அரா கவிதைகள்
அரா கவிதைகள்
இரவின் சப்தம் தாங்கிய இருட்டில்
நித்திரையில் தோன்றிய
விசித்திரக் கவிதை
விழிக்கையில் காணாமல் போனது
அதில் வார்த்தைகள் இல்லை
எழுத்துகள் இல்லை
அழுகையின் கோர ஒலியும்
கண்ணீர்த் துளிகளுமே இருந்தது..
நினைத்துப் பார்த்தால் -அது
கவிதையாகவே இல்லை..
நல்லவேளை -அது
காணாமல் போனது..
********
பிய்ந்த செருப்பின்
பிளவுக்கு நடுவே
வீசிய நறுமணம்
அந்த பூவுக்குரியது
செருப்பிடம் செய்யும்
பூவின் வாதம்
நான் உன்னை
நறுமணமாக்கவில்லை என்பதே
எத்தனையோ முறை
தேய்க்கப்பட்டும்
வாய் கிழிய பேசிய
செருப்பைச் சுற்றி
மௌனம் மட்டுமே
எஞ்சியுள்ளது
பின்னணியில்
என்னுடையது இல்லையென
சொல்லிய
பூவின் வாசத்தோடு
*******
அருகில் வந்து
என் இதழை உன்னில்
மோத விடும்
பெருத்த ஆசை
குலுக்கிய
பீர் போல பொங்கிற்று.
கை கோர்த்து
அத்தகிப்பின் வியர்வையில்
சற்றுநேரம்
மனதை அசைய விடாமல்
நின்றிட
உடனடியான ஏக்கம்
உன்னருகில் நானிருக்கும் போது
நீ ஏதேதோ பேசிடினும்
உன்னால்
தட்டச்சிடப்பட்ட வாக்கியங்களுக்கு
ஓசை பிறந்து
காதுக்குள் ஒலித்து இம்சிக்கிறது
எவ்வளவு நேரம்
இம்சையைப் பொறுத்துக் கொள்வது
உடைமையான உன்னுடைய
மெல்லிய உள்ளங்கைகளை
கீரல் கொண்ட
என் கைகளின் விரல் கொண்டு
வருடும் போது
குளிர்ந்து போனது என் கைகளும்
உன் வாய்ச்சொற்களின்
வன்மைக்கு எதிரிட்டு
நிற்கும் மென்மையான
உள்ளத்தின் கைகளை
இத்தனை நாள்
எங்கு ஒளித்திருந்தாய்
என்னிடம் காட்டாமல்
உன்னருகில் நெருங்கியபோது
நேராக முறுக்கப்படாத
மீசையில் சிக்கிய
உன் அழகிய முகத்தின் முன்னே
தொங்கிக் கொண்டிருந்த
கூந்தலின் துளி
இன்னும் இனிக்கிறது
முத்தங்களுக்கும் மேலாக
*******
அருவருப்புகள் ஒட்டிக்கொண்டிருக்கும்
சைக்கிள் டயரை
யாருக்குத் தான் பிடிக்கும்
அந்த சின்ன பிள்ளைக்கு
சிலகாலம்
பிடித்து விட்டது
அதைத் தனியே நிறுத்தி
பார்த்துக் கொண்டிருந்த
இடத்திற்க்கு
மற்றொரு உலோக பொம்மை
வரும் வரையே ஏஏஏஏஏ
டயர்கள் மீதான ப்ரியம்
டயருக்கு
உலோகப் பொம்மை மீதோ
சின்ன பிள்ளை மீதோ
எந்த குற்றச்சாட்டுமில்லை
முன்னும் பின்னுமாக சுற்றி
மீண்டும் மோதிப் பார்க்க
எத்தனிக்கிறது
சின்ன பிள்ளை
தூக்கிப் போடும் வரை
*******
வள்ளுவர் சொல்வதை
அவர் சொன்னதாக
எழுதியதாக
பலவாறான சொற்களைக் கொண்டு
எத்தனையோ பேரிடம்
சொல்லி இருக்கிறேன்
இப்போது மறந்து போன
அன்றைய மனப்பாடத்தின் பிடியுடன்
ஒரு மாதத்திற்கு முன்பே
என் பனியனை
பிடித்து இழுத்து
உட்கார வைத்து
கண் கொண்டு திருக்குறளை
பார்க்கும் நேரத்தில்
காதோரம் சொன்னார்
நோயும் நோய்க்கான
மருந்தும் ஒன்றேயென்று
எனக்கும் புரியத் தான் செய்தது
புரிந்ததை எல்லாம்
எவன் வினையாக்குவான்
தான் காணிக்கையாவதை மீறி
*******
இருந்திருக்கும் போல
சொல்லப்பட்டது
ஆம், இருந்தது
இங்கு இல்லை
பின் வந்தது
இருந்தது இருந்தது
இன்னும் இருக்கிறது
இங்கு வேறொன்றாக
அங்கு இல்லை ஏதுமாக
இருக்காது நடக்காதென
முடங்கிப் போன
கால்களைக் காட்டி
நான் சொன்னது
காதுகளுக்கு கேட்கவில்லை
கண் மறைத்த கனவு நாட்களில்
*******
பிப்ரவரி மாதம் இது
எவரும் சாக்லேட்
கேட்கப் போவதில்லை
கேட்டாலும்
கொடுக்கப் போவதில்லை
கொடுத்தாலும்
வாங்கப் போவதில்லை
முன்னர் ஒருமுறை கொடுத்த
இரண்டு டெய்ரி மில்க்
சாக்லேட்டும்
வாங்கிய ஒரு கிட்கேட்
சாக்லேட்டும்
இனிப்பின்றி கசந்து விட்டது.
கசப்பின் நெடி வீசும்
குளிர்ந்த காலையில்
காலுக்கு கீழே கிடக்கும்
சாக்லேட் கவருக்கும்
சாக்லேட்களுக்கும் ஆசீர்வாதங்கள்
*******
Comments
Post a Comment