மாயோன் தொழில் - ஆர்.கே.சுரேஷ் லலிதன்

 மாயோன் தொழில்

-ஆர்.கே. சுரேஷ் லலிதன்


1)
மூன்று சதுரக் கள்ளிப் பாதையில்,
ஐந்து தப்படியில் அகட்டி
பனங்காய் மயில ,
வளைத்துப் போர்த்தான் மேய்ப்பன் .........

ஏலே !!!
சேக்காளி
வல்லத்தான் காட்டில் திருப்பு,
கடைந்த தொசிலி போல்
பனி புல்லும் ,புதுப்புல்லும்,
மானியாத்து படுவையில்
மணக்கிறதாம் கறவை உருப்புடி
மேய்வதை கரையும் பறவை 
கணக்கெடுக்குமாம்
குருதி வெளிச்சத்தில்
கொலை மட்டுமல்ல கணக்கெடுப்பும்
காட்டின் பொழுதுபோக்கு தான்.......


2)
காட்டோடையில் கானல் நீர் கரையை கரைக்கும்
தருணம்
வறட்சிப் பகுதியில் ஓட்டை 
தூக்கிக் கொண்டு   
நகர்ந்தன நத்தைகள்
மேய்ப்பன் கைத்தடியை
இறுகப் பிடித்தான்........

கள்ளிப் பாதையில் 
பார்வையைக் கூர்மைபடுத்தினான்,
காட்டின் குளிர்ச்சியை அளந்தது
வியர்வைப் பூத்த அவன் உறுப்புகள்........


3)
வியர்வைப் பூத்த அவன்
உறுப்புகளின்
கவிச்சையை, முகர்வதை
 தவிர்த்தான்......
 
மூச்சுக்காற்றைத் தவிர வேறு 
எந்த சத்தமும் இல்லை
கைத்தடியின் துணையோடு அந்த கொழுத்த ஊர்வனையை 
நோக்கி ஊர்ந்தான் 
அவன் செயலை 
சித்திரப்படுத்தத் தொடங்கியது , கருவேலி மரங்கள்.......


4)
கால்கட்டை விரலால் மண்கட்டியை சுண்டி விட்டான் துடுக்கான உடும்பின் தூக்கம் கலைந்தது......

பீச்சாங் கண்ணை மூடி , சோத்தாங்
கண்ணால் குறிவைத்து கைதடியை எய்தினான் தாவி ஓடிய சீவனின் கழுத்தைத் துலைத்து மண்ணில் சேர்ந்தது கைத்தடியின் கூர்மை....
அடர்ந்த காட்டில் மேய்ச்சலுக்குப் பிறகு மீதமுள்ள வேலை கைத்தடியை பக்குவப்படுத்துவது என்பதைக் காடும் அறியும்.....


5)
மூக்கில் நுழையும் காற்றை நெற்றிக்கு இழுத்து முகர்ந்தான் 
தூரத்தில் இருக்கும் இழுப்பைத்
தோப்பில் புகைகிறது 

பக்கீரியான் வெள்ளருக்கன் செடியைக்
கொளுத்துகிறான்.
ஆட்டு முடி உதிர்வதைத் தடுக்கும் வைத்தியம் என்று மனக்கண்ணில் கோர்க்கிறான் மேய்ப்பன்

               (தொடரும்).........

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு