அதிகாரம் - ஒரு சமூகவியல் நோக்கு -கி. தினேஷ் கண்ணன்

  அதிகாரம் - ஒரு சமூகவியல் நோக்கு 

                                 -கி. தினேஷ் கண்ணன்

   


      பரிசோதனைகள் ஆராய்ச்சியில் முக்கியக் கூறாக பயன்பட்டு வந்திருக்கின்றன. ஆராய்ச்சியை நிறுவுவதற்கான ஆதாரங்கள் பரிசோதனைகளில் இருந்தே பெறப்படுகின்றன. உளவியல் ஆராய்ச்சிகளைப் பற்றி சிக்மண்ட் பிராய்டு போன்றோர் செய்து வந்த பரிசோதனைகளை நாம் அறிவோம்.  தனிமனித உளவியல் ஆராய்ச்சிகளோடு நெருங்கிய தொடர்புடைய வகைமைகளாக சமூகவியல் மற்றும் சமூக உளவியல் ஆராய்ச்சிகள் உள்ளது. 


      இவற்றின் மூலம் சமூக அமைப்புகளின் கட்டமைப்புச் சூத்திரங்களும் தனிமனிதனின் சமூக மனமும் உலகந்தோறும் சமூகவியலாளர்களால் ஆராயப்பட்டு வந்திருக்கின்றது. 18ஆம் நூற்றாண்டில் பிரான்சில் பிறந்து ஜெர்மனியில் விரிவுபட்ட இந்த சமூகவியல், உலகமெங்கும் பரவி தனி படிற்றொழுக்கமாக இயங்கி வருகிறது. இந்தச் சமூக உளவியல் மற்றும் சமூகவியல் ஆராய்ச்சிகள் பெரும்பாலும் பல்கலைக்கழக புத்தக அலமாரி வரிசைகளோடு தங்களின் எல்லையை வரையறுத்துக் கொண்டுள்ளன. 


      சமூகம் உருவான விதம், அது இயங்கிய விதம் குறித்த காகித ஆராய்ச்சிகள் படித்தறிவுக்கு சலிப்பூட்டக்கூடியதாக இருக்கும்படி திட்டமிட்டு செய்து முடிக்கப்படுகின்றன. இதுபோன்ற விலகல்களில் இருந்து மாறுபட்டு  இந்நாளில் இயங்கக்கூடிய சமூகத்தை ஆராயும் வெளிப்படையான அணுகுமுறைகளைப் பரிசோதித்துப் பார்த்த உண்மைக் கதைகளைத் தழுவி உருவானவையாக The Wave(அலை)(ஜெர்மனி), Stanford prision experiment(அமெரிக்கா) ஆகிய இரண்டு திரைப்படங்கள் நமக்குக் காணக்கிடைக்கின்றன. அனைத்து திரைப்படங்களும் இலக்கியங்களும் மனிதனின் வாழ்வியலை சமூகச் செயல்பாட்டை வெளிப்படுத்தி நிற்கும் ஆவணங்களே. ஆனால் இந்தக் குறிப்பிட்ட இரண்டு படங்கள் மாணவர்களை வைத்து சமூகக் கட்டமைப்பின் அதிகார மையத்தின் இயங்கு செயல்பாடுகளை மீட்டுருவாக்கம் செய்து பார்ப்பவை.


    ஜெர்மனியில் நடக்கும் “The Wave”  பாசிசம் மீண்டும் தற்காலத்தில் உருவாக வாய்ப்பில்லை என்ற மாணவர்களின்  கருத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு மாணவர்களை வைத்து பாசிசத்தை நோக்கி நகரும் அதிகாரக் குழுவை உருவாக்கும் ஆசிரியரைக் கொண்ட கதை. Autocracy - எதேச்சதிகாரம் குறித்த சிறப்பு வகுப்பில் இந்தப் பரிசோதனை தொடங்குகிறது. இந்த Wave - அலை என உருவாகும் குழுவிற்கான தனித்துவமான அடையாளங்கள் உருவாக்கப்படுகின்றன. உடைகள், முத்திரைகள் என உருவாகி குழுவை சேர்ந்த மாணவர்கள் இந்தக் கட்டமைப்பை தீவிரமாக எடுத்துக்கொள்ளத் தொடங்குகின்றனர். குழுவைச் சேராதவர்களை வெறுக்கத் தொடங்கும் இவர்கள் குழு உளவியலுக்குள் தீவிரமாக உட்செல்கின்றனர்.


      ஒரு கட்டத்தில் அலையை உருவாக்கிய ஆசிரியராலும் கட்டுப்படுத்த முடியாத பிணைப்பை, குழுவை எதிர்க்கும், தங்கள் குழு உருவாக்கிய கருத்துக்களை எதிர்க்கும் பிற நண்பர்களுக்கு எதிராகத் திரும்பும் பாசிச நிலைக்குச் செல்கின்றனர். இதன்மூலம் பாசிசம் எந்தக் காலத்திலும் மீண்டும் உருவாகும் என்ற கருத்து நிறுவப்படுகிறது.


 The Wave திரைப்பட இயக்குநரின்

 கூற்று : I have always been very interested in this subject: The question of whether fascism could happen again, how the fascist system works, how people can be led astray.


In THE WAVE, the question is "How could we be led astray today? How could fascism work? Would it be possible today? Could that kind of thing happen again, at a normal school, here and now?"


      Wave குழு எட்டியுள்ள இந்த ஆபத்தான நிலை குறித்து உணர்ந்து அதை உருவாக்கிய ஆசிரியர் குழுவைக் கலைக்க முயல்வது மோசமான வன்முறையிலேயே முடிகிறது. மனிதனின் மனம் தன்னை இரையாக்கிக் கொள்ள என்றும் தயாராக இருக்கிறது.

******* 


      அமெரிக்காவின் பிரபலமான ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடக்கும் மற்றொரு சமூக உளவியல் பரிசோதனையைப் பற்றிய கதை “The Stanford prison experiment” ‘ஸ்டான்போர்ட் பிரசன் எக்ஸ்பரிமெண்ட்’ எனும் உண்மைச் சம்பவங்களைத் தழுவிய படம். 


      மாணவர்களை சிறைக் கைதிகளாகவும், சிறை அதிகாரிகளாகவும் பேராசிரியர் நடிக்க வைக்கிறார். அதிகாரப் பிரிவுக்கும் அதற்கு அடி பணியும் பிரிவுக்கும் ஏற்படும் உளவியல் சலனங்களை ஆராய்வது அவரின் எண்ணம். இந்தப்  பரிசோதனையில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் அவர்களை அறியாமலேயே அவர்களுக்குள் இயங்கும் கட்டமைப்பு மனத்தின் இரைகளாகி தங்களை உண்மைக் கைதிகளாக நினைத்து அடிபணியவும் உண்மை அதிகாரிகளாக நினைத்து அதிகாரத்தைச் செலுத்தவும் தொடங்குகின்றனர். இறுதியில் யாராலும் கட்டுப்படுத்த முடியாத அதிகார அடிபணிவுக் குழப்பங்களை அவர்கள் எட்டுகின்றனர். இரண்டு வாரங்கள் நடத்தத் திட்டமிட்டிருந்த தனது இந்த ஆராய்ச்சியை, பேராசிரியர் ஆறே நாட்களில் நிறுத்தி விடுகிறார். இது ஸ்டேன்போர்ட் பல்கலையில் 1971 இல் உளவியல் துறைப் பேராசிரியர் பிலிப் ஜி. ஜிம்பார்டோ உண்மையாகவே நடத்திய ஆராய்ச்சியாகும். மனிதன் தான் அடிபணிவதற்கான அதிகாரத்தை எதிர்நோக்குகிறான். அதனாலேயே புதுப்புது அதிகாரம் மையங்கள் காலந்தோறும் உருவாகியபடி இருக்கின்றன. 

Human psychology is open to manipulation, human psychology want to belong to a community and contribute to a community. 


      மனிதனின் உளவியல், ஆளுகைக்கு கீழ் வாழ ஏங்குவது. அது தன்னை வசப்படுத்தும் பொய்களுக்காக காத்துக்கிடக்கிறது. மனித மனம் தமக்கென வட்டத்தை ஏற்படுத்திக் கொள்ள முயல்கிறது. உலகம் அதற்கொரு பொருட்டல்ல. இரக்கம் கருணை எல்லாம் மனிதக் கூறுகளென்றாலும் அதை உண்மையாக வெளிப்படுத்துவது மனிதனின் எண்ணமல்ல. அதை வெளிப்படுத்துகிறோம் என்ற ஜோடனை மனிதனுக்கு தன்னைப் பொறுத்துக் கொள்ளத் தேவையானதாக இருக்கிறது. 

தன்னைப் பொறுத்துக்கொள்ள மனிதனுக்கு ஒரு குழு தேவை அவ்வளவுதான். அதற்குள் ஏற்படுபவையே அவனுக்கு மனித நிகழ்வுகள். அதற்கு வெளியில் நிகழ்வதில் அவனுக்கு அக்கறையில்லை. பல்லாயிரம் மக்களின் சாவு வெறும் எண்ணிக்கையே. மக்களுக்கு அடையாளங்கள் தேவை. அவை கொடூரமானதாக, இரக்கமற்றதாக  போலியாக இருப்பதில் அவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. கீழ்படிதலே மனித இயல்பாக மாறியிருக்கின்றது. 


      மேற்கண்ட இரண்டு படங்களிலும் மனிதர்களுக்குள் உருவாகும் இந்த அதிகார நிலையின் கிறுக்குத்தனமே படத்தின் கருவாகவும் உள்ளீடும் மனித சமூகக் குழுக்களிடம் வேர் விட்டிருக்கும் பிரவுகளின் குறியீடாகவும் இருக்கிறது. சாதாரணமாகத் தொடங்கும் இந்தப் பரிசோதனைகள் ஒரு கட்டத்துக்கு மேல் கட்டுப்படுத்த முடியாத கட்டத்தை அடைந்து தங்களுக்குள் தகவமையும் இந்தக் குழுக்கள் தாங்களாக அல்லாதவரின் மீதான அடக்குமுறையை முன்னெடுப்பது மனித சமூக வரலாறு நெடுகிலும் நடந்து வந்திருக்கின்றது. இந்தியாவில் அது சாதிவெறியாகவும் மேலைநாடுகளில் அது நிறவெறியாகவும் தன்னை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. அதற்கு சாதியோ நிறமோ பெரிதில்லை, அதிகாரம் செய்வதற்கான ஒரு கோட்பாடு அதற்குத் தேவை அவ்வளவுதான். ஒரு நாகரிகம் மற்றொரு நாகரிகத்தை  அழிக்க, ஒரு இனக்குழு மற்றொரு இனக்குழுவை அடிமைப்படுத்த, ஒரு வர்க்கம் கொளுப்பதற்கு இன்னொரு வர்க்கத்தைக் கசக்கிப் பிழிய ஏற்படுத்தப்படும் கட்டமைப்புகள் இவை. 


இந்த நாகரிகங்கள், சாதிகள், இனக்குழுக்கள், வர்க்கங்கள் என்று ஏற்பட்டுள்ள அனைத்துமே மனிதனைப் பிறிக்கும் செயற்கை. இதற்குள்ளேயே குருட்டுத்தனமான முட்டிமோதிக் கொண்டிருக்கிறோம் நாம். அதிகாரம் இதுவனைத்தையும் பார்த்து கெக்களித்துச் சிரிக்கிறது. அதிகாரத்துடனான ஒற்றுமை வரவேற்கபடுகிறது. அதேநேரம் அதிகாரத்துக்கு எதிரான ஒற்றுமை வெறும் கனவாகவே இருக்கிறது. உதிரிகளின் கனவாகவும் சிதைந்துபோன வாழ் நாட்களின் ஏக்கமாகவும் அது வாழ்ந்து மடிகிறது. பேராசை பிறரின் மீதான வெறுப்பாக மாறுகிறது. பாசிசம், பேரினவாதம், சாதியம், தேசியம் என அனைத்தும் ஒரே கருத்தைக் குறிக்கும் வெவ்வேறு சொல்லாடல்கள் மட்டும்தானா என்பதை இன்றைய சமூகச் சூழலை ஆராய்வதன் மூலம் நாம் அறிய முடியும். 



உதவிய திரைப்படங்கள் மற்றும் தரவுகள் 


Die welle (The Wave) 2008 movie - Germany


Stanford Prision Experiment 2014 movie - America


Stanford Prision experiment study 1971- Psycology Professor Philip G. Zimbardo, 

Stanford University, California,America. 

 

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு