அந்த இரண்டு குவளைகள்

 அந்த இரண்டு குவளைகள்

-திரமிளன்

 ஒன்று  சீதாவிற்குரிய குவளை

ஒன்று பத்மாவிற்குரிய குவளை

ஒரு குவளையில் பழந்தமிழ்

ஒரு குவளையில் சங்கத்தமிழ்

ஒரு குவளை ராமசாமியின் 

சாரலில் தொடர்ந்தது

ஒரு குவளை முத்துச்சாமி 

சாரலில் வளர்ந்தது

என்ன தான் இரண்டு குவளைகளும் 

ஒரு காலத்தில் உருவாகியிருந்தாலும்

ஒரு குவளையைப் பேசும் அளவிற்கு 

மற்றொரு குவளை பேசப்படவில்லை

யாருக்குத் தெரியும் 

இரு குவளை இரட்டைக் குவளை ஆகும் என்று

 இந்த இரண்டு குவளைகளிலும் இருந்த பானம் 

தமிழ்த்தேன்

இரண்டு குவளைகளிலும் 

பருக வேண்டும் என்று தீரா ஆசை உதித்தது

இரண்டு குவளைகளிலும் இருந்து 

ஒரு துளி தேன் எடுப்பது 

பாற்கடலில் அமிழ்தத்தை எடுப்பதைக் காட்டிலும் 

கடினமான ஒன்று

இரண்டு குவளைகளிலும்

யாரெல்லாம் அருந்தினார்கள் என்று பார்த்தால்

ஒன்றில் தமிழ் நேசன் 

கவிச்சக்கரவர்த்தி

ஒன்றில் மாணவ நேசன் 

ரோமாபுரிப் பாண்டியன்

ஒன்றில் நவசக்தி

மற்றொன்றில் பராசக்தி

இவ்வாறு பட்டியல் நீளும்

சம காலத்தில் உருவாகியிருக்கும் 

இரண்டு குவளைகளில் 

ஒன்று மட்டும் பேசிக்கொண்டிருப்பதற்கு காரணம் 

அது அரசியல் களத்திலும் 

இலக்கிய உலகிலும் 

பயன்படுத்திய குவளை

ஒன்று  இலக்கிய களத்தில் மட்டுமே 

அதிகம் பயன்படுத்திய குவளை -அதுசரி

கலப்படம் இல்லாமல் இருக்கும் 

பொருளை விரும்பாத கடைகள் தானே

 இன்றைய சமுதாயம்

இரண்டு குவளைகளிலுமிருந்து 

சிதறிய செதில்கள் 

தனது குவளைக்காகவே வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்கள்

ஒரு குவளையில் சிதறிய செதில்

சக்கரம் போல சுழன்றாவது 

தனது குவளையின் முழு தேனையும் கண்டு 

அதனை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக

மற்றொரு செதில் 

கடலின் நீலம் ஆலைக்கழிவுகளினால் கருமையாகிவிட்டது 

அதனை சரி செய்வதற்காக 

பேனாவின் மை நேராக கடலில் கலந்து விட 

எழுத உபயோகமற்ற பேனாவாக

 கடலின் நடுவே நிற்க போகின்றதாம்

இந்த இரண்டு குவளைகளும் 

சமகால குவளைகள் என்பதாலோ என்னவோ 

வேகத்திற்கும் விவேகத்திற்கும்

சற்றும் சளைத்ததில்லை

இவர்களை செதுக்கிய தமிழ்த்தாய் நன்றாக செதுக்கியுள்ளார்

இந்த இரண்டு குவளைகளும்

குழந்தைகள் பிடித்து அருந்துவதற்கு 

ஏற்றார் போல் இருக்கும்

இந்த இரண்டு குவளைகளும்

 நூற்றாண்டு கடந்தும் பேசப்படக்கூடிய 

அற்புதக் குவளைகள்

இந்தக் குவளைகளில் பருகுகிறவர்கள் மட்டும்

ஏனோ ஒன்றை விலைமதிப்புள்ள பொருளாகவும் 

பிறிதொன்றை விலைமதிப்பற்ற பெட்டகமாகவும்

பார்க்கிறார்கள் 

அது முற்றிலும் தவறு

இந்த இரண்டு குவளைகளிலும் 

எவன் சம அளவு பருகிறானோ 

அவனே இந்நூற்றாண்டின் அதிர்ஷ்டமானவன்


Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு