பூவரசு பேசும் பூவை ரசம் -ஶ்ரீகாந்த் ராஜ்குமார்

                              பூவரசு பேசும் பூவை ரசம் -ஶ்ரீகாந்த் ராஜ்குமார்

       மாதொருபாகன் என்ற நாவல் பூவரசம் மரத்தில் உள்ள கிளைகளில் தொடங்கி அதே பூவரசம் மரத்தில் உள்ள கிளைகளில் முடிகிறது. மேலும் இந்நாவலில் பல்வேறு கதை மாந்தர்கள் உள்ளார்கள். அவற்றுள் மிக முக்கியமானவர்கள் குழந்தை இல்லாத தம்பதியர்கள் காளி மற்றும் பொன்னா இவர்களுடன் சேர்த்து முத்து இவர்கள் தான் இந்நாவலை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டு செல்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி பலவருடங்கள் ஆயினும் குழந்தை இல்லாத நிலை எனவே இவளை வறடி , மலடி , ஓரி என்றும் அவனை வறடன் என்றும் சமூகத்தில் அழைத்தார்கள். இவற்றை வாசிக்கும் போது தான்  உணர்கிறேன்
இன்றைய சமூகத்தில் குழந்தை இல்லாதவர்களின் நிலை என்னவென்று. இந்நாவலில் மக்களிடம் நிலவி வரும் பழக்கவழக்கங்கள் மற்றும் தெய்வம் (அ) சாமி என்ற பெயரில் நடந்து வரும் சடங்குகள் போன்ற அனைத்தும் மூட நம்பிக்கையே என்று ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.
மேலும் நம் முன்னோர்கள் தான் இங்கு தெய்வமாக உள்ளனர் என்றும் ஆணவ கொலைகள் செய்யப்பட்ட பெண்களும் தெய்வமாக உள்ளனர் என்ற செய்தியையும் இந்நாவல் தருகின்றன. வட்டார வழக்கு சொற்களை ஆசிரியர் நேரடியாகவே இந்நாவலில் பயன்படுத்தியுள்ளார். இவை எனக்கு புதிதாகவே இருந்தன. எங்கள் தெய்வங்களுக்கு நாங்கள் தான் பூசை செய்ய வேண்டும். அவை யாவும் சுதந்திரமாக வனத்திலும் , ஊர் எல்லைகளிலும் இருந்தன. அவற்றை நான்கு சுவற்றுக்குள் கொண்டு வந்து சம்பாதிக்கிறார்கள் என்று பார்ப்பனியத்தை எதிர்க்கும் ஒரு சில செய்திகளையும் ஆசிரியர் எடுத்துரைக்கிறார். மாதவிடாய் காலங்களில் பெண்கள் ஊருக்கு வெளியே இருக்க வேண்டும். எந்த வேலையும் செய்யக்கூடாது, அதாவது விதை விதைக்க கூடாது, சமையல் செய்யக்கூடாது, எதிர்த்து பேசக்கூடாது, குழந்தையை தூக்கக்கூடாது என்ற பல்வேறு கருத்துக்கள் மக்களிடம் நிலவி வருகின்றதைப் பேசுகிறார்.


      பொன்னா தனக்கு நாள் தள்ளிப் போகின்றன என்பதை நினைத்து சந்தோஷம் அடைவாள். ஆனால் அவை நிலைத்திருக்காது. அவள் வீட்டில்  உள்ள செடிகள்- பூ , காய் , கனிகளை தரும் மற்றும் அவள் வளர்க்கின்ற பசுவும் கன்றுகளை
ஈன்றெடுக்கும் , ஆனால் அவளோ ? குழந்தை இல்லாத ஓர் பெண்ணின் மனநிலையும் , துயரங்களையும் தன் எழுத்தின் மூலம் அதனை உணரச் செய்கிறார். பாட்டி சொன்னார் , அம்மா சொன்னார் , அக்கம் பக்கத்தில் சொல்கிற
காரியங்களை ஒன்று விடாமல் பொன்னா உயிரையே பனையம் வைத்தும் குழந்தை வரம் வேண்டி பல்வேறு காரியங்களை செய்வாள். இன்றும் பல்வேறு கிராமங்களில் பல பெண்கள் இவ்வாறான மூடத்தனமான காரியங்களையே செய்கின்றனர். காரணம் அவர்களுக்கு போதிய
விழிப்புணர்வும் அறிவியல் வளர்ச்சியும் மற்றும் மருத்துவம் சார்ந்த வசதியும் இல்லை . அன்றில் இருந்து இன்று வரை குழந்தை இல்லை என்றால் அதற்கு காரணம் பெண் தான் என்று திணித்து வைத்திருக்கிறது இச்சமூகம். குழந்தையின்மைக்கு ஆணும் காரணம் தான் என்பதை இச்சமூகம் ஏற்க மறுக்கிறது. குழந்தை பிறப்பு என்பது ஆணும் பெண்ணும் இணைந்தால் தான் குழந்தைப் பிறக்கும் இதில் யாரேனும் ஒருவருக்கு குறைவிருந்தாலும் குழந்தை பிறப்பதில்
சிக்கல் என்கிறார்கள் மருத்துவர்கள். இவ்வாறாக பெண்களை ஒடுக்கியும் அடக்கியும் அடிமைத்தனத்திலும் வைத்திருக்கின்றன. இன்றையச் சூழலில் குழந்தை இல்லை என்றால் நகரத்தில் உள்ள மக்கள் பல்வேறு மருந்துகள் மற்றும் மருத்துவத்தின் உதவியின் மூலம்
பயனடைகிறார்கள். ஒரு சிலர் குழந்தையை தத்தெடுத்தும் வளர்க்கிறார்கள். ஆனால் கிராமப்புறங்களில் உள்ள குழந்தை இல்லாத பெண்கள் அங்குள்ளோரின் ஏச்சுக்கும் பேச்சுக்குமே ஆளாகிறார்கள் என்ற நிலையையும் ஆசிரியர் இந்நாவலில் கூறுகிறார்
. மேலும் இந்நாவலில் குழந்தை இல்லை என்றால் அவர்கள் ஊரில் நடைபெறும் தேர்நோம்பி திருவிழாவின் போது நாடகங்களும் , ஆடல் பாடல் நிகழ்வும் நடை பெறும் அங்கு தேர் இழுக்கும் நாளன்று இரவில் வரும் ஆண்கள் எல்லாரும் சாமிகளே என்றும் , அவர்களில் நம் மனம் விரும்பியவர் ஒருவருடன் நாம் சேர்ந்தால் குழந்தை பிறக்கும் என்றும், அப்படி பிறக்கின்ற
குழந்தை சாமி கொடுத்தவை என்ற நம்பிக்கையும் அவர்களிடம் உள்ளன. இதை ஒரு சாரார் மக்கள் ஏற்கும் நிலையிலும் மற்றொரு சாரார் மக்கள் மறுக்கின்ற நிலையிலும்
உள்ளனர். இந்த காரியத்தை தன் நிலையை அறிந்தும் தன் கணவனுக்காகவும் பெற்றோரின் விருப்பத்திற்கிணங்கவும் இந்த காரியத்தில் ஈடுபடுவாள் பொன்னா. இதை அறிந்த அவன் கணவரும் தகாத வார்த்தையால் திட்டியும் மிகுந்த கோவத்தோடும், துயரத்தோடும் கட்டிலில் சாய்ந்திருப்பார் மேலே பூவரசம் மரம் தெரியும். இவ்வாறாக நாவல் முடியும். ஆனால் இந்த செயல்கள் எல்லாம் நம்மை சற்று சிந்திக்க வைக்கின்றன. குழந்தை இல்லாத பெண்களின் நிலை அன்று முதல் இன்று வரை எப்படி இருந்து வருகிறது என்பதை உணரவும் முடிகின்றன இந்நாவலின் வாசிப்பில். இறுதியாக : குழந்தை இல்லாத தம்பதியர்களின் நிலை இச்சமூகத்தில் எவ்வாறு பார்க்கப்படுகின்றன என்பதையே ஆசிரியர் கருதுகோளாக கையாண்டிருக்கிறார் எனலாம். இதை நாம் தற்கால சூழலில் பொருத்திப்பார்த்து அவர்களின் நிலையை அறிந்து நம்மால் என்ன செய்ய முடியும் என்பதையும் கலந்துரையாட வேண்டும். இந்நாவலை நாம் உளவியல் பார்வையோடும் அணுகலாம். மேலும் இந்நாவலை வாசிக்கும் நாம் ஒவ்வொருவருக்கும் பல்வேறு கருத்தும் சிந்தனைகளும் ஏற்படும். அவற்றையும் நாம் பேச வேண்டும். நான் முழுவதுமாக கூறினால் அடுத்து இந்நாவலை வாசிப்பவர்களுக்கு சற்று ஈடுபாடு குறையும் என்பதனால்.சுருக்கமாகவே கூறியுள்ளேன்.

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு