தூர்வை நாவலில் கரிசல் மக்களின் பொருள்சார் பண்பாடு - பேரா.சு.பேச்சியம்மாள்

 தூர்வை நாவலில் கரிசல் மக்களின் பொருள்சார் பண்பாடு

- பேரா.சு.பேச்சியம்மாள்


ஆய்வுச் சுருக்கம்:

 மக்கள் அன்றாட தேவைகளுக்குப் பயன்படுத்துகிற பொருட்கள் பொருள்சார் பண்பாட்டினுள் அடங்கும். பண்பாட்டினைப் பொருள் சார், பண்பாடு, பொருள்சாரா பண்பாடு என மானிடவியலாளர் வகைப்படுத்துவர். புழங்குப் பொருட்களின் தன்மைகளைக் கொண்டு ஒரு சமூகத்தின் தொன்மையை உற்பத்தித் திறனை அறிவு, நுட்பத்தை கலைத்திறத்தை, தொழில்நுட்ப உத்திகளை அடையாளப்படுத்த முடியும் என்பதை கருத்தில் கொண்டு இக்கட்டுரை ஆராயப்படுகிறது.   

முன்னுரை:

 புழங்குப் பொருட்கள் என்பவை மனித வாழ்வோடு மிக நெருங்கிய தொடர்புடையவை. நம்மை சுற்றியுள்ள புற உலகம் முழுவதும் பொருள் சார்ந்தது தான் “பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்பது போல நம்மோடு தொடர்புடைய எண்ணற்ற பொருள்களும் நம் அன்றாட வாழ்வில் பின்னிப் பிணைந்து முக்கிய பங்கு வகிக்கின்றன. புழங்குப் பொருளையும் பண்பாட்டையும் பிரிக்க முடியாது. உலகில் வாழ்கின்ற அனைத்து இன மக்களும் தாங்கள் வாழ்கின்ற புவியியல் சூழலுக்கு ஏற்பத் தங்களைச் சுற்றிலும் காணப்படுகின்ற பொருட்களைப் பயன்படுத்தி தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றனர். இவற்றுள் மனிதனின் அன்றாட தேவைகளான உணவு, உடை, உறைவிடம் என்பனவற்றில் உணவே முதன்மையாக இருக்கிறது. ஆகையால் உணவுகளை உண்பதற்கு மக்கள் பயன்படுத்தி வந்த கலன்கள் பற்றி,ஆய்வதே நோக்கமாக கொண்டுள்ளது.

 திறவுச் சொற்கள்:

 கலப்பை, குலுக்கை, பனைஓலை, நாழி, மரக்கால், பெட்டி, களைவரண்டி, பன்னரிவாள், உரல், உலக்கை, புழங்கு பொருள் பண்பாடு.

 பண்பாடு என்னும் கருத்தாக்கம் மக்களின் அறிவு சார்ந்த நிலையில் ஏற்படும் எண்ணற்ற கருத்து வடிவங்களின் முழுமை ஆகும் என்கிறார் பக்தவத்சலபாரதி (1980:160). பண்பாடு என்னும் சொல் பண்படுத்துதல் என்ற சொல்லிருந்து உருவானது. இது பிற உயிரினங்களிடமிருந்து மனிதனைப் பிரித்துக் காட்டுகிறது. பண்பாட்டினை மானிடவியலாளர் இரண்டாக வகைப்படுத்துகின்றனர். 

அவை. 

பொருள்சார் பண்பாடு, 

பொருள்சாரா பண்பாடு.

       மக்கள் தங்களின் தேவைகளுக்காக செய்து கொள்ளும் அனைத்து வகையானப் பொருட்களும் பொருள்சார் பண்பாட்டினுள் அடங்கும். புழங்கு என்பதற்குக் கதிரைவேற் பிள்ளை தமிழ் மொழியகராதி (1990:1047) வழங்குதல் என்றும், தமிழ் லெக்சிகன் (1982:2793) கையாளுதல், புழங்குதல் என்றும் விளக்கம் தருகின்றன. இயற்கை வளங்களைப் பண்பாட்டுப் படைப்புகளாகவும், கலைப்படைப்புகளாகவும் மாற்றிக் கொள்வதையே புழங்கு பொருள் சார் பண்பாடு என்றும் மானுடக்குழு ஒன்றின் தொழில் நுட்பத்திறனும் புழங்குப் பொருள் சார்ந்த கலைத்தொழில் வேலைப்பாடமைந்த பொருட்களும் புழங்கு பொருள் பண்பாட்டில் அடங்குகின்றன என்றும் குறிப்பிடுகிறார் என்பார் பேரா தே.லூர்து. 

குலுக்கை:

 கரிசல் பூமியில் விளைந்த தானியங்களை பாதுகாப்பாகப் பக்குவப்படுத்தி வைப்பதற்கு குலுக்கைகள் பயன்படுத்தப்பட்டமையை, “குலுக்கைகள் நிறைந்து நிறைமாத கர்ப்பிணியாய் நின்றன” (பக்.101) ஆசிரியர் பதிவு செய்கிறார். சங்க இலக்கியத்தில் குதிர் நெல் சேமித்து வைவைக்கும் நெல்கூடு என்று அழைக்கப்படுகிறது.நெடுங்காலமாக மனிதன் தனது எதிர்காலத் தேவைக்காக விளைந்த கூலங்களைத் தேக்கி வைக்கும் பயன்பட்டன.

பனைஓலை:- ‘பதினி’:

 உணவுப் பொருட்களை உண்பதற்கு தால் என்பது நாக்கினை குறிக்கும் நாக்கு போன்ற தட்டையான விரிந்த பரப்பினைக் கொண்டதாக இருப்பதினால் தாலம் என்றும் வழங்கப்பட்டுள்ளது. தாலம் என்பதற்கு பனை என்றும் பொருள் உண்டு. பனைமரத்திலிருந்து எடுக்கப்படும் புழங்குப் பொருட்கள் சீர்ப்பெட்டி, நார்ப்பெட்டி, நார்க்கட்டில், ஓலைப்பெட்டி, ஓலைப்பாய் ,கிலுகிலுப்பை, விசிறி, வீடு கட்ட, மதிற்சுவரை சுற்றி பனை ஓலையால் நிறைவதுண்டு. ” பன்னாடை“ என்ற சொல் பனைமரத்தின் கீழ் வளரும் பகுதியைக் குறிக்கும். இச்சொல்லை ஆய்வு பகுதியில் ஒருவரை திட்டும் போது பன்னாடை என்று கூறி திட்டுவதுண்டு.

உழவுக் கருவிகள்:

 பலமுறை உழுது விதைப்பதற்குத் தேவையான அளவில் நிலத்தைப் பண்படுத்தியதால் இவர்கள் செஞ்சால் உழவர் (நற்.340:7) என்று அழைக்கப்பட்டனர். நிலத்தைப் பண்படுத்துவதற்கும் உழுவதற்கும் உழவுக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. சங்க இலக்கிய உழுகருவிகளுள் நாஞ்சில் எனப்படும் கலப்பை ஆய்வுப் பகுதியில் சிறப்பிடம் பெறுகிறது. (பக்.20-21) “வானம் பார்த்த பூமியில் கம்மம் பயிர்கள் மொளி வைத்து விட்டால் பயிர் செய்வதற்கான உழவு அடிக்க முடியாது. சடக் சடக்கெடன்ற ஒடியும்” (பக்.56) என்பதை பதிவு செய்கிறார். இக்கலப்பையைக் கொண்டு வறண்ட நிலத்தையும் உழுவர் என்பதை ”பிடிவாய் அன்ன வடிவாய் நெஞ்சில்” (பெரும்.119) .”கார் கலந்தன்றால் புறவே பல உடன்” ( ஐங். 417) குறிப்பிடுகின்றது. பெய்த மழையை குளம், கண்மாய்களில் சேமித்து வைக்கப்பட்ட பொது நீரை அனைத்து நெல் வயல்களுக்கும நீர் பாய்க்க நீர்ப்பாய்ச்சி இருந்ததனை குறிப்பிடுகிறார் ஆசிரியர் (பக்.15). வேளாண் மேற்கொள்ளுவதற்கு பயன்படும் பொருட்களான கலப்பை, அரிவாள், கூடை, மண்வெட்டி, களைவரண்டி, கடப்பாரை ஒவ்வொன்றும் அதற்கு உரிய தனித்தன்மையை பெற்று விளங்குகின்றன.

 மண்ணின் ஈரப்பதம் மாறும் முன் நிலத்தை உழுதுவிட வேண்டும் என்ற நிலையில் தன்னிடம் உள்ள ஒற்றை ஏரைக் கொண்டு மிக விரைவாக உழுதுகொண்டிருக்கும் உழவனை “ ஓரேர் உழவன் போல” இருப்பது போல உழவன் இருப்பதையும் பதிவு செய்கிறார். மழை பொழியாது வறண்ட நிலங்களில் ஈரமற்ற நிலத்தை உழுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கலப்பைகளை “வறன் உழு நாஞ்சில் போல் (கலி.8:5) கங்காணியின் மகன் துரைராஜ் வெளிநாடு சென்று பணம் சம்பாதித்து தால் மோட்டார் கருவிகள் வாங்கிக் வைத்து கொண்டு கலப்பைகள் யாவும் தொழிலற்று முடங்கிக் கிடந்தையும் உழவர்.(பக் 172) நாவலில் ஆசிரியர் பதிவு செய்கிறார்.

பெட்டி:

 உழுது பண்படுத்திய நிலத்தில் விதைப்பதற்கான விதைகளை எடுத்துச் செல்ல சங்க காலத்தில் “வித்தோடு சென்ற வட்டி பற்பல” (நற்.210:3) “விதைக்குறு வட்டி போதொடு பொதுள” (குறு.155:2) வட்டி பயன்படுத்தப்பட்ட போல பனைஓலைப் பெட்டிகள் பயன்பட்டது. 

களைவரண்டி:

 விளை நிலத்தில் பயிர்களின் ஊடே முளைத்திருக்கும் களைகளை நீக்குவதற்குப் பயன்படுத்தும் கருவியே களைவரண்டி. இது களைக்கொட்டு என வழங்கப்படும். உழுது விதைத்த பயிர்களில் முளைத்த களைகளைத் துநர் கொண்டு நீக்கிய நுட்பத்தை “தொடுப்பு எறிந்து உழுத துளர்படு துடவை (பெரும்.201) தொய்யாது வித்திய துளர்படு துடவை (மலைபடு.122) என்பதில் களைக் கொட்டினைக் கையில் கொண்டு களை பறித்து எறியும் தொழிலாளர், கோடுடைக் கையர் துளர் எறி விளைஞர் (அகம்.184:13) இருந்ததும் இந்நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பன்னரிவாள்:

 அறுவடை காலத்தே நெல்லை அரிவதற்கு அரிவாள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வரிவாளினை “நெல், அரி தொழுவர் கூர்வாள் உற்றென” (நற்.195:6) “பன்னரிவாளின வாய் டங்கிப் இருக்கும் செய்தியை அரிநர் கொய்வாண் மடங்க வளைநர்” (பதி.19:22) என்பது போல பயன்படுத்தப்பட்டதை சோ.தர்மன் இந்நாவலில் பதிவு செய்கிறார். இப்புழங்கு பொருள் பண்பாட்டைப் பொருத்தவரையில் பொருட்கள் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றன. எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்தே புழங்குபொருள் பண்பாட்டை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். தூர்வை நாவலில் வேளாண் புழங்கு பொருட்களான ஏர், கலப்பை, போன்ற பொருட்கள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. கூனிக்குயத்தின் பொய்நெல் அரிந்து ( பக் 56 ) அறுவடை செய்ய குயம் என்ற கருவி பயன்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாழி, மரக்கால்:

 மரக்கால் எனப்படும் ஒரு முகத்தல் அளவைக் கருவியாகும். இக்கருவி மரத்தால் செய்யப்பட்டு சுற்றிலும் இரும்பு அல்லது செம்பினால் செய்த உறை போடப்பட்டு இருக்கும். நெல் முதலிய தானியங்களை அளப்பதற்கு இதனைப் பயன்படுத்தினர் சங்க இலக்கியத்தில் “அம்பணமென்றது பட்டமணிந்த வாயையும் பரிய அரையையுடைய அம்பண அளவை ஆவது அளக்கும் பறை முதலிய என்றம் தரகர் அளக்கும் மரக்கால் என்றும் அடியார்க்கு நல்லார் பொருள் கூறுகிறார். “அம்பணத்து அன்ன யாமை ஏறி” என்ற ஐங்குறுநூற்றின் அடி ஆமையின் முதுகு தானியங்களை அளக்க உதவும் அம்பணத்தைப் போல வளைந்திருக்கிறது என்று குறிப்பிடும் அளவைக் கருவியின் பதிவும் இந்நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

துரட்டி:

 சங்க இலக்கியத்தில் (ஐங்.87:1-3) குணில் என்பதற்கு குறுந்தடி, பறை அடிக்கும் கடிப்பு எனக் கூறப்படும் துரட்டி மரத்தில் இருக்கும் காய், கனிகளை உதிர்க்க பயன்பட்டது போல கரிசல் பூமியில் பயன்பட்டது பதிவாகியுள்ளது.

நெசவு - பருத்தி:

“கூழை விரித்தல் காதொன்று களைதல் 

 ஊழணி தைவரல் உடை பெயர்த் துடுத்த லோடு

 கெழீஇய நான்கே இரண்டென மொழிப” (தொல்.நூ.427)

நெசவுத் தொழிலின் உற்பத்திக்கு மூலப் பொருள் பருத்தியாகும் அப்பருத்தியும் கரிசல்பூமியில் “ஓலைப்பட்டை, ஏனம், ஈயச்சட்டி, தூக்குவாளி, பலகாரக் கொட்டாளி, நாழி, வெண்கல கும்பா, பண்பானை, கலயம், Nதூண்டிக்கலயம், ஈயக் காப்பிசட்டி, சருவச்சட்டி, கிளியச்சட்டி, திருவோடு போன்ற புழங்கு பொருட்கள் பயன்படுத்தியுள்ளன. 

உரல்:

 உரல் என்பது தானிய வகைகளைக் குற்றி அரிசியாக்குவதற்கும் பயன்படுத்தியுள்ளனர். புல்லரிசியைப் போட்டுக் குற்றியதை “நிழன் முன்றினிலவுற்ற பெய்து” என்ற பெரும்பாணாற்றுப்படை சங்க காலத்தில் வாழந்த மக்கள் உணவின் பொருட்டு உரல் பயன்படுத்தியுள்ளமை போல, மிக்ஸி பரவலான பயன்பாட்டிற்கு வந்த பிறகும் அம்மியையும் குழவியையும் முழுமையாக வீட்டிலிருந்து வெளியேற்ற முடியவில்லை. கொங்கு நாட்டில் மார்கழி மாதத்தில் நடைபெறும் மங்கலிய நோம்பி யன்று குழவிக் கல்லுக்குப் பொட்டிட்டுப் பட்டுடுத்தி மங்கலியம் அணிவித்து மகளிர் வணங்கிய பிறகு புது மங்கலியம் அணிந்து கொள் கின்றனர். ஒரு பெண்ணுக்குப் பூப்புச்சடங்கு முடிந்து வீட்டிற்குள் அழைத்துச் செல்லும்போதும் திருமணத்திற்குப் பிறகு புகுந்த வீட்டிற்குள் அழைத்துச் செல்லும் போதும் குழவிக்கல்லைச் சிறிது நேரம் பெண்ணின் மடியிலிட்ட பிறகே வீட்டிற்குள் அழைத்துச் செல்வர். அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல், அம்மிமீது கால்வைத்து மெட்டி அணிவித்தல் போன்ற திருமணச் சடங்குகள் இன்றும் வழக்கி லுள்ளன குழந்தைக்கு ஓரம் விழுந்து விட்டால் வேட்டியை விரித்து இருமுனைகளிலும் இருவர் பிடித்துக் கொண்டு குழந்தையை வேட்டியில் போட்டு உருட்டுவர்; அதற்குமுன் அந்த வேட்டியில் குழவிக் கல்லை முதலில் போட்டு உருட்டிய பிறகே குழந்தையைப் போட்டு உருட்டுவர் (புழங்கு பொருளும் பண்பாடும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்று ஒன்றிற்கொன்று நெருங்கியத் தொடர்பு கொண்டவைகளாகும். புழங்கு பொருட்கள் பண்பாட்டோடு இணைக்கப்பட்டனவா? இல்லை பண்பாட்டிற்காகவே புழங்கு பொருட்கள் உருவாக்கப்பட்டனவா? என்று குழம்பும் அளவிற்கு ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன. தற்பொழுதுள்ள இயந்திர வாழ்விலும் கூட நாட்டுப்புறப் புழங்கு பொருட்கள் பண்பாட்டோடு பறைசாற்றி நிற்பது பண்பாட்டின் மேன்மையை விளக்குவதாக அமைந்துள்ளது.

உலக்கை:

 தானியவகைகளை உரலில் இட்டு குற்றுவதற்கு உலக்கையைப் பயன்படுத்தியுள்ளனர். அடிப்படைத் தேவையான உணவுப் பொருட்களின் உற்பத்தியால் வேளாண் தொழில் முதன்மைப் பெறுகிறது. இத்தொழிலில், நீர், கமலைகருவிகள், பன்னரிவாள், முதலான கருவிகள் நேரடிப் பயன்பாட்டில் இருந்துள்ளன. நன்செய் புன்செய், மானாவாரிப் பயிரிடுமுறை முதலிய மண்ணின் தன்மைக்கு ஏற்பவும், உழுதல், பண்படுத்தல், சமன்செய்தல், விதைதல், களைஎடுத்தல், அறுவடை செய்தல் முதலிய தொழில் நிலைகளுக்கு ஏற்ப இக்கருவிகள் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. தனக்கான எருதுகளையும் கலப்பையும் கொண்டிருக்கின்ற பள்ளரின மக்கள், சிறப்பு பெற்றனர். அதனால் உழவர்கள் தங்கள் தேவைகளுக்கான எருதுகளையும் கலப்பைகளையும் தாங்களே வைத்திருந்தனர்.பாசவ லிடித்த கருங்கால் உலக்கை ஆய்கதிர் நெல்லின் வரம்பு அணைத்தூற்றி (குறு.238)என்ற குன்றியனார் பாடல்வரியின் மூலம் வைரம் பாய்ந்த உலக்கை பயன்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது..இருங்காழ் உலக்கை இரும்புமுகம் தேய்த்த ”(சிறு.67)கருப்பு வண்ண்தில் இரும்பு முகம் தோய்த்த என்று உலக்கையின் அமைப்பை காண முடிகிறது.

 பள்ளரின மக்கள் தங்களின் சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்ப கிடைக்கின்ற இயற்கைப் பொருட்களையும், அறிவு நுட்பத்தால் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களையும் பயன்படுத்தியுள்ளனர் என்பதையும் மக்களின், பண்பாட்டினையும் வெளிப்படுத்துகிறது. ஒரு காலக்கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட புழங்குப் பொருட்கள் எல்லாக் காலத்திலும் பயன்படுத்தப்படவில்லை எனவே அவை மாற்றம் பெற்றோ, வேறு பொருளாகவோ அல்லது வழக்கு ஒழிந்தோ போய்விடுகின்றன. முற்காலத்தில் பயன்படுத்தப்பட்டு வழக்கு ஒழிந்து போன பல்வேறு பொருட்களும் காலமாற்றத்தால் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. புழங்குப் பொருட்கள் அவை பயன்படுத்தப்பட்ட காலகட்டத்தினையும் அக்கால தொழில்நுட்பமுறையினையும் புலப்படுத்துகிறது. அன்றாட வாழ்வில் வீடுகளில் அம்மி, குழவி, உரல், உலக்கை, கூடை, முறம், விசிறி, மட்டை, கத்தி, அரிவாள்மனை, சீமாறு போன்ற பல புழங்குபொருட்களைப் பயன்படுத்தி வருகிறோம். பொருளும் பண்பாடும் நாணயத்தின் இருபக்கங்கள் போன்றவை. நறுக்குத் தெறித்தாற்போன்று மிகக் குறைந்த பட்ச வரையறையாகச் சொன்னால் பண்பாட்டின் கண்ணாடி புழங்கு பொருட்கள் என்று கூறலாம். அந்த வகையில் ஒன்றையொன்று பரஸ்பரம் பிரதிபலிப்பவை. அருங்காட்சியகத்தில் உள்ள பல்வேறு காட்சிக்கூடங்களில் வைக்கப்பட்டுள்ள பொருட்களைக் கொண்டு அப்பொருள் சார்ந்த காலகட்டத்தின் பண்பாட்டையும் அக்கால கட்ட மக்களின் வாழ்வியல் முறைகளையும் அறிய இயலும், பொருட்கள் பண்பாட்டைப் பிரதிபலிக்கின்றன என்பதாலேயே நம்மால் அருங்காட்சியகக்கூடங்களில் அக்காலத்திய பண்பாட்டை மீட்டுருவாக்கம் செய்ய முடிகிறது என்பார் பக்தவத்சல பாரதி. வீட்டில் துணி மற்றும் பணம் வைக்கும் பீரோவை அக்கினி மூலையில் வைக்கக் கூடாது என்ற வழக்கம் கறாராகப் பின்பற்றப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு மரபார்ந்த புழங்குபொருட்களுக்கும் ஒவ்வொரு பண்பாட்டு அடையாளங்கள் உள்ளன. இத்தகைய பண்பாட்டு அடையாளம் தொலைக்காட்சிக்கும் தொலைபேசிக்கும் உருவாகும் போது அதுவும் தமிழரின் புழங்கு பொருட்களாக மாறிவிடும். நாட்டுப்புறவியலில் எதுவும் என்றும் நிலைத்து நிற்பதுமில்லை; எல்லாம் அழிந்து விடுவது மில்லை. நாட்டுப்புறப்பாடல்களும் விடுகதைகளும் பழமொழிகளும் மட்டும் நாட்டுப்புறவியல் களத்தில் நின்று நிலைத்து வாழ்வதற்குரிய கூறுகளல்ல. நாட்டுப்புறவியல் இயங்கியல் தன்மை மிக்கது. சமூக மக்களின் வாழ்விற்கும் மரபிற்குமேற்பப் பழைய நாட்டுப்புற மரபுகள் மாறுவதும் புதிய நாட்டுப்புற மரபுகள் மலர்வதும் தவிர்க்க இயலாதவைகளாகும். இன்றைய நிலையில் நாட்டுப்புறப் புழங்கு பொருள் சார்ந்த உற்பத்தி முறைகள் பெரும்பாலும் பெரிய நிறுவனம் அல்லது குழுமம் சார்ந்து நடைபெறுவதில்லை கரும்பாலைக் கொப்பரையையோ. மாட்டு வண்டியையோ கலப்பையையோ கடைவீதிக்குச் சென்று வாங்கிவர இயலாது பெரும்பாலும் புழங்கு பொருட்களின் உற்பத்திகள் வட்டாரம் சார்ந்தும் குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தும் நிகழ்ந்து வருகிறது பத்தமடைப்பாய் இசுலாமியரிடமும் மண்பானைகள் குலாலரைச் சார்ந்தும் இருப்பதைப் போலப் புழங்கு பொருட்களின் உற்பத்தி நிறுவனமயமாகாமல் நிகழ்ந்து வருகிறது. இது தற்காலிக நிலையே. இந்த உற்பத்தி முறையைப் புழங்கு பொருட்களுக்குரிய திட்டமிட்ட வரையறையாகவும் கொள்ள இயலாது. ஒருகாலத்தில் கைத்தொழிலாக விளங்கிய மரவேலைப்பாடுகள் ( கட்டில் கால்கள், தலைவாசல் கதவுகள் ) மரப்பாச்சி பொம்மைகள் போன்றன இன்று இயந்திரங்கள் மூலமாகப் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுவது போல புழங்கு பொருட்கள் இயந்திரங்கள் மூலமாக நிறுவனங்கள் வழியாகத் திட்டமிடப்பட்ட பெரிய அளவிலான உற்பத்தியாகவும் மாறலாம்.

           நாட்டுப்புற வழக்காறுகள் மக்கள் வாழ்கிற சூழல் சார்ந்தவை; சூழலுக்குக் கட்டுப்பட்டவை; வாழுகிற சூழலுக்கேற்பவே பொருள் (Meaning) அளிப்பவை ஒவ்வொரு வழக்காற்று வகைமைகளையும் இப்படித்தான் சொல்ல வேண்டும் அல்லது இப்படித்தான் நிகழ்த்த வேண்டும்; இப்படி நிகழ்த்தக் கூடாது என்ற விலக்குகளும் விதிகளும் உண்டு. நாட்டுப்புறவியலுக்குரிய இந்தப் பொது இயல்பினைப் புழங்கு பொருள் பயன்பாட்டிலும் காணலாம். மாலை நேரத்தில் வீட்டுத் தலைவாசலை மூடக்கூடாது; உப்பையும் ஊசியையும் இரவல் தரக்கூடாது: இசுலாமியர் பன்றி சாப்பிடக்கூடாது; புரட்டாசி மாதம் இறைச்சி உண்ணக் கூடாது; உணவை உருட்டாது சாப்பாட்டுத் தட்டத்தில் தாளம்போடக் கூடாது என்பன போன்ற எண்ணற்ற விலக்குகளையும் விதிகளையும் புழங்கு பொருள் பண்பாட்டில் காணலாம். நாட்டுப்புற வழக்காறுகளை வரையறுக்கும் போது அவை பல்வேறு வடிவங்களில் வாழும் தன்மையை ஒரு இன்றியமையாத பண்பாகக் கூறுவர். ஒரு நாட்டுப்புறப்பாடல் பல கிராமங்களில் வழக்கிலிருந்தாலும் ஒரே சொல்லமைப்பிலும் ஒரே யாப்பு முறையிலும் ஒரே வகையான இசைக்கட்டமைப்பிலும் தமிழகம் முழுவதும் பாடப்படுவதில்லை; ஆனால் சினிமாப்பாடல் ஒரே முறையில் தான் பாடப்பட்டுவரும் எழுத்து மரபில் ஒரு கவிதைக்கு ஒரு வடிவம் மட்டுமே வழக்கிலிருக்கும். எனவே நாட்டுப்புற வகைமைகளை அடையாளம் காண ஒரு வழக்காற்றின் பல்வேறு வடிவங்களைச் சேகரிப்பது இன்றியமையாதது ஆகும். நாட்டுப்புற புழங்கு பொருட்களும் பல்வேறு வடிவங்களில் வழக்கில் உள்ளன. உதாரணமாகச் சேர்த்துப்பானை, குழம்புச்சட்டி பொங்கல் பானை, கூழ்ப்பானை, அடுக்குப் பானை, அரிக்கஞ்சட்டி, கழனிப்பானை, தோண்டி எனப் பல வடிவங்களில் மண்சட்டிகள் வழக்கிலுள்ளன. ஆனால் புழங்கு பொருட்கள் வகைமையைப் பொறுத்த வரையில் பல்வேறு வடிவங்களில் (Version) வழக்கிலுள்ள பண்பு நாட்டுப்புற மரபிற்கு மட்டுமே உரியது என்று கூற இயலாது. உதாரணமாக நாட்டுப்புற மரபில் மாட்டு வண்டியும் சவாரி வண்டியும் பல்வேறு வடிவங்களில் வழக்கிலிருப்பதைப்போலவே பேருந்தும் மகிழுந்தும் பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்படுகின்றன. இலக்கியப் படைப்பாளிகள் தங்கள் காலத்தில் வழக்கிலிருந்த, தாம் பயன்படுத்திய புழங்கு பொருட்களைத் தங்கள் படைப்புகளில் தேவையிருப்பின் குறிப்பிடத் தயங்குவதில்லை சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் இறந்தபோது ஐயூர் முடவனார் கலஞ்செய்கோவே சுலஞ்செய்கோவே என்று குயவனை அழைத்து இருநிலம் திகிரியாக மாமேரு மண்ணாகக் கொண்டு முதுமக்கள் தாழி வனைதல் ஒல்லுமோ என்று கேட்கிறார் ( புறம் - 228) இப்பாடலில் மன்னனை அழைக்கும் கோவே என்ற சொல்லிலேயே குயவனையும் அழைக்கும் மரபு கவனிக்கத்தக்கது. இப்படிச் சங்க இலக்கியம் முதல் இன்று வாழும் கவிஞர் சிற்பி வரை தாம் பயன்படுத்திய அல்லது பயன் படுத்துகிற பொருள்களைத் தங்கள் படைப்புகளில் தயக்கமில்லாமல் குறிப்பிடுகின்றனர்.

 ஒரு பொருளைப் பற்றி நாட்டுப்புற மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையென்பது மரபார்ந்த அதீத நம்பிக்கைக்குக் கட்டுப்பட்டு இருப்பதோடு,இயல்பான அறிவார்த்த வழிப்பட்ட கலாச்சார வெளிப் பாட்டின் ஒரு அம்சமாக வெளிப்பட்டுள்ள ஒன்றாகவும் அப்பொருள் இருக்கின்றது. இந்தக் 'கலாச்சாரப் பொருள்' என்று கருதப்படுகின்ற ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தேவைகளை முன்னிட்டவைகளாகவே உருப்பெற்றுள்ளன. ஆனால், இதற்குப் பின்னால் அதீத நம்பிக்கையும் இணைக்கப்பட்டுள்ளது. பொருள் சார்ந்து நோக்குகின்ற நாட்டுப்புற ஆய்வுகளை விட, பொருள் சாராத நாட்டுப்புற ஆய்வுகளில் அதீத வயப்பட்ட நாட்டுப்புற நம்பிக்கைகளுக்கான சாத்தியக் கூறுகள் கூடுதலாகவே காணப்படுகின்றன.

முடிவுரை:

 மக்கள் தேவைகளுக்காக படைக்கப்பெறும் புழங்கு பொருள்கள் அவற்றிற்கான பொருண்மையையும் பயன்பாட்டையும் நிலைகளன்களாகக் கொண்டு அப்பண்பாட்டில் நிலை பெற்றிருக்கும். சமுதாயப் பண்பாட்டுப் பொருளியல் அழுத்தங்களால் பண்பாட்டு மாற்றம் ஏற்பட்டு, அதன் விளைவாகச் சில குறிப்பிட்ட தேவைகள் அற்றுப்போகுமானால், அவற்றிற்குரிய புழங்குபொருள்களும் அற்றுப் போய்விடும். ஓர் இனக்குழுவினரின் பண்பாடு சார்ந்த அனைத்துப் புழங்கு பொருள்களையும் கொண்டு அவ்வினக் குழுவனரது பண்பாட்டின் ஒரு பகுதி அமையும். ஒவ்வொரு புழங்குபொருளுக்குப் பின் அதற்குரிய புழங்கு பொருள்சாராப் பண்பாடும் உடன் சார்ந்தே அமையும். ஆக, ஓர் இனக்குழுவினரிடையே புழக்கத்திலுள்ள (புழங்கு) பொருள்கள் வழி ஒரு பகுதிப் பண்பாடும் புழங்குபொருள்கள் சாரா மனவடிவங்கள் வழி மற்றொரு பகுதிப் பண்பாடும் கட்டமைக்கப் பெறுகின்றன. புழங்கு பொருள்கள் என்பன மக்கள் பண்பாட்டு நிலைக்கலன்களில் வெறும் தொட்டுணர் பண்பாட்டுப் பொருள்களாக மட்டும் அமையாமல், அந்தந்த இனக்குழுவினர் மற்றும் சாதிக் குழுவினரின் கருத்துணர் பண்பாட்டு மரபுச் செல்வங்களை வெளிக்கொணரும் மரபார்ந்த பொருள்களாகவும் அமைகின்றன.

துணைநூற்பட்டியல்:

1. ரெஜித் குமார் .த, புழங்குபொருள் பண்பாடு, காவ்யா பதிப்பகம், சென்னை,2009

2. பக்தவத்சலபாரதி, தமிழகத்தில் நாடோடிகள், அடையாளம், திருச்சி, 2003.

3. பக்தவச்லபாரதி, இலக்கிய மானிடவியல், அடையாளம், திருச்சி, 2003

4. பக்தவத்சலபாரதி, பண்பாட்டு மானிடவியல்,மெய்யப்பன் சிதம்பரம்.1990

5. பக்தவத்சலபாரதி, மானிடவியல் கோட்பாடுகள்,அடையாளம்,

திருச்சி. 2005



Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு