தாயளி - பிரகாஷ்

 தாயளி -  பிரகாஷ்


     பதறியடிச்சு பிரகாசும் சரத்தும் வீட்டுலருந்து கௌம்பி ரேணுகா ஸ்கூலுக்கு நடந்து போனானுக. பள்ளர்த்தெருவ தாண்டி மேல செக்கடி வந்தானுக. மேல செக்கடில டீக்கடை போட்டுருக்கவனுக எல்லா செட்டிமாரு, கோனார், நாடாக்குமாரு சாதிக்காரனுக. அந்த மேல செக்கடியில பள்ளப்பெயலுகளும் பறப்பெயலுகளும் டீக்கடை மட்டும் இல்ல பலசருக்கு கட எதுவும் போட முடியாது. இன்னைக்கு வரைக்கும் இதே நெலமதா. கீழச்செக்கடியிலதா இப்ப ஜான்சன் மொபைல் கட போட்டுருக்கா. இவெ பறப்பெயன். கீழச்செக்கடிலருந்து மேல செக்கடிக்கு போற வழியில ராஜன் ஒருத்தரு மொபைல் கட போட்டுருக்காரு. இவரு மேலூருல இருக்கற பள்ளத்தெருக்கான். எல்லா தெரு சாதிக்காரனு டீக்கடையில டீ குடிப்பானுக வடை வாங்கி திம்பானுக.

     இவனுக மேல செக்கடிக்கு வந்து செட்டிமார்தெரு வழியா போகும்போது காந்தி செல கை கும்பிட்டு வரவேற்றது. காந்தி செலைக்கு பின்னாடி வருசையா அரசியல் கட்சி கொடி கம்பம் இருக்குது. விடுதலச் சிறுத்த கொடி புதிய தமிழகம் கொடி அந்த எடத்துல பறக்க முடியாது. நேத்து கட்சி தொடங்குன விஜயகாந்த் கட்சி கொடி கூட இருக்குது. இவுங்க கொடிய அந்த எடத்துல பறக்க விட முடியாது. விடுதலச் சிறுத்த கொடி ஆர். சி. தெருவுல பறக்குது. புதிய தமிழகம் கட்சி கொடி பள்ளர் தெருவுல பறக்கும். பொது எடத்துல எல்லா கட்சிக் கொடியும் பறக்குறது மாதிரி இவுங்க கொடி பறக்காது. புதுப்பட்டி பஸ்டாண்டுல கூட இதே நெலமதா. விடுதலச் சிறுத்த கட்சிக்கொடி புதிய தமிழகம் கட்சிக்கொடி பஸ்டாண்டுல பறந்தப்போ கொடிக்கம்பம் பெரச்சனையில போலீசுகாரங்க இவுங்க ரெண்டு பேரோட கட்சிக்கொடியவும் எடுக்கச் சொல்லிட்டாங்க. எவ்வளவுதா பறையனும் பள்ளனும் அடிச்சுக்கிட்டு கெடந்தாலும் மத்த சாதிக்காரங்க இவனுக்கெட்ட சண்டைக்கு பயந்துகிட்டு வரலாட்டாலும் இவனுகளால மத்த அரசியல் கட்சி கொடி பறக்கிற எடத்துல இவனுக கொடிய பறக்க விட முடியல. 


     பிரகாசு அந்த கொடிய எல்லாத்தையும் பள்ளிக்கொடத்துக்கு போற வேகத்துல ஒரு பார்வை பாத்துட்டு தலைய தெக்காம திருப்பி மாவாட்டுறதுக்கு பெரிய ஒரு உருண்ட கல்ல பாத்தா. அந்தக் கல்லச் சுத்தி செவப்பு வெள்ளையில கோடு கோடா பெயிண்ட் அடிச்சிருந்தாக. இப்ப அந்தக் கல்லுல பிள்ளையார் செல இருக்கு. இந்தச் செல எப்பிடிடா இங்க வந்துச்சுன்னு மனசுக்குள்ள நெனைச்சுகிட்டு "சீக்கிரமா வாடா"னு பிரகாசு சரத்துக்கு முன்னாடி ரெண்டு எட்டு நடந்து போனா.

சரத்தும் பிரகாசுக்கு ஈடு கொடுத்து நடந்து போனா. ஒன்பது அஞ்சுக்கு காலையில பிரேயர் தொடங்கிடும். எட்டு முப்பதுக்குள்ள வகுப்புக்குள்ள போயிரணும். இவனுக ரொம்ப லேட்டா வந்துட்டானுக. எட்டு முப்பதுக்கு அப்புறம் எவெ எவெ லேட்டா வந்தானோ அவனுக எல்லாத்தையும் தலைமையாசிரியர் அறைக்கு பக்கத்துல நிக்கனும். தலைமையாசிரியர் ஒம்பது மணிக்கு வந்து எவெல்லா லேட்டா வந்தானோ அவனுகள மூங்கில் கம்பால கையில அடிச்சு ரெண்டு வார்த்தையால வஞ்சு வகுப்புகுள்ள அனுப்புவாரு.


     இவனுகளுக்கு நேரமாச்சுனு நடக்கவும் ஓடவுமா நாய்க்கமார் தெரு வழியா வந்து பள்ளிக்கொடத்துக்கு சின்ன கேட்டு வழியா உள்ள நொழஞ்சானுக. நேரா தலைமையாசிரியர் அறைய பாத்தானுக. அங்க காக்கா, சதிசு கவட்ட இவனுகளோட அபிமன்யு பாரதி நின்னுகிட்டு இருந்தானுக. காக்கா சதிசு கவட்ட மூணு பேரும் பள்ளத்தெருகாரனுக.  அபிமன்யு பாரதி இரண்டு பேரும் நாய்க்கமார்தெருகாரனுக. இவனகளும் அவனுக நின்னுகிட்டு இருந்ததா பாத்த நிம்மதில அவனுகளோட போய் சேந்துகிட்டானுக. கூட ஆளுக இருக்காங்கன்னு. எப்பயும்போல ஒன்பது மணிக்கு தலைமையாசிரியர் நல்லா பெருவிரலு தண்டி மூங்கில் கம்போட வெளிய வந்தாரு. மாணவர்கள அடிக்கும்போது மூக்கு கண்ணாடியை கழட்டி சட்ட பைக்குள்ள வச்சிகிருவார். இவனுக ஏழு பேரும் லேட்டா வந்தத பாத்ததும் கம்போட இவனுக பக்கம் வந்து "ஏன்டா நாய்கா சீக்கிரம் வர முடியாதா"னு சொல்லிட்டு "பாரதி இங்கே வா"னு கூப்பிடு கையை நீட்ட சொல்லி வேமாவும் இல்லாம மெதுவாவும் இல்லாம கம்ப தூக்குனவாசில அடிச்சாரு. அவனுக்கு என்னமோ அந்த அடி வலிக்கிறது மாதிரி "ஆ" னு கைய ஒதறுனா. அதேமாதிரி இன்னொரு கையில அடிச்சிட்டு "சீக்கிரம் வரனு"னு சொல்லி அனுப்புனாரு. அடுத்து அபிமனியவ கூப்பிட்டாரு. மஞ்சப்பை முதுகுல தொங்க போட்டு நொட்டாங்கைய நீட்டுனா. அந்தக் கம்ப வேகமாக தலைக்கு மேல தூக்கி அடிச்சாரு. அவனுக்கு வலி. அந்தக் கைய பொச்சுல தடவிட்டு சோத்தாகைய காட்டுணா. அதுலையும் அதேமாதிரி அடிச்சாரு. பாரதிக்கு விழுந்த அடியை விட இவென கொஞ்சம் அதிகமாத்தா அடிச்சாரு. இவெ அப்பாவினால அப்பிடி அடி. பாரதி தலைமையாசிரியருக்கு சொந்தக்காரன். அதனால அவனுக்கு வலி தெரியாம அடி.


    அவனுக ரெண்டு பேரையும் அனுப்பிவிட்டு மூஞ்சிய உர்ருனு வச்சுக்கிட்டு "தாயளிகள் என்னடா லேட்டா வர்றீங்க"னு காக்காவ கூப்டு கைய நீட்ட சொல்லி கம்ப ஓங்கி வானத்த தொடுற ஒசரத்துக்கு தூக்கி அடிச்சாரு. அடுத்த நிமிசமே "ச்ச்ச் ஆ.ஆ"னு கத்துனா. மொத அடி எப்பிடி அவனுக்கு விழுந்துச்சோ அதேமாதிரிதா மத்தவனுகளுக்கு விழுந்துச்சு. அடிச்சிட்டு "வகுப்புக்கு போங்கடா. தாயளிகளா"னு வஞ்சு அனுப்புனாரு.


    "என்னடா இப்பிடி வையிரா" னு பிரகாசு சரத்துட்ட சொல்லிக்கிட்டே மாடிப்படி ஏறி வகுப்புகுள்ள போனனுக.  


    "அதானே இப்பிடி  வையிரா"னு சரத்து காக்காவ பாத்து சொல்லவும் காக்கா எதுவும் சொல்லாம அவனுகளோட போனா. காக்கா பிரகாசு கவட்டை மூணு பேரும் பத்தாவது பி கிளாஸ் போனானுக. சரத்து எ கிளாசுக்கு போனா. பத்தாங் கிளாச எ.பினு ரெண்டு கிளாச பிரிச்சிருக்காங்க. நல்லா படிக்கிறவங்களா எ கிளாசுனு சுமாரா படிக்கிறவங்களா பி கிளாசுனு. சரத்து நேரா லூர்து பக்கத்துல ஒக்காந்துகிட்டு


"ஏய்; நீ எப்படி வந்த"னு கேட்டா.


    "நா மொதல்ல வந்துட்டே. ஒன்ன பாத்தே நீ சோறு தின்னுகிட்டு இருந்த. அதா நா வந்துட்டேன்".


    "ஏடி சொட்ட தலைய என்ன சொன்னான் தெரியுமா? இப்ப"


    "என்ன சொன்னா"


    "பள்ளிக்கொடத்துக்கு லேட்டா வந்ததுனால எங்கள அடிச்சிட்டு தாயளிகளா லேட்டா வராதீங்கன்னு சொல்லுறா"


    "தாயளினா சொன்னா"


    "ஆமா. இத காக்காட்ட சொன்னதுக்கு அவெ எதுவும் பேசாமவாரா. அவெ எப்பிடி தாயளினு சொல்லலா"


   "காக்கா எதும் சொல்லலையா. இருடா அவள வச்சுக்கிற. இப்ப பேச முடியாது. ரெண்டாவது ப்ரீட் அவெ ப்ரீடுதா.  கம்பெனி க்ளாசுதா நடக்கும். அப்ப கேக்குறே"னு சொல்லும்போது பிரேயருக்கு மணி அடிச்சது. எல்லோரும் வருசையா பிரேயருக்கு பேஸ்கட்பால் கிரவுண்டுக்கு போய் நின்னுகிட்டு பிரேயர் முடியவும் வகுப்புக்குள்ள போனானுக. மொத வகுப்பு ராணி டீச்சர் வகுப்பு. பி கிளாசுக்கு வந்தாங்க. எ கிளாசுக்கு வர்ணி சார் வந்துட்டு  போனாரு. மொத வகுப்பு முடிஞ்சதும் ரெண்டாவது ப்ரீயடுக்கு எ கிளாஸ் எல்லோரும் கம்பைன் க்ளாசுக்கு பி கிளாசுக்கு வந்துட்டானுக. 


      இவரு கையில பத்தாம் வகுப்பு இங்கிலீசு புத்தகத்தோட வகுப்புக்கு உள்ள வந்தாரு. அதுக்கு மென்னவே லூர்து வேகமாக வந்து காக்கா பக்கத்துல ஒக்காந்து "ஏலோ அவெ தாயளின்னு சொன்னானா"னு கேட்டான். காக்கா தலையா ஆட்டிகிட்டு "ஆமா"னு சொன்னா. "நீ எதுவும் சொல்லலையா"னு லூர்து கேட்கும்போது அவரு உள்ள வந்துட்டாரு. ரெண்டு கிளாஸ் பெயலுகளும் பொண்ணுகளும் ஒரே வகுப்புல ஒக்கார பெஞ்சு இல்ல. எ கிளாசுக்காரன் பாதிபேரு கீழதா ஒக்காந்தானுக.

இவர் வந்ததும் எல்லா அமைதியானானுக. வந்தவரு சேர்ல ஒக்காந்துட்டு "இன்னைக்கு ரோட் நாட் டேக்கன் போயம் எடுக்க போறே. அமைதியா கேளுங்க"னு சொல்லிட்டு அந்த போயம் பத்தி அவரே பேசிகிட்டு இருக்கும்போது காக்காவும் லூர்தும் கவட்டையும் இவனுகலுக்குள்ள மெதுவா பேசிக்கிட்டு இருந்தானுக.  இவனுகள பாத்ததும் "அங்க என்ன சத்தம். டேய் எந்திரிங்க டா"னு இவனுகள பாத்து கத்துனாரு.


        மொதல்ல காக்காவும் லூர்து மட்டும் எந்திரிச்சானுக. அவரு "டேய் நீ எந்திரிக்க மாட்டியா"னு கவட்டையை பாத்து சொன்னாரு. அவனு எந்திரிச்சு நின்னா

        "ஏன்டா நா இங்க பாடம் எடுத்துக்கிட்டு இருக்கேன். அங்க என்ன பேச்சு"னு கேட்டாரு. இவனுக எதும் பதில் பேசல. "மரமண்டைகளா பதில் சொல்லுறானுகளானு பாரு"னு மறுபடியும் "தாயளிகளா க்ளாசு முடியிறவரைக்கு நின்னுகிட்டுதா இருக்கணும்"னு சொல்லிட்டு பாடம் எடுக்க ஆரம்பிச்சாரு. பள்ளப் பறப்பெயலுகளதா தாயளிகளானு வைவாரு.

 

    கீழ ஒக்காந்திருந்த பிரகாசும் சரத்தும் லூர்தையும் காக்காவையும் பாத்தானுக. அவனுகளும் இவனுகள பாத்தானுக. எதும் பேசிக்கல. காக்காவுக்கு அடுத்து வெர்மல் ஒக்காந்திருந்தான் சிரிச்சுகிட்டே. வகுப்பு முடிஞ்சது. வாத்தியார் வகுப்பு விட்டுப் போகவும் "டேய் வாங்கடா. ஏ எங்கள தாயளிகனு வைரீங்கன்னு கேப்போம்"னு லூர்து எந்துரிச்சு காக்காவ கூப்டான்.


    காக்கா "இது எதுக்குடா வம்பு"னு சொல்லிட்டு ஒக்காந்துட்டான். அப்பிடியே ஏதாவது கேட்டுட்டா பத்தாவது முழு ஆண்டு பரீட்சை எழுத விட மாட்டாங்கன்னு அவெ வரல


      "டேய் தாயளிகளான என்னன்னு தெரியுமா. அவெ நம்ம அம்மாவ வையிரா. வைய்யாதிங்கனு சொல்லுவோ"னு லூர்து காக்காவ மறுபடியும் கூப்டான். பிரகாசும் சரத்தும் லூர்து கூட போக எந்திரிச்சானுக.


      "மாப்ள இது ஒன்னும் பெரிய வார்த்த இல்ல. சாதாரணமா திட்டுறதுதான"னு வெர்மல் சொல்லுறத காக்கா கேட்டுக்கிட்டு லூர்து கூப்டதுக்கு வரல. வெர்மலு பிள்ளைமார் தெருக்காரன். நாய்க்கர் பிள்ளைமார் ரெண்டு சாதிகாரனும் ஒரே எடத்துலதா குடியிருக்கிறானுக.


      "அவெ எங்க அம்மைய வைவா. நாங்க பாத்துகிட்டு இருக்கனுமா. நீங்க வேணா பாத்துகிட்டு இருங்கடா"னு வெர்மல பாத்து சொல்லிட்டு "வாங்கடா இனிமே வையாதீங்கனு கேப்போம்னு கூப்டா யாரும் வரமாட்டேங்கிறீங்க"னு வகுப்புக்கு உள்ள லூர்து கத்திகிட்டே வெளிய போனா. பொம்பளபிள்ளைக லூர்து சரத்த பாத்துகிட்டே இருந்துச்சுக. எது நடந்தாலும் பாத்துக்கிட்டே இருக்குறதுதா வேலபோல.

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு