எழுத்தாளராதல் எளிது -அருண் நா



எழுத்தாளராதல் எளிது!

இன்று தமிழ் இலக்கிய உலகில் எழுத்தாளராகுதல் அத்தனை எளிதல்ல. ஆனால், எவன் உதவியுமின்றி எவனுக்கும் வாழ்த்துமடல் வாசித்துக் கொண்டிருக்காமல். தன் சுயத்துடன் எழுத்தாளராவதற்கு, அதுவும் இந்திய அரசின் புத்தக வெளியீட்டு நிறுவனத்தில் எழுத்தாளராக அறிமுகமாக ஓர் அரிய வாய்ப்பினை வழங்குகின்றது ஒன்றிய அரசு.

"பிரதமர் இளைய எழுத்தாளர்" என்ற திட்டத்தினை இந்திய அரசின் கல்வி அமைச்சகம் அறிவித்து இந்தியா முழுக்கவுமிருந்து 75 எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களின் நூல்களை தேசியப் புத்தக அறக்கட்டளையின் மூலம் வெளியிட்டு வருகிறது. கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து தமிழ் மொழிக்காக மூவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார்கள். கடந்த ஆண்டே எழுதலாம் என்றிருந்தேன். ஆனால், கடந்த ஆண்டிற்கான பொருண்மை “மறக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள்.”

தேர்வு செய்யப்பட்ட நூல்களின் தலைப்புகளை நீங்கள் கவனித்தால் பேசப்படாத அம்பாள்களுக்காகவும் அத்திம்பேர்களுக்காகவும் பேசினால் தேர்வாவோம் என்று சுதந்திர வேள்வியில் பல பக்தர்கள் குதித்துவிட அஃது என் வழியல்ல என்று ஒதுங்கிக் கொண்டேன். கடந்த ஆண்டு தமிழ் மொழியிலிருந்து முதல் இடத்தில் தேர்வு செய்யப்பட்ட எழுத்தாளர் சுகானாவின் டாக்டர் எம்.இ.நாயுடு குறித்த நூலினை வாசித்தேன். தேர்வான மூவரில் இரண்டு நூல்கள் வெளியாகியுள்ளன. முதலிடம் பிடித்த நூல் நல்ல உழைப்பினைப் போட்டு உருவாக்கப்பட்ட நூல் அவர்க்கு என் வாழ்த்து. இரண்டாமிடம் பிடித்த பட்டிமன்றப் பேச்சாளரின் நூலினை வாசிக்கவில்லை. பொதுவாகவே இந்தப் பட்டிமன்றப் பேச்சாளர்கள் தங்களின் சிற்றறிவினைக் கொண்டு தமிழ் ஆய்வு செய்யப் போகிறேனென்று வரும்போது, வையாபுரிப் பிள்ளை குறித்து பாவாணர் சொல்லிய வரிதான் எனக்கு நினைவுக்கு வரும். “நரி தன் வாளால் கடலை அளக்கப் போவது போல, இந்தப் பயல்கள் எத்தனை துணிச்சலாகத் தமிழ் ஆய்வு செய்தேன் என்று அறிவித்துக் கொள்வதைப் பார்க்கும் போது சிரிப்புதான் வருகிறது.”

இருப்பினும் இரண்டாம் எழுத்தாளராகத் தேர்வு செய்யப்பட்டவரின் அந்த நூல் பாராட்டுவிழாவெல்லாம் கண்டது. பாராட்டு விழா என்பதில் சிக்கலில்லை. ஆனால் முதலிடம் பிடித்துத் தேர்வான எழுத்தாளர் அமைதியாக இருக்கும்போது விழாவில் “தமிழில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே நூல் ஒரே நூல்!” என்று ஓராயிரம் முறை பொய்யான ஒன்றைப் பரப்பியதும். அதனைக் கண்டும் கள்ளமெளனம் காத்து அப்பாராட்டை ஏற்றுக்கொண்டதும் வேடிக்கையானது. இல்லாத பெருமைகளை வலிந்து சுமக்கும் மடமையில் இருந்து இனியேனும் தமிழர் வெளிவர வேண்டும். அஃதொருபுறமிருக்கத் தேர்வு செய்யப்பட்ட இருவரும் எழுதத் தேர்ந்தெடுத்த வீரர்களின் பெயர்களைத் தேடிப் பாருங்கள். மற்றவை நான் சொல்லத் தேவையில்லை.

இனி இவ்வாண்டிற்கு வருவோம். பிரதமர் திட்டத்தின் இரண்டாவது ஆண்டிற்கான அறிவிப்பு வெளிவந்தது. இந்த ஆண்டிற்கான பொருண்மை, “சனநாயகம்.” அடடா! எழுதியே ஆக வேண்டுமெனத் தமிழ்ப்பண்பாட்டு மரபின் சனநாயகத்தன்மையைப் பிற மதங்களையும் தம்மதம் போல் பேணிக்காக்கும் பன்மைத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டு சனநாயக சமத்துவச் சமூகம் குறித்து 10000 சொற்கள் கொண்ட 82 பக்க வரைவை நான் எழுதி அனுப்பினேன்.

அதன்பின் மூன்று கட்டத் தேர்வுகளைக் கடந்து நேர்காணலுக்கு தில்லிக்கு அழைத்திருந்தார்கள். பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்த தில்லி சென்றபோது மீண்டும் பாராளுமன்றத்தில் அரசியலாளராய் மட்டுமே கால் பதிக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். ஆனால், அதற்குள் என்னை எழுத்தாளராக்க இந்திய அரசு கொடுத்த இவ்வாய்ப்பு என்னை தில்லியை நோக்கி அழைக்க. ஒவ்வொரு மொழியில் இருந்தும் பல இளம் எழுத்தாளர்கள் நேர்காணலுக்காக வந்திருந்தார்கள். தமிழ் மொழிக்காக ஐந்து பேர் அழைக்கப்பட்டிருந்தார்கள். நம்மவர்களுக்குத் தமிழ்ப்பற்று எந்த அளவிற்கு உள்ளதோ அதே அளவு ஆங்கில அறிவும் அவசியம் என்று எப்போதும் நான் சொல்வதுண்டு. என் தம்பி தங்கைகளுக்கு நான் சொல்லும் ஒரே அறிவுரை ஆங்கில அறிவைத் தொடர்ப்பயிற்சியின் வாயிலாக அடையுங்கள் என்பதே. ஏனெனில், நேர்காணலில் தேர்வுக்குழுவில் இருந்த அறிஞர்கள் அனைவரும் ஆங்கிலத்திலேயே உரையாடினார்கள்.

ஆங்கிலம் தெரியாமல் தடுமாறிய நம்மவர்களில் சிலர், சில நிமிடங்களிலேயே வெளியேற்றப்பட்டனர். என் நேர்காணல் சரியாக 20நிமிடத்திற்கு மேல் சென்றது. சனநாயகம் குறித்த என் பார்வையைத் தமிழ் இலக்கிய மரபில் தொன்மமாக உறைந்திருக்கும் சனநாயகக் கூறுகளை சங்ககாலம், இடைக்காலம், நவீனகாலம் எனப் பிரித்து என்னைக் கேள்விக் கணைகளால் துளைத்து எடுத்தது தேர்வுக்குழு. இருப்பினும் எந்த சமரசமுமின்றி என் கருத்துகளை மிகத் தெளிவாக தேர்வுக்குழுவிடம் முன்வைத்தேன். இருப்பினும் சில நிமிடங்களில் நேர்காணல் விவாதமாக மாறியதும் நடந்தேறியது. ஆக, நான் தேர்வாவது குறித்த எந்த சிந்தனையும் எனக்கில்லை. என் கருத்தை எவ்வித சமரசமுமின்றி வைத்துள்ளேன். வெற்றி தோல்வியெல்லாம் பொருட்டல்ல என்ற மனநிலையிலேயே தில்லியில் இருந்து திரும்பினேன்.

அதன்பிறகு, தமிழ்நாடு அரசின் திட்டப் பணியில் கவனம் இருந்ததால். அந்த வரைவு குறித்த நினைவே எனக்கில்லை. இந்நிலையில் பிப்ரவரி 6ஆம் தேதி இரவு 9 மணிக்கு ஓர் அழைப்பு வந்தது. எதிரில் பேசியவர் “My heartiest congratulations to you. You have been selected as the PM Yuva Author. You have to be here in Delhi on the 11th to attend an interaction session with the president of India.” என்றார். நான் நிதானமாக Thank you என்றேன். தமிழ் மொழிக்கான இவ்வாண்டிற்கான முதல் எழுத்தாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அன்றிரவு நினைத்துப் பார்த்தேன். தமிழ் இலக்கிய உலகில் ஒருவன் நுழைய விரும்பும் போது புதுமைப்பித்தன் போல் ஜெயகாந்தன் போல் தானும் சுயம் மிக்க ஓர் எழுத்தாளனாக வேண்டுமென நினைத்தால் அது நடக்கவே நடக்காது. ஏனெனில் வளைந்தே பழக்கப்பட்ட முதுகெலும்பில்லாத இக்கூட்டத்திற்கு நிமிர்ந்தே நிற்பவனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மனமிருக்காது.

அப்படி வளைந்துகொடுத்தே வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் அல்லு சில்லுகளுக்கும் நாக்கு வியாபாரிகளுக்கும் சுயத்தை எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல் சுயமரியாதையுடன் நிமிர்ந்து நின்று தன் அறிவை ஆயுதமாக்கி நிற்பவனைக் கண்டால் ஒருபோதும் ஆகாது. இந்தப் பயல்களை நீங்கள் கவனித்தால் ஏதோ உலகில் சகல சாதனைகளையும் தான் மட்டுமே படைக்கப் பிறந்ததாகவும் மற்றவன் எல்லாம் இவன்களை வாழ்த்த மட்டுமே பிறந்தவர்களாகவும் நினைத்துக்கொள்வான்கள். ஒரு நல்ல படைப்பாளன் என்பவன், தான் அடைந்த அத்தனை உயரங்களையும் தனக்குப் பின் வரும் தலைமுறையைக் கரம் பிடித்து வழிகாட்டி அதே உயரங்களில் அமரச் செய்து அழகு பார்த்து சமூக மாற்றத்திற்குக் காரணமாக இருப்பவனே தவிர, தான் மட்டும் உயரங்களை அடைந்து மற்றவர்களைத் தனக்கு வாழ்த்து மடல் மட்டுமே வாசித்துக் கொண்டு இருக்கச் செய்பவனல்ல. யாருக்கும் தெரியாமல் மிகச் சாதாரணமான ஒன்றை செய்து அதனை ஏதோ பெருஞ்சாதனை போல தனக்குத்தானே பாராட்டுவிழா நடத்துபவன் அற்பன். அவனை வரலாறு கரைத்து உமிழ்ந்துவிடும்.

தில்லிக்கு குடியரசுத்தலைவர் நிகழ்விற்காக சென்ற போது ஐந்து நட்சத்திர விடுதியில் நான்கு நாட்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தது இந்திய அரசு. முதல் நாள் இரவு உணவுக்கூடத்தில் பலவகை உணவுகளைக் கண்டதும் பசிக்குக் காசில்லாமல் தண்ணீர் அதிகம் குடித்து உணவருந்திய என் பழைய நாட்களை நினைத்துப் பார்த்தேன். என்னைப் போல் அறிவும் திறமையும் உழைப்பும் சுயமரியாதையும் மட்டும் கொண்டு வறுமையில் உழலும் பலரைக் கண்டிருக்கிறேன். நான் அடைந்த அத்தனை உயரங்களிலும் எனக்குப் பின் அந்தக் கூட்டத்தையே அழைத்துச் சென்று அமர வைப்பதை ஒரு தொடர் இயக்கமாக செய்து வருகிறேன். இதோ எளிதாக எழுத்தாளராக உங்களை நான் அழைக்கிறேன். அடுத்த ஆண்டு வழங்கப்படும் பத்தாயிரம் சொற்களில் ஒரு வரைவைத் தயார் செய்யுங்கள். உங்களை வழிநடத்த நானிருக்கிறேன். குடியரசுத் தலைவருடன் உரையாடவும், உங்களின் நூலைப் பிரதமர் வெளியிடவும் அரியதொரு வாய்ப்பை உங்களுக்கு நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள். சுயத்துடன் நிமிர்ந்தே நின்று புதுமைப்பித்தன் போல் ஜெயகாந்தன் போல் நீங்களும் இலக்கிய உலகில் இடம்பெற இந்திய அரசு உங்களுக்குக் கொடுக்கும் இவ்வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்துங்கள்.

அவ்வகையில், என் வெற்றி ஒவ்வொன்றும் ஒரு செய்தி என்று என்னால் அழுத்தமாய்ச் சொல்ல முடியும். ஏனெனில், தமிழ்ப்பேச்சுலகில் உயரங்களை அடைய என் வருகைக்கு முன்புவரை ஒரே வழி மட்டுமே இருந்தது. அது குனிந்து, கும்பிடு போட்டுக் காலில் விழுந்து உயரங்களைப் பிச்சையாய்ப் பெறும் வழி. அவ்வழியைப் பின்பற்றினால் கழகங்களும் பட்டிமன்ற மேடைகளும் நீங்கள் பிதற்றும் அனைத்திற்கும் புலமை அங்கீகாரம் தரக் காத்திருக்கும். அதைவிடுத்து எவன் காலிலும் விழாமல் எவனுக்கும் குனியாமல் நிமிர்ந்தே சுயமரியாதையுடன் நின்றால் நீங்கள் ஓரங்கட்டப்படுவீர்கள். உங்களின் அறிவு மேதாவித்தனம் என்று பட்டம் கட்டப்படும். உங்களின் நிமிர்வு ஆணவம், திமிர் என்று அடையாளப்படுத்தப்படும். இந்தப் பயல்களின் அத்தனை விதிமுறைகளையும் தகர்த்தெறிந்து புதியதொரு பாதையை நான் போட்டிருக்கிறேன். அப்பாதையை உருவாக்க நான் கொடுத்த விலை புகழ் அளவிலும் பணம் அளவிலும் மிகப் பெரிது. இருப்பினும் சுயமரியாதையுடன், நிமிர்வுடன் ஒருவனால் பேச்சுத்துறையில் சிகரத்தைத் தொட முடியும் என்பதனை நான் நிகழ்த்திக் காட்டியிருக்கிறேன். நீங்கள் நிமிர்ந்தும் சுயத்துடனும் பேச்சுலகில் உயரங்களை அடைய உங்களுக்கான பாதை காத்திருக்கிறது. பயணியுங்கள். இனி பேச்சில் இருந்து எழுத்துலகிற்குச் செல்கிறேன். அங்கும் பாதையொன்றை அமைக்க என் முதல் அடியை எடுத்து வைக்கிறேன். வளைந்தும் குனிந்தும் தாவித்தாவியும் செல்லும் தவளைகளாய் இல்லாமல் நிமிர்ந்து நடக்கும் யானையாய் அப்பாதையில் நானும் என் பின்னால் அறிவும் சுயமரியாதையும் கொண்ட என் தோழர்களும் நடந்து வருவார்கள். தில்லி நிகழ்வை நினைக்கும் போதெல்லாம் நான் எழுதிய கதை ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது.

கானகம் ஒன்றில் பல நாள் போர் தொடுத்த யானை ஒன்றுண்டு. அந்த யானை ஒருபோதும் மணிமகுடத்தைக் குறித்துப் பொருட்படுத்தியதே இல்லை. திடீரென கானகத்திற்குள் நுழைந்த கிழட்டு நரி இளம் யானையைப் பார்த்து, வளைந்தால் கானகத்தில் எளிதாய் மணிமகுடம் கிடைக்கும் என்றதாம். நிமிர்ந்தே நிற்கும் யானை வளைந்தே வாழும் நரியைப் பார்த்து, குனிந்து கிடைக்கும் மணிமுடியை விட நிமிர்ந்தே வாழும் சுதந்திரம் போதுமென்றதாம். வளைந்தே பழக்கப்பட்ட கிழட்டு நரி எல்லோர் கால்களிலும் விழுந்து உயரத்தை நோக்கிய தன் பயணத்தைத் தொடங்கியது. பல போர்களில் யானையிடம் வீழ்ந்த நரிக்கு திடுமென மணிமகுடம் ஒன்று கிடைக்க நட்பாய் இருந்த யானையைப் பார்த்து நான் வளைந்து வாங்கினாலும் மகுடம் வாங்கியவன் என்றதாம்.அடுத்த ஆண்டே நிமிர்ந்தே நிற்கும் யானைக்கு மகுடம் வந்ததாம். அன்று தொடங்கி கிழட்டு நரி ஒருபுறமும், இளம் யானை மறுபுறமும் திசை மாறி நகர்ந்தன. பலநாட்கள் கழித்துத் திடீரென நரியும் யானையும் சந்திக்க, புதிதாய் வளைந்து வாங்கிய மணிமுடியின் மிதப்பில் நரி யானையைக் கண்டது. யானை எந்தச் சலனுமிமின்றி நிமிர்ந்தே புன்னகையுடன் விடைபெற்றது. அதுநடந்த அடுத்த ஆண்டே யானை நிமிர்ந்தே அந்த மணிமுடியையும் சூடியது. கானகத்தின் அரசவையின் நடுவில் சிங்கம் அமர்ந்திருக்க அருகில் யானை சமமாய் அமர்ந்திருக்க எதிரில் கிழட்டு நரி நின்றுகொண்டிருந்தது. யானை புன்னகைத்தது. நரி வயிறெறிந்தது. நரிகளின் காலம் முடிந்தது. இனி யானையின் காலம். கொம்பன் அரசவையில் இருந்து நிமிர்ந்து நடந்தான். கிழட்டு நரி குனிந்து நடந்தது. மீண்டும் கொம்பனும் கிழட்டு நரியும் சந்திக்கும் காலத்தைப் பொறுத்திருந்து பார்ப்போம்.”

இதோ அறிவை மட்டுமே நம்பி, பேயாய்ப் படித்து அசுர உழைப்பை மட்டும் கொடுத்து வாழ்வின் சகல துயரக் கடல்களிலும் மூழ்கி மீண்டும் எழுந்து நின்று. எவன் காலின் கீழும் வீழ்ந்து கிடக்காமல், பார்ப்பனியத்திற்கு முட்டுக்கொடுத்தே வாழ்க்கையை ஓட்டாமல், விருதை வாங்கிக் கொண்டு தகுதியை வளர்த்துக் கொள்ளாமல், தகுதியை வளர்த்துக் கொண்டு சுயமரியாதையுடன் விருதுகளை நம்மை நோக்கி வரவைத்துப் பாராளுமன்றத்திலும் இன்று குடியரசுத் தலைவர் மாளிகையிலும் உங்களில் ஒருவனாய் நான். எந்தக் கருஞ்சட்டையை இந்த சில்லறைகளெல்லாம் புறக்கணிக்கவும் ஒதுக்கவும் செய்ததோ அதே கருஞ்சட்டையுடனும் நிமிர்வுடனும் குடியரசுத் தலைவருக்கு அருகில் அமர்ந்திருக்கிறேன். என்னை, என் சுயத்தை, என் நிமிர்வை ஒதுக்கியவனும் வெறுத்தவனுமெல்லாம் என் முன்னால் பல்லை இளித்துக் கொண்டு நின்று வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறான்கள். என் இடத்தில் அவர்களாலும் வர இயலும் ஆனால் அப்படி வந்தாலும் முதுகெலும்புடன் நான் அமர்ந்தது போல் இவர்களால் அமர இயலாது. சமத்துவத்திற்காக சனநாயகத்திற்காக என் குரலை என் முதல் நூலில் முன்வைக்கிறேன். நம் தமிழ்ப் பண்பாட்டு மானுடவியல் மரபில் ஆழப்புதைந்திருக்கும் சனநாயகத்தின் வேர்களைத் தேடிய என் பயணம். சனநாயகத்தின் மீது புத்தொளியை வீசி சமூகத்தில் ஓர் உரையாடலையும் மாற்றத்தையும் நிகழ்த்துமென நம்புகிறேன்.

இந்த நிலைக்கு நான் வரக் காரணமாய் இருந்த என் ஆசிரியர் வெ.சேகரை இத்தருணத்தில் நினைத்துக் கொள்கிறேன். நான் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும்போது அவர் எப்போதும் என்னை வாழ்த்தும் “மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்” என்ற வாழ்த்தை நினைத்துக் கொண்டேன். மறைந்த அவருக்கு என்றும் என் அன்பும் நன்றியும் உரித்தாகுக. நான் உயரங்களை அடையவே மாட்டேன் என்று ஆழமாய் நம்பிய அத்தனை அன்பர்களையும், அறிவும் சுயமும் நிமிர்வும் ஒருபோதும் வெல்லாது என்ற அற்பர்களையும் நினைத்துக் கொள்கிறேன். அடுத்த ஆண்டு மீண்டுமொரு முறை என் நூலுடன் குடியரசுத் தலைவரை அல்லது பிரதமரை சந்திப்பேன். என் வாழ்வில் முதல் முறை குடியரசுத் தலைவரான அப்துல் கலாமை சந்தித்த போது நான் பள்ளி மாணவன். இன்று இரண்டாவது முறை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்திக்கும் போது நான் ஓர் ஆய்வாளன், எழுத்தாளன். அடுத்தமுறை சந்திக்கும்போது நான் யாரென்பதனைக் காலம் காட்டும்.

இதோ குடியரசுத் தலைவருக்கு அருகில் நான் அமர்ந்த இருக்கை காலியாக இருக்கின்றது. அதில் எழுத்தாளராய் அமர முதுகெலும்புள்ள, நிமிர்ந்தே நிற்கும் தோழர்களை வரவேற்கிறேன். நான் அடைந்த புகழும் அடையவிருக்கும் புகழும் சகலருக்கும் சாத்தியமாவதே சனநாயகம் என நம்புகிறேன். எல்லோரும் எழுத்தாளராகலாம். அதற்கு நீங்கள் எழுதுதல் மட்டுமே அவசியம். வாருங்கள், எழுதுங்கள், உயருங்கள். வாழ்வில் ஒன்றை மட்டும் மறக்காதீர்கள் அறிவே வெல்லும்! அறிவே ஆளும்! இஃது அறிவின் காலம். வெல்வோம்! ஆள்வோம்!

-அருண்.நா

13.02.2024

மாலை 06.43


Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு