சத்யா -விசித்திரன்

சத்யா

                                                                                             -விசித்திரன்                                                          அந்தக் காளான் கடையில் இருந்து அட்டியைக் கலைப்பதற்கு அன்று இரவு நெடுநேரம் ஆனது. நரேன் அண்ணன் கொண்டு வந்த சரக்குகள் எல்லாம் ஓடி விட்டது. ஜிலேபிகள் எல்லாம் தீர்ந்து போக அந்த தட்டில் மீதியிருக்கும் துண்டு துணுக்குகளை மனோஜும் காமேஷும் பொறுக்கி தின்று கொண்டிருந்தார்கள். சாதமும் தன் கைப்பேசியை எடுத்து அதில் நேரம் பார்த்து  “டேய் போதும்டா கிளம்புங்க நாளாண்ணிக்கு பாக்கலாம்” என்று நழுவ முயல, வசந்த உடனேயே “ என்ன மாமே உன்னோட ஆளு ஃபோன் பண்ணுவது போல” எனக் கேட்டு கேலி செய்ய “டேய் டேய் ஏன்டா” சதாம் கூவினான். “மாமே கத குடுக்காதடா நா என்னடா பண்ணப்போறன்”  மீண்டும்  வசந்த வார்த்தையில் அழுத்தம் கொடுக்க பீறிட்டு எழுந்த வெட்க்கத்தில் “வாத்தா போங்கடா” என்று சினுங்கிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான். மீதியிருந்த மூவரும் அவரவர் வீடுகளை நோக்கி புறப்பட்டனர். சத்யா எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தான். அவன் உடல் அளவில் மட்டுமே அந்தக் கடையில் இருந்தான். காலை இளங்கதிர் ஜன்னல் கம்பிகளால் துண்டாடப்பட்டு பிரிந்து அறையில் நுழைவதுமாதிரி அவர்கள் ஒவ்வொருவராக அவர்கள் வீடுகள் இருக்கும் தெருக்களை நோக்கி பிரிந்து சென்றனர். முல்லாத்தீவு தெரு முக்கில் கண்கள் செமிட்டிக் கொண்டிருக்கும் மின் கம்பத்தின் கீழ் நின்று இவையனைத்தும் பார்த்தவனாக சத்யா இருந்தான். தூரத்தில் ஒவ்வொருவராக இருட்டில் கரைவதைக் கண்டப் பின் தன் வீடு அமைந்துள்ள ஜீவா தெருவை நோக்கி நடக்க துவங்கினான், வரும் போது இவர்கள் பேசிய பேச்சுக்களை காற்றில் இருந்து சேகரித்துக் கொண்டே நடந்தான் சத்யா. 

   வீட்டை  நெருங்கும் முன்பே  'லபோ திபோ' என்று அவன் அம்மா கூச்சலிடுவது சத்யாவுக்கு கேட்டது. இது ஒன்றும் புதிதல்ல ஒவ்வொரு முறையும் அவன் எங்காவது சென்று இரவு தாமதமாக வருவான் என்றால் ஒவ்வொரு முறையும் இதே கச்சேரி தான். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள். “யக்கோ ஏன் சொம்மா சொம்மா திட்டுற புள்ளய? வீட்டலயே பொத்தி பொத்தி வச்சி என்ன பண்ண போற நாலு எடம் போய்ட்டு வந்தா தா என்னவா? அய்யோ ரொம்பக்கா உன்னோட  அலும்பலு” என்று சத்யாவுக்கு வக்காலத்து வாங்கு பேச்சுகள் எதுவும் அவன் அம்மாவின் முன் எடுபடாது. பல முறை சத்யாவிடமே  வந்து  “உங்க ஆத்தாகாரிக்கு என்னவாம் உன்னோட போட்டு இந்த பாடுபடுத்துறா” என கேட்கும் போதும்  சத்யா சிரிப்பை தவிர வேறொன்றையும் பதிலாக சொன்னதாக நினைவில்லை. வீட்டின் உள்ளே நுழைந்தவுடன்  “பொறுக்கி, எங்கயோ போய் பொறுக்கிட்டு வந்திருக்கு, நீ வூடு எல்லாம் அடங்கமாட்டியா, ஊரு மேல போய்ட்டு வருது பாரு”  என்று காட்டமாக வார்த்தைகளால் அவள் அவனைத் திட்ட “அம்மோவ் கொஞ்சம் நிறுத்து எங்க போட்டு வரனு தெரியாம பேசாத” என சத்யா வாய் எடுக்க “சீ…… வாய மூடு கத்த மையிரு புடுங்க போனீயா” அடுத்தடுத்து கேள்விக்கு பதில் சொல்லாமல் மெல்லமாக சமையற்கட்டை நோக்கி நகர்ந்து சோற்றுக் குண்டானை நோட்டமிட்டான் சத்யா. வெளியிலே அமர்ந்து இருந்து அவள் ஜாடையாக “தோ! அந்த பக்கத்து குண்டான்ல  சோறும் அந்த பேஷன்ல கொழம்பு இருக்குது பாரு” என்று முணங்கலுடன் சொல்லி முடித்தாள். அவன் அம்மாவின் பாசம் அவனுக்கு என்றும் தெரிந்த ஒன்று தான். இது ஒரு வாடிக்கையான நிகழ்வாக மாறிப்போனதால் இருவரும் அந்த நேரத்தில் கோபத்தில் உள்ளதைப் போல் பாவலா செய்துக் கொண்டு இருப்பார்கள். காலி பிளாஸ்டிக் குடங்களில் தண்ணீர் இறங்குவது போல வயிற்றுக்குள் சோறு ஒரு மூலையில் இறங்கிக் கொண்டு இருந்தது. ஒவ்வொரு வாய்க்கும்  எதாவது ஒரு திட்டு அதற்கும்  சத்யா சளைக்காமல் வாயில் சோற்றைப் போட்டு குதப்பிக் கொண்டே, “அம்மோவ்……. “ என்ற சத்தத்துடன் தொடங்கி சோற்று உருண்டைகளை மென்று திண்பதைப் போல் வார்த்தைகளையும் மென்னு முழுங்கி ஏதோ சொல்லுவான். அந்த பாஷை அவளுக்கு மட்டுமே புரியும். இவ்வாறு தொடர்ந்து கொண்டே இருப்பார்கள். கடைசியாக தட்டைக் கழுவி முடித்து படுக்கைக்கு செல்ல ஆயத்தமானான் சத்யா. வாய் விடாமல்  அவனை அவள் திட்டிக் கொண்டே இருக்க சத்யா இடைமறித்து “அம்மோவ் மணி என்ன ஆவுதுனு பாத்தியா?” என்ற வினாவுக்கு மட்டுமே அவள் மௌனம் காத்தாள். அவள்  வாயடைத்தப் பின்னால் எங்கும் நிசப்தம் இயற்கையின் உன்னத ஒலி தேரை, பூச்சிகள், கடிகார நொடி முள்  அசைவுகளில் வெளிவரும் மெல்லிய ஓசை இவையெல்லாம் அவளின் காதுகளுக்கு கேட்டது. அவள் எவ்வளவு கூச்சலிட்டு இருந்தாள் என்பது அப்போது  தான் அவளுக்கே விளங்கியது. ஒரு நிமிடம் தன் செயலுக்கு வெட்கி, பின் அதை பொருட்படுத்தாதது போல், “இரு உன்ன காலையில வச்சிக்குறேன்” என்ற  மொழியுடன் அன்று இரவு படுக்கப் போனார்கள். சத்யா இன்று பிற்பகலில் நடந்த அந்த நிகழ்வுகளைப் பற்றியே தன் கவனத்தை செலுத்தி இருந்தான். இது அவன் எப்போதும் செய்யும் வழக்கமான செயல் அன்றைய நாள் நிகழ்வுகளை மீண்டும் ஒருமுறை அசைப்போடுவது அவனுக்கு பிடித்து போனதாக மாறிவிட்டது. இன்றும் அதே நடைமுறை தான். 

     சத்யாவை ஓயாது திட்டித் தீர்த்தாலும்  அவன் ஏதோ கொஞ்சமாவது மகிழ்ச்சியாக இருப்பதாக அவள் உண்ர்ந்திருந்தாள். வீட்டிற்குள் அவன் எந்நேரமும் முடங்கி இருக்கிறான் என்று மற்றவர்கள் கூறினாலும், எதையும் அவள் காதில் போட்டுக் கொள்வது இல்லை. ‘தகப்பன் இல்லாத பிள்ளை தறுதலையா தான் வளரும்'  என்று யாரும் தன் பிள்ளையை பழித்திடக் கூடாது என்பதில் குறிக்கோளாக இருந்தாள். அதிலும் சத்யாவோ ஒத்த பிள்ளை எனவே அவனை ஒழுக்கமானவனாக வளர்க்க வேண்டும் என்ற ஒரு வைராக்கியம் . இத்தனை காலம்  இவ்வாறே நடந்ததும் வந்தது. அவன் காலேஜ் சென்றப் பின்னால் தான் கொஞ்சமாவது வெளியே வருகிறான் என்பது அந்த தெருவில் வசிக்கும் எல்லோரும் அறிந்த செய்தி. படுக்கையில் ஒரு கழித்துப் படுத்து சுவரில் தொங்கும்  தன் கணவரின் புகைப்படத்தைப் பார்த்து சத்யாவை மிகவும் ஒழுக்கமானாக  வளர்த்து விட்டேன், என்று அவள் தனக்கு தானே பெருமூச்சு விட்டு புளங்காகிதம் அடைவாள். அவளின் நிம்மதி பெருமூச்சு அருகில்  படுத்து இருக்கும்  சத்யாவை சற்றே நகர்த்திடும் அளவுக்கு  பலமானதாய் இருக்கும். அவன் அம்மாவின் பெருமூச்சின் மொழியை அறிந்தவனாகவே இருந்தான். அவனும்  தான் மகிழ்ச்சியாகவே உள்ளதாக எப்போதும் உணர்த்திக் கொண்டு இருப்பான். இந்த செயல் இன்றோ நேற்றோ இல்லை பல நாட்களாக தொடர்ந்து வருகிறது. இவ்வாறு நடிப்பதில் சத்யாவும் கை தேர்ந்தவனாகி விட்டான். 

      தூக்கம் மிக எளிதாய் ஒன்றும் எல்லோருக்கும் வந்து விடுவதில்லை. நன்றாக தூங்கிறவனை பார்த்து எப்போதும் கேலியும் கிண்டலும் செய்தபடியே நாம் அனைவரும் இருக்கின்றோம். நம்மால் தூங்க முடியவில்லை நமக்கு தூக்கம் வருவதில்லை என்ற ஏக்கம்  மற்றும் ஆழ்மனதில் எழும் ஒருவித பொறாமை உணர்ச்சி தான் இதற்கு காரணம். இவற்றின் நீட்சி அடைந்த வடிவமே  நம்முடைய ஏளனப் பேச்சுக்கள். சத்யாவின் அம்மாவிற்கு தூக்கம் எளிதில் வராது. அவள் சரியாக தூங்கி எத்தனை நாட்கள் ஆகிறது என்ற கணக்கு எல்லாம் சத்யாவுக்கு நன்றாக தெரியும். தூக்கத்தின் நடுவே சிறு சத்தம் கேட்டால் போதும் அவள் விழித்து விடுவாள். ஒரு முறை கண்விழித்து விட்டால் போதும்  அத்தோடு பொட்டு  தூக்கம் கூட அவள் கண்ணில் பிடிபடாது. ஓர் நாள் இரவில் சத்யா தண்ணீர் தாகம் எடுக்க சமையற்கட்டில் சென்று டம்பளரை டாடல்…. புடால் என்று உருட்ட பதறி அடித்துக் கொண்டு அவள் எழுந்து விட்டாள். சரியாக அதற்கு  அரைமணி நேரம் முன்தான் அவள் கண் அசந்தாள். இவ்வாறு சத்யா சாமான்களை உருட்ட கண் விழித்த அவள் அன்று இரவு முழுவதும் தூங்கவே இல்லை.  இதனால் பல முறை இரவு நேரங்களில் சத்யா தண்ணீர் குடிப்பதையும்  கதவின் ஓரத்தில் படுத்திருக்கும் அவளை எழுப்ப தயங்கி மூத்திரம் போவதையும் நிறுத்திக் கொண்டான். அவள் எளிதில் தூங்குவது இல்லை, ஒலிம்பிக்கில் தொடர் ஓட்டம் போல, அவளின் சிந்தனை தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும், ஏதேனும் ஒரு சிக்கலுக்கு தீர்வு கண்டு விட்டால் என்றால் உடனே அது வேறொன்றுக்கு தானாகவே அழைத்து சென்று விடும். வீட்டில் உள்ள அத்தனை வேலைகளையும் களைப்புறாமல்  செய்ய குறைந்த பட்சம் அவளுக்கு 5 மணிநேரம் தூக்கம் அவசியமான ஒன்றாக உள்ளது. ஆனால் அவ்வாறு கிடைப்பது மாதத்தில் பாதி நாள் தான்.  பெரும்பாலான நாட்களில் அவளின் கண்கள் இண்டேன் கேஸ் சிலிண்டர் போல கண்கள் சிவந்து இருக்கும். முகமெல்லாம் இருட்டடிப்பு கிடக்கும். இதனோடே அவள் வேலைக்கும் சென்று வருவாள். மகனை எப்படியாவது ஒரு ஆளாக்க வேண்டும். என்பதே அவளின் ஒற்றைக் குறிக்கோள். இரவில் பக்கத்தில் படுத்திருக்கும் சத்யாவின் தலையைத் தடவிக் கொடுத்து அன்றைய நாள் களைப்புக்கு ஆறுதல் தேடிக் கொள்வாள். சத்யாவிடம்  பல முறை அவள் தன்னுடைய கஷ்டங்களை கூறாவிட்டாலும் என்றாவது அவள் தன்னுடைய கணம் பொருந்திய கண்ணீரால் உரையாடல் ஒன்றை நடத்தி விடுவாள். மீதி நேரங்களில் தலையைத் தடவிக் கொடுத்தும், பூடகமாய் சில வார்த்தைகள் பேசியும்,  விரல்களுக்கு சொடுக்கு எடுத்தும் தன்னுடைய வலியை மடை மாற்றம்  செய்து கொள்வாள். சத்யா நன்றாக உறங்கட்டும் என்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு தன் கையை தலையில் இருந்து எடுத்து திரும்பி படுத்த அடுத்த நிமிடத்தில் சத்யா தன் தலையை அவளை நோக்கிவாறு திருப்பி தன் அம்மா தூங்குவதை (தூங்க முயற்சிப்பதை) வேடிக்கைப் பார்ப்பான். சத்யாவும் மிக எளிதில் தூங்கி விடுபவன் அல்ல. கனவுகள் நிறைய காண்பான் என்றும் சொல்ல முடியாது. தூங்கினால் தானே கனவுகளும் வசப்படும். அவன் கண்களை மட்டும் இறுக்கமாக மூடி படுக்கையில் புரண்டு புரண்டு படுப்பான். ஒரு குறிப்பிட்ட நேரம் ஒரே நிலையில் தவம் செய்வதைப் போல்  அசைவின்றி கிடப்பான். அது மல்லாந்தோ குப்புறப் படுத்தோ அந்தந்த நேரத்தைப் பொறுத்து நிலை மாறுபடும். அவ்வாறே அன்றைய நிகழ்வையெல்லாம் ஓட்டிப் பார்த்து தூங்குவான். முக்கியமாக தன்னை கலாய்த்து  தள்ளும் நிமிடங்களுக்கு சென்று அங்கேயே அவன் அவனுடன்(கடந்த கால) ஓர் உரையாடல் நிகழ்த்துவான். கேட்பதற்கு வினோதமான ஒன்றாக முதலில் இருந்தது. பிறகு தான் அதைப் புரிந்து கொள்ள முடிந்தது.  தன்னைக் கேளிக்கைப் பொருளாக எல்லோரும் நினைப்பதில் மகிழ்ச்சி அடைகிறான், அதற்கு பழக்கப்படுத்திக் கொண்டான். இதை சலிக்காமல் மீண்டும்  மீண்டும்  செய்யும் மன ஆற்றல் அவன் தனக்குள்ளே உற்பத்தி செய்கிறான். 

     சிறு வயதில் அவன் அவமானம்படுத்தப்பட்ட போது ஓடி வந்து யாரிடமாவது சொல்ல வேண்டும் என எண்ணிய போதெல்லாம். அவனுக்கு எதிர்படுவது சோகம் படிந்த முகத்தோடு அவனுடைய அம்மாகவே இருந்தார். பின்பு எல்லாவற்றையும் தின்று கிரகிக்க கற்றுக் கொண்டான். அவனுடைய மீளா துயருக்கு தீர்வு காணும் முயற்சியிலே  கற்பனை  வைத்தியத்தை கண்டு பிடித்தான். எல்லோரும் ஏராளமாக சிரிக்கும் போது அவனுக்கு ஆறுதல் சொல்ல அவனே சென்றுவிடுவான். அவன் சொல்லும் வார்த்தைகளைக் கேட்டும் அவனுக்கு ஆறுதல் சொல்வதுமாய் சிகிச்சை முறை மேற்கொண்டு வந்தான். கடந்த காலத்திற்கு தேவையான துணிகளை எதிர் காலத்திலிருந்து துவைத்து எடுத்து வருவது போல அவனின் இந்த செயலும் முற்றிலும் குழப்பத்தை ஏற்படுத்தும் ஒன்றாக இருந்தது. இந்த முறையில் வெற்றிக் கண்டவனுமாக இருக்கிறான் சத்யா. 

     அந்த ஒற்றை இரவு தவிர மற்ற இரவுகளையும் எளிதில் இன்றளவும் கடந்து வருகிறான் சத்யா. இந்த ஆறுதல் முயற்சியின் நேரம் நடந்த நிகழ்ச்சியினைப் பொருத்து மாறுபடும். ஒரு சில நாட்கள் இரவு முழுவதும் தனக்கு தானே ஆறுதல் சொல்லி தூக்கத்தை தொலைத்கவனாக இருந்திருக்கிறான், இருந்தும் காலை எழுந்தவுடன் தன்னுடைய அம்மாவின் கண்களை வைத்து அவளின் தூக்கத்தின் அளவை நிர்ணயம் செய்த பின்னர் தான் தன்னுடைய அன்றாட அலுவல்களைத் தொடங்குவான். சத்யாவின் சோர்வு  முக சுளிப்புகள் முணங்கல்கள் எல்லாம் அவன் வீட்டுச் சுவர்களே அதிக முறைப் பார்த்து உள்ளது. பல மணிநேரம் அந்த சுவரினை வெறித்து வெறித்துப் பார்த்து கொண்டிருப்பான். பாவம் ஆறுதல் சொல்ல முடியாமல் அந்த ஈரம் பாய்ந்த சுவர்கள் சிமெண்ட் காரையை உதிர்த்துத் கொண்டு அவனின் பேச்சுகளுக்கு கேட்பது போல் பாவலா செய்து கொண்டு இருக்கும். 

     இன்றிரவும் அது போன்ற ஒரு போட்டியே, இருவரில் யார்? முதலில் உறங்குகிறார்கள். ஒருவரையொருவர் ஏமாற்றிக் கொண்டனர். பிணம் போல்  படுத்து சத்யா பாவலா  செய்ய,  அவளும்  பெருமூச்சு விடுவதை சற்றே நிறுத்தி கொள்ள என்று இருவரும் இடைவிடாது மாறி மாறி நடித்துக் கொண்டிருந்தனர். அவளுக்கோ சாரைசாரையாய் நினைவுகள் அடுத்து என்ன அடுத்து என்ன, மறுபக்கம் சத்யாவோ இன்று பிற்பகல் தன் நண்பர்களுடன் ஏற்பட்ட கசப்பான நிகழ்ச்சியில் சிக்கிக் கொண்ட கடந்த கால அவனுடன் ஆறுதல் சொல்லிக் கொண்டு இருந்தான். வெவ்வேறு சிந்தனையோட்டம் இருவரும் கொண்டிருந்தாலும், இவர்கள் கடைசியில் சொல்லிக் கொள்ளும் சமாதான வார்த்தைகள் என்னவோ ஒன்று தான். 'நாம யோசிச்சு மட்டும் எல்லாம்  மாறவா போகுது.'  

      நாளை சத்யாவுக்கு  கல்லுாரியின் கடைசி செமஸ்டர் வகுப்புகள் தொடங்க உள்ளது. அத்தனை சிந்தனைகளையும் ஓரங்கட்டி கல்லுாரி பற்றிய நினைவுகளுக்கு இந்த இரவில் முதல் வகுப்பு இருக்கைகள் செய்து கொடுத்தான். சற்றே மனம்  உடையும் போது ‘வாத்தா என்னடா வாழ்க்கை புண்ட மாதிரி இருக்கு'  என்று வாய்விட்டு உரக்கக் கூறுவான் சத்யா. அவன் அம்மாவின் அருகில் படுத்திருக்க இன்று அதற்கும்  வாய்ப்பில்லை. 

(நீளும்..........)                              

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு