பேனா!


வேறேதும் பெரிதாய் வேண்டாம்

என் துணையே!

என்னை நேசி; போதும்.



Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு