அரா கவிதைகள்
அரா கவிதைகள்
நிசப்தத்தின் பெரும் சப்தம்
இருளின் ஊடே இரைகிறது..
சிறுத்தையின் கண்கள்
சின்ன முயலின் பாதத்தை
சிந்தை சிதறாமல் கவனிக்க
ஒற்றை ரவை ஓரமாய் நின்ற
மரத்தின் பழத்தை துளைக்க
மறு நொடியில் சிறுத்தை
மாய்ந்து விழுந்தது..
பாய்ந்து சென்ற முயலின் பின்னே..
*****
ஒரு பெட்டிக்குள் முழு உடலையும்
பொருத்தும் பயிற்சி
நடந்து கொண்டிருக்கிறது
அங்கு விதவிதமான பெட்டிகளோடு
ஆட்டம் தொடங்குவதாக தெரிகிறது
ஒவ்வொரு முறை பயிற்சியின் போதும்
ஒப்பனைகள் மாற்றப்படுகிறது
ஒத்திகை காட்சிகளில்
கதாபாத்திரங்கள் பொருத்தமற்று
மாறுவது இயல்பாகி விட்டது
எழுந்திடுவோம்
இங்கு தான் இருக்கிறோம்
இதெல்லாம் வேண்டும்
அவ்வளவுதான் இறக்கிவிடு
முடிந்தது தூக்கிப் போடு
நன்றாக கும்பிட்டுக் கொள்
எல்லோரும் போகத் தான் போறோம்
அங்க போனா பாத்துக்கிடுவோம்
நல்லவர் தான் ஆனா அப்படி
என விதவித சொற்கள்
அவரைத் தெரியாதோர் வாயிலும்
உதித்த போது
அன்றைய இரவுக்கான
நட்சத்திரங்கள் பகலிலேயே
இராத்திரி பார்த்துக் கொள்வதாக
குத்தாட்டம் போட்டது
*****
ஹால்ஸ் மிட்டாய்
வாங்கும் போதெல்லாம்
அவ்வளவு உறைக்கிறது
தொண்டை
ஹால்ஸ் என்ற சொல்
வெளிவரவே
திக்கு முக்காடுகிறது வாய்
அந்த மிட்டாய் தான்
சளியை வெளியேற்றுமாம்
சற்று நினைவுகளையும்
வெளியேற்றட்டும்
என்னிலிருந்து
நினைவுகளைத் துப்பிவிட்டு
அனாதைத்தனம் நிரம்பி நிற்பதில்
அவ்வளவு ஒன்றும்
ஆசையில்லை
இது தவிர்த்த
வேறு பாதைகளும் இல்லை.
*****
அவிழ்த்து விடுதலுக்கு
தனியாக ஒரு அதிகாரம்
எழுதியிருக்கலாமென
வள்ளுவருக்கு
ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தேன்
அதில் அவருக்கு
உடன்பாடு ஒன்றும்
இல்லாததறிந்து
மூன்று முக்கில் இருக்கும்
டீக்கடைக்கும்
டீக்கடைக்கு எதிரில் இருக்கும்
ஜெராக்ஸ் கடைக்கும்
இவ்விரு கடைகளில் இருந்து
85 அடி தொலைவிலிருக்கும்
ஜூஸ் கடைக்கும்
அதற்கு எதிரிலுள்ள
பூக்கடையை ஒட்டியிருந்த
பெட்டிக்கடைக்கும் அவரை
ஒரு மாதத்திற்கு
உடன் அழைத்துச் சென்றேன்
பார்த்துக் கொண்டிருந்த அவர்
ஒரு நாளில்
ஆம் என தலையசைத்தார்
நிழலில் ஒதுங்கி நிற்போமென
வேப்பமரத்தடிக்கு
அழைத்துச் சென்றவர்
மரத்தின் நிழலோடு நிழலாகி
அவிழ்ந்து விட்டார்
*****
பகலாகிப் போன இரவுகளுக்கு
பழக்கப்படுத்தியவள்
படுத்துத் தூங்கிவிட்டாள்
விழிகளில் எரிச்சலோடு
ஏங்கித் திமிரும் கண்களோடு
நான் விழித்திருக்கிறேன்.
எனக்குத் தெரியும்
கண்திறந்து
மீண்டும் வரமாட்டாள்
என் கண்களுக்கும்
அது தெரியும்
மூட மாட்டேன் என
அடம்பிடித்து அழுகிறது
விடியும்வரை
*****
என்னருகில் உன்சாயலில்
யாரோவொருவர்
வரும் சமயமெல்லாம்
பயம், தயக்கம்,,,
கண் திரும்பும்போதெல்லாம்
கண்ணால் குட்டிய நீ
என் கண் திரும்பும்போது
குட்டுவதற்கு
இப்போது இல்லை
உன் வார்த்தைகளால்
உன்னைப் போல்
வருடம் கழித்து
வேறொருவர் அழைக்கும் போது
வலியின் வேதனை
சுருக்கிப் பிழிகிறது
வா எடுப்போம்..
வா ஒரு நகல் போடுவோம்..
வா என் குருதி நிறத் துணி மூடிய
தெர்மாகோல் பலகையில்
பின் போட்டு ஒட்டுவோம்..
வார்த்தைக் கோர்வைக்காகவே
அழைக்கிறேன்
வந்து விடாதே..
வந்தால் நீர் கோர்த்துவிடும்
இரண்டு கண்களிலும்.
*****
ஒரு சோடி அணில்கள்
பார்வை மயக்கத்தில்
ஊடல் அகன்று
கூடல் கொள்ள
அடித்திட்ட தந்தி..
தூதாக தவழ்ந்து பிரண்டு
மின் கம்பத்தை
நாணச் செய்ய
குறுஞ்சிரிப்புடன்
விழுந்தது கம்பம்..
*****
Comments
Post a Comment